மரம் நடுவிழா என்பதையே ஃபேஷன் ஆக்கிவிட்டார்கள். தலைவரின் பிறந்தநாள் என்றால் பல லட்சம் மரக்கன்றுகளை நடுகிறார்கள். ‘வைக்கிறது சரி; எவ்வளவு சார் தழையுது?’ என்று கேட்டால் பதில் இருக்காது. மரம் வைப்பதை மனப்பூர்வமாகச் செய்கிறவர்களிடம் கேட்டால் கதறுகிறார்கள். ‘போன வருஷம் அறுநூறு மரம் வெச்சோம்..வெறும் ஐம்பதுதான் சார் தப்பிச்சிருக்கு’ என்று அழாத குறைதான். தண்ணீர் பிரச்சினை; ஆடுகள் தின்றுவிடும் பிரச்சினை; வழிப்போக்கர்கள் கிள்ளியே கொல்லும் பிரச்சினை என்று ஆயிரம் பிரச்சினைகளைச் சொல்கிறார்கள். இந்த லட்சணத்தில் அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் ஆடு புலுக்கை போடுவது போல வழியெல்லாம் நட்டுக் கொண்டே போகிறார்கள். மரம் வைப்பதைவிடவும் அவற்றைத் தப்பிக்க வைப்பதில்தான் அர்த்தமிருக்கிறது.
வனத்தை உருவாக்குவதற்கு மியவாக்கி என்றொரு முறை இருக்கிறது. குறைந்த இடத்தில் அடர்வனத்தை (Thick forest) உருவாக்குகிற முறை இது. அகிரா மியவாக்கி (Akira Miyawaki) என்றொரு ஜப்பானியரின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட இத்தகைய காடுகள் ஜப்பானில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. ஜப்பான்காரர்களுக்கு இடவசதி இல்லை. அதனால் இந்த அடர்வன முறையைப் பின்பற்றினார்கள். நமக்குத்தான் இடமிருக்கிறதே? நாமும் இதையேதான் பின்பற்ற வேண்டுமா என்று யாராவது கேட்டால் வாயில் கத்தியை விட்டு சுழற்ற வேண்டும். இப்படி நம்பி நம்பித்தான் இருக்கிற காடுகளையெல்லாம் தொலைத்து புதிய காடுகளையும் உருவாக்க முடியாமல் மண்டை காய்ந்து கொண்டிருக்கிறோம்.
நினைத்தால் போதும்- மரம் வைக்கிறேன் பேர்வழி என்று கடப்பாரையையும் சட்டியையும் தூக்கிக் கொண்டு களமிறங்கிவிடுகிறோம். செடிகளுக்கு மட்டும் வாய் இருந்தால் கதறிவிடும். வழமையான முறைகளில் மரம் வளர்ப்பது என்பதன் வெற்றி சதவீதம் வெகு குறைவு. நாமும் கூட மியவாக்கி உள்ளிட்ட மாற்று வழிமுறைகளை முயற்சித்துப் பார்க்கலாம்.
(சதீஷ்)
(சதீஷ்)
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘களம் அறக்கட்டளை’ சதீஷ் அழைத்ததன் பேரில் திருப்பூர் மாவட்டம் நம்பியாம்பாளையத்துக்குச் சென்றிருந்தோம். வானம் பார்த்த பூமி அது. குள்ளேகவுண்டம்பாளையம் என்ற சிற்றூரில் வெறும் பதினேழு செண்ட் இடத்தில் இரண்டாயிரத்து இருநூறு செடிகளை நட்டிருக்கிறார்கள். ஊர் மக்கள் வெகுவாக ஆதரிப்பதாகச் சொன்னார். அறுபது வகையான இந்திய மரவகைகளை வைத்திருக்கிறார்கள். மா, தேக்கு, பலா என்று கலந்து கட்டி வைத்திருக்கிறார்கள். அவை வளர்ந்து மரமாகும் போது வெகு நெருக்கமாக இருக்கும் என்பதால் மனிதர்களோ விலங்குகளோ நுழையவே முடியாது. அடர்வனத்தின் அடிப்படையான தத்துவமே இதுதான். பறவைகளும் அணில் போன்ற உயிரினங்களும் மட்டும் வசிக்கலாம்.
செடிகள் வளர்ந்து மரங்களாக மாறும் போது அப்பகுதியே குளிர்ந்துவிடும். பரவலாக இத்தகைய வனங்கள் உருவாக்கப்படும் போது சூழலியல் சார்ந்து நிறையப் பலன்கள் கிடைக்கக் கூடும்.
இவர்கள் அமைத்திருக்கும் அடர்வனத்துக்கு அருகாமையிலேயே ஒரு குளம் இருக்கிறது. அங்கே ஒரு லட்ச ரூபாயில் பாரம்பரிய முறையில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கவிருக்கிறார்கள். தினசரி பத்தாயிரம் லிட்டர் கழிவு நீர் சேகரமாகிறது. இதைச் சுத்திகரித்து குளத்தில் நிரப்பி வைத்தால் பறவைகளுக்கு நீரும் ஆயிற்று. உண்ணக் கனிகளும் கிடைத்தாயிற்று. குட்டி சரணாலயம் உருவாகிவிடும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். குளத்தில் சேகரிக்கப்படும் நீரின் காரணமாக அக்கம்பக்கத்து ஆழ்குழாய் கிணறுகளிலும் நீர்பிடிக்கும்.
(நீர் சுத்திகரிப்பு முறை)
ஊர் முழுக்கவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஐம்பது மரங்களை வளர்ப்பதைக் காட்டிலும் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டும் போது வளர்க்கிறவர்களுக்கும் நிறைய செகளர்யங்கள் உண்டு. பதினேழு செண்ட்டுக்கும் கம்பி வலையமைத்து வைத்திருக்கிறார்கள். கால்நடைகள், மனிதர்கள் என்று யாரும் நுழைவதில்லை. இப்படி மொத்தமாக வலையமைப்பதால் ஒவ்வொரு செடிக்கும் தனித்தனியாக வலை அமைக்கும் பராமரிப்புச் செலவு பாதியாகக் குறைந்துவிடுகிறது. ஆடுகள் தின்றுவிடும், மனிதர்கள் கிள்ளிவிடுவார்கள் என்கிற பயமும் இல்லை. சொட்டு நீர்ப்பாசனத்தின் அடிப்படையில் அத்தனை செடிகளுக்கும் தொட்டியிலிருந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள். தனித்தனியாகச் செடிகளை வைத்தால் தண்ணீர் வண்டி பிடித்து ஆளுக்குச் சம்பளம் கொடுத்து ஒவ்வொரு செடியாக தண்ணீர் ஊற்ற வேண்டியிருக்கும். அடர்வனம் அமைப்பில் இந்த வேலையெல்லாம் இல்லை.
இதுவரைக்கும் ஊருக்கு பொதுவான ஆழ்குழாய் கிணற்றிலிருந்துதான் நீர் எடுத்து ஊற்றியிருக்கிறார்கள். இப்பொழுது கோடை என்பதால் நீர் இல்லை. வாரம் ஒரு முறை டேங்கர் வண்டியில் நீர் வாங்கி தொட்டியை நிரப்பிவிடுகிறார்கள். ஊர்மக்கள், நண்பர்கள் என்று சேர்ந்து மாதம் நான்காயிரம் ரூபாய் வரைக்கும் நீருக்காக செலவு செய்து கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து நீர் வந்துவிட்டால் இந்தச் செலவு இருக்காது. அர்பணிப்பு உணர்வோடு இருக்கும் அவர்களைப் பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருந்தது. வனத்தை உருவாக்கிவிடுவார்கள் என்று உறுதியாக நம்பலாம்.
(நான்கு மாதச் செடிகள்)
மியவாக்கியின் அறிவுரைப்படி செடிகளை நட்ட பிறகு முதல் மூன்று வருடங்களுக்குச் செடிகளை நீருற்றி பராமரிக்க வேண்டும். அதன்பிறகு அவை வனமாகிவிடும். நான்கைந்து மாதங்கள்தான் ஆகியிருக்கிறது. அதற்குள் செடிகளின் தண்டுகள் நன்றாக வலுப்பட்டிருக்கின்றன. ஆனால் செடிகளை வைப்பதற்கு முன்பாக நிறைய வேலைகளைச் செய்திருக்கிறார்கள். பதினேழு செண்ட் பரப்பளவிலும் இரண்டு அடி ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி எடுத்து பஞ்சகவ்யம் உள்ளிட்ட இயற்கை உரங்களை மண்ணோடு கலந்து மீண்டும் குழியில் மண்ணை நிரப்பி- இதனால் மண் இளகிவிடுகிறது- அதன் பிறகு செடிகளை நட்டிருக்கிறார்கள். செடிகளை நடும் போதும் கூட தாறுமாறாக நடுவதில்லை. முறையைப் பின்பற்றுகிறார்கள். உதாரணமாக முருங்கை வேகமாக வளர்ந்துவிடும். அதன் அருகில் மிக மெதுவாக வளரக் கூடிய செடிகளை நட்டால் நிழல் விழுந்து மெதுவாக வளரக் கூடிய செடிகள் மேலேயே வராமல் போய்விடக் கூடும். அதனால் சரியான திட்டமிடல் அவசியம்.
இயற்கை குறித்து எதையாவது எழுதும் போது ‘எங்கள் ஊரிலும் இதையெல்லாம் செய்ய வேண்டும்’ என்று யாராவது பேசுகிறார்கள். எல்லோருக்குமே செய்ய வேண்டும் என்கிற ஆசை இருக்கும்தான். ஆனால் ஆசையை மட்டும் அசைபோட்டுக் கொண்டிருந்தால் எதுவுமே நடக்காது என்றுதான் அவர்களிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. களத்தில் இறங்கிவிட வேண்டும். எதுவுமே பெரிய காரியமெல்லாம் இல்லை. ஒருவர் களத்தில் இறங்கினால் நம்மையொத்த மனம் கொண்டவர்கள் நம்மோடு சேந்துவிடுவார்கள். ஒன்று நான்காகும். நான்கு பத்தாகும். பத்து பேர் போதும். கனவேலையைச் செய்யலாம். ‘எதையாவது செய்ய வேண்டும்’ என்று யோசித்துக் கொண்டேயிருந்தால் எதையுமே செய்ய மாட்டோம்.
(அகிரா மியவாக்கி)
மியவாக்கி அடர்வன முயற்சியைப் பற்றி நிறையப் பேரிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது. நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். பத்து செண்ட் இடமிருந்தால் வனத்தை உருவாக்கிவிட முடியும் என்பதால் நிறையப் பேர் இம்முயற்சியில் இறங்கக் கூடும். மரம் நடுதல், வனங்களை உருவாக்குதல் போன்றவை காலத்தின் தேவை. சற்றே மெனக்கெட்டால் மியவாக்கி முறையில் அடர்வனத்தை உருவாக்கிவிட முடியும் என்றுதான் தோன்றுகிறது. இம்முறையில் உருவாக்கப்படும் அடர்வனம் குறித்து இணையத்தில் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. சதீஷையும் அழைத்துப் பேசலாம். அவரோ ஆனந்தோ வருவதாகவும் கூடச் சொன்னார்கள். வருவார்கள்.
விதைத்து வைப்போம்! நல்லதே நடக்கும்.
சதீஷ் தொடர்பு எண்- 98421 23457
சதீஷ் தொடர்பு எண்- 98421 23457
3 எதிர் சப்தங்கள்:
அடர்வனம் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ஒரு காணொலி பார்க்க நேர்ந்தது அந்த இணைப்பு இதோ.
https://www.youtube.com/watch?v=3BgPFIKCaOQ
https://www.youtube.com/watch?v=mjUsobGWhs8
(Shubhendu Sharma: How to grow a tiny forest anywhere)
நல்லதொரு யோசனை, நம் ஊரிலும் பின்பற்றுகிறார்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி.
They are planning for the future generation. Very impressive! Hats off the the team.
Bangalore Based Afforestt is doing this activity . Subendu Sharma who worked in Toyota Bangalore has implemented this in several places and succeeded . Swaminathan Appachi is also experimenting this method in his farm . http://www.afforestt.com/
Post a Comment