• நிசப்தம் அறக்கட்டளை 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
• ஏழைகளுக்கான கல்வி மற்றும் மருத்துவ உதவி ஆகியவற்றோடு சேர்த்து பன்முனை சமூக மேம்பாடு என்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.
• அறக்கட்டளையின் அடிப்படையான பலமாக அதன் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. ஒவ்வொரு மாதமும் அறக்கட்டளையின் வரவு செலவுக்கணக்கு (Bank Statement) பிரதியெடுக்கப்பட்டு பொதுவெளியில் (இணையத்தில்) பிரசுரம் செய்யப்படுவதோடு வருடந்தோறும் வருமான வரி முறையாகத் தாக்கல் செய்யப்படுகிறது.
• NGO என்பதாக இல்லாமல் நிசப்தம்.காம் இணையதளத்தை வாசிக்கும் வாசகர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகளையும் அதன் நேர்மைத்தன்மையையும் புரிந்து கொண்டு வழங்கும் நன்கொடையிலிருந்து மட்டுமே நலத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
• அறக்கட்டளை வழியாக இன்று வரை கிட்டத்தட்ட எழுபத்தைந்து லட்ச ரூபாய்க்கான நலப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு பயனாளியும் தன்னார்வலர்களால் வெகு தீவிரமாக அலசப்பட்டு தகுதியான பயனாளிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.
• பெற்றோர் இல்லாத, பிற்படுத்தப்பட்ட, ஏழை எளிய மாணவர்கள் சற்றேறக்குறைய நாற்பது பேருக்கு படிப்புச் செலவை நிசப்தம் அறக்கட்டளை செய்து வருகிறது.
• ஏழை மக்களின் மருத்துவ உதவிகளுக்காக பல லட்ச ரூபாய் நிதி மருத்துவமனைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டிருக்கிறது. தாலசீமியாவால் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளுக்குத் தலா ஒரு லட்ச ரூபாய், நிறை மாத கர்ப்பிணிக்கு உண்டான கட்டியை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்கு ஒரு லட்ச ரூபாய், ஈரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஒரு குழந்தைக்கு வழங்கப்பட்ட எழுபதாயிரம் ரூபாய் ஆகியவற்றை சில உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
• தமிழக கிராமப்புறங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நூலகம் அமைத்தல் (தலா பத்தாயிரம் ரூபாய்), மாணவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள் (தலா பத்தாயிரம் ரூபாய்), பள்ளிகளுக்கு தற்காலிக ஆசிரியர்களுக்கான ஓராண்டுச் சம்பளம் (தலா ஐம்பதாயிரம் ரூபாய்) , தொடுதிரை வகுப்பறைகளை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
• வைரவிழா முதனிலைப்பள்ளி, கோபிபாளையம் புனித திரேசாள் ஆரம்பப்பள்ளி ஆகியவற்றிலும், லட்சுமி மில்ஸ் ஆரம்பப்பள்ளியிலும் தலா ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான தொடுதிரை வகுப்பறைகள் (Smart class) அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
• கடலூர், சென்னை வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆடு மாடுகள், தையல் எந்திரங்கள், தொழிற்கருவிகள் என அவர்களது தொழில்களை மேம்படுத்தும் விதமாக கிட்டத்தட்ட நாற்பது லட்ச ரூபாய்க்கான உதவிகள் வழங்கப்பட்டன.
• எம்.ஜி.ஆர் காலனியில் நரிக்குறவர் இனக் குழந்தைகள் ஜிம்னாஸ்டிக் பயிற்சி பெறுவதற்கும், போட்டிகளில் கலந்து கொள்வதற்கும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கான பொருளாதார உதவிகளையும் அறக்கட்டளை செய்து கொண்டிருக்கிறது. பயிற்சி பெறுவதற்கான சாதனங்கள் புதுப்பிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன.
• ஒய்ஸ்மென் சங்கத்துடன் சேர்ந்து வேமாண்டம்பாளையம் பஞ்சாயத்து முழுவதும் சீமைக்கருவேல மரம் ஒழிப்புக்காக நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்திருக்கின்றன.
• ஈரோடு மாவட்டம் ஒழலக்கோயில் பஞ்சாயத்தில் பசுமை மீட்பு செயல்பாடாக வேலிக்காத்தான் மரங்களை அழித்து, குளம் குட்டைகளை மேம்படுத்தி, மரங்கள் நடுவதற்காக அமெரிக்காவிவின் சிகாகோ வாழ் தமிழர்கள் மூலம் ஒன்றரை லட்ச ரூபாய் திரட்டப்பட்டு பணிகள் முழு வீச்சாக நடைபெற்று வருகின்றன.
• இவை தவிர ப்ளஸ் டூ மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகள், வாசகர்களை மாணவர்களுக்கான வழிகாட்டிகளாகச்(mentor) செயல்படச் செய்தல், சூழலியல் செயல்பாடுகள் என பல தளங்களிலும் செயல்பட்டு வருகிறது.
• அறக்கட்டளைக்கு வரும் ஒவ்வொரு ரூபாயும் பயனாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் இருப்பதனால் அறக்கட்டளைக்கு என தனி அலுவலகம், ஊழியர்கள் என்கிற வகைகளில் எந்தச் செலவுக்காகவும் நன்கொடையிலிருந்து நிதி எடுக்கப்படுவதில்லை.
(வார இறுதியில் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படிச் சந்திக்கும் போது இதுவரையிலும் நாம் செய்த பணிகளின் தொகுப்பு கைவசமிருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அப்படித் தொகுப்பட்ட விவரங்கள் மேலே இருப்பவை. நிசப்தத்திலும் பதிவு செய்து வைத்துவிடலாம். இங்கே இல்லாமல் வேறு எங்கு?)
2 எதிர் சப்தங்கள்:
நல்லது. மகிழ்ச்சி ... தொடருங்கள் ... வாழ்த்துகள்
Valga valamudan ....
Post a Comment