Mar 9, 2017

அய்யோ போலீஸ்

2009 ஆம் ஆண்டு ஈழப் பிரச்சினை உச்சத்தை அடைந்திருந்த போது ஒரு நண்பர் அழைத்திருந்தார். அப்பொழுதுதான் நாங்க பெங்களூருவுக்கு குடிவந்து சில மாதங்கள் ஆகியிருந்தன.

‘ரெண்டு பேர் இருக்காங்க...என்னவோ நோட்டீஸ் அடிச்சுக் கொடுத்தாங்கன்னு போலீஸ் தேடுது..பெயில் வாங்கிடுவோம்..அதுவரைக்கும் பெங்களூர்ல இருக்கணும்...உதவ முடியுமா?’ என்றார். யார் என்னவென்றெல்லாம் தெரியாது. ஒத்துக் கொள்வதற்கு பயமாக இருந்தது. ஒருவேளை நூல் பிடித்து வந்து நம்மை விசாரிக்கும் போது ‘எனக்கும் அவங்களுக்கும் சம்பந்தமில்ல சார்’ என்று சொல்லிவிடலாம் என்று மனம் யோசித்தது. அந்தச் சமயத்தில் வேணி கர்ப்பிணி. ஊரில் இருந்தாள். வீட்டில் தனியாகத்தான் இருந்தேன் என்றாலும் இவர்களை என்னோடு தங்க வைத்துக் கொள்கிற அளவுக்கு நானொன்றும் தைரியசாலி இல்லை. போலீஸார் கூட்டிக் கொண்டு போய் பின்னால் சாத்தி உட்கார முடியாமல் செய்துவிடுவார்கள் என்ற பயம்.

பதில் சொவதற்குள்ளாகவே அவர் ‘நீங்க கே.ஆர் புரத்துலதானே இருக்கீங்க?’ என்றார். ஆமாம் என்று முடிக்கவில்லை- ‘வந்துட்டு இருக்காங்க’என்றார். பெரிய பாறாங்கல்லைத் தூக்கி நெஞ்சுக்குழிக்குள் வைத்தது போல இருந்தது. 

அப்பொழுது முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். பதினோராயிரம் ரூபாய் வாடகையாகவே போய்க் கொண்டிருந்தது. அவர்களைச் சந்திக்கச் செல்வதற்கு முன்பாக ஏடிஎம் கார்டிலிருந்து ஐநூறு ரூபாய் எடுத்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டேன். மீதி மூன்றாயிரத்துச் சில்லரைதான் கணக்கில் இருந்தது. தங்களது செல்போனை அணைத்து வைத்திருந்தார்கள் என்பதால் என்னிடம் பேசிய நண்பர் நீலச் சட்டைக்காரர் அடையாளத்துக்காகத் தலையில் கர்ச்சீப் கட்டியிருப்பார். உடன் வருகிறவர் சிவப்புச் சட்டை என்றார். அந்தக் க்ளூ போதுமானதாக இருக்குமா என்று தெரியவில்லை. அவர்களுக்கு என்னைத் தெரியாது என்பதால் நானாகத்தான் கண்டறிய வேண்டும். 

பத்தரை மணிக்கெல்லாம் பேருந்து நிறுத்தத்தை அடைந்திருந்தேன். அவர்கள் வந்து சேரும் வரைக்கும் நமக்கெதுக்கு இந்த வம்பெல்லாம் என்று மனம் குழம்பிக் கிடந்தது. வீட்டில் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரிந்தால் சாமியாடித் தீர்த்துவிடுவார்கள். வேணி புது மனைவி. மாமனார் வகையறாவில் தெரிந்து நம்மைத் தீவிரவாதி என்று நினைத்துவிடுவார்களோ என்று பயம்தான். நம்மைப் பார்த்தால் தீவிரவாதி என்றெல்லாம் நினைக்கத் தோன்றாதுதான் என்றாலும் இப்படி எனக்கு நானே பில்ட் அப் கொடுத்துக் கொள்வதுண்டு. 

அலைபேசியில் நண்பர் கேட்டவுடன் ‘அய்யயோ...நான் இப்போ பெங்களூர்ல இல்லைங்களே’ என்றோ ‘இன்னைக்கு ஆபிஸ்ல இருக்கேன்..வேற யார்கிட்டவாச்சும் சொல்லுங்க’ என்றோ சொல்லித் தசுக்கியிருக்க வேண்டும் என நினைத்தபடியே நின்று கொண்டிருந்தேன். ‘முடியாது’ என்று சொல்வது ஒரு கலை. எல்லோருக்கும் அவ்வளவு சீக்கிரம் கைவராத கலை அது. ரோந்து செல்லும் காவலர்களைப் பார்த்தால் கூட பயமாக இருந்தது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். குற்றவாளிகளுக்குத்தான் அடைக்கலம் கொடுக்கக் கூடாது ஆனால் குற்றம்சாட்டப்பட்டவருக்கு அடைக்கலம் கொடுக்கலாம் என்று எனக்கு நானே ஒன்றரையணா சட்டத்தை துணைக்கு அழைத்துக் கொண்டேன்.

நள்ளிரவு பதினோரு மணிக்கு மேலாக கே.ஆர்.புரம் வந்து சேர்ந்தார்கள். ஆட்களின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது. இருவரையும் அடையாளம் கண்டறிவதில் பெரிய சிரமமில்லை. பக்கத்திலேயே ஒரு தங்கும் விடுதி இருந்தது. சற்றே தள்ளி உட்புறமாக தங்கிக் கொள்ளலாம் என்றார்கள். நாராயணபுராவுக்கு வரும் சாலையிலிருந்த விடுதியில் அறையெடுத்தோம். அடையாள அட்டையைக் கேட்டார்கள். என்னுடைய ஓட்டுநர் உரிமத்தைக் கொடுத்தேன். தமிழ்நாட்டு முகவரிதான் அதில் இருந்தது. விடுதிக்காரன் கேள்வி எதுவும் கேட்கவில்லை. எடுத்து வைத்திருந்த ஐநூறு ரூபாயை விடுதிக்காரன் கைகளுக்குச் சென்றது. அறைக்கான சாவியைக் கொடுத்தான். 

அறைக்குச் சென்றோம். நோட்டீஸ் அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டு அவர்கள் மீது பதிவாகியிருந்தது. ‘என்ன நோட்டீஸ் அடிச்சீங்க?’ என்றேன். 

‘பெரிய விஷயம் ஒண்ணுமில்லைங்க’ என்றார்கள். ஆனால் விவரங்களைச் சொல்லவில்லை. அநேகமாக அன்றைய முதல்வர் கருணாநிதியைத் திட்டி அச்சடித்திருக்கக் கூடும் என்று அனுமானித்துக் கொண்டேன்.

‘பெயில் வாங்கப் போறாங்க...அதுவரைக்கும் தலைமறைவாத்தான் இருக்கணும்’ என்றார்கள்.

‘எவ்வளவு நாள் ஆகும்?’ என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டேன். இருவருமே அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். கட்சி வழக்கறிஞர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றும் ஒன்றிரண்டு நாட்களில் நல்ல செய்தி வந்துவிடும் என்றும் சொன்னார்கள். 

வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. களைத்துக் கிடந்தார்கள். ‘சாப்பிட்டீங்களா?’ என்றேன். சாப்பிட்டிருக்கவில்லை. என்னிடம் நூறு ரூபாய் மட்டுமிருந்தது. ஏ.டி.எம்மிலிருந்து பணம் எடுக்கிற உத்தேசம் எனக்கு இல்லை. ஒவ்வொரு வார இறுதியிலும் ஊருக்குச் சென்று வந்து கொண்டிருந்தேன். இவர்களுக்காக ஐநூறு ரூபாயைக் கொடுத்ததே பெரிய காரியம் என்ற நினைப்பில் இருந்தேன்.

‘நீங்க கிளம்புங்க நாங்க சாப்பிட்டுக்கிறோம்’ என்றார்கள். நல்லதாகப் போய்விட்டது.

தெருவில் தெருநாய்கள் குரைத்தன. அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தேன். தமிழக போலீஸார் ஓடி வந்து கழுத்தைப் பிடித்துவிட்டால் என்ன பதிலைச் சொல்வது என்று மனம் உத்தேசமாக யோசித்துக் கொண்டேயிருந்தது. இரவு முழுவதும் உறக்கமேயில்லை. அரசாங்கத்துக்கு எதிராக மிகப்பெரிய சதித்திட்டமொன்றைச் செய்து கொண்டிருப்பதான பயம் கவ்வியிருந்தது. என்னையுமறியாமல் உறங்கினாலும் கனவுகளில் காவலர்களின் பூட் கால்கள் வந்து போயின. இத்தகைய அனுபவங்கள் நமக்குத் தேவை என்று சமாதானம் சொல்லிக் கொண்டாலும் பயம் அடங்குவதாக இல்லை.

வீட்டு ஓனர் வந்து கதவைத் தட்டும்போதும், பேப்பர்காரன் மணியடித்த போதும் பின்புறப்பக்க கதவு வழியாக ஓடி கோபிக்கு பேருந்து பிடித்துவிடலாம் என்று கால்கள் படபடக்கத் தொடங்கின. மறுநாள் விடிந்த பிறகு அவர்களைப் பார்க்கச் சென்றிருந்தேன். ‘ஒண்ணும் பிரச்சினையில்லையே’ என்றேன். எதுவுமில்லை என்றார்கள். மாலை வருவதாகச் சொல்லிவிட்டு அலுவலகத்துக்குச் சென்றுவிட்டேன். ஆனால் அலுவலகத்தில் வேலை செய்யவே தோன்றவில்லை. யாரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. உண்மையிலேயே இதுதான் பிரச்சினையா என்றும் தெரியாது. மதிமுகவினர் நோட்டீஸ் அடித்தார்கள் என்றால் கூட நம்பலாம். அதிமுகவினர் நோட்டீஸ் அடிப்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? வேறு ஏதாவது குற்றத்தைச் செய்துவிட்டு வந்து நம்மிடம் பொய் கூடச் சொல்லியிருக்கக் கூடும். மனம் பதறத் தொடங்கியது. இரவு வரைக்கும் அவர்கள் என் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அறையிலேயே தங்கிக் கொள்வார்கள். அன்றைய ஒரு தினம் மட்டும் அவர்கள் தப்பிவிட்டால் நமக்கு பிரச்சினை வராது என்று நம்பினேன். அடுத்த நாள் அவர்கள் பெயரிலேயே வேறு எங்காவது தங்கட்டும். நாம் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி தப்பித்துவிட வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். இரவு ஒன்பதரை மணிக்கு விடுதிக்குச் சென்ற போது அவர்கள் இருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே கைது செய்யப்படவில்லை. மனம் ஆசுவாசமானது.

எனக்கு சந்தோஷம் ஒன்றும் காத்திருந்தது. இருவரும் மூட்டை முடிச்சுக்களைக் கட்டியிருந்தார்கள். கிளம்பப் போவதாகவும் எனது வருகைக்காகத்தான் காத்திருப்பதாகவும் சொன்னார்கள். இரவில் கிளம்பி சென்னை செல்கிறார்கள். அப்பாடா என்று மனம் குதூகலித்தது. அவர்களது வழக்கறிஞர்களே இருவரையும் தங்க வைத்துக் கொள்வதாகத் திட்டமிட்டார்கள். ‘ரொம்ப நன்றிங்க’ என்றார்கள். ஆளை விட்டால் போதும் என்றிருந்தவனுக்கு இது எவ்வளவு பெரிய மகிழ்ச்சி? வாயெல்லாம் பல்லாக ‘நான் ஒண்ணுமே பண்ணலைங்க’ என்றேன். அவர்கள் ஐநூறு ரூபாயைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

இதே போன்றதொரு அனுபவம் கடந்த பதினைந்து நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. நேற்றுதான் பெயில் வந்து சேர்ந்தது. இன்னும் சில நாட்கள் கழித்து விரிவாக எழுதுகிறேன். அதற்குள் இந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது.

டவுன்பஸ்ஸில் ஏறும் போது ‘பத்திரமா போங்க’ என்றேன். தலையாட்டிவிட்டு சில்க் போர்டு பேருந்தைப் பிடித்தார்கள். 

அங்கிருந்து சென்னை பேருந்து பிடிக்க வேண்டும். அடுத்து பத்து நாட்கள் கழித்து அலைபேசியில் தலைமைக்கழகமே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டதாகவும் பெயில் கிடைத்துவிட்டதாகவும் சொன்னார்கள். இருவரில் ஒருவர் மட்டும் அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தார். ஊருக்கு வரும் போது சந்திக்க வரச் சொன்னார். அந்த இருவரில் ஒருவர் அதிமுகவின் புள்ளி. அதிமுகவில் இத்தகைய காரியங்களைச் செய்கிறவர்களைச் சடாரென்று தூக்கிவிட்டுவிடுவார்கள் என்று கேள்விப்பட்டதுண்டு. அதை இவர்களது விஷயத்தில் நேரில் பார்த்தேன். இருவரில் ஒருவரை 2011 தேர்தலில் வாய்ப்பளித்து எம்.எல்.ஏ ஆக்கினார்கள். நோடீஸ் அடித்ததுதான் காரணமா என்று தெரியவில்லை. ஆனால் அதுவுமொரு காரணமாக இருக்கக் கூடும். அதன் பிறகு அவருடன் பேசிக் கொள்ளவில்லை. பரப்பன அக்ரஹாராவில் ஒரு முறை சந்தித்துப் பேசிக் கொண்டோம். நினைவில் வைத்திருந்தார். ஆனால் எம்.எல்.ஏவாக அவருடைய செயல்பாடு சரியில்லை என்று கேள்விப்பட்டேன். 2016 இல் வாய்ப்பளிக்கப்படவில்லை. இன்று முன்னாள் எம்.எல்.ஏவாக ஊருக்குள் இருக்கிறார். எந்த அணி என்றுதான் தெரியவில்லை.

4 எதிர் சப்தங்கள்:

Jasper said...

ஆண்களாக இருப்பதால் இந்த மாதிரி பிரச்சனைகள். பெண்களை பொறுத்தவரை அப்பா,சகோதரர்கள்,கணவன்,மகன்கள் இவர்களைத் தாண்டி இம்மாதிரி முடிவுகள் எடுக்க முடியாது. எத்தனையோ கட்டுப்பாடுகள் தம்பி.நிறைய இடங்களில் வாய் விட்டு சிரித்தேன் . அழகான நடை.

சேக்காளி said...

// எம்.எல்.ஏவாக அவருடைய செயல்பாடு சரியில்லை என்று கேள்விப்பட்டேன்//
சரியா செயல்படுற எம்.எல்.ஏ வேணும் னா ஜப்பான் காரன தான் கூட்டிட்டு வந்து எம்.எல்.ஏ வா ஆக்கணும்.

sonaramji said...

ஆகக் கூடி ஏதாவது ஊாில் பிரச்சினை என்றால் தற்காலிக புகலிடத்திற்கு மணி அண்ணா இருக்கிறாா்.

jothiarumugam@ramanathan said...

SIR ANTHA SECOND PULI YENA TEAM....ADMK LA NOTICE PODATHA SOLURATHA INNUM NMPA MUDIYALA KAAAA