Apr 13, 2017

சீமைக்கருவேல மரத்தை ஏன் அழிக்க வேண்டும்?

சமீபமாக ‘சீமைக்கருவேல மரத்தை ஒழிக்க வேண்டியதில்லை’ என்று சில கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தது. கீற்று இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியானது. பிறகு விகடன் இணையதளத்தில். இந்தக் கட்டுரைகள் பிரதியெடுக்கப்பட்டு வாட்ஸப், ஃபேஸ்புக் வழியாக பல லட்சக்கணக்கானவர்களை அடைந்து பல்லாயிரக்கணக்கானவர்களின் மனதை மாற்றியிருக்கக் கூடும். சீமைக்கருவேல ஒழிப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கிற காரணத்தினாலேயே உடனடியாக பதில் எழுத வேண்டியதில்லை எனத் தோன்றியது. அவர்கள் சொல்வதிலும் கூட உண்மை இருக்கலாம் அல்லவா? 

அறிவியல் பூர்வமாக சில தகவல்களைத் திரட்டுவதற்கு முன்பாக அனுபவரீதியிலான கருத்துக்களையும் திரட்ட வேண்டியிருந்தது. கடந்த சில நாட்களாகவே விவசாயிகளிடமும் பெரியவர்களிடமும் இது குறித்துப் பேசுவதற்கு நிறைய இருந்தது. 

எங்கள் அமத்தாவுக்கு எண்பது வயது இருக்கக் கூடும். அவருடைய திருமணம் வரைக்கும் சீமைக்கருவேல மரத்தை பார்த்ததேயில்லை என்றார். அப்பொழுது பவானிசாகரிலிருந்து விதைகளை வாங்கி வருவார்களாம். எங்கேயிருந்து வாங்கி வருவார்கள் என்று அவருக்குச் சரியாகத் தெரியவில்லை. அநேகமாக ஏதேனுமொரு வேளாண்மை அலுவலகம் அங்கே இருந்திருக்கக் கூடும். அமத்தாவுக்கு இருபது வயதில் திருமணம் ஆகியிருக்கலாம் என்று கணக்கிட்டால் இன்றிலிருந்து அறுபது வருடங்களுக்கு முன்பாக சீமைக்கருவேல மரம் பரவத் தொடங்கியிருக்கிறது. அமத்தா அதை ‘சீமை வன்னி மரம்’ என்றார். இதை வேலி முள் என்பவர்களும் உண்டு. டெல்லி முள் என்பவர்களும் உண்டு. 

வேலி ஓரமாக விதையிட்டு அவை வளர்ந்த பிறகு விதைகளை ஆடு மாடுகள் தின்று எச்சம் கழிக்கும் இடங்களில் எல்லாம் பரவத் தொடங்கின. வேலிக்கு வந்த மரம் விறகாகப் பயன்படத் தொடங்கிய காரணத்தினால் எல்லோருக்கும் விருப்பமான மரமாகியிருக்கிறது. இந்தக் காலகட்டத்திற்குப் பிறகுதானே சாண எரிவாயு, மண்ணெண்ணெய் ஸ்டவ் முதலியன வந்து சேர்ந்தன? மரம், வறட்டி ஆகியவற்றை வைத்து அடுப்பு எரிந்த காலத்தில் கடும் வறட்சியின் போதெல்லாம் வேலி மரம்தான் ஆபத்பாந்தவன். எவ்வளவு வறட்சியிலும் தம் கட்டி நிற்கு. வெட்டிக் கொள்ளலாம். அதே போல கடும் வெப்ப காலத்திலும் கால்நடைகளுக்கு நிழல் தருவதற்கு ஏற்றதாக இருந்ததால் யாருக்குமே இந்த மரத்தை எதிரியாகப் பார்க்கத் தோன்றவில்லை. 

ஆரம்பத்தில் நண்பனாகத் தெரிந்த மரம்தான் கடந்த அறுபதாண்டு காலமாக இந்த மரம் புதரைப் போல பரவத் தொடங்கிவிட்டது. குளம் குட்டைகளில் பெரும் ஆக்கிரமிப்பு இந்த மரங்கள்தான். பள்ளங்கள், கால்வாய்கள் என நீர் வரத்துப் பாதைகளை முழுமையாக மறித்து நிற்கின்ற மரங்களும் இவைதான். ‘புதராக வளரக் கூடிய எந்த மரமும் வேளாண்மைக்கு உகந்ததல்ல’ என்பதுதான் அனுபவம் வாய்ந்த உழவர்களின் வாதம். நிலத்தடி நீரை உறிஞ்சுவது ஒரு பக்கம் இருக்கட்டும் - குளம் குட்டைகளுக்கு நீர் வரத்தை பெருமளவு மட்டுப்படுத்துகின்றன. குட்டைகளிலும் ஏரிகளிலும் புதராகப் பெருகி நின்று நீர் தேக்கத்தை கடுமையாகக் குறைக்கின்றன. நீர் நிலைகளை மேம்படுத்த வேண்டுமானால் சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு மரங்கள் தப்பினாலும் விதை விழுந்து அவை மீண்டும் நீர் நிலைகளைச் சீரழித்துவிடும்.

இன்னொரு கூற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

‘ஓட்டாத காடு செழிக்கும்’ என்ற பழமொழியே உண்டு. உதாரணமாக, தற்சமயம் வறட்சியின் காரணமாக பயிர் செய்யாமல் நிலத்தை வைத்திருக்கிறார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நீர் பெருகி விவசாயம் செய்யத் தொடங்கும் போது விளைச்சல் அமோகமாக இருக்கும். எளிமையான காரணம்தான். மண்ணுக்கு ஓய்வு தரும் போது நுண்ணுயிரிகள் மண்ணை வளமூட்டிச் செறிவு படுத்துகின்றன. உழவர்களிடம் பேசினால் ஒரு விதிவிலக்கைச் சொல்கிறார்கள். ‘வேலி முள் முளைக்காமல் இருந்தால்தான் விளைச்சல் இருக்கும்’ என்கிறார்கள். ஒருவேளை இந்த வறட்சிக் காலத்தில் வேலிக்காத்தான்(சீமைக்கருவேலம்) முளைத்து பெருகியிருந்தால் அந்த பூமியில் மீண்டும் விவசாயம் செழிக்க சில ஆண்டுகளாவது தேவைப்படும். சீமைக்கருவேல மரத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகிறவர்கள் இந்தக் கோணத்தில் விசாரித்துப் பார்க்கலாம். ஏதோவொரு வகையில் மண்ணின் வளத்தையும் அதன் உயிர்த்தன்மையையும் இம்மரங்கள் அகற்றுகின்றன.

இதே கூற்றோடு இணைத்துச் சொல்ல இன்னுமொரு தரவும் உண்டு. ஒரு நிலத்தில் சீமைக்கருவேல மரமிருந்தால் அது பிற அனைத்து செடிகளையும் அழித்துவிடும். நிலத்தில் இருக்கும் வளத்தையும் ஈரத்தையும் இந்த மரங்களே முழுமையாக எடுத்துக் கொள்கின்றன என்பது முக்கியமான காரணமாக இருக்கலாம். சீமைக்கருவேல மரங்கள் பரவியிருக்கும் பகுதிகளில் பயணித்துப் பார்த்தால் இதைக் கண்கூடாகவே பார்க்க முடியும். சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே செழித்திருக்க பிற மரங்கள் கருகி கருவாடாகிக் கிடக்கின்றன. 

சீமைக்கருவேல மரங்கள் பிற தாவரங்களைத் தப்பிக்கவிடாமல் செய்வதற்கான இன்னொரு முக்கியக் காரணம் அம்மரத்திலிருந்து வெளிப்படும் வெம்மை. அடிக்கடி சூடு பிடித்துக் கொள்ளும் குழந்தையை சீமைக்கருவேல மர நிழலுக்கு அனுமதிக்காத பழக்கம் எங்கள் ஊர்ப்பக்கத்தில் உண்டு. ‘வேலி மரத்துக்கிட்டயே ஆடுனா செகை புடிக்காம என்ன பண்ணும்’ என்று கேட்பார்கள். இதையும் கூட கிராமப் பெண்கள் அனுபவ ரீதியாகவே கண்டறிந்து வைத்திருக்கிறார்கள்.

சீமைக்கருவேல மரங்களை ஆதரிக்கிற எந்தக் கட்டுரையும் அறிவியல் ரீதியிலான தரவுகளை முன் வைக்கவில்லை. அதே போலவே சீமைக்கருவேல மரங்களுக்கு எதிரான கட்டுரைகளும் அறிவியல் ரீதியிலான விவாதத்தை மேற்கொள்ளவில்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் சீமைக்கருவேலத்தை ஒழிக்காமல் நீர் நிலைகளை மேம்படுத்துதலும், வறட்சியை ஒழிக்கும் நடவடிக்கைகளும் எந்தவிதத்திலும் சாத்தியமில்லை என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்ல முடியும். வறட்சி பாதித்திருக்கும் அத்தனை கிராமங்களிலும் இம்மரம் பூதத்தைப் போல பரவியிருக்கிறது. இதை அழித்துச் சுத்தம் செய்யாமல் எந்தவொரு முன்னெடுப்புக்கும் வாய்ப்பில்லை.

விறகாகப் பயன்படுகிறது, ஆக்ஸிஜனை வெளியிடுகிறது போன்ற மொன்னையான வாதங்களைத் தவிர்த்துவிட்டுப் பேசலாம். ஆக்ஸிஜனை வெளியிடுகிறது என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். புதராக மண்டுகிறது என்பதுதான் முக்கியப் பிரச்சினை. 

நீதிமன்றங்கள் உத்தரவிட்டு மக்களும் ஓரளவுக்குப் புரிந்து கொண்டு இந்த மரங்களை அழிக்கத் தொடங்கும் போது திடீரென ‘இம்மரங்கள் ஏழைகளுக்கு விறகாகப் பயன்படுகிற மரங்கள்’ என்று எதற்காகக் கிளப்பிவிடுகிறார்கள் என்றுதான் மண்டை காய வேண்டியிருக்கிறது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக வறட்சி தாண்டவமாடிய போது வேலி மரங்களைத் தவிர விறகுக்கு வேறு வாய்ப்புகள் இல்லை. ஆனால் இப்பொழுது அந்தச் சூழல் இல்லை. விறகு வைத்து சோறு பொங்கும் மக்களின் சதவீதத்தைக் கணக்கெடுத்து அதில் எத்தனை பேர் சீமைக்கருவேல மரங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று கணக்கெடுத்தால் தெரியும்.

இப்பொழுது காகித ஆலைகள் இந்த மரங்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். பல தொழிற்சாலைகள் எரியூட்டுவதற்காக இம்மரங்களை காசுக்கு வாங்குகிறார்கள். ஒருவேளை இம்மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டால் காகித ஆலைகளும் தொழிற்சாலைகளும் திணறக் கூடும். சல்லிசாகக் கிடைக்கும் மரம் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடக் கூடும். அதனாலேயே கிளப்பிவிடுகிறார்களா என்று தெரியவில்லை. விகடன் மாதிரியான பொறுப்பு மிக்க ஊடகங்கள் இத்தகைய கட்டுரைகளை பிரசுரிக்கும் போது சற்றே தரவுகளைச் சரிபார்த்து பின்ணணியையும் புரிந்து கொண்டு வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளலாம்.

14 எதிர் சப்தங்கள்:

Jegadeesh said...

டீ தோட்டங்களினால் மலைப்பகுதி(மலை) தனது நீர் பிடிப்பு தன்மையை இழக்கிறது என்று சொல்கிறார்கள். யூகலிப்டஸ் மரம் ப்ற்றியும் இது போல சில தகவல்களை சிறு வயதில் கேட்டிருக்கிறேன்... எப்படியானாலும் வேலி முள்ளை அழிப்பது சில வகைகளில் சரிதான்..

RAGHU said...

விகடன் மாதிரியான பொறுப்பு மிக்க ஊடகங்கள் - Whether the promised amount been received?

Elavarasi said...

நுணா மரம் இதற்கு மிகச்சரியான மாற்று என்று சொல்லப்படுகிறது.

கோவை செந்தில் said...

அருமையாக சொன்னீர்கள்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சீமைக் கருவேலம் மட்டுமே நீர்நிலைகளை ஆக்ரமித்துக் கொள்ளவில்லை. சென்னயின் புறந்கர் பகுதிக்ளில் கடல் பாலை (இப்பகுதிகளில்) என்று அழைக்கப் படும் செடிகள்தான் அதிக அள்வில் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பூமாலைகளில் கூட இதன் இலைகள் வைத்துக் கட்டப் படுவதைக் காண முடியும். இவையும் வேலிகளாகத் தான் பயன்ப்டுத்தப் பட்டன.ஆனால் முள் கிடையாது.கண்ட இடஙளில் முளைத்துக் கிடந்த இவை இப்படு அதிகம் காணப்படுவதில்லை சீமைக் கருவேல மரத்தை அழித்து விட்டால் நீராதாரம் மேம்படும் என்பது மாயத் தோற்ற்மே. அவற்றை முழுமையாக ஒழிப்பது கொசுக்களை ஒழிப்பது போலத்தான். தேவைப்படும் இடங்களில் அவற்றை அழித்தால் போதுமானது.

Vaa.Manikandan said...

முரளிதரன்,

தேவைப்படும் இடங்கள் என்று வரையறை செய்வீர்கள்? ஒரு மரம் இருந்தால் ஊர் முழுவதும் பரவும். ஆறு மாத அவகாசம் போதுமானது. குளம், குட்டை, ஏரி, பள்ளம் என சகல இடத்திலும் பரவி மேவும். அழித்தால் முழுமையாக அழித்தால் மட்டுமே சாத்தியம். சீமைக்கருவேல மரத்தை அழித்தால் நீராதாரம் மேம்படாது என்றால் எப்படிச் சொல்கிறீர்கள்? சீமைக்கருவேல மரம் நிறைந்த நீர் நிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா? அழிக்காமல் எப்படி மேம்படுத்த முடியும்?

படிக்காதவர்கள் கூட இதில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொள்கிறார்கள். படித்தவர்கள்தான் கள நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல் மேம்போக்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள்!

Vaa.Manikandan said...

Raghu,

No. இடித்துரைக்கும் போதும் சில சமயங்களில் நயத்தக்க நாகரிகத்தைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை என்று யாரோ சொல்லியிருக்காங்க இல்ல?

bons alias bondamani said...

விகடன் ரெண்டு பக்கமும் பேசுவான்..
'ரெண்டும் ரொம்ப சரி' மாதிரியே பேசுவான்..

ஆனா ஒரு முடிவை சொல்லாம "நீங்க என்ன நினைக்கிறீங்க " அப்படின்னு முடிச்சருவான் ..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

என் கருத்து முழுவதும் சரி என்று கூறவில்லை. என் சிற்றறிவுக்குப் பட்டதை கூறுகிறேன். ஒன்றை முழுவதுமாக அழிக்க முனைவது சாத்திய மில்லாதததாகவே கருதுகிறேன். விரைவில் பல்கிப் பெருகும் எதுவும் நிச்சயம் அழியும் என்நும் நம்புகிறேன்.வறண்டு கிடக்கும் ஏரிகுளங்களை ஆக்ரமித்துக் கொள்வது சீமைக் கருவேலம் மட்டுமல்ல மற்ற புதர்களும்தான்.சில செடி வகைகள் தண்ணீரிலேயே வாழும் தகுதி பெற்றவை. நான் பார்த்தவரை நிரம்பிய நீர்நிலையில் நடுவில் சீமைக் கருவேல மரங்களை காண்பது அரிது. வற்றிக் கிடக்கும்போது முளைத்தவற்றை ஒவ்வோர் ஆண்டும் மழைக்காலம் முன்னதாக அகற்றி தூய்மைப் படுத்தலாம். நீர் வரத்துக்கு தடையாக இருந்தாலும் அழித்து விடலாம். ஓரளவுக்காவாவது செடி கொடிகள் நீரின் வேகத்தை கட்டுபடுத்துவதும் நன்மைக்கே. தடுப்பணைகள் போல் செயல்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கவும் பயன்படுமே. பலவிதமான் மரங்களை வளர்க்க முனைந்தாலே இவை முளைக்கும் வேகம் தானாகவே கட்டுப் படும். சீமைக் கருவேல மரம் வெம்மையை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். வெயில் நேரத்தில் அதன் கீழ் நின்றால் வெம்மை ஏற்படுவது இயற்கை. உண்மையில் சீமைக் கருவேல மரத்தில் இலைகள் மிக சிறியவை வெயில் காரணமாக இதன் நீர்சிறிதளவு வெளியேறுகிறது. அது உடனே ஆவியாவதால் வெம்மையை உணர்கிறோம். சூடாகக் கிடக்கும் மொட்டை மாடியில் நீர ஊற்றினால் நீர் உடனே ஆவியாகி நமக்கு வெம்மையைத் தருவது போலவே சீமைக் கருவேலமும் செய்கிறது. குட்டையாகவும் இருப்பதால் ஆவியாதலை உணர்கிறோம். அடர்த்தியான, பெரிய இலைகள் கொண்டவை ஈரப்பதம் அதிகம் வெளியிடுவதால் குளுமையை உணர்கிறோம்.

Manicka said...

Last weak i travelled by train from chennai to trivandrum during day time. in tiruchi , madhurai, thirunelveli , nagai district , the space occupied by this trees are like ocean,you will not able to see other trees, though there are this trees still you feel the hot air ,but here and there one or two trees are in burnt condition.You can tell those area peoples are not concerned about this.

Karthik R said...

How about parthenium?

Parthasarathy said...

அய்யா நம்மாழ்வார் ஒரு பேட்டியில சொல்லி இருப்பாரு. வேலியாக இந்த சீமை கருவேல மரம் இருந்தப்ப ஓரத்துல இருந்த பயிரகள் நல்லா வளராததை பாத்து ஒரு அடி ஆழத்துக்கு வாய்க்கால் மாதிரி வெட்டி அந்த மரத்தோட வேரை எல்லாம் எடுத்த அப்புறம் பயிர் நல்ல வந்ததுன்னு சொல்லி இருப்பாரு. ஆனால் அதே ஒரு வருசத்துக்கு அப்புறம் திரும்பவும் அதே பிரச்சினை. வாய்க்காலை திரும்பவும் ஆழப்படுத்தி பாத்தா அந்த மரத்தோட வேர் இன்னும் ஆழமா போய் பயிரோட வேறுல இருக்குற சத்த உறிஞ்சு எடுத்துருக்குது. இதை பாத்த பிறகு தான் இந்த மரத்தோட தன்மையை புரிஞ்சு இதை முழுமையா ஒழிக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்ததாக கூறினார்.

-பார்த்தசாரதி

ஜீவி said...

விகடன் எப்போதும் இது போல செய்வது சகஜம்தான். ராகவா லாரன்ஸ் ஒருகோடி விளம்பரம் செய்ததையும்,ஜல்லிக்கட்டு கூட்டத்தையும் பிரசுரித்து மகிழ்ந்தனர். ஆனால் லாரன்ஸ் கொடுக்காமல் ஏமாற்றியது மற்றும் ஜல்லிக்கட்டில் அப்பாவிகள் குத்து பட்டு சாவது போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவது விகடன் ஸ்பெஷ ல். வாசன் வீட்டு தோட்டத்தில் நிறைய வேலி வளர்த்து ஆக்சிஜனை பெறலாமே... எதற்கு அடுத்தவர்களுக்கு உபதேசம்?

SERVICE said...

ஐயா வணக்கம்

நான் இதை என்னால் முடிந்தவரை ஒரு குழுவுடன் சேர்ந்து சீமைக்கருவேல மரத்தை களைய விரும்புகிறேன்.
இதைபற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து போன் நம்பர் அனுப்பி வைக்கவும்.