Mar 7, 2017

கிசுகிசு

தமிழில் கிசுகிசு பற்றி யாராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. ஆனால் கிசுகிசு எல்லாக் காலத்திலும் கிளுகிளுப்பாகவே இருந்திருக்கிறது. பள்ளிகளில் ‘இந்த வாத்தியாருக்கும் அந்த டீச்சருக்கும் அது’ என்று எழுதுவதிலிருந்து கிசுகிசுவுடனான நமது பயணம் தொடங்குகிறது. நாசூக்காக எழுத வேண்டும் என்பதற்காக ‘அது’ என்பதோடு முடித்திருக்கிறேன். இன்றைக்கும் பள்ளிகளின் கழிவறைச் சுவர்களில் விகாரமாகத்தான் எழுதி வைக்கிறார்கள் நம் அடியொற்றி வரும் அடுத்த தலைமுறையினர். 

அந்த சனிக்கிழமையன்று யாரும் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் கிசுகிசுவை பொன்னிற எழுத்துக்களால் பொறிப்பதாக நினைத்து அடுப்புக்கரியை எடுத்து பாதி எழுதிக் கொண்டிருந்த போது விளையாட்டு வாத்தியார் வந்துவிட்டார். அப்பொழுது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அந்த வார விளையாட்டு வகுப்பில் என்னைச் சட்டையக் கழற்றச் சொல்லி வாத்தியார் முதுகைப் பழுக்க வைத்திருந்த வெறியில் அப்பாவி டீச்சர் ஒருவரோடு பிணைத்து எனக்குத் தெரிந்த சொற்களை வைத்து கழிவறைச் சுவரில் ஒரு காவியம் எழுதிக் கொண்டிருந்த போதுதான் வாத்தியார் வந்திருந்தார். தன்னைப் பற்றியே ஒருவன் எழுதுவதைப் பார்க்க அந்த வாத்தியாருக்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாம் வசை எழுதுகிற அதே வாத்தியார் வந்து நிற்பதைக் கவனிக்காமல் எழுதிக் கொண்டிருந்த நான் எவ்வளவு பெரிய பாவம் செய்திருக்க வேண்டும்? 

முதுகில் இடி இறங்கியது. முகத்தைக் கொண்டு போய் சுவரோடு அப்பிக் கொண்டேன். முகத்தை எடுப்பதற்குள்ளாகவே இன்னொரு அடி. அதன் பிறகு என்ன நடந்தது என்பதை யூகித்திருப்பீர்கள் அல்லவா? அதே தான். 

தனது அறை வரைக்கு அறைந்தபடியே இழுத்துச் சென்றார். விடுமுறை நாளின் மதியம் அது. வெய்யில் கொளுத்தியெடுக்கிறது. வசமாகச் சிக்கிக் கொண்டேன். ‘உன்னை ஸ்கூலை விட்டே துரத்துகிறேன்’ என்று பேசியபடியே அடிக்கிறார். வாங்கிய அறைகளினால் எனது முகச் சதை துடிக்கிறது. உடல் நடுங்க வியர்த்துக் கொண்டிருக்கிறது. காதைப் பிடித்து அவர் இழுத்ததில் நகக் கீறல்கள். எரிச்சல். எல்லாவற்றையும் மீறிய பயம்.

‘ஸாரி சார்..இனி செய்யமாட்டேன்’ என்று கெஞ்சிக் கொண்டேயிருக்கிறேன். அவர் கேட்பதாகவே இல்லை. அன்றைய தினம் பள்ளியில் அதிகமான மாணவர்கள் இல்லை. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சில மாணவர்கள் மட்டும் கவனித்தார்கள். அவர்களும் விளையாட்டு முசுவில் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இழுத்துச் சென்ற ஆசிரியர் அங்கேயும் கும்மு கும்மிவிட்டு முட்டி போடச் சொல்லிவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டார். அது சொரசொரப்பான தரை. ஐந்து நிமிடங்களுக்கு மேல் முட்டி போட முடியாது. வலியைப் பொறுக்க முடியவில்லை. ஆனால் மணிக்கணக்கில் முட்டி போட்டபடியே நின்றிருந்தேன். ஜன்னல் வழியாக அவர் அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டேயிருந்தார். துளி அசைய முடியாமல் தவித்துப் போனேன்.

கிசுகிசுவுடனான எனது பந்தம் அப்படித்தான் தொடங்கியது. 

கருப்பு பூனையோ, லைட்ஸ் ஆன் சுனிலோ, சுசித்ராவின் ட்விட்டர் கணக்கோ அல்லது வேறொருவரோ நம்பும்படியாக சொல்லுகிற ஒவ்வொரு கிசுகிசுவைக் கேட்கும் போதும் எனக்கு இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்துவிடுகிறது. இருவரை உடல் ரீதியாக இணைத்துக் கற்பனை செய்து பார்த்துக் கொள்வது என்பது நம்முடைய அபிலாஷையை ஏதோவொருவிதத்தில் பூர்த்தி செய்கிறது. ஊரில் பேசுகிற ‘நாட்டாமை தொடுப்பு’ கதையும் கூட இந்த வகையறாதான். இத்தகைய தொடுப்புக் கதைகள் திரையில் பார்த்து நாம் நெக்குருகிய நடிகர் நடிகையராக இருந்தால் கேட்கவே வேண்டியதில்லை. அவளுக்கும் இவனுக்குமான தொடர்பை, இவளுக்கும் அவனுக்குமான பாலியல் இணைப்பை மனம் கற்பனை செய்து குதூகலித்துக் கொள்கிறது.

தனுஷுடன் நடித்த நடிகையரில் ஒருவருடன் நன்றாக அறிமுகம் உண்டு. இப்பொழுது நடிப்பையே கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். தனுஷ் குறித்தும் அவரது அண்ணன் குறித்தும் அவருக்கு கடும் மனவருத்தங்கள் உண்டு. அவர்கள் இருவரும்தான் தனது திரை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாகச் சொன்ன போது அவர் அழுததைப் பார்த்திருக்கிறேன். அந்தப் பெண்ணுக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். கடுமையான குடும்பச் சூழலில்தான் நடிக்க வந்தார். திரைத்துறை வாழ்க்கை அவருக்கு உகந்ததாக இல்லை. முட்டி மோதிப் பார்த்துவிட்டுத்தான் வேறு வழியே இல்லாமல் வேறொரு துறைக்குச் சென்றார். நிறையச் சொல்லியிருக்கிறார்.

அவருக்காக மனம் பரிதாபப்படுகிறதா அல்லது அவர் சொல்கிற விஷயங்களில் லயித்துப் போகிறதா என்று குழப்பமாகவே இருக்கும். ஆறுதலுக்காக ‘சினிமாவை விட்டுடுங்க’ என்று சொல்லியிருந்தேன். அந்தச் சமயத்தில் அவரது வேறு சில நண்பர்களும் அதையேதான் சொன்னதாகச் சொன்னார். இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘டோட்டல் டேமேஜ்ஜாமே’ என்று குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் யாரைச் சொல்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. இன்னமும் அவரது வன்மம் அப்படியேதான் இருப்பதாக நினைத்துக் கொண்டு அவருக்கு ஆறுதல் சொல்லும்படியாக ‘ஆமாம்’ என்று அனுப்பினேன். ‘இதெல்லாம் அவங்களுக்கு சகஜம்’ என்று பதில் வந்தது. அதற்கு மேல் அது குறித்து அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

அந்த நடிகையின் பெயரைச் சொல்லாமல் எழுதுவது கிசுகிசு பாணிதான். ஆனால் இதை வெளிப்படையாக எழுதுவது அந்தப் பெண்ணைச் சிக்க வைப்பதாகிவிடும்.

இப்பொழுது இது கிசுகிசுவாகிவிட்டது. யாராக இருக்கும் என்று வாசிக்கிறவர்களுக்கு மண்டை காயும். ஆளாளுக்கு ஒரு பெண்ணை மனதில் கொண்டு வந்து நிறுத்திக் கொள்ளக் கூடும். பத்து வருடங்களுக்குப் பிறகும் யாராவது ஒருவர் இது குறித்துப் பேசக் கூடும். 

திரைத்துறைக்குள் இருப்பவர்கள் கிசுகிசுவைப் பேசமாட்டார்கள் என்று நினைத்ததுண்டு. அப்படியெல்லாம் எதுவுமேயில்லை. பல வருடங்களுக்கு முந்தைய கிசுகிசுவொன்றைப் பேசி சினிமா பிரபலங்கள் சிரிப்பதைப் பார்த்த போது ஆல் ஆர் மட்டைஸ் இன் த சேம் குட்டை என்று நினைத்துக் கொண்டேன். உண்மையா பொய்யா என்றெல்லாம் தெரியாது- ஓர் இயக்குநர் சொன்ன நடிகர்-நடிகையின் கிசுகிசுவை என்னால் மறக்கவே முடியாது. 

அந்த நடிகருக்கு பிரபல நடிகையுடன் தொடர்பு உண்டு என்பது சினிமாவில் எல்லோருக்குமே தெரியுமாம். நடிகர் ஒரு விழாவின் முன்வரிசையில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அருகாமையில் யாரோ ஒன்றிரண்டு அல்லக்கைகள் அமர்ந்திருக்கிறார்கள். விழா அரங்குக்குள் நுழையும் நடிகை நடிகரைப் பார்த்தவுடன் பவ்யமாக வணக்கம் சொல்கிறார். சொல்லிவிட்டு அவர் நகர்ந்து விடுகிறார். நடிகரும் வெகு இயல்பாக வணக்கம் சொல்லிவிட்டு அருகில் இருக்கும் அல்லக்கை ஒருவரிடம் ‘யாருடா அவ?’ என்கிறார்.  

‘அண்ணே....’ என்று இழுத்த அல்லக்கை நடிகையின் பெயரைச் சொல்கிறார். நடிகரும் தமக்கு அவளை யாரென்றே தெரியாத பாவனையில் முகத்தைச் சலனமற்று வைத்துக் கொண்டு சில வினாடிகள் அமைதி காக்கிறார்.

திடீரென்று ‘என்னடா அவ போனதுக்கு அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு அவ பட்டக்ஸ் போகுது’ என்றாராம்.  அக்கம்பக்கத்தில் இருந்த அல்லக்கைகள் அலறியடித்துச் சிரித்திருக்கிறார்கள்.

இது நடந்து முப்பது நாற்பது வருடங்கள் ஆகியிருக்கலாம். ஒருவேளை நடந்திருக்காமலேயே இருக்கலாம். இன்னமும் உலாத்திக் கொண்டிருக்கிறது. பெண்ணை, பெண்ணின் அங்கங்களை, அவளது பாலியல் தொடர்புகளை, பிரபலங்களின் அந்தரங்கங்களைப் பேசுவதில் யாரும் யாருக்குமே சளைத்தவர்கள் இல்லை. இந்தக் கிசுகிசுவைச் சொன்ன போது இயக்குநர் ஒரு நடிகர் மற்றும் நடிகையின் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர்களாகவே இருக்க வேண்டும் என்பதில்லையல்லவா? இயக்குநர் மட்டும் நேரில் பார்த்திருக்கவா போகிறார்? செவி வழியாக வந்த கர்ண பரம்பரைக் கதைதான். அவருக்கு கிசுகிசு வந்து சேரும் போது இந்த நடிகர் நடிகையரின் பெயரோடு வந்து சேர்ந்திருக்கிறது. இன்னமும் நாற்பது வருடங்களானாலும் இந்தக் கிசுகிசு சுற்றிக் கொண்டேதான் இருக்கும். அப்பொழுது நடிகரும் நடிகையும் வேறொருவராக இருக்கக் கூடும். கிசுகிசுக்கள் இப்படித்தான் சாஸ்வதமாகின்றன.

6 எதிர் சப்தங்கள்:

Unknown said...

Richa Gangopadhyay

சேக்காளி said...

//ஆல் ஆர் மட்டைஸ் இன் த சேம் குட்டை//
இலக்கண பிழை இருப்பது போல் ஒரு வாசனை வருகிறதே மன்னா!!!!!!!

சேக்காளி said...

//துளி அசைய முடியாமல் தவித்துப் போனேன்.//
"அப்புறம் எப்பிடி தப்பிச்சு வந்து இணையத்துல கத உட்டுட்டு இருக்கீங்க?"
ன்னு சொல்லுங்க.

காத்தவராயன் said...

ஷெரின் from பெங்களூர்

Jasper said...

வயது வித்தியாசமின்றி அனைவரும் அக்கம் பக்கம் முதல், பத்திரிக்கைகள் ,இணையம் வரை கிசுகிசுக்கள் பேசினாலும்,photos ,videos வந்தாலும் இனி வரும் காலத்தில் மான அவமானங்களுக்குப் பயந்து தற்கொலை வரைப் போகாது என்பது மட்டும் உறுதி.சாதாரண photos ,videos போலாகி விடும் என்பதே பலரின் கணிப்பு.

Vinoth Subramanian said...

மனி சார், அந்த வாத்தியாருக்கு பதில் அந்த டீச்சர் கிட்ட அடி வாங்கி இருந்தா கூட கோஞ்சம் மனசு ஆருதலா இருந்திருக்கும்ல?