Mar 25, 2017

அசோகமித்திரன்

அப்பாவை மருத்துவமனையில் சேர்த்த பிறகு மருத்துவர்கள் நம்பிக்கையிழந்திருந்த தருணத்தில் கடவுளிடம் மனமுருகி வேண்டியது ஒன்றுதான் - ‘ஒருவேளை அவரை எடுத்துக் கொள்வதாக இருந்தால் தூக்கத்திலேயே வலியில்லாமல் எடுத்துக் கொள்’ என்றேன். அப்படியேதான் நடந்தது. இதை யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டேன். நாம் வேண்டுவதற்கு கடவுள் செவி மடுக்கும் போது ‘அப்பாவைக் காப்பாற்று’ என்றுதான் வேண்டியிருக்க வேண்டுமோ என்று குற்றவுணர்ச்சியும் கூட இருந்தது. எல்லாம் முடிந்த பிறகு எடுத்துச் சென்று எரித்துவிட்டு வந்த போது மனதுக்குள் வெறுமை குடி கொண்டிருந்தது. எவ்வளவு நாட்களுக்குத்தான் வெறுமையுடனேயே சுற்றுவது? வெளி வந்துதானே ஆக வேண்டும்.

ஊரில் இருக்கும் போது அப்பா பெங்களூரில் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். பெங்களூரு வந்த பிறகு அப்பா ஊரில் இருப்பதாக நினைத்துக் கொள்வேன். இன்றைக்கு வரைக்கும் அப்பா பிரிந்துவிட்டதாகவே நினைப்பதில்லை. ஏதாவதொரு சமயத்தில் மட்டும் அப்பா நம்மிடம் இல்லை என்கிற எண்ணம் வருவதுண்டு. ஆனால் பூபதி ராஜா என்கிற நண்பர் அப்பா இறந்த இரண்டாவது தினத்தில் அழைத்து ‘ஆன்மா இங்கதான் இருக்கும்...சினிமா மாதிரி பேய், பிசாசு, கடவுள் என்றெல்லாம் இல்லை...நம்மைச் சுற்றி இருக்கிற மாதிரியே இருக்கும்’ என்றார். உண்மையிலேயே அது மிகப் பெரிய ஆறுதல். நம்முடன்தான் இருக்கிறார் என்கிற ஆசுவாசத்தை அதுதான் கொடுத்தது.


எழுத்தாளர் அசோகமித்திரன் இறந்துவிட்டதாகக் கேள்விப்பட்ட போது சட்டென்று ஒரு முள் இடறியது போல இருந்தது. அதோடு சரி. எப்படி யோசித்துப் பார்த்தாலும் அவரது எழுத்துக்களும் படைப்புகளும் கொண்டாட்டத்திற்கானவை. தமது எண்பத்தைந்து ஆண்டு கால வாழ்க்கையில் எவ்வளவு எழுத வேண்டுமோ அவ்வளவு எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார். பூர்த்தியான வாழ்க்கை. பூங்கிழவனாக மாறிய பிறகு பூ உதிர்வது போல விழுந்திருக்கிறார். உடனடியாக ஒப்பாரி வைத்து அந்த மாபெரும் மனிதனுக்கு கண்ணைக் கசக்க வேண்டியதில்லை எனத் தோன்றியது. 

அ.மியை இரண்டு முறை நெருக்கமாகவும் ஒரு முறை சற்றே தள்ளியும் சந்தித்திருக்கிறேன். முதன் முறையாக ஹைதராபாத்தில். அப்பொழுது அசோகமித்திரனின் மகன் அங்கேயிருந்தார். மறைந்த எழுத்தாளர் எஸ்.வி.ராமகிருஷ்ணனும் அ.மியும் காரில் பின்பக்கமாக அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் இருவரும்தான் பேசினார்கள். நான் முன்பக்க இருக்கையில் அமர்ந்து திரும்பிப் பார்த்து அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இரண்டாம் முறையாக அவரைச் சென்னையில் சந்தித்தேன். அப்பொழுது வெகு நெருக்கத்தில் சந்தித்தேன் என்றாலும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. அப்பொழுது எஸ்.வி.ராமகிருஷ்ணன் மறைந்துவிட்டார். ‘அவர் போய்ட்டாரு..அடுத்து நான் எப்போன்னு தெரியல’ என்று சிரித்தார். அதைச் சிரிப்பு என்று சொல்ல முடியாது. அவரது புன்னகையில் எப்பொழுதும் மெல்லிய சோகம் நிறைந்திருப்பதாகவே தெரியும். மூன்றாவது முறையாக காலச்சுவடு நடத்திய நிகழ்ச்சியொன்றில் சில வினாடிகள் பார்க்க முடிந்தது.

‘ஞாபகமிருக்கா சார்?’ என்ற போது அவருக்குத் தெரியவில்லை. பெயரைச் சொல்லி ஹைதராபாத்தில் சந்தித்திருக்கிறோம் என்ற போது நினைவுபடுத்திக் கொண்டார்.

இடைப்பட்ட காலத்தில் அவரது பதினெட்டாவது அட்சக்கோடு நாவலுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியிருந்தது. அந்த வாய்ப்புதான் எழுத்தைப் பொறுத்தவரையிலும் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என நம்புவதுண்டு. அந்நாவலின் களம் ஹைதராபாத்தும்-செகந்திராபாத்தும். அந்த ஊருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால் முன்னுரை எழுதச் சொன்னார்கள் என நினைக்கிறேன். எழுதிக் கொடுத்த பிறகு அதை புத்தகத்திலும் இணைத்துவிட்டார்கள்.

‘உங்க பேரைச் சொன்னாங்க..ஹைதராபாத்தில் நாம பார்த்தது ஞாபகம் வரலை...நீங்க ரொம்பச் சின்னப் பையனா இருப்பீங்கன்னு நினைக்கல’ என்றார். இதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. அ.மி அப்படித்தான் - மனதில் நினைப்பதை அப்படியே சொல்லிவிடுவார். ஒரு குழந்தமையை அவரது பேச்சிலும் செய்கையிலும் உணர முடியும்.

‘இப்போ எங்க இருக்கீங்க?’என்றார்.

‘பெங்களூரு சார்’ என்றேன். ‘சிக்க வீர ராஜேந்திரன் படிச்சிருக்கீங்களா? படிக்கலைன்னா படிங்க’ என்றார்.

அசோகமித்திரன் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு இரண்டு நாட்களாக அந்த நாவலைத்தான் வாசித்துக் கொண்டிருக்கிறேன். 1956 ஆம் ஆண்டில் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரால் கன்னடத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நாவல் அது. குடகு, மடிகேரி, பெங்களூரு எல்லாம் நாவலின் களம். பெங்களூரில் இருக்கிறேன் என்று சொன்னதனால் வாசிக்கச் சொல்லியிருக்கக் கூடும். நாவலை முடித்துவிட்டு மீண்டுமொருமுறை பதினெட்டாவது அட்சக்கோடு நாவலை வாசிக்க வேண்டும் என முடிவு செய்து வைத்திருக்கிறேன்.

க.சீ.சிவகுமார் இறந்து போன போது அவரது குடும்பம் பற்றிய வலி அதிகமாக இருந்தது. அவர் இன்னமும் எழுதியிருக்க வேண்டும் என்ற எண்ணமிருந்தாலும் அவரது பிள்ளைகளுக்காக இன்னமும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று வருந்தினேன். அ.மி அப்படியில்லை. எல்லாக் காலத்திலும் தமிழ் வாசகர்களோடு வாழ்ந்து கொண்டேயிருக்கிற அளவுக்கு எழுதிக் குவித்திருக்கிறார். ஆரம்பகட்ட வாசகன் என்றாலும் கூட தைரியமாக ‘அசோகமித்திரனிலிருந்து வாசிக்க ஆரம்பிங்க’ என்று பரிந்துரைக்கிற எளிமையான எழுத்துக்களை எழுதிக் கொண்டேயிருந்தார். 

சாமானிய மனிதர்களைத் தமது எழுத்தின் பாத்திரங்களாக நிரப்பிவிட்டு நம்மிடையே உலவவிட்டிருக்கிறார். அப்பா இறந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடிந்ததோ அப்படியேதான் அசோகமித்திரன் இறந்ததையும் ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவர் சென்னையில் தமது வீட்டில் இருந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கலாம். அவர் எழுதியதையெல்லாம் திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டேயிருக்கலாம். 

அசோகமித்திரன் பற்றிய ஒரேயொரு குறை உள்ளதெனில் அது ஞான பீட விருது. அவ்விருதுக்கு எல்லாவகையிலும் தகுதி வாய்ந்த எழுத்தாளர் அவர். ஆனால் அரசியலும் சாதியமும் அவருக்குக் கடைசி வரைக்கும் கிடைக்காமல் செய்துவிட்டன. அது விருதுக்குத்தான் அவமானம். அவர் தனது கோணவாய்ச் சிரிப்பில் புறந்தள்ளிவிட்டு போய்விட்டார்.

3 எதிர் சப்தங்கள்:

பாலு said...

ஒரு தரம் எஸ்.ரா அவர்கள் அசோகமித்திரன் அவர்களைத் தெருவில் சந்தித்து 'நான் உங்கள் வாசகன்' என்று அறிமுகப்படுத்திக் கொள்ளவும், 'எல்லாம் சரிதான். அதுக்காக இப்படி நடுரோட்டில் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு போகும் போதா வருவது? நான் தெருவைக் கிராஸ் பண்ணனும்' என்ற ரீதியில் கடந்து போனதாக குறிப்பிடுகிறார். வாசகபர்வம் மூலமாக 18வது அட்சக்கோடு அறிமுகம் ஆனது. அசோகமித்திரன் இன்னும் கொண்டாடப் பட்டிருக்க வேண்டியவர். ஏன் நீ பண்ண வேண்டியதுதான என்று யாரும் கேட்க வேண்டாம்.

RAMESHKALYAN said...

ஒருமுறை இலக்கியச் சிந்தனை மாதாந்திர கூட்டத்தின் மெலிந்த கூட்டத்தில் மாலையில் பேசினார். அவர் பேச எழுந்து சில வினாடிகள் எதுவுமே பேசாமல் நின்றார். பிறகு இயல்பான சிறு முகச்சுளிபபுடன் கண்ணைச் சுருக்கிக்கொண்டு "இந்த இலக்கியம் ,படிப்பு இதெல்லாம் அப்ப்ப்டி ஒண்ணும் அவசிஷ்யமில்லைனே சொல்வேன்" என்றவரை லேசான அதிர்ச்சியோடு நான் உள்ளிட்ட கூட்டம் பார்த்தது. "ஏன்னு கேட்டா இப்டில்லாம் படிக்காம ரொம்பவே சந்தோஷமா நிறய்ய பேர் இருக்கா' என தொடர்ந்த போது மெல்லிய நகைச்சுவை பரவியது..ஆனால் எதற்குமே respond பண்ணாத மாதிரி அவர் தொடர்ந்து பேசினார். எழுத்து வடிவத்தைத் தாண்டி எனக்குள் சட்டென அந்தக் கணம் புகுந்தவர் பிறகு அப்படியே குடிகொண்டு விட்டார். பிறகு பல கதை கட்டுரைகளில் "நான்" என்று வரும்போதெல்லாம் அவர்தான் தன் குரலால் படித்துக்கொண்டே

SiSulthan said...

அசோகமித்திரனின் மறைவு வருத்ததிற்க்குறியதே.
சிக்க வீர ராஜேந்திரன் நாவல் எந்த பதிப்பகம்? எங்கு கிடைக்கும்?
நானும் பல காலமாக அந்த நாவலை வாங்கவேண்டும் என தேடி அலைகிறேன்.
விபரம் சொல்லவும்