Apr 12, 2017

புரளி மன்னர்கள்

இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது செண்பகப்புதூரில் குடியிருந்தோம். பெயருக்கேற்றபடியே வளமான ஊர்- அந்தக் காலத்தில். சத்தியமங்கலம் சாரு மெட்ரிகுலேஷன் பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தார்கள். பையன் ஆங்கில வழியில் படித்தால் அமெரிக்க ஜனாதிபதியாகிவிடுவான் என்கிற நம்பிக்கை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இருந்திருக்க வேண்டும். அதைக் கனவென்றும் சொல்லலாம். அப்படியான முயற்சிகள் எனக்கும் இருந்தன. அமெரிக்காவைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றும் முதலில் உள்ளூர் அரசியலைப் பழகலாம் என்ற நினைப்பில் நோட்டுப் புத்தகத்தில் உதயசூரியன் சின்னத்தைப் ப்ளேடால் கிழிக்க அது ஒரு பக்கத்திற்கு பதிலாக பல பக்கங்களை கிழித்தெறிந்துவிட்டது.  

‘மொளச்சு மூணு இலை விடல..உனக்கு என்னடா அரசியல்’ என்று சித்ரா டீச்சர் கும்மியெடுத்ததோடு நில்லாமல் சட்டையையும் ட்ரவுசரையும் கழற்றி மைதானத்தில் ஓட விட முயற்சித்ததும், ‘மூணு இலை முளைச்சிருக்கா இல்லையான்னு இவ பார்த்துடுவா போலிருக்கே’ என்ற பதைபதைப்பில் மானத்தைக் காத்துக் கொள்ள ட்ரவுசரை இறுகிப் பிடித்துக் கெஞ்சிக் கதறியதும் வரலாற்றின் கல்வெட்டில் பதிக்கப்பட வேண்டிய காட்சிச் சித்திரங்கள்.

இவையெல்லாம் கதைக்கு முக்கியமில்லாத சைடு ட்ராக். கதைக்கு வருகிறேன்.

செண்பகப்புதூரிலிருந்து சத்தியமங்கலத்துக்கு பள்ளிக்கூடத்தின் பேருந்திலேயே சென்று வந்தோம். கூடவே பேருந்தில் தினேஷ், சதீஷ், பானு, ரேகாவெல்லாம் இருப்பார்கள். இதில் சதீஷ் கூட பரவாயில்லை. தினேஷ் இருக்கிறானே? கழிசடை. எதற்கெடுத்தாலும் இனாவானாவான என்னைத்தான் சாத்துவான். வடிவேல் மாதிரி நானும் அடி மேல் அடியாக வாங்கிக் கொண்டேயிருப்பேன். அவன் அடிப்பதும் பானு, ரேகாவெல்லாம் சிரிப்பதும் என அவர்களுக்கு ஒரே குதூகலம்தான். பெரும்பாலும் காலை வேளைகளில் பிரச்சினை இருக்காது. ஆயா மிரட்டி அமரச் சொல்லிவிடும். தப்பித்துவிடுவேன். சாயந்திரம்தான் கொடுமை. ஒரு நாள் கூட விட மாட்டான். கையை மடக்கி வயிற்றிலேயே குத்துவான். மூச்சு நின்று சில வினாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும். எனக்கு அப்பொழுதே பரதேசி, பன்னி என்றெல்லாம் கெட்ட வார்த்தைகள் தெரியும். திட்டினால் இன்னொரு குத்துவிடுவான். எதற்கு வம்பு என்று அடியையும் வாங்கிக் கொண்டு அழுகையையும் அடக்கிக் கொண்டு- இந்த இடத்தில் நீங்கள் சிரித்தால் பாவம் பிடித்துக் கொள்ளுமாகையால் பரிதாபப் பட வேண்டும்.

குட்டக் குட்ட எவ்வளவுதான் குனிவது? எனக்கும் வெட்கம், சூடு, வெண்டைக்காய் எல்லாம் இருக்கிறதல்லவா? ‘உனக்கு கை நீளம் என்றால் எனக்கு வாய் நீளம்’ என்ற முடிவுக்கு வந்தேன். பேருந்திலிருந்த மற்றவர்களிடம் ‘சதீஷ் ரேகாவை லவ் பண்ணுறான்’ ‘ரேகா தினேஷை லவ் பண்ணுறா’ ‘தினேஷ் பானுவை...’ என்று சொல்லி சுற்றலில் விட ஆரம்பித்தேன். அப்பொழுது இந்த மாதிரியான சமாச்சாரங்களில் என்னுடைய கற்பனை தறிகெட்டு ஓடத் தொடங்கியிருந்தது. ஆமாம், இரண்டாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தேன். பிஞ்சிலேயே பழுத்தது. 

காதலர்கள் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துக் கொள்வார்கள் என்றும் அதனால் அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று சொன்னதையெல்லாம் மற்ற மாணவர்கள் அப்படியே நம்பினார்கள். எல்லோரும் கிசுகிசுப்பாக சிரித்துக் கொண்டார்கள். ஆனால் இரண்டு நாட்களுக்குக் கூட ரகசியத்தைக் காக்க முடியவில்லை. எவனோ ஒரு சில்லுண்டி தினேஷிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். எப்படியும் வயிறு ஒரு வழியாகிவிடும் என்றும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் நேர் மாறாக நடந்தது. அது வரை முரட்டு ஆளாகத் திரிந்தவன் பேருந்தின் முன் சீட்டில் கையை வைத்து அதன் மீது முகத்தைப் பதித்து அழுதான் அல்லது அழுவது போல நடித்தான். அவனைப் போலவேதான் அந்தக் குழுவே அழுதது. 

பெரிய ரவுடிக் கும்பலை அடக்கிவிட்டதாக இறும்பூதெய்திக் கிடந்தேன். ஆனால் விதி வலியது. அடுத்த நாள் சித்ரா டீச்சரிடமே போட்டுக் கொடுத்துவிட்டான். சும்மாவே ட்ரவுசரைக் கழற்றி மைதானத்தைச் சுற்ற வைப்பதிலேயே குறியாக இருக்கிற டீச்சர் அவர். இந்த விவகாரத்திற்காக கத்தரியெடுத்து கத்தரித்தாலும் கத்தரித்துவிடுவாரோ என்ற பயமில்லாமல் இல்லை. 

‘இங்க வாடா’ என்றார். ட்ரவுசரை இறுகப்பிடித்துக் கொண்டேதான் அருகில் சென்றேன். அப்பாவி மாதிரி நின்றேன். அவர் வயிற்றைக் கிள்ளிய கிள்ளு இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

கிள்ளியபடியே ‘இதெல்லாம் யாருடா சொல்லிக் கொடுத்தா?’ என்றார். அதுதான் நான் கிரிமினலாக மாறிய முதல் தருணம் என்று நினைக்கிறேன்.

திணறாமல் ‘தினேஷ்தான் மிஸ்’ என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தேன். 

பேயறைந்த மாதிரி நின்றவன் ஒரு கணத்தில் சுதாரித்துக் கொண்டு ‘இல்ல மிஸ்..பொய் சொல்லுறான் மிஸ்’ என்றான்.

விடாப்பிடியாக ‘பானுவைக் கட்டிப் புடிச்சு கன்னத்துல முத்தம் கொடுத்தேன்னு சொன்னான் மிஸ்’ என்றேன். சித்ரா டீச்சருக்கு உள்ளங்கால் கூசியிருக்க வேண்டும். எவன் உண்மையைச் சொல்கிறான் எவன் பொய்யைச் சொல்கிறான் என்றே தெரியாமல் குழம்பிப் போனவராக ‘பிரின்ஸிபாலிடம் அனுப்புவேன்’ ‘பேரண்ட்ஸைக் கூப்பிடுவேன்’ என்று சொல்லி எங்கள் அத்தனை பேருக்கும் ஆளாளுக்கு ஒரு அடி கொடுத்து வெளியே அனுப்பினார். வெளியே வந்தவுடன் தினேஷ் ஏதாவது செய்வான் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவன் பயந்திருந்தான். அதன் பிறகு அவன் என் வழிக்கே வரவில்லை.

கடைசியாக தினேஷைப் பார்த்த போது பைக் மெக்கானிக்காக இருப்பதாகச் சொன்னான். பானு, ரேகா பற்றியெல்லாம் கேட்டுக் கொள்ளவில்லை.

இந்தக் கதை எதற்கு என்றால்-

நாம் செய்கிற ஒவ்வொரு செயலும் 180 டிகிரி திரும்பி நமக்கே நடக்கும் என்பார்கள் அல்லவா? அப்படி நடந்திருக்கிறது. கடந்த வாரம் மகி அருகில் வந்து ‘அப்பா என்னை க்ளாஸ் மாத்தி விட்டுடுங்க’ என்றான்.

‘ஏண்டா தங்கம்?’ என்றேன். வேணியும் அருகில் இருந்தாள்.

அவனது வகுப்பில் படிக்கும் இரு மாணவிகள் மகி இன்னொரு பெண்ணை ‘லவ் மேரேஜ்’ செய்து கொள்ளப் போவதாகச் சொல்லிச் சிரித்தார்களாம். 

‘டீச்சர்கிட்ட சொல்ல வேண்டியதுதானே?’ என்றேன்.

‘மேம்கிட்ட போய் எங்களை இவன் லவ் மேரேஜ் செஞ்சுக்கறேன்னு சொல்லுறோம்ன்னு சொல்லிட்டாங்க’ என்றான்.

வேணிக்கு பயங்கர கோபம். ‘கெட்ட பொண்ணுங்க... இனி அவர்களுடன் பேசவே வேண்டாம்’ என்றாள். இதில் எல்லாம் மகி சமத்து. சொன்னால் கேட்டுக் கொள்வான். சரியென்று தலையை ஆட்டிக் கொண்டான். சாரு மெட்ரிகுலேஷன் நினைவில் வந்து போனது. அப்பொழுது நான் அமைதியாக இருந்து கொண்டேன்.

வேணி அந்தப் பக்கமாகச் சென்றவுடன் மகியை அழைத்து ‘தங்கம்..அடுத்தவன் அடிச்சா பயப்படலாம்..ஆனால் நம்மை பத்தி பொய் ஏதாச்சும் சொன்னா அவனைப் பத்தி நாம பொய் சொல்லத் தயங்கவே கூடாது’ என்பதை அவனுக்கு புரிகிற மாதிரி சொன்னேன். புரிந்து கொண்டான்.

‘அடுத்த தடவை ஏதாச்சும் கிண்டலடிச்சாங்கன்னா மேம்கிட்ட என்ன சொல்லுவ?’ என்றேன்.

‘என்னை லவ் மேரேஜ் செஞ்சுக்கிறேன்னு இவங்க ரெண்டு பேரும் சொல்லுறாங்க மேம்ன்னு சொல்லிடுறேன்’ என்றான்.

வேணிக்குத் தெரியாது. தெரிந்தால் கடித்துக் குதறிவிடுவாள். ஆனால் தெரிந்த வித்தைகளையெல்லாம் வாரிசுகளுக்கு நாம் சொல்லித் தராமல் வேறு யார் சொல்லித் தருவார்கள்?

8 எதிர் சப்தங்கள்:

Alad said...

வேணிக்குத் தெரியாது. தெரிந்தால் கடித்துக் குதறிவிடுவாள். ஆனால் தெரிந்த வித்தைகளையெல்லாம் வாரிசுகளுக்கு நாம் சொல்லித் தராமல் வேறு யார் சொல்லித் தருவார்கள்?

செம Heredity!.
Now She Knows!!

Jasper said...

Side track - haha......ha.:-)

Avargal Unmaigal said...

படித்து முடித்ததும் வந்த சிரிப்பை என்னால் உண்மையாகவே அடக்க முடியவில்லை

Unknown said...

சபாஷ் மணி. நாம் அறிந்த வித்தை எல்லாம் நம்ம வாரிசுக்கும் சொல்லி கொடுக்குனோம் ...

சித்ரா மிஸ் கிட்ட கிள்ளு வாங்காதவன் யாரு இருக்கா? அந்த stage classroom செட்டா நீங்க? எனக்கு செவன்த் ஸ்டாண்டர்ட் maths டீச்சர்.

Vinoth Subramanian said...

hilarious!!!

Unknown said...

Ada paavi Anna �� ippadi Magi kuda vittu vekkama unga vithaiyellam solli kudukkuringaley�������� .

Bala said...

மணி...சிரிப்பை அடக்க முடியல.. ஆபிஸ் டைம்ல படிச்சிட்டு சிரிப்ப அடக்க முடியாம.. ஏன் சிரிக்கிரிங்கனு கேக்ரவங்களுக்கு பதில் சொல்லவும் முடியாம.. என் வரையில் மகிக்கு நீங்க சொல்லி கொடுத்தது தான் சரி..

Unknown said...

சும்மாவே ட்ரவுசரைக் கழற்றி மைதானத்தைச் சுற்ற வைப்பதிலேயே குறியாக இருக்கிற டீச்சர் அவர். இந்த விவகாரத்திற்காக கத்தரியெடுத்து கத்தரித்தாலும் கத்தரித்துவிடுவாரோ என்ற பயமில்லாமல் இல்லை. :) :) :)