அநேகமாக அடுத்த மாதம் பனிரெண்டாம் வகுப்பிற்கான முடிவுகள் வந்துவிடக் கூடும். கடந்த சில நாட்களாக பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள்/மாணவிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடந்த வருடம் ‘எப்படிப் படிப்பது’ உள்ளிட்ட சில பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். அந்தத் தொடர்பின் காரணமாக அழைக்கிறார்கள்.
தேர்வுகள் முடிந்து இன்று வரைக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி என்று இருந்தாகிவிட்டது. மாணவர்கள் இதுவரை எதிர்கொண்ட பல வருட அழுத்தங்களுக்கு இந்த ஓய்வு அவசியமானதுதான். இனி அவர்கள் சில வேலைகளைச் செய்ய வேண்டும்.
தேர்வு முடிவுகள் வரும் வரைக்கும் பின்வரும் காரியங்களைச் செய்து கொண்டிருப்பது அவசியம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். குறிப்பிட்ட படிப்புக்கு என்றில்லாமல் பின்வரும் அணுகுமுறை அனைத்து பிரிவுகளுக்கும்/பாடங்களுக்கும் பொதுவானது.
1) எவ்வளவு மதிப்பெண் வரும் என்பதை ஓரளவுக்குக் கணித்து வைத்திருக்க வேண்டும். அந்தக் கணிப்பு பாடம் வாரியாக இருக்கட்டும். அப்படிக் கணித்து வைப்பது நம்முடைய மதிப்பெண்களுக்குக் கிடைக்கக் கூடிய பாடங்களை ஓரளவு வட்டமிடுவதற்கு உதவும். ஒருவேளை தாம் எதிர்பார்க்கும் கணிக்க முடியவில்லையென்றாலும் ஒன்றும் பிரச்சினையில்லை. பின்வருவனவற்றில் கவனமாக இருக்க வேண்டும்.
2) தமக்கு படிப்பதற்கு வாய்ப்புள்ள பாடங்கள் என்ன என்பதைத் தேடிப் பட்டியலிடத் தொடங்க வேண்டும். ‘எனக்கு படிப்புகளைப் பற்றித் தெரியாதே’ என்று பயப்பட வேண்டியதில்லை. ஆசிரியர்கள், நண்பர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் எனத் தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரிக்கலாம். அப்படி விசாரிக்கும் போது ‘நீ இந்தப் படிப்பைப் படிக்க வேண்டும்’ என்று அடுத்தவர்கள் சொல்கிற அறிவுரையை இந்தத் தருணத்தில் முற்றாகப் புறக்கணித்துவிட வேண்டும். நமக்கான வாய்ப்புகள் என்பதில் மட்டும்தான் இப்பொழுது தேடிக் கொண்டிருக்கிறோமே தவிர முடிவு செய்யப் போவதில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
3) தகவலைச் சேகரிக்கும் போது ஒருவருக்கே அனைத்து படிப்புகளைப் பற்றியும் தெரியும் என்ற நம்பிக்கையை ஒழித்துவிட வேண்டும். உதாரணமாக வனவியல் (Forestry) படிப்பைப் பற்றிச் சொல்லக் கூடியவருக்கு மீன்கள் சம்பந்தமான படிப்பு (Fishery) இருப்பது தெரியாமல் இருக்கலாம். எனவே எவ்வளவு பேரிடம் பேசித் தகவல்களைச் சேகரிக்க இயலுமோ அவ்வளவு பேரிடம் பேசித் தகவல்களைச் சேகரித்து வைக்க வேண்டும்.
4) பொறியியல் படிப்பில் ஆர்வமிருப்பின் வெறுமனே கம்யூட்டர், கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் என்று மட்டும் யோசிக்காமல் அதில் இருக்கும் அனைத்து பிரிவுகளைப் பற்றியும் பட்டியலிட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
5) வெறுமனே படிப்புகளை மட்டும் தெரிந்து கொள்ளாமல், அந்தப் படிப்பில் இளநிலை படிப்பு மட்டும் போதுமா அல்லது முதுநிலை படிக்க வேண்டுமா, அந்தப் படிப்புகளுக்கு எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பனவற்றையும் பட்டியலிட்டு வைத்துக் கொள்வது நல்லது.
5) படிப்புகளைப் பற்றித் தெரிந்து கொண்ட பிறகு நாம் தயாரித்து வைத்திருக்கும் அதே பட்டியலில் குறிப்பிட்ட படிப்புகள் எந்தக் கல்லூரியில் நடத்தப்படுகின்றன என்பதையும் அங்கு வருடத்திற்கு எவ்வளவு செலவாகிறது (விடுதிச் செலவையும் சேர்த்து) எவ்வளவு ஆகும் என்பதையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். பல தரமற்ற கல்லூரிகளை வடிகட்டுவதற்கு இது அவசியம்.
6) படிப்பு, கல்லூரி, செலவு ஆகியவற்றைப் பற்றிய பட்டியலைத் தயாரிக்கும் போதே நமக்கு ஓரளவுக்குத் தெளிவு கிடைத்துவிடும். பாடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக இந்தத் தெளிவு ஒவ்வொரு மாணவனுக்கும் அவசியம். ‘எதற்காக இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்தாய்’ என்று யாராவது கேட்டால் ஐந்து நிமிடங்களாவது பதில் சொல்லுகிற தெளிவுதான் நாம் சரியான படிப்பைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதற்கான சாட்சி. இதுதான் நம் எதிர்காலம் என்பதில் கவனமாக இருங்கள்.
7) நாம் பட்டியலிட்டு வைத்திருக்கும் படிப்புக்கான விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும் என்ற விவரத்தையும் கைவசம் வைத்துக் கொள்வது எல்லாவற்றையும் சுலபமாக்கி வைக்கும்.
மேற்சொன்ன பட்டியலைத் தயாரிப்பதற்காக ஒரு வார அவகாசத்தை எடுத்துக் கொள்ளலாம். படிப்பு, கல்லூரி, செலவு, விண்ணப்பம் ஆகிய விவரங்களைப் பட்டியலிட்ட பிறகு அடுத்த கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு நம்முடைய விருப்பத்தைச் சுருக்கலாம். சுருக்கலாம் என்பது ‘இதிலிருந்து எந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பது’ என்று சுருக்குவது. மேற்சொன்ன பட்டியல் தயாரிப்பு என்பது கடலிலிருந்து மீன்களை அள்ளியெடுப்பது போல. இதன் அடுத்த கட்டம் நமக்கான மீன் வகையை மட்டும் பொறுக்கியெடுப்பது.
மாணவர்களில் பலரும் இப்பொழுதே ‘இந்தப் படிப்புதான்’ என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ‘ஏன் இந்தப் படிப்பை முடிவு செய்திருக்கிறாய்?’ என்று கேட்டால் பதில் இல்லை. இவ்வளவு அவசரமாக முடிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. இன்னமும் நேரமிருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சொன்னார்கள், எதிர்வீட்டில் இருப்பவர்கள் படிக்கிறார்கள் என்று நம் வட்டத்தைச் சுருக்கிக் கொள்ள வேண்டியதில்லை. நம்மைச் சுற்றிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அவற்றை அலசுவது முக்கியம். பரவலாக வெளியில் தெரியாத படிப்பை படித்துவிட்டு அட்டகாசமாக வாழ்வில் வென்றவர்கள் இருக்கிறார்கள். எல்லோரும் விழுகிறார்கள் என்று நாமும் ஒரே குட்டையில் விழ வேண்டியதில்லை. வேலைச் சந்தையில் போட்டியே இல்லாத படிப்புகள் நிறைய இருக்கின்றன. அவற்றை நோக்கி நம் பார்வையைச் செலுத்த வேண்டும்.
படிப்படியாகச் செய்யலாம். படிப்புக்காகச் செய்யலாம்
தொடர்புக்கு...
vaamanikandan@gmail.com
3 எதிர் சப்தங்கள்:
+2 க்கு +ங்கா நவ்வ இருக்கே...,
hi sir. i spoke to my school teacher 4 days back. he said 12th result is on may 12th and tenth result on may 19th for state board
Dear sir, Very much useful. Request you to guide us further sir......
Post a Comment