Mar 21, 2017

உனக்கு என்ன பிரச்சினை?

அவிநாசி அத்திக்கடவு திட்டம் என்பது அவிநாசி என்கிற ஊருக்கு குடிநீர் பஞ்சத்தைப் போக்குகிற திட்டம் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிகச் சமீபகாலம் வரைக்கும் அப்படியான எண்ணம்தான் எனக்கும். ஆனால் அப்படியில்லை. சற்றே மூக்கை நுழைத்துப் பார்த்தால் இத்திட்டத்தின் உன்னதம் புரியும். கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு வாழ்க்கையைக் கொடுக்கக்க் கூடிய திட்டம் இது. வறட்சியின் காரணமாக விவசாய நிலங்களை விட்டுவிட்டு, கால்நடைகளையும் கைவிட்டுவிட்டு பனியன் தொழிற்சாலைகளிலும் சாயப்பட்டறைகளிலும் தங்கள் வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருக்கும் மக்களை சொந்த மண்ணுக்கு விவசாயம் நோக்கித் திரும்பச் செய்கிற ஏற்பாடு.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றச் சொல்லி காமராஜர் காலத்திலிருந்தே கேட்டுக் கொண்டு வருகிறார்கள். காமராஜர் தேசிய அரசியலுக்குச் சென்றார். பின்னர் வந்த பக்தவச்லம், கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பி.எஸ் என்று முதல்வர்கள்தான் மாறியிருக்கிறார்களே தவிர திட்டம் நிறைவேறும் பாட்டையே காணவில்லை. சமீபமாக போராட்டம் சூடு பிடித்திருக்கிறது. மக்கள் ஒன்று திரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப்படாவிட்டால் பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாலையாகிப் போவதைத் தடுக்கவே முடியாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்வது எளிதான ஒன்றுதான். பவானி ஆற்றின் போக்கு பற்றித் தெரிந்து கொண்டால் விவரிப்பது சுலபமாக இருக்கும். கீழேயிருக்கும் கூகிள் மேப்பை கவனியுங்கள். ஊட்டி குன்னூர் ஆகிய மலைப்பகுதிகளில் பெய்யக் கூடிய மழையானது தமிழகத்தைப் பொறுத்த வரையில் இரண்டு பக்கமாக சேகரமாகிறது. மேட்டுப்பாளையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் பில்லூர் அணை (சிவப்புச் சதுரம்) அதில் ஒன்று. பில்லூர் அணையிலிருந்து நீர் வழிந்தோடி சத்தியமங்கலம் அருகில் இருக்கும் இன்னொரு பெரிய அணையான பவானிசாகர் அணைக்குச்(சிவப்பு வட்டக் குறி) செல்கிறது. பவானிசாகர் அணையில்தான் பவானி நதியின் துணை நதியான மோயாறும் வந்து சேர்கிறது. இப்படி பவானிசாகரிலிருந்து கிளம்பும் பவானி நதி சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், பவானி வழியாகச் சென்று காவிரியுடன் கலக்கிறது.


இப்பொழுது மீண்டும் கூகிள் மேப்பை பார்த்தால் ஒன்று புரியும்- பவானி நதி பாயக் கூடிய சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையம், பவானி ஆகிய ஊர்கள் பசுமையாக இருப்பதும் அவிநாசி பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகள் காய்ந்து கிடப்பதும் தெரியும். இதுதான் நிலைமை. ‘எங்க பகுதிக்கும் கொஞ்சம் பச்சையைக் காட்டுங்க’ என்று இந்த காய்ந்து கிடக்கும் ஊர்க்காரர்களின் கோரிக்கைதான் அவிநாசி-அத்திக்கடவுத் திட்டம். கிட்டத்தட்ட நாற்பது அல்லது ஐம்பது வருடங்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ‘இதோ ஆச்சு; அதோ ஆச்சு’ என்று ஆட்சியாளர்களும் இழுத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.


அவிநாசி அத்திக்கடவு நீர் செறிவூட்டும் திட்டத்தின் படி பில்லூர் அணைக்கு சற்று முன்பாக ஒரு கால்வாயை வெட்டி புளியம்பட்டி, நம்பியூர், அவிநாசி, ஊத்துக்குளி, சென்னிமலை என வறட்சி பாதித்த பகுதிகள் வழியாக தோராயமாக நூற்று நாற்பது கிலோமீட்டருக்கு வளைத்து வளைத்துக் கொண்டு போய் குளம் குட்டைகளை எல்லாம் இணைக்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு குளங்கள், இருநூறு குட்டைகளில் நீரை நிரப்புவதுதான் திட்டம் அப்படி குளம் குட்டைகளில் நீரை நிரப்பும் போது அக்கம்பக்கத்து நிலத்தடி நீர் வளம் பெருகும். விவசாயம் செழிக்கும். பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் உயிர் பிழைத்து சூழலியல் சமநிலை மேற்கொள்ளப்படும் என்று பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்.

இந்தத் திட்டத்தைப் பற்றி பேசும் போது சத்தியமங்கலம், கோபிச்செட்டிபாளையத்து மக்களுக்கு மெல்லிய பயமும் இருக்கிறது. அத்திக்கடவு பில்லூர் அணையிலிருந்து பவானிசாகர் அணைக்கு நீர் வருவதற்கு முன்பாகவே உறிஞ்சி எடுத்துவிட்டால் தங்களுக்கு விவசாயத்திற்கு நீர் இல்லாமல் போய்விடுமோ என்று பதறுகிறார்கள். அவர்கள் பதறுவதில் அர்த்தமேயில்லை என்பதை ஆட்சியாளர்கள்தான் புரிய வைக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்படி வாய்க்கால் அமைத்துக் கொண்டு போகப்படும் நீரானது நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுவதில்லை. வெறும் ஒரு டிஎம்சி தண்ணீரைக் கொண்டு போய் குளம் குட்டைகளில் நிரப்புகிறார்கள். அவ்வளவுதான்.

கடந்த நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகால புள்ளிவிவரங்களை எடுத்துப் பார்த்தால் பவானி ஆற்றில் உபரியான நீரின் அளவு மட்டும் சராசரியாக பத்து டிஎம்சி வரைக்கும் போகிறது. அதில் ஒரேயொரு டிஎம்சி நீரைத்தான் கேட்கிறார்கள். இதைச் செயல்படுத்திவிட்டால் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு வாழ்வளித்துவிடும். ஒரு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்திற்கு பாசன வசதியைக் கொடுத்துவிட முடியும். ஒரு டிஎம்சி தண்ணீரைக் கூட நம் பக்கத்து விவசாயிக்குத் தரமாட்டோம் என்று சொன்னால் கர்நாடகக்காரனிடம் வருடா வருடம் தண்ணீர் கேட்பதற்கு நமக்கு யோக்கியதையே இல்லை என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக மிகப்பெரிய ஆபத்து ஒன்றை கேரளா உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அத்திக்கடவுக்கு முன்பாகவே தடுப்பணைகளை பவானி ஆற்றில் கட்டிக் கொண்டிருக்கிறது. (கூகிள் மேப்பில் பார்த்தால் பில்லூருக்கு இடது புறமாக கேரளாவின் எல்லை தெரியும்) அப்படி மட்டும் தடுப்பணைகளை வெற்றிகரமாக கேரள அரசு கட்டிவிட்டால் பிறகு எந்தக் காலத்திலும் அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுகிற அளவுக்குக் கூட பவானி ஆற்றில் நீர் இருக்காது என்கிறார்கள். பவானியில் சேகரமாகிற நீரையெல்லாம் அவர்களே திருப்பிக் கொள்வார்கள். தமிழக விவசாயிகளுக்கு மட்டும்தான் திரும்பிய பக்கமெல்லாம் தலை இடி. அத்திக்கடவுத் திட்டத்தைக் கொண்டு வரச் சொல்லி தமிழக அரசையும் கேட்க வேண்டும். தடுப்பணை கட்ட வேண்டாம் என்று கேரள அரசையும் கெஞ்ச வேண்டும். தஞ்சை விவசாயில் டெல்லியில் போராடுகிறான். தாமிரபரணி விவசாயி குளிர்பான நிறுவனத்துடன் போராடுகிறான். கொங்குநாட்டு விவசாயி கேரளக்காரனுடன் போராடுகிறான். 

என்ன நடக்கும் என்றுதான் தெரியவில்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளை நாம்தான் பரவலாக பேச வேண்டும். நம் விவசாயிகள் முன்வைக்கும் நீர்த்திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து பரவலான புரிதல்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ஆதரவு தெரிவிக்கிறோமோ இல்லையோ- ஏன் விவசாயி போராடுகிறான் என்பதையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லையா? உழவர்களின் பிரச்சினை என்பது மாநிலத்தின் அடிநாதமான பிரச்சினை. அதைத்தான் நாம் அதிகம் பேசி, விவாதிக்க வேண்டும். ஆனால் டெல்லியில் நம் விவசாயிகளின் போராட்டம் எதற்காக நடைபெறுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? இன்று நாம் சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருக்கும் பிற எந்தப் பிரச்சினைகளைவிடவும் இது முக்கியமான பிரச்சினை இல்லையா?

வேளாண் தொழில் செய்பவனுக்காக குறைந்தபட்சக் குரலையாவது நாம் எழுப்புவோம். 

இன்றைக்கு அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்திற்காக போராடுவதற்காக நிறைய இளைஞர்கள் திரண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஏதேனும் செயல்பாடுகளைத் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை மக்களுக்கு இந்தத் திட்டம் மிக அவசியமானது என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் இத்தகைய கோரிக்கைகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக எதிரொலிக்க வேண்டும். ‘இதற்காகத்தான் போராடுகிறார்கள்’ என்பது பரவலாக எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டும். நம்முடையது சிறிய மாநிலம்தானே? நெல்லைக்காரனின் பிரச்சினையைக் கோவைக்காரனும், கொங்குநாட்டான் பிரச்சினையை மதுரைக்காரனும், தஞ்சை விவசாயியின் பிரச்சினையை சென்னைக்காரனும் புரிந்து கொள்ள முடியாதா என்ன? முடியும். சற்றே மெனக்கட வேண்டும். அவ்வளவுதான்.

பேசுவோம். விவாதிப்போம். 

இந்த முறை அவிநாசி அத்திக்கடவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். மக்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடியிருக்கிறார்கள். அவசரப்பட்டு கொண்டாட வேண்டியதில்லை. கடந்த பல முறைகளாகவே இப்படித்தான் நடக்கிறது. ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவார்கள். ஊர்க்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு நன்றி அறிவிப்பு செய்து பட்டாசு வெடித்து இனிப்புக் கொடுப்பார்கள். கடைசியில் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. 

நம் தலையெழுத்து அப்படி.

2 எதிர் சப்தங்கள்:

Saro said...

நானும் ரொம்ப நாளாக இதை பற்றி தேடிப்பார்த்தேன். எதுவும் கிடைக்க வில்லை. இந்த திட்டத்தை பத்தி இவ்வளவு விளக்கமாக எழுதியதுக்கு நன்றி.

Unknown said...

Thanks for sharing your ideas, if this will be implemented, hopefully, all our barren land's will changed to green orchards.