Mar 31, 2017

எழுத்து வழி பிம்பம்

மணி, உங்களுக்கு பொறுப்பு இருக்கிறது. உங்களை சரியாக புரிந்து கொள்ளாத யாராவது ‘அவரா? அவர் தப்பா சாட் பண்ணுவாரே, அவரே அதை எழுதியிருக்கிறார். அவர் கிட்டவா உதவி கேட்கப் போறேன்னு’ சொல்லி விடப் போகிறார்கள்- குறிப்பாக உதவி கேட்க நினைக்கும் பெண்களிடம். [அவரா = அவனா என்று கூட மாறலாம்]. உங்களுக்கு வெளியே இருந்து யாரும் முயற்சி செய்யாமலே சொந்த செலவில் நீங்களே சூனியம் வெச்சுக்கிறீங்களே. Beyond Right or Wrong it may spoil your image and reputation. Please don't say I got No Image.

அகிலா அலெக்ஸாண்டர்.

அகிலாவுக்கு,

வணக்கம்.

நமக்கென்று உருவாக்கப்படும்/உருவாகும் பிம்பத்திற்குள் சிக்குண்டு கொள்வதைப் போன்ற துக்கம் வேறு எதுவும் இருக்க முடியாது. அதுவொரு சிறை. நீங்கள் குறிப்பிடுகிற எனக்கான பிம்பம் என்பது எழுத்து, சமூகப்பணிகள் சார்ந்து உருவாகி வருவது. உருவானால் உருவாகிவிட்டுப் போகட்டும். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. எந்தவொரு தருணத்திலும் நான் நானாகவே இருப்பதுதான் பலம். எப்பொழுது இமேஜூக்கு பயந்து நடிக்கவும், உண்மைகளை மறைக்கவும் ஆரம்பிக்கிறேனோ அப்பொழுதிலிருந்து என்னுடைய சரிவு ஆரம்பமாகும். 

பிம்பம் உருவாகிக் கொண்டேயிருக்கட்டும். அதைக் கலைத்துக் கொண்டேயிருப்போம். அதில்தானே சுவாரசியமிருக்கிறது? பிம்பத்தை வைத்து சினிமா நடிகர்களும் அரசியல்வாதிகளும் வயிறு வளர்க்கலாம். நமக்கு அப்படியொரு அவசியமில்லை.

நீங்கள் குறிப்பிடுவது போல ‘அவன் பெண்களுடன் சாட்டிங் செய்வதாக எழுதியிருந்தான். எதற்கும் ஜாக்கிரதையாக இரு’ என்று யாராவது யாரிடமாவது சொல்லக் கூடும். இதையெல்லாம் எழுதாவிட்டாலும் கூட  அப்படியான எதிர்மறையான விஷயங்களைச் சொல்வதற்கு ஆட்கள் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் இனம்புரியாத வன்மத்துடன் தாக்கி எழுதப்பட்ட பதிவுகள் அவ்வப்பொழுது கண்களில் படுவதுண்டு. யார் திட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால் எங்களுக்கிடையில் ஒரு சொல் கூட பரிமாறப்பட்டிருக்காது. அவருக்கும் எனக்கும் சம்பந்தமே இருக்காது. இருந்தாலும் கபடி ஆடியிருப்பார்.

வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும்.

அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் இப்படி கருதுவார்கள் என்று யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நம்மை அடக்கிக் கொண்டு செயல்பட்டால் எந்தக் காலத்திலும் நம் வட்டத்தைத் தாண்டி வெளியில் வர முடியாது அல்லது அவர்களும் இவர்களும் நம்மைப் பற்றி ‘அப்படி நினைக்க வேண்டும்’ ‘இப்படி நினைக்க வேண்டும்’ என்பதற்காக செயல்பட்டாலும் சரிப்பட்டு வராது.  அடுத்தவர்களுக்காகவே நாம் வாழ்வது போல ஆகிவிடும். நாம் நமக்குப் பிடித்த மாதிரி நடந்து கொள்வதுதான் சரி.

பெரும்பாலானவற்றை மறைக்காமல் வெளிப்படையாக பேசி எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்- அதை மனசாட்சிக்கும், குடும்பத்துக்கும் துரோகமில்லாமல் செய்து கொண்டிருக்க வேண்டும்.

பிம்பச் சிறை, அடையாளச் சிக்கல்  போன்றவை எதுவுமே தேவையில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம்மை நிரூபித்துக் கொண்டேயிருக்கவும் வேண்டியதில்லை. பெரிய எழுத்தாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட தம்மை இந்தச் சமூகத்தின் உரையாடலில் தொடர்ந்து தக்க வைப்பதற்காக எதையாவது கிளறி விட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது. இப்படியான பிம்ப உருவாக்கம், இருத்தலியல் என்பதெல்லாம் நம்மை போலியாக உருமாற்றிவிடும். போலியாக இருப்பதைவிடவும் பிம்பமற்றவனாக இருப்பது எவ்வளவோ தேவலாம்.

உள்ளக்கிடக்கைகளை, மனதில் தோன்றுவனவற்றை பேசிக் கொண்டேயிருப்பது என்பது மிகப் பெரிய சுதந்திரம். கட்டற்ற வெளி. ‘இவன் இப்படித்தான்’ என்று புரிந்து கொள்கிறவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதுதான் சந்தோஷமும் திருப்தியும் கூட. எழுத்திலும் செயல்பாடுகளிலும் அத்தகைய திருப்தியைத்தான் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்,
மணிகண்டன்

6 எதிர் சப்தங்கள்:

Dineshkumar Ponnusamy said...

100% உண்மை

//அவர்கள் அப்படி நினைத்துக் கொள்வார்கள். இவர்கள் இப்படி கருதுவார்கள் என்று யாரையோ மனதில் வைத்துக் கொண்டு நம்மை அடக்கிக் கொண்டு செயல்பட்டால் எந்தக் காலத்திலும் நம் வட்டத்தைத் தாண்டி வெளியில் வர முடியாது//

Anonymous said...

For Your Consideration.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//பெரிய எழுத்தாளர்கள் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட தம்மை இந்தச் சமூகத்தின் உரையாடலில் தொடர்ந்து தக்க வைப்பதற்காக எதையாவது கிளறி விட்டுக் கொண்டேயிருப்பதைப் பார்க்கும் போது ஆயாசமாக இருக்கிறது//
ம.பு வின் கட்டுரை படித்தபோது இந்த உணர்வுதான் ஏற்பட்டது

RAGHU said...

அவரா? அவர் தப்பா சாட் பண்ணுவாரே - Mani you could have clarified that it was harmless kadalai [ if it was :) ]

சேக்காளி said...

//பிம்பம் உருவாகிக் கொண்டேயிருக்கட்டும். அதைக் கலைத்துக் கொண்டேயிருப்போம்./
இது புதுசா இருக்கே!!!!!!!!!!!!!!

சேக்காளி said...

சரி! மீண்டும் மாதவனா எப்ப வரப் போறதா உத்தேசம்?