Mar 30, 2017

சாட்டிங்

கல்லூரியில் படிக்கும் போது இணையம் அறிமுகமானது. முதல் வருடத்தில் அழகாபுரத்தில் ஒரு ப்ரவுசிங் செண்ட்ருக்குச் சென்றோம். ஒரு மணி நேரத்துக்கு பத்து ரூபாய். அழைத்துச் சென்ற நண்பனே படம் காட்டினான். அந்த மாதிரியான படம்தான். அடுத்த நாள் நானாகவே சென்றேன். எப்படி ப்ரவுசரைத் திறக்க வேண்டும் என்று தெரியவில்லை. கண்டதையெல்லாம் முயற்சித்துக் கொண்டிருந்தேன். முக்கால் மணி நேரம் போனது. ஏழரை ரூபாய் போய்விட்டதே என்ற துக்கத்தில் வழியில்லாமல் கடைக்காரனை அழைத்தேன். 

‘என்ன வேணும்?’ என்றான். 

‘ஒண்ணுமே தெரியல’ என்றேன்.

ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு ப்ரவுசரை திறந்து கொடுத்தான். அப்படியாவது படம் பார்த்தேனா என்றால் அதுவுமில்லை- அவன் அந்தப்பக்கமாகச் சென்ற அடுத்த கணமே தெரியாத்தனமாக மூடிவிட்டேன். உயிரே போய்விட்டது. பனிரெண்டாம் வகுப்பு கணிதத் தேர்வில் பத்து மதிப்பெண் வினாவுக்கு பதில் தெரியவில்லையென்றால் எப்படி இருக்குமோ அப்படியாகிவிட்டது. கிட்டத்தட்ட அழாத குறைதான். குரங்கு கையில் சிக்கிய பூமாலையாக கணினியை ஒரு வழியாக்கினேன். கடைசியில் ஒரு புண்ணியவான் பதுக்கி வைத்திருந்த ஒரு நடிகையின் படம் கிடைத்தது. சலனப்படமில்லை- நிழற்படம். மார்பிங் என்பதெல்லாம் அறிமுகமில்லாத வயது அது. நடிகைதான் என்று நம்பி கிளுகிளுப்படைந்து ‘பத்து ரூபாய் கொடுத்துட்டு வேணுங்கிற அளவுக்கு பார்த்தாச்சு’ என்று திருப்தியாக அறைக்குத் திரும்பினேன்.

என்னை மாதிரியான சில்வண்டுகளின் ஏக்கத்தைப் புரிந்து கொண்டோ என்னவோ கல்லூரியிலேயே இணைய வசதியைக் கொண்டு வந்துவிட்டார்கள். நூலகத்தில் இருபது கணினிகளில் இணைய வசதி உண்டு. பத்துக் கணினிகள் நுழைவாயிலை நோக்கி இருக்கும். நல்ல வேலை என்றால் மட்டும் அவற்றைப் பயன்படுத்தலாம். மீதி பத்துக் கணினிகள் சுவரைப் பார்த்த மாதிரி இருக்கும். மற்றவர்களின் கண்களில் படாது. பிற வேலைகளுக்கு அவற்றில் ஒன்றைப் பிடித்துக் கொண்டால் சுபமஸ்து. 

இடைவேளையில் கழிவறைக்குச் செல்கிறோமோ இல்லையோ- சிதம்பரம் உள்ளிட்ட நண்பர்கள் நூலகத்துக்குச் செல்வதை வாடிக்கையாக்கியிருந்தோம். அடுத்த இரண்டு பிரிவேளைகளில் அடக்கிக் கொண்டு காலை கால் மீது போட்டு அமர்ந்திருந்தாலும் பரவாயில்லை என்கிற அளவுக்கு பக்தி முத்திப் போய்க் கிடந்த பருவம் அது. முதலில் சாட்டிங்தான் பழகினேன். ராஜேஷ் என்றொரு ஊட்டிக்கார நண்பன் இருந்தான். ஆங்கிலப் புலமை மிகுந்தவன். இம்மாதிரியான விவகாரங்களில் அவ்வப்பொழுது ஐடியாக்கள் கொடுப்பான்.

‘மணிகண்டன், மாரியாத்தான்னு பேர் வெச்சா ஒண்ணும் கிடைக்காது...பந்தாவா வை’ என்று சொன்னான். அவன் சொல்வதும் சரியாகப் பட்டது. விடிய விடிய மண்டை காய்ந்து mkdan என்று ரெடிஃப் தளத்தில் மின்னஞ்சல் ஒன்றை உருவாக்கிக் கொண்டேன். ஆங்கிலப் பெயர் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் யோசித்து தட்டச்சு செய்யத் தெரிய வேண்டுமல்லவா? அதெல்லாம் பழக வெகு நாள் ஆனது.

‘ASL?' என்ற மூன்று எழுத்துக்களையும் விசைப்பலகையில் தேடவே இரண்டு நிமிடங்களாவது பிடிக்கும். ஆனால் என்னை நீங்கள் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது. 

தமிழ் சாட்டிங் அறையில் தேடித் தேடி ஷோபனாவை தோழியாக்கிக் கொண்டேன். பகலில் எந்த நேரத்தில் ஆன்லைனுக்குச் சென்றாலும் அவள் இருப்பாள். ஆரம்பத்தில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுவதாகச் சொன்னாள். ஆனால் என்னை விடவும் வயது குறைவானவள் என்றாள். அது எப்படி சாத்தியம் என்று குழப்பமாக இருந்தாலும் தொடர்ந்தோம். ஆரம்பத்தில் சென்னையில் வேலையில் இருப்பதாகச் சொன்னாள். பிறகு கோயமுத்தூர். அதன் பிறகு ஈரோடு என்றாள். ஈரோட்டில் மென்பொருள் நிறுவனம் இருக்கிறதா என்கிற அளவுக்குக் கூட சந்தேகம் வராதா என்ன? அதுவும் 2000 ஆம் வருடத்தில். இருந்தாலும் நட்புத் தொடர்ந்தது. மீரா ஜாஸ்மின் திரைத்துறைக்கு வந்து ‘இச்சுத் தா இச்சுத்தா’ என்று பாடும் வரைக்கும் ஷோ குட்டிதான் சாட்டிங் தோழியாக இருந்தாள்- அவளை அப்படித்தான் அழைத்துக் கொண்டிருந்தேன். 

‘நான் மீரா ஜாஸ்மின் மாதிரியே இருப்பேன்’ என்று அவள் சொன்ன போது ‘நானும்தான் மாதவன் மாதிரியே இருப்பேன்’ என்று கூச்சமேயில்லாமல் சொல்லி வைத்திருந்தேன். அடுத்த இரண்டு வருடங்களுக்கும் இணையத்திலேயே நட்பு வளர்ந்து காதலாகிக் கசிந்துருகுவதற்கு முன்பாக ஊருக்குச் செல்லும் வழியில் ஈரோட்டில் இறங்கி அவள் சொன்ன முகவரிக்குச் சென்று பார்த்தால் ஆட்சியர் அலுவலகத்துக்கு எதிரில் ஒரு டயர் கடை இருந்தது. 

‘ஷோபனாவா? இங்கதான் வேலை செய்யறா..சாப்பிட போயிருக்கா’ என்றார்கள். 

‘நீ யாரு’ என்று கேட்டால் மாமா பையன் என்று சொல்ல வேண்டும் என்றுதான் ஆரம்பத்தில் யோசித்து வைத்திருந்தேன். கடையில் என்னைக் குறித்து யாரும் கேட்கவில்லை. அமைதியாக இருந்தேன். கேப்மாரி. பொய் சொல்லியிருக்கிறாள் என்று மட்டும் கருவிக் கொண்டிருந்தேன். மதியம் இரண்டு மணிக்கு வந்தாள். சிவப்பு சுடிதார். நெற்றியில் சந்தனம் மட்டும் மீரா ஜாஸ்மின் மாதிரி வைத்திருந்தாள். 

‘மீரா ஜாஸ்மின் இப்படித்தான் இருப்பாளா?’ என்று கேட்க வேண்டும் எனத் தோன்றியது. 

‘மாதவன் இப்படித்தான் இருப்பானா?’ என்று அவள் கேட்க வாய்ப்பிருக்கிறது அல்லவா?  பேசிக் கொள்ள எதுவுமில்லை.

‘சரி கிளம்பறேன்’ என்றேன். அவளும் சந்தோஷமாக சரி என்றாள். கடையில் வேலை செய்கிறவர் வந்து ‘யாரு இந்தப் பையன்?’ என்றார். பரதேசி, இதே கேள்வியை என்னைக் கேட்டிருக்கக் கூடாதா? மீரா ஜாஸ்மின் முந்திக் கொண்டு ‘பெரியம்மா பையன்’ என்று சொல்லிவிட்டாள். கிளம்பி ஊர் போய்ச் சேர்ந்தேன். 

அதன்பிறகும் mkdan கனவேலை செய்தது.

மூன்றாம் வருடம் படிக்கும் போது ‘எனக்கு வேலை வேண்டும்’ என்று இன்னொரு கல்லூரியிலிருந்து மூன்றாம் வருடம் படிக்கும் மாணவி மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள். என்னை பெரிய அப்பாடக்கர் என்று நினைத்திருக்கக் கூடும். எனக்கு ஒன்றும் தெரியாதுதான். ஆனாலும் விட்டுவிட முடியாதல்லவா? நேர்காணல்களுக்கு எப்படித் தயாரிப்புகளைச் செய்ய வேண்டும், எப்படி குழு விவாதங்களுக்குத் தயார் செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்கு அவ்வப்பொழுது மின்னஞ்சல் அனுப்ப, அதுவே தொடர்ந்து தொடர்ந்து வெகு காலத்திற்கு அவளிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தேன்.

கடலை என்றால் அந்தக் காலத்துக் கடலை. தெய்வீகம். தெய்வீகம். 

‘சாப்பிட்டியா?’ ‘நல்லா தூங்கு’ ‘நல்லா படி’ ‘உடம்பை பார்த்துக்கோ’. இவ்வளவுதான். இடையிடையே மானே தேனே பொன்மானே எல்லாம் சேர்த்துக் கொள்ளப்படும். இப்படியான கடலைக் கதைகள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கதைகள். அடுத்தவனின் சோகம் எல்லாம் நமக்கு சுவாரஸியம்தானே? நிச்சயம் உங்களுக்கு சுவாரஸியமாகத்தான் இருக்கும். தனித்தனியாகச் சொல்கிறேன்.

இந்தக் கதைகளையெல்லாம் வேணியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘இப்போவெல்லாம் ஏன் சாட்டிங் செய்யறதில்லை?’ என்றாள். 

‘நீ திட்டுவேன்னு பயந்துட்டு இருந்தேன்’ என்று கதை விட்டேன். அவள் கண்டு கொள்ளவே இல்லை. 

மனதுக்குள் ஒரு குறுகுறுப்பு. தெரிந்தவர்களிடம் சாட்டிங் செய்தால் வம்பு வந்து சேரும். அதனால் கடந்த வாரத்தில் ஓர் இணையத்தளத்தைக் கண்டுபிடித்தேன். கடந்த பத்து வருடங்களில் சாட்டிங் வெகுவாக முன்னேறிக் கிடக்கிறது. ‘from India' என்று சொன்னாலே ப்ளாக் செய்துவிடுகிறார்கள். இடைப்பட்ட வருடங்களில் நம்மவர்கள் என்னனென்னவோ செய்து வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். களவும் கற்று மற.

மீண்டும் மாதவனாகிவிட்டு வந்து உங்களிடம் கதையளக்கிறேன்.

5 எதிர் சப்தங்கள்:

TK said...

//"ஆனால் என்னை நீங்கள் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது."//

மணி மைண்ட் வாய்ஸ்: ஏன்னா, நான் ஏற்கனவே குறைவான எடையில் தான் இருக்கேன்...

Uma said...

இன்னுமா களவைக்(?)கற்றுக் கொள்ளாமல் ..... ம்ஹும்... எப்போ கத்துகிட்டு எப்போ மறக்குறது...

அன்பே சிவம் said...

'இருந்தாலும் தொடர்ந்தோம்'!!!??? இப்ப வேற வழி இல்லை. ஆதலினால்..., தொடர்கிறோம்.

சக்திவேல் விரு said...

லொள் :-)

சேக்காளி said...

//‘மாதவன் இப்படித்தான் இருப்பானா?’//
அப்பவே, "நாளெல்லாம் பௌர்ணமி" யா?