Apr 11, 2017

ஏன் பேச வேண்டும்?

கல்லூரி காலத்திய நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். ‘நீங்க என்ன இப்படி எழுதியிருக்கீங்க? ஒரு மாநிலத்திற்கான விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தால் பிற மாநில விவசாயிகள் அதே கோரிக்கையை முன் வைக்க மாட்டார்களா? குறைந்தபட்சம் வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலங்களிலாவது தள்ளுபடி செய்யலாம் என்றாலும் கூட பத்து மாநிலங்களாவது அந்தப் பட்டியலில் வராதா?’ என்றார். 

உழவர்களின் போராட்டத்தை விவாதிக்க முன்வருகிறவர்கள் பெரும்பாலும் இந்த ஒரு கோரிக்கையைத்தான் பேசுகிறார்கள். கடன் தள்ளுபடி குறித்து விவசாயிகளிடம் அருண் ஜேட்லி பேசினார். உழவர்கள் சார்பாக மற்றவர்களும் அவரிடம் பேசினார்கள். தள்ளுபடியெல்லாம் செய்ய முடியாது என்று கையை விரித்துவிட்டு அவர் சென்றுவிட்டார். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நாடு முழுவதும் சேர்த்து விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்வதாக இருந்தால் பல லட்சம் கோடி ரூபாயைத் தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அரசாங்கத்திற்கு அதுவே பெரிய தலைவலியாகிவிடக் கூடும். அந்த ஒரு கோரிக்கையை ஒதுக்கி வைத்துவிடலாம்.

மற்ற கோரிக்கைகளுக்கான பதில் என்ன?

தமிழகத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரண நிதி கேட்கிறார்கள். என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள் மத்தியில் ஆளுகிறவர்கள்? ‘எங்கள் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழையும் பொய்த்துவிட்டது; வடகிழக்கு பருவமழையும் தவறிவிட்டது; கர்நாடகமும் நீர் இல்லை என்று கை விரிக்கிறது’ என்று சொல்லி வறட்சி தாண்டவாடும் தமிழகத்துக்கு மாநில அரசு நிவாரணமாகக் கேட்ட தொகை கிட்டத்தட்ட நாற்பதாயிரம் கோடி ரூபாய். மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ஆயிரத்து எழுநூறு சொச்சம் கோடி ரூபாய். அதைத்தான் கூடுதலாக்கித் தரச் சொல்லி உழவர்கள் கேட்கிறார்கள். ஏதாவதொரு பதிலைச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இல்லையா?

கர்நாடகாவில் விவரமாக தடுப்பணைகளையும் குட்டைகளையும் கட்டி மழைக்காலத்தில் நீரை நிரப்பிக் கொள்கிறார்கள். அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாகக் குறைகிறது. தமிழகம் தண்ணீர் கேட்கும் போது ‘இவ்வளவுதான் எங்ககிட்டயே இருக்கு’ என்கிறார்கள். இதை நிர்வகிக்க ஒரு அமைப்பு தேவை இல்லையா? எவ்வளவு நீர் வருகிறது. அவர்கள் பயன்படுத்துகிற அளவு என்ன? தமிழகத்துக்கு எவ்வளவு நீர் தரப்பட வேண்டும் என எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லி விவசாயிகள் கேட்கிறார்கள். அடுத்த வருடம் கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. பாஜக Vs காங்கிரஸ். அதனால் இந்தக் கோரிக்கையைக் கண்டு கொள்வார்கள் என்று தோன்றவில்லை.

நதி நீர் இணைப்பைச் செய்யப் போகிறோம் என்று தேர்தலுக்கு முன்பாக பாஜக சொன்னதா இல்லையா? அதை எங்கள் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று உழவர்கள் கேட்கிறார்கள். இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்றும் இனி தமிழகத்துக்கு என்ன செய்யவிருக்கிறோம் என்பதையும் வெளிப்படையாகப் பேசலாம் அல்லவா?

விளைபொருட்களுக்கான சரியான விலை கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரச் சொல்கிறார்கள். (Minimum Support Price- MSP) அதுவும் சரியான கோரிக்கைதானே? உழவுக்காக என்னென்ன திட்டங்களை மத்திய அரசாங்கம் வைத்திருக்கிறது? இன்னமும் இருபதாண்டு காலத்தில் உழவுத் தொழில் எப்படி இருக்கும் என்ற நீண்டகால இலக்கு என்ன?இந்த தேசத்தில் உழவே பிரதானம் எனில்  அரசாங்கம் விளக்கலாம் அல்லவா?

இந்த அரை நிர்வாண விவசாயிகளிடம் பேசுவதற்கு பிரதமரேதான் வர வேண்டுமா என்று கேட்கிறவர்களிடம் ஒரே கேள்விதான் - ஐந்து நிமிடம் அவர் நேரத்தை ஒதுக்கினால் என்ன தவறு என்பதுதான்.

நமக்கு வாய்த்திருக்கும் தமிழக அரசு கையாலாகதது. எம்.பிக்கள் குனிந்த தலை நிமிராத எடுபிடிகள். எதைப் பேசினாலும் மத்திய அரசின் பிரதிதியாகவே பேசுகிற பொன்.ராதாகிருஷ்ணன். செவி மடுக்காத மத்திய அரசாங்கம். என்னதான் செய்வான் விவசாயி?

ஒரு கோரிக்கையும் நிறைவேற்றாவிட்டால் தொலைகிறது. தெளிவான அறிக்கை ஒன்றையாவது வெளியிடலாம் அல்லவா? பேச்சு வார்த்தை நடத்திக் கலைந்து செல்லச் சொல்லிவிட்டு ‘இதெல்லாம் கோரிக்கைகள்..இதெல்லாம் பதிலாகச் சொல்லியிருக்கிறோம்’ என்று அறிவித்துவிட்டால் பிரச்சினை ஓரளவுக்காவது ஓய்ந்துவிடுமல்லவா? ஏன் மத்திய அரசாங்கம் கண்டுகொள்வதேயில்லை?

போராட்டத்தில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது என்று தயவு செய்து பாட்டுப் பாட வேண்டாம். போராட்டக்களத்தில் இருப்பவர்கள் அத்தனை பேரும் இளரத்தங்கள் அல்லவா? இந்தப் போராட்டத்தைக் காட்டி நாளைக்கு முதலமைச்சராகவும், பிரதமராகவும் வந்துவிடுவார்கள் என்பதற்கு. எழுபதைத் தாண்டியவர் அய்யாகண்ணு. அவரையொத்தவர்களும் முக்கால் வயதைத் தாண்டியவர்கள்தான். இவர்கள்தான் அரசியலைப் புரட்டி வீசப் போகிறார்களா? 

ஒருவேளை, அரசியல் பின்புலம் இருக்கிறது என்று தெரிந்திருந்தால் மத்திய அரசு இன்னமும் விட்டு வைத்திருக்குமா என்பதுதான் கேள்வி. ஆனானப்பட்ட சசிகலாவையும் தினகரனையுமே சுண்டிவிட்டு விளையாடுகிறார்கள். அமித்ஷாவுக்கு அய்யாகண்ணுவெல்லாம் எந்த மூலைக்கு?

அப்படியே அரசியல் உள்நோக்கமிருந்தாலும் கூட இவையனைத்தும் பொதுவான கோரிக்கைகள்தானே? தஞ்சாவூர் விவசாயிக்கும் ஈரோட்டு விவசாயிக்கும் நெல்லை விவசாயிக்கும் சேர்த்துத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்? மத்திய அரசு ஒன்றிரண்டு கோரிக்கைகளையாவது செய்து கொடுத்தால் என்ன? செய்யமாட்டார்கள். அதில்தான் அரசியல் இருக்கிறது. காங்கிரஸூக்கு அதிமுகவும் திமுகவும் தேவையாக இருந்தது. ‘நீங்க மாநிலத்தில் இருந்துக்குங்க..மத்தியில் ஆதரவைக் கொடுங்க’ என்று அவர்கள் பாட்டுக்கு விட்டிருந்தார்கள். மத்திய அரசின் எந்தத் திட்டமும் மாநில அரசின் லேபிளுடன் இங்கே செயல்படுத்தப்படும். தேர்தலுக்குத் தேர்தல் குதிரையேறும் காங்கிரஸூம் பெரிதாக அலட்டிக் கொள்ளாது. ஆனால் பாஜக அப்படியில்லை. திமுகவையும் அடி அதிமுகவையும் அடி என்று தெளிவாக இருக்கிறார்கள். எந்தத் திட்டத்திலும் திமுக அல்லது அதிமுகவின் லேபிள் ஒட்டப்படுவதை விரும்பமாட்டார்கள். இங்கே திமுகவும் அதிமுகவும் கோலோச்சும் வரைக்கும் பாஜக கட்டையைப் போடும் என்றுதான் தெரிகிறது. ஆக, இவர்களின் அரசியலில் உழவர்கள் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

அரசியல் இப்படி கபடியாடிக் கொண்டிருக்க நாமாவது உழவனுக்காகவது குரலைக் கொடுப்போமே என்றுதான் எழுத விரும்புகிறேன். ஜல்லிக்கட்டுவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தில் ஏன் பத்து சதவீதத்தைக் கூட இந்தப் போராட்டத்துக்கு நாம் கொடுக்கவில்லை? இந்தப் போராட்டம் குறித்து எழுப்பப்படும் எல்லா சந்தேகங்களையும் தாண்டி அவர்களின் கோரிக்கைகள் எல்லாவிதத்திலும் காலத்தின் தேவை. அய்யாகண்ணுவுக்காக குரல் எழுப்பவில்லை என்றாலும் அந்தக் கோரிக்கைகளுக்காகவாவது நாம் குரல் எழுப்ப வேண்டியதில்லையா? அய்யாகண்ணு ஓய்ந்துவிடக் கூடும். அவரோடு இருப்பவர்கள் கலைந்து சென்றுவிடக் கூடும். ஆனால் உழவனின் நன்மைக்காக நாம் தொடர்ந்து இவற்றையெல்லாம் பேச வேண்டியதில்லையா? ஏன் அய்யாகண்ணுவையும் அவரோடு நிற்பவரையும் சிறுமைப்படுத்தி சிறுமைப்படுத்தி போராட்டத்தின் உன்னதமாக கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்து கொண்டிருக்கிறோம்? 

5 எதிர் சப்தங்கள்:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

விவசாயத்தை ஆதரிப்பதில் நமக்கு நன்மைகள் உண்டு.ஏற்கனவே விவசாயிகள் பலர் விவசாயம் செய்வதை விட்டுவிட்டு நகர்ப்புறம் நோக்கி நகரத் தொடங்கி விட்டனர்.இன்றைய படித்த தலைமுறை விவசாயம் செய்வதை விரும்புவது இல்லை. பலர் விவசாய சலுகைகளை எதிர்க்கிறார்கள். இவ்வளவு சலுகைகள் இருக்குமானால், விவசாயத்தை ஏன் விட்டு விட நினைகிறார்கள். அத்துனை பேரும் நகரத்தை நோக்கி இடமபெயர்ந்தால் என்ன ஆகும்.சொகுசாக நகரத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கடி ஏற்படும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும்.பொரளாதார வீழ்ச்சி ஏற்படும். இட நெருக்கடி ஏற்படும், சுகாதாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கும். விவசாயிகளுக்கு இன்னும் சலுகைகளை வாரி வழங்கினாலும் தவறில்லை.அப்படியாவது அவர்கள் விவசாயம் செய்தால்தான் நாம் பிழைப்போம். இதுவும் ஒரு சுய நலமே!

Unknown said...

100% Correct

Alad said...

I support the Farmers Protest Full Heart

The problem with the people is not one really want to know why they are protesting, People think Farmers are asking loan waivers, actually the protest has much bigger agenda than that. Tamilnadu has more literature rate than many other state but everyone is not provided with intelligence.

Unknown said...

Whatever's you said is right
We have enough money
That's is shown in all elections
Money for vote
Freebies

Our tax is wasted..by our honourable? Politicians..
Central govt has to take account of so many issues and states..
Don't we ashame that keeping all our money in some politicians who buy 1000 of acres land luxury hotels
Looks like each one of them looted the half of the Tamil Nadu budget
But we want central govt to act
Because farmers are suffering because of less water and rain
We never prepared for draught and other calamities
We choose politicians who are very busy building their empire world wide
And made few families one of the richest of the world
Still Modi has to run for everything

Bagath said...

காவிரி மேலாண்மை வாரியம் என்பது 2007 தீர்ப்பை அமல்படுத்துவதற்கான ஒன்றே தவிர இருபுறம் இருக்கும் நியாய அநியாயங்களை அலசுவதற்கான இடமல்ல. 2007 தீர்ப்பில் கர்நாடகத்துக்கு ஓரவஞ்சனை செய்யப்பட்டிருப்பைத தீர்ப்பை படிப்பவர்கள் யாரும் மறுக்க முடியாது..இப்படி ஒரு புறம் எனில் இன்னொரு புறம் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கர்நாடகத்தை நமது 1947 அதிகார மாற்ற சட்டம் மற்றும் ஒப்பந்த சட்ட அடிப்படையில் நிர்பந்திக்க முடியாது..ஈவன் உச்சநீதி மன்றமே நினைத்தாலும் உலக ந்தி நீர் தாவா யாராவது ஒரு தரப்பு ஏற்காத பட்சத்தில் பழைய நிலை தொடரும் என்றுதான் சொல்கிறது.பழைய நிலை என்பது 1924 ஒப்பந்தம் என்பதாலும் அது சம்மில்லாத இரு அரசுக்கிடையில் அதுவும் நீண்ட காலத்துக்கு முன் ஏற்பட்டுத மற்றும் 50 ஆண்டில் செல்லாமல் போனது என இருப்பதாலும் தமிழகத்திற்கு நீர் தர வேண்டிய நியாயப்படியான அம்சம் ஏதுமேயில்லை. 1924 ஓப்பந்த வரலாறு படித்து பார்த்தால் அன்றைய சென்னை மாகாண அரசின் அடாவடித்தனம் நன்றாக தெரியும். எனவே அய்யாக்கண்ணுவின் கோரிக்கையில் ஜனநாயக மறுப்பு தான் இருக்கிறது