Mar 8, 2017

கொக்குகள்

வேலி முள் ஒழிப்பு வேலைகளைப் பார்ப்பதற்காக இன்று வேமாண்டம்பாளையம் சென்றிருந்தேன். யாரிடமும் தகவல் எதுவும் சொல்லவில்லை. திடீரென்று சென்று நின்றால்தான் உண்மை நிலவரம் தெரியும். வெய்யில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. மதியவாக்கில் சென்றிருந்த போது வேலை மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒன்பது மணிக்கு பணியைத் தொடங்கி ஆறு மணி வரைக்கும் வேலை நடக்கிறது. உள்ளூர் கவுன்சிலர் தினமும் வந்துவிடுகிறார். அவர்தான் வண்டி ஓடுகிற அளவு விவரங்களைக் குறித்துக் கொள்கிறார். பொக்லைன் எந்திரத்தைப் பொறுத்த வரைக்கும் மணிக்கணக்கில்தான் வாடகை வாங்குகிறார்கள் என்பதால் தினசரி கணக்கு எடுக்க வேண்டியது அவசியமாகிறது. 

குளத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குளம் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் வரும் என்பதால் பொதுப்பணித்துறை அலுவலர் ஒருவரும் தினசரி வந்து வேலையை மேற்பார்வையிடுகிறார். தொடக்கவிழாவுக்கு வந்திருந்த நீதிபதி பழனிவேல் அவர்கள் பொதுப்பணித்துறை அலுவர்களைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘வேலி மரத்தை ஏலமிட்டு வருகிற தொகையையும் இதே பணிக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று பொதுப்பணித்துறையிலிருந்து அனுமதியளித்திருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது பல இடங்களிலும் வேலி மரங்கள் வெட்டப்படுவதால் இம்மரங்களுக்கான தேவை குறைந்திருக்கிறது. அதனால் ஏலம் கேட்பதற்கு தயங்குவதாகச் சொன்னார்கள். நாம் அதை எதிர்பார்த்திருக்கவில்லை என்பதால் வருவது வரட்டும். வருகிற வரைக்கும் இலாபம்தான்.

கவுன்சிலர், பொதுப்பணித்துறை அலுவலரைத் தவிர உள்ளூர் விவசாயிகள் அவ்வப்பொழுது வந்து பார்த்துக் கொள்கிறார்கள். நேற்று பொதுப்பணித்துறையின் முதுநிலை பொறியாளர் உட்பட உயர் அலுவலர்கள் வந்து வேலைகளை முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசு தாமசும், கார்த்திகேயனும் அதிகாரிகளை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இன்று நான் சென்றிருந்தேன். இப்படி தினமும் கண்காணிப்பு நடைபெற்றுக் கொண்டேயிருக்கிறது. கண்காணிக்கவே இல்லையென்றாலும் வேலை நடைபெறும் என்று நம்பிக்கையிருக்கிறது.

தினசரி எவ்வளவு வேலை நடைபெறுகிறது என்ற தகவலையும் யாராவது அலைபேசியில் தெரிவித்துவிடுகிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாக மெலிதாக மழை பெய்து மண்ணை ஈரமாக்கிய போதே பெரும் உவப்பாக இருந்தது. பெருமழை பெய்யட்டும். குளம் நிறையட்டும்.

சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டேன். ஒரு சலனப்படத்தையும் எடுத்திருக்கிறேன். 


இன்னமும் பத்து நாட்களுக்கு குளத்து வேலை நடைபெறும் என நினைக்கிறேன். இனிவரும் நாட்களிலும் மேற்சொன்னவர்கள் வேலையை மேற்பார்வையிடுவார்கள். சனிக்கிழமையிலிருந்து அடுத்த ஐந்து நாட்களுக்கு மீண்டும் இங்கேயே வந்துவிடுவேன். உறவுக்காரரின் திருமணம், ஒரு பள்ளி ஆண்டுவிழா உள்ளிட்டவையோடு சீமைக்கருவேல ஒழிப்புப் பணிக்கும் சேர்த்து அலுவலகத்தில் ஏற்கனவே விடுப்பு அனுமதி வாங்கியாகிவிட்டது. ஆசிரியர் அரசு தாமசும் மருத்துவ விடுப்பில் இருக்கிறார். நல்ல செகளகர்யம். தொடர்ந்து விவரங்களைப் பதிவு செய்கிறேன்.

நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்ச ரூபாய் உதவி வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்காக மட்டும் இது குறித்து எழுதவில்லை. எழுத வந்த புதிதில் கவிஞன் என்று நம்பி எழுதிக் கொண்டிருந்தேன். ஆனால் கடைசியாகக் கவிதை எழுதி பல வருடங்கள் ஆகி விட்டன. பிறகு எழுத்தாளன் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் இலக்கியம், இசம் என்பதையெல்லாம் தாண்டி அறக்கட்டளை என்று ஆரம்பித்த பிறகு பிறருக்காக ஏதோ வேலை செய்கிறோம் என்ற நம்பிக்கை வந்தது. இன்று தலையில் துணியைக் கட்டிக் கொண்டு பொக்லைன் எந்திரத்தோடு சேர்ந்து அங்குமிங்குமாக நகர்ந்து கொண்டிருந்த போது எது நம்மை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.

எழுத்தும் வாசிப்பும்தான் தொடக்கம். பல நூறு நல்ல மனிதர்களோடு அவைதான் இணைத்திருக்கின்றன. எழுத்தின் வழியாக எதையாவது செய்ய முடியும் என்று புரிந்து கொள்ள வெகு காலம் தேவைப்படவில்லை. அதுதான் ஆதாரப்புள்ளி. அதனால் எழுத்தையும் வாசிப்பையும் விட்டுவிட முடியாது. ஆனால் பிற எதைப் பற்றியும் யோசிக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். சமூக வாழ்க்கையில் இதுதான் லட்சியம், இதுதான் இலக்கு என்றெல்லாம் எதையும் பொருத்திக் கொள்ள வேண்டியதில்லை. 

வாழ்க்கை உன்னதமானது. அது நம்மை அழைத்துச் சென்று கொண்டேயிருக்கும். இது போன்ற செயல்களில் ஆற்றின் ஓட்டத்தில் உதிர்ந்த ஓரிலையைப் போல நீரின் தாலாட்டை அனுபவித்துக் கொண்டேயிருந்தால் போதும். அது நம்மை வழி நடத்திவிடும் என்றுதான் நினைக்கிறேன். வாழ்க்கையை முழுமையாக நம்புகிறேன். அது வழி நடத்தட்டும்.

தலையில் வெம்மை இறங்கிக் கொண்டிருந்தது. வெக்கையில் கொக்குகள் அங்குமிங்குமாக அலை மோதிக் கொண்டிருந்தன. வேலிமரங்களைப் பிடுங்கியெடுக்கப்படும் போது களையும் மண்ணிலிருந்து புழுக்களைக் கொத்தியெடுக்க அவை தாவிக் கொண்டிருந்தன. துள்ளுகிற மீன்களை கொத்தியெடுக்க வேண்டிய குளத்துக் கொக்குகள் அவை. ஒரு முறை மனமார பிரார்த்திக் கொள்ளுங்கள். நீர் நிரம்பி மீன்கள் நிறையட்டும். வெக்கையில் புழுக்களைக் கொத்தும் பரிதாபக் கொக்குகள் மீன்களைக் கொத்துகிற வரம் கிடைக்கட்டும்.

2 எதிர் சப்தங்கள்:

Paramasivam said...

விரைவில் குளம் நிரம்பி மீன்கள் துள்ளி விளையாடுவதைப் பற்றி எழுத ஆண்டவனை வேண்டுகிறேன்.

சேக்காளி said...

மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்
மனச பாத்து தான் வாழ்வை மாத்துவான்.