Apr 28, 2017

பொர்க்கி

இப்பொழுதெல்லாம் வாரம் ஒரு விருது அறிவிப்பு வந்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான விருதுகளை யாருமே பொருட்படுத்துவதில்லை. ‘கொடுக்குறியா? நீ யாருக்குக் கொடுப்பேன்னு தெரியும்... கொடுத்துட்டு போ’ என்கிற மனநிலைதான் நிலவுகிறது. வெகுஜன சமூகத்தின் இத்தகைய மனப்போக்கு விருது வழங்குகிறவர்களுக்கு பதற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. அதுவும் விருது கொடுப்பவர்கள் இலக்கியக் காவலர்களாகவும் விளம்பர மோகம் கொண்டவர்களாகவும் இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. புலி வருது கதையாக ஏதாவது முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். எப்படியாவது சர்ச்சையை உண்டாக்கி கவனத்தை தம் மீது குவியச் செய்துவிடுவதிலும் குறியாக இருக்கிறார்கள்.

இந்த வருடம் சுஜாதா விருது அறிவிப்பை ஒட்டி நடக்கும் சர்ச்சைகளை அப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பேசி இதைப் பேசி கடைசியில் தமக்கான கவன வெளியை உண்டாக்குவதற்காக சுஜாதாவை இழுத்துத் தெருவில் விட்டிருக்கிறார்கள். ‘சுஜாதா சாதியே பார்க்கவில்லை’ என்று ஒரு தரப்பு ஊதிப் பெருக்க ‘அவர் ஒரு சாதி வெறியன்’ என்று இன்னொரு குழு கிளம்ப கடைசியில் எல்லோருமாகச் சேர்ந்து அந்த மனிதனை அம்மணமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் அந்த ஒல்லிப்பிச்சான் வாத்தியார். தமது பெயரில் விருது வழங்கச் சொல்லி அவர் கேட்டாரா என்ன?

ஒரு விருது வழங்கப்படும் போது விருது யாருடைய பெயரால் வழங்கப்படுகிறதோ அவரையே அசிங்கப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கித் தருவதுதற்கு என்ன பெயர்? அவரது படைப்புகளை விட்டுவிட்டு தனிமனித வசைகளை முன்வைப்பதற்காக களம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு தமக்கான விளம்பரத்தைத் தேடிக் கொண்டு குளிர்காய்வதுதானே பச்சைவாதம்? உலக இலக்கியம் வாசிக்கிறோம் என்கிறார்கள். புத்தகங்களைக் கரைத்துக் குடிக்கிறோம் என்கிறார்கள். பொதுவெளியில் விவாதிக்கிறோம் என்று மார் தட்டுகிறார்கள். இந்த அடிப்படை கூடத் தெரியாதா என்ன? இவ்வளவுதான் பக்குவம்.

கடங்கநேரியான் எனது நட்புப் பட்டியலில் இருக்கிறார். சிறுபத்திரிக்கை மனநிலை கொண்டவர். தமக்கு ஒவ்வாததை எந்தத் தயக்கமுமில்லாமல் அப்பட்டமாக வெளிப்படுத்துகிற மனநிலை அது. விடாமல் கலாய்த்துக் கொண்டிருப்பார். அவரை மனுஷ்ய புத்திரன் இணையப் பொறுக்கி என்று எழுதுகிறார். தமக்கு ஒவ்வாத கருத்தைச் சொல்கிறவர்களை பொறுக்கி என்று விளிப்பது எந்தவிதத்தில் நியாயம்? ஒரு விருது வழங்கப்படும் போது ஆளாளுக்கு எதையாவது சொல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாதா?

தமக்குக் கீழாக வாலைச் சுழற்றிக் கொண்டேயிருப்பவர்களை ஊக்குவிப்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. வாலைச் சுழற்றுகிறவர்களின் சுயமரியாதை சார்ந்தது. அது பற்றி நாம் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் தம்மை விமர்சிப்பவர்களைப் பொறுக்கி என்று எழுதுவதற்கான உரிமையை யார் கொடுத்தார்கள்? இனி கடங்கநேரியான் விடமாட்டார். சிலம்பம் ஆடுவார். அதைத்தான் மனுஷ்ய புத்திரன் எதிர்பார்க்கிறார். Negative publicity.

கடந்த பல ஆண்டுகளாக சுப்பிரமணியசாமி செய்வதும் இதைத்தான். திடீரென்று சம்பந்தமேயில்லாமல் சட்டையைப் பிடித்து இழுத்து ஒரு குத்துவிடுவது. குத்து வாங்கியவன் கூட்டம் சேர்த்துவிடுவான். ‘நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கோ..ஆனா என்னைப் பற்றி பேசு’ என்று சுயகுவியம் சார்ந்து அலைகிறவர்களுக்கு சமூக ஊடகங்கள் நன்றாகத் தீனி போட்டு வளர்க்கின்றன. அதை இவர்களும் நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

கிளப்பிவிடப்பட்ட உரையாடல் திசை மாறுவது பற்றியும், தனிமனிதத் தாக்குதலாக உருக்கொள்வது குறித்தும் யாருக்கும் எந்தக் கவலையுமில்லை. ‘என்னைப் பார்’ ‘என்னைப் பார்’ என்று அடித்து ஆடிக் கொண்டேயிருப்பார்கள். வேறொரு பிரச்சினை கிடைத்தால் அப்படியே போட்டுவிட்டு அங்கே போய் நின்று கொள்வார்கள்.

இலக்கிய விவாதம் என்ற பெயரில் படைப்புகளை முன்வைத்து உண்டாக்கப்படும் வாதங்களும் பிரதி வாதங்களும் அர்த்தமுள்ளவை. ஆரோக்கியமானவை. உரையாடல்களின் வழியாக பார்வையாளர்களுக்கு வேறொரு புரிதல் உண்டாகும். உரையாடலில் பங்கேற்பவர்களும் இன்னொரு கட்டத்திற்கு நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அத்தகைய constructive உரையாடல்கள்தான் இலக்கியத்திற்கு ஏதாவதொரு வகையில் பங்களிப்பைச் செய்யக் கூடியவை. இப்போதைய சச்சரவில் எங்கேயாவது விருது பெற்ற ஏதேனுமொரு படைப்பு பற்றி எழுதப்பட்டிருக்கிறதா? துழாவிப் பார்த்தால் ‘ஏய்...ங்கோ...நான் யார் தெரியுமா?’ என்கிற ரீதியில்தான் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். காலிப் பெருங்காய டப்பாவை உருட்டிவிட்டு அதன் மீது ‘இலக்கிய சர்ச்சை’ என்று லேபிள் வேறு குத்துகிறார்கள். கண்றாவி.

எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். எதையாவது சொல்லப் போக நம்மையும் திட்டுவார்கள். அதற்கு பதில் சொல்வதற்கு மெனக்கெட வேண்டும். உண்மையில் கச்சடா இது. கையை நீட்டாமல் இருப்பதுதான் நல்லது. ஆனால் கையை அரிக்க வைக்கிறார்கள். சுஜாதா எனக்கு ஆதர்சம். என்னைப் போன்ற பலருக்கும் அவர்தான் ஆதர்சம். அவர் பெயரில் விருது வழங்கினாலும் வழங்காவிட்டாலும் அவரது புகழ் வெளிச்சம் அப்படியேதான் இருக்கும். எங்கேயாவது ஒரு வாசகனை சப்தமில்லாமல் வாசிப்பு நோக்கி இழுத்துக் கொண்டேதான் இருப்பார். இப்படியெல்லாம் அவரை அவமானப்படுத்தி முச்சந்தியில் நிறுத்துவதற்குப் பதிலாக அவர் பெயரில் விருது வழங்குவதையே நிறுத்திவிடலாம். 

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

5 எதிர் சப்தங்கள்:

viswa said...

சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆணித்தரமாக சொல்லிவிட்டீர்கள்.சுஜாதாவை இழிவு படுத்துவதில் அர்த்தமில்லை.உண்மையான சுஜாதா ரசிகன் இதை பற்றி கவலை படமாட்டான்.அவர் எழுத்தாளர் அல்லாதவர்க்கும் ஆதர்சம்.

விஸ்வநாதன்

பேராசிரியர். கோபாலகிருஷ்ணன் said...

"சுயகுவியம்"
அருமையான சொல்லாடல்,மணி.
-வாழ்க வளமுடன்.

சேக்காளி said...

//சுஜாதா எனக்கு ஆதர்சம். என்னைப் போன்ற பலருக்கும் அவர்தான் ஆதர்சம்//
இதுதான் உண்மை.
அவரை விமர்சிப்பவர்களுக்கு அவரின் இடத்தை நம்மால் அடைய முடியவில்லையே என்ற ஆதங்கம். விமர்சித்த்து விட்டு போகட்டும்.அவர் இருந்தால் எப்படி இதை புறங்கையால் தள்ளி விட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிப்பாரோ அதே போல் அடுத்த வேலையை கவனியுங்கள்.

KRISH.RAMADAS said...

இன்று நடை பெறும் தரங்கெட்ட இலக்கியச் சண்டைக்கும், இந்த கருத்துக்கும் எதுவும் தொடர்பிருக்குமா நண்பர்களே.
2 Years Ago
See Your Memories

Ganeshan Gurunathan
April 28, 2015 ·
பிரமிள், சுந்தர ராமசாமிக்குப் பிறகான, தமிழ் இலக்கியத்தை, நான் இப்படித்தான் எப்போதும் புரிந்துகொள்கிறேன்.

சுந்தர ராமசாமியின் பள்ளியில் பயின்றவர்கள், அவரால் தூக்கிவிடப்பட்டவர்களிடம், பொதுவாக காணப்படும் குணங்கள்: அங்கீகாரம் தேடுவார்கள். கூட்டம் சேர்ப்பார்கள். இலக்கிய வியாபாரத்தில் உஷாராக இருப்பார்கள். பிடிக்காதவர்களை அசிங்கமாக விமர்சிப்பார்கள். ஆதாயம் கிடைத்தால் அவர்களுடன் சமரசம் செய்வார்கள்.

பிரமிள் பள்ளியில் பயின்றவர்கள், அவரது எழுத்தை விரும்பியவர்களிடம், பொதுவாக காணப்படும் குணங்கள்: அங்கீகாரம் தேடமாட்டார்கள். உதிரிகளாக இருப்பார்கள். இலக்கிய வியாபாரம் தெரியாது. யாராக இருந்தாலும் எது சரி எனப்படுகிறதோ அந்தவகையில் விமர்சிப்பார்கள். ஆதாயத்திற்காக யாருடனும் சமரசம் செய்ய முன் வரமாட்டார்கள்.

சக்திவேல் விரு said...

நல்ல அலசல் பதிவு ..சில நேரங்களில் இந்த சில்லறைகள் எல்லாம் எழுதி என்னத்த கிழிச்சிட தொங்கபோட போறாங்கன்னு தோணுது ................