Apr 28, 2017

ப்ரனீதாவோட அப்பாவா?

‘ஆஸ்பத்திரியில் இருக்கேன்...பனசங்கரி வரைக்கும் வர முடியுமா?’ என்றார் ஒரு நண்பர். வனதேவதை என்பதுதான் பனசங்கரி. அந்தக் காலத்தில் வனமாக இருந்திருக்கிறது. இன்று வனம் இல்லை. அந்த தேவதையின் கோவில் இருக்கிறது. நண்பருக்கு பெரிய உடல்நிலைப் பிரச்சினை எதுவுமில்லை. ஆனால் மருத்துவமனையில் இருக்கிறேன் என்று சொல்லி அழைத்த பிறகு வர முடியாது என்று சொல்வது நன்றாக இருக்காது. நண்பர் பரிசோதனைகளுக்காக உள்ளே சென்றிருந்தார். இந்த மாதிரியான இடங்களில் பொழுது போவதுதான் பெரும் பிரச்சினை. ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், சுத்தம் செய்பவர்கள் என்று யாரையாவது பிடித்து மொக்கை போட வேண்டும். அப்படி ஒரு தமிழர் சிக்கினார். மருத்துவமனையின் ஊழியர் அவர்.

காதில் ரத்தம் வராத குறைதான். எனக்கு இல்லை- அவருக்கு. ராவித் தள்ளிவிட்டேன். நானாக ராவ வேண்டும் என்று நினைக்கவில்லை. ‘ப்ரனீதா இருக்காங்க இல்ல? இது அவங்க ஆஸ்பத்திரிதான்’ என்று சொல்லி அவராகத்தான் மாட்டிக் கொண்டார். 

‘நடிகை ப்ரனீதாவா?’ என்றேன். அப்பொழுதாவது அவர் சுதாரித்திருக்க வேண்டும். ஆமாம் என்று சொல்லிவிட்டார். விடுவேனா? தோண்டித் துருவிவிட்டேன்.


முன்பொரு காலத்தில் கவிதை எழுதிக் கொண்டிருந்தேன் அல்லவா? அப்பொழுது எனது கவிதையிலும் ஒரு பெண் பாத்திரம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். நகுலன் கவிதைகளில் வருகிற சுசீலா மாதிரியும், கலாப்ரியாவின் கவிதைகளில் இருக்கிற சசி மாதிரியும் நமக்கென்று ஒரு ஆள் தேவை என்று யோசித்த தருணத்தில் ஹைதரபாத்தில் உடன் பணியாற்றிய ஒரு பூனைக்குட்டியின் பெயர் ப்ரனீதா. ஆள் சிக்குட்டியாக இருப்பாள். ஆனால் ஒரு க்யூட்னெஸ் இருக்கும். அதன் பிறகு அவளது பெயரை வைத்து ஒரு கவிதை எழுதி அது பிரசுரமாகி அதை அவளிடம் காட்டி அதை அவள் மொழி பெயர்த்துத் தரச் சொல்ல நான் விழி பிதுங்கியதெல்லாம் வேறு கதை. ‘நூல் விட்டிருக்கான் பாரு’ என்று கிசுகிசுக்காதீர்கள். அப்பொழுதே அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். பைக்கில் வந்து அலுவலகத்திற்கு முன்பாக நிற்பான். அவள் பின்புறமாக அமர்ந்து அவனைக் கட்டியணைத்துக் கொள்வான். எப்படியும் சறுக்கி விழுவார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டே நிற்பேன். அவன் கிராதகன். ஒரு தடவை கூட கீழே விழவே இல்லை.

நம் ஒவ்வொருவராலும் பால்யத்திலிருந்து இன்றுவரையிலும் ‘பிடித்த பெயர்கள்’ என்று பட்டியலிட முடியும். அப்படியான பெயர்களோடு சேர்த்து ஒரு முகமும் நினைவில் வந்து போகும். அது ஒரு கவித்துவத் தருணம். எனக்கு இப்படியாகப் பிடித்தமான பெயர்கள் நிறைய இருக்கின்றன. ஷீபா என்ற பெயர் பிடிக்கும். எட்டாம் வகுப்பில் அவளை ஒரு தலையாகக் காதலித்தேன் ஷீபாவுக்குப் பிறகு, ஷோபனா, மேனகா, நித்யா, ஸ்ரீவித்யா என்று எத்தனையோ பேர்கள். ஆனால் யாருமே என்னைக் காதலிக்கவில்லை. யாருக்குமே நான் காதலித்தது கூடத் தெரியாது. கடைசியில் வேணிதான் காதலித்தாள். அவளுக்கு வேறு வழியே இல்லை. காதலித்துதானே ஆக வேண்டும்? ஆனால் நமக்குப் பிடித்தமான ஒவ்வொரு பெயரையும் எங்கேயாவது எதிர்கொள்ளும் போது நாம் விரும்பிய அந்த முகமும் மின்னல் வெட்டுவது போல வந்து போய்க் கொண்டிருக்கின்றன. நமக்கு அந்தப் பெயரைப் பிடித்துப் போவதற்கு காரணமானவர்கள் உருமாறி இருக்கலாம். கிழடு தட்டி, உருவம் பெருத்து, தோல் சுருங்கி எப்படியோ இருக்கக் கூடும். ஆனால் நம் மனக்குகைக்குள் பதிந்து கிடக்கும் அந்த முகங்கள் அதே அழகுடனும் அதே வசீகரத்துடனும் அதே துல்லியத்துடனும் உறைந்து போய்க் கிடக்கின்றன. பனி நிரம்பிய உறைபெட்டியில் வைத்த புதுக்கனியைப் போல.

பெயர் என்பது வெறும் சொல் இல்லை. அதுவொரு மந்திரம்.

திருமணத்திற்குப் பிறகும் கூட சிறுகதையிலும் கவிதையிலும் ப்ரனீதா என்ற பெயரைப் பயன்படுத்தினேன். கணவர்களுக்கு எந்தப் பெண்களைப் பிடிக்கிறதோ அந்தப் பெண்களை மனைவிகளுக்குப் பிடிக்காமல் போய்விடுகிறது. அதனாலேயே ‘காஜல் அகர்வால் நல்லாவே இல்லை. அனுஷ்கா குண்டு. தமன்னா வெள்ளை கரப்பான் பூச்சி’ என்று உடான்ஸ் விட வேண்டியதாக இருக்கிறது. அப்பொழுதுதான் சேனல் மாற்றப்படுவதில்லை. அப்படித்தான் ப்ரனீதாவையும் கைவிட வேண்டியதாகிவிட்டது.

நடிகை ப்ரனீதாவின் அப்பா, அம்மா, அக்காவோ தங்கையோ- லீனா- அவரும் மருத்துவர் எனக் குடும்பமே மருத்துவர்கள். 

பெங்களூரில் மாடலிங், சினிமா என்ற ஆசையில் இருக்கும் வசதியான பெண்களைச் சந்தித்திருக்கிறேன். ‘யோசிச்சு முடிவு செய்யுங்க’ என்று மட்டும் சொல்வேன். அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்திருப்பார்கள். குறுக்கே நின்றாலும் தாண்டிச் செல்வார்கள்.

சிலர் மட்டும்தான் நயன்தாராவாகவும், த்ரிஷாவாகவும்  முடிகிறது என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனாலும் அதன் வெளிச்சமும் புகழும் எப்பொழுதுமே ஈர்ப்பு மிக்கவை.   

அறிவுரைதான் சொல்வேனே தவிர நடிகர் நடிகையர் என்று தெரிந்துவிட்டால் எப்படியாவது தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கும்தான் மனம் குறுகுறுக்கிறது. ஆரம்பத்தில் கேட்டதற்கெல்லாம் பதில் சொன்ன ஊழியர் பிறகு ஒரே பதிலையே திரும்பத் திரும்பச் சொன்னார்.

‘அவங்க ஏன் டாக்டர் ஆகலை?’ என்றேன். 

‘எனக்குத் தெரியலைங்களே’ என்றார்.

‘இப்போ எங்க இருக்காங்க?’

‘ஷூட்டிங் போயிருக்காங்க’

‘எந்த ஊருக்கு?’

‘எனக்குத் தெரியலைங்களே’

‘அவங்க கவர்ச்சியா நடிக்கிறதை எப்படி அம்மா அப்பா ஏத்துக்கிறாங்க?’ 

‘எனக்குத் தெரியலைங்களே’

இதுக்கு மேல் அவரிடம் பேசினால் கடுப்பாகிவிடுவேன் எனத் தோன்றியது. 

‘யோவ் போய்யா’ என்று நினைத்துக் கொண்டேன். 

ப்ரனீதாவின் அப்பா வெளியே வந்தார். ‘நீங்க ப்ரனீதாவோட அப்பாவா?’ என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ‘அவ என் மக’ என்று கடுப்பாகிவிடக் கூடும் என்று அமைதியாக இருந்து கொண்டேன். 

இந்தக் கவிதையை எழுதிய தருணம் இன்னமும் நினைவில் இருக்கிறது. புது எழுத்து இதழில் பிரசுரமானது.

பறவைகள் நகர்ந்துவிட்ட வானம்

ம‌ழை பெய்து 
தெளிந்திருந்த‌ வான‌த்தில்
மூன்று ப‌ற‌வைக‌ள் 
ப‌ற‌ந்து கொண்டிருந்தன.

ப்ர‌னீதா
வேறு ஊருக்குச் செல்வ‌தாக‌ச் சொன்னாள்.
கார‌ண‌ம் எதுவும் சொல்ல‌வில்லை.

புன்ன‌கை
க‌ண்ணீர்
துக்க‌ம்
எதுவுமில்லாமல் மெள‌ன‌மாயிருந்தேன்.

ந‌னைந்திருந்த‌ செடியில்
இலைக‌ளை ப‌றித்துக் கொண்டிருந்தவள்-
நேர‌மாகிவிட்ட‌து என்று
ந‌க‌ர‌த் துவ‌ங்கினாள்.

மூன்று ப‌ற‌வைக‌ள்
இருந்த‌ இட‌த்தில்
இப்பொழுது
மேக‌த்திட்டு வ‌ந்திருந்த‌து.

0 எதிர் சப்தங்கள்: