Apr 25, 2017

சிறைச்சாலை

நேற்று ஒருவரைச் சந்தித்துப் பேசுகிற வாய்ப்புக் கிடைத்தது. மத்திய சிறைகளில் சமூக நல அலுவலராக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். ஏற்கனவே பேசியிருக்கிறோம். அவர் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது. ‘சிறைக்கு வர்றவங்கள்ல நிறையப் பேரு socially handicapped' என்றார். அந்தச் சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்ள மெனக்கெட வேண்டியதில்லை. ஆனாலும் அவர் ஒரு கதையையும் சொன்னார்.

முப்பது அல்லது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக நடந்த சம்பவம் அது. கொண்டையம்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தசாமிக்கு பங்காளியின் குடும்பத்துடன் வரப்புத் தகராறு. கோவிந்தசாமி கல்யாணமாகாத இளைஞன். கோபமும் வன்மமும் உள்ளுக்குள் ஊறிக் கொண்டேயிருக்க பகைமையும் தீவிரமாகியிருக்கிறது. ஒரு நாள் இரவில் தீட்டிய அரிவாளை எடுத்துச் சென்று பங்காளி வீட்டிலிருந்து ஐந்து பேர்களையும் வெட்டிக் கொன்றுவிட்டான். தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு குழந்தையும் ஒன்று. தடுக்க வந்த நாயும் தப்பிக்கவில்லை. கிராமங்களில் தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றுக்குமிடையில் தூரம் அதிகம் என்பதால் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. வெட்டிக் கொன்றுவிட்டு அரிவாளை எங்கோ பதுக்கிவிட்டுச் சென்று தூங்கிவிட்டார்.

அடுத்த நாள் விஷயம் வெளியே தெரிந்து ஊரே கூடி நின்று வேடிக்கை பார்த்த போது கோவிந்தசாமி மட்டும் வந்து பார்க்கவில்லை. ஏற்கனவே பங்காளித் தகராறு பற்றித் தெரிந்து கொண்ட போலீஸ் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்கிறார்கள். வழக்கு நடைபெறுகிறது. சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து வெளியே வந்துவிடுகிறார் கோவிந்தசாமி. ‘கோவிந்தசாமிதான் கொலை செய்தார் என்பதற்கான சாட்சிகளும் நிரூபிக்க முகாந்திரங்களும் இல்லை’ என்று செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்துவிடுகிறது. வெளியே வந்தவர் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி திருமணம் செய்து இரண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்த வரைக்கும் எல்லாம் சுபம்.

திடீரென்று ஒரு பால்காரருடன் சண்டை வருகிறது. கோவிந்தசாமிக்கு கோபம் தலைக்கேற ‘அஞ்சு பேர வெட்டிக் கொன்னதே நான்தான்..உன்னைக் கொல்ல எத்தனை நேரமாகும்’ என்று மிரட்ட அவர் அப்படியே காவல்துறையில் ஒப்பித்துவிட்டார். வந்து சேர்ந்தது விவகாரம். பால்காரரின் புகாரை வைத்து வழக்கைத் தூசி தட்டிய காவல்துறை மீண்டும் விசாரணையைத் தொடங்குகிறது. அதன் பிறகு கோவிந்தசாமியால் தப்பிக்க முடியவில்லை. உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்க அதையை உறுதி செய்து உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

கருணை மனுவை மாநில ஆளுநர் நிராகரித்தார். பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவராக இருந்த போது கருணை மனு ஏற்கப்பட்டது. ஆனால் ‘சாகும் வரைக்கும் சிறையிலேயே இருக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டார். சமீபத்தில் கோவை மத்திய சிறையிலேயே இறந்து போனார் கோவிந்தசாமி.

இந்தக் கதையில் கோவிந்தசாமியைத்தான் கவனிப்போம். அவரது குழந்தைகள்?

கொலைகாரன் குழந்தைகள் என்று திரும்பிய பக்கமெல்லாம் பேசுவார்கள். ஒதுக்கி வைப்பார்கள். வருமானமும் இல்லையென்றால் வாழ்க்கையை நடத்துவதே சிரமமாகிவிடுகிறது. இப்படி சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை ‘socially handicapped' என்றார். 

‘கஷ்டப்படுறவங்க படிப்புக்கு நீங்க உதவுறது பத்திக் கேள்விப்பட்டேன்...இந்த மாதிரியானவர்களின் குழந்தைகள் நிறைய இருக்காங்க’ என்றவர் ‘பெரியவங்க செஞ்ச தப்புக்கு அவங்க குழந்தைகளும் பாதிக்கப்படுறாங்க’ என்றார். கோவை மத்திய சிறையில் மட்டும் இரண்டாயிரம் கைதிகள் இருக்கிறார்கள். புழல், வேலூர், மதுரை, பாளையங்கோட்டை என்று கணக்குப் போட்டால் பல்லாயிரம் பேர் இருப்பார்கள். ஆனால் கைதிகளைப் பார்க்க எல்லோரையும் அனுமதிப்பதில்லை. 

‘கைதிகளின் குடும்பங்களுக்கு உதவ விரும்புகிறோம்’ என்று விண்ணப்பம் தர வேண்டும். அதை சிறைத்துறை பரிசீலித்து சிபிசிஐடி போலீஸார் மூலம் நம்மை விசாரித்து அவர்கள் தரக் கூடிய முடிவுகளின்படியில் அனுமதியளிப்பார்கள். முரடர்களும் திருடர்களும் இருந்தாலும் எப்படியாவது சிக்கிக் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். வழக்கு நடத்த வசதியில்லாதவர்கள், சந்தர்ப்பவசத்தால் சிக்கிக் கொண்டவர்கள், தங்களின் கைதுகளால் பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் என்று அவரிடம் ஆயிரம் கதைகள் இருக்கின்றன. நிறையச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கைதிகளுடனான அனுபவம், அவர்களது மனநிலை என்றெல்லாம் பேசவும் நிறைய இருக்கின்றன. அவர் பணியில் இருந்த போது செல்போன்கள் இல்லை என்பதால் கடிதங்கள் வழியான தகவல் தொடர்புதான் வழி. அனைத்துக் கடிதங்களும் தணிக்கை செய்யப்படும். அதை சமூக நல அலுவலர்தான் செய்வாராம். ‘நீங்க நல்லவன்னு சொல்லி அனுப்பி வெச்சீங்க..அவன் வந்து ஒரு ராத்திரி தங்கிட்டு போய்ட்டான்’ என்று மனைவி கணவனுக்கு எழுதிய கடிதங்களையெல்லாம் நினைவுபடுத்திச் சொன்னார்.

பொதுவாகவே கைதாகி உள்ளே வரும் முதல் பதினைந்து நாட்களுக்கு கைதிகள் கடுமையான மன உளைச்சலில் இருப்பார்களாம். ‘அய்யோ இப்படி ஆகிடுச்சே’ என்கிற மனநிலை. உணவு உறக்கம் என எதுவுமே பிடிக்காது. அப்படியான ஆட்களைக் குறி வைத்து நெருங்குகிற கைதிகள் மனதுக்கு ஆதரவாக இருப்பதாகக் காட்டி முகவரியை வாங்கிக் கொள்வதும் வெளியே செல்லும் போது ‘அவர் சொல்லி அனுப்பினார்’ என்று சொல்லி பணம் வாங்குவது, ‘தங்கிச் செல்வது’ என்பதெல்லாம் நடந்துவிடுகிற சாத்தியங்கள் இருப்பதையெல்லாம் கதை கதையாகப் பேசிக் கொண்டிருந்தோம்.

கைதாகி வரும் முதல் தினத்தன்றே ‘இங்க எவனும் யோக்கியன் இல்ல..யார்கிட்டவுன் அட்ரஸைக் கொடுத்துடாதீங்க...அப்புறம் என்ன வேணும்ன்னாலும் நடக்கும்’ என்று கவுன்சிலிங் கொடுப்பாராம். அவரிடம் பேசுவதற்கு இன்னமும் நிறைய இருக்கின்றன. இனி ஒவ்வொரு முறை சந்திக்கும் போதும் பேச வேண்டும். ‘Socially handicapped- ஞாபகம் வெச்சுக்குங்க’ என்றார். ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். சிறையில் ஒரு விண்ணப்பமும் கொடுத்து வைக்கலாம் என்று தோன்றுகிறது. 

‘அடுத்த முறை கோவை வரும் போது சொல்லுங்க..சிறைக்கு அழைத்துச் செல்கிறேன்’என்று சொல்லியிருக்கிறார். 

கோபியிலிருந்து கிளம்பும் போதே ‘ஏ..பார்த்துக்குங்க நானும் ரவுடிதான்’ என்று கத்திக் கொண்டே செல்ல வேண்டும்.

2 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//சமூகத்திலிருந்து துண்டிக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் கிடப்பதை ‘socially handicapped' என்றார்//
துண்டிப்பவர்களையும், ஒடுக்குபவர்களையும் தான் ஊனமுற்றவர்களாக பார்க்க வேண்டும்.

Jaypon , Canada said...

அவர்கிட்ட நிறைய பேசுங்க. அதை பதிவிலும் போடுங்க. சினிமாவையும் அரசியலையும் தாண்டி வாழ்வில் எத்தனை விசயங்கள் இருக்கு. நீங்களே அதைக்காட்டும் சாளரம்.