Mar 22, 2017

வரலாறு தெரிஞ்சுக்கோணும்

அவர் ஒரு வழிப்போக்கி. வெகு தூரம் நடந்து வந்திருக்கிறார். வந்தவருக்கு களைப்பு. ஆடு மேய்க்கிற ஒரு சிறுவனிடம் பேச்சுக் கொடுத்தபடியே அமர்கிறார். அந்தப் பையனிடம் ஊர்ப் பெயர், அந்த ஊரில் என்ன சிறப்பு என்றெல்லாம் விசாரிக்கிறார். பையனுக்கும் பொழுது போக வேண்டுமல்லவா? அவர் கேட்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.

‘இந்த மலைக்கு பேரு நாகமலைங்க’ என்கிறான் பொடியன். 

‘நாகமலைன்னு சொல்லுற...பாம்பு படம் எடுத்து ஆட வேண்டாமா?’ என்றாராம். பையனுக்கு சுருக்கென்றாகிவிட்டது. பக்கத்தில் இருந்த முருகன் கோவிலைக் காட்டி ‘அங்க மயில் இருக்குதுங்க...பாம்பு அடங்கிக் கெடக்குது’ என்றிருக்கிறான். பெரியவருக்கு படு ஆச்சரியம். ‘ஆடு மேய்க்கிற பையனுக்கு இம்புட்டு அறிவா?’ என்று யோசித்தவர் இதையே பாடலாகப் பாட கொங்குப் பகுதியில் ஒரு கல்வெட்டிலும் பொறித்து வைத்துவிட்டார்கள். அந்தக் காலத்தில் கொங்கு நாட்டுக்காரர்கள் அவ்வளவு அறிவாளிகள் என்று சொல்வதற்காக பேராசிரியர் அரங்கசாமி இதைச் சொல்வார். இந்தக் கதையை அவர் சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. நாகதோஷம் என்பதற்கெல்லாம் சமீப காலம் வரைக்கும் முருகனைத்தான் வழிபட்டிருக்கிறார்கள். பிறகுதான் ராகு கேதுவெல்லாம். 

ஆடு மேய்க்கிற பையன் கூட அறிவாளியாக இருந்த ஊரில் ‘பொறந்துட்டு நமக்கு மட்டும்தான் அறிவில்லையோ’ என்று நினைத்துக் கொள்வதுண்டு. என்ன செய்ய முடியும்? எண்ணையிலேயே குளித்துவிட்டு வந்து புரண்டாலும் ஒட்டுவதுதானே ஒட்டும்? நமக்கு அவ்வளவுதான் அறிவு.

அந்தக் காலத்திய கொங்கு வட்டார மக்களின் அறிவைப் பற்றிப் பேசும் போது இன்னொரு கதையும் இருக்கிறது. சித்தோட்டிலிருந்து பெருந்துறை செல்லும் வழியில் ஒரு சிற்றூர் இருக்கிறது. ஊர்ப்பெயர் மறந்துவிட்டது. பழனிக்கவுண்டர் பழனியம்மாள் என்ற தம்பதி வாழ்ந்திருக்கிறார்கள். இரண்டு பேருமே விவரமானவர்கள்தான்.

பழனிக்கவுண்டரைப் பார்க்கக் கவிராயர் ஒருத்தர் தெற்கத்திச் சீமையிலிருந்து வந்திருக்கிறார்.

‘பழனிக்கவுண்டர் இல்லீங்களா?’ என்கிறார்.

பழனியம்மாள் கவிராயரிடம் மரியாதையுடன்தான் பேசுகிறார். ஆனால் கவிராயருக்கு இளக்காரம். ‘பொம்பளைக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டுமா?’என்று நினைத்துக் கொண்டே எங்கேயோ பார்த்தபடியே வெளித்திண்ணையில் அமர்ந்து கொள்கிறார். பழனியம்மாள் மோரோ நீராகாரமோ கொண்டு வந்து கொடுத்துவிட்டு ‘நீங்க யாருங்க? எனக்கு அடையாளம் தெரியலீங்களே’ என்றிருக்கிறார். 

‘நான் ஷோடசாவதானி’ என்று சொல்லிவிட்டு ‘இவளுக்கு இது புரியாது....இனி எதுவும் கேட்கமாட்டாள்’ என்று நினைத்தபடியே ஆகாரத்தைப் பருகியிருக்கிறார். கடுப்பான பழனியம்மாளுக்கும் இவரை ஒரு காட்டு காட்ட வேண்டும் எனத் தோன்றியிருக்கிறது.

‘ஓ ரெண்டு ஆட்டைத் திருடிட்டு இங்க வந்து ஒளிஞ்சிருக்கீங்களா?’ என்றாராம். குடித்துக் கொண்டிருந்தவருக்கு புரை ஏறி அடங்க வெகு நேரமாகியிருக்கிறது. ஷோடசாவதானி என்று அவர் சொன்னதன் பொருள் பதினாறு செயல்களை ஒரே நேரத்தில் செய்யக் கூடிய பதினாறு கவனகர் என்று அர்த்தம். பழனியம்மாள் அந்தச் சொல்லைப் பதம் பிரித்து சோடு- சோடி (இரண்டு), அசம்- ஆடு- அவதானி- கவர்ந்தவர் என்று அர்த்தப்படுத்திக் கேட்டிருக்கிறார்.

கொங்குச் சுவடுகள் என்றொரு புத்தகத்தில் செ.ராசு இதைக் குறிப்பிட்டிருப்பார். அதே புத்தகத்திலேயே வள்ளியாத்தாள் என்றொரு இன்னொரு அறிவுப் பெண்மணியைப் பற்றிய குறிப்பும் உண்டு. வள்ளியாத்தாள் பாடல்கள் எழுதுகிற வல்லமையாளர். வள்ளியாத்தாள் என்பது முருகனின் மனைவி பெயர் அல்லவா? தாம் எழுதுகிற பாட்டுக்கு அவள் பெயரை வைத்து வள்ளியைக் கடுப்பேற்றிவிடக் கூடாது என்று பயந்து தனது பாடல்களின் கீழாக கொம்பொடிந்த வெள்ளியாத்தாள் என்றுதான் பெயரைப் பதிவு செய்து வைத்திருப்பாராம். வெள்ளியாத்தாள் என்ற பெயரில் ஒற்றைக் கொம்பை நீக்கிவிட்டால் வள்ளியாத்தாள் ஆகிவிடும் அல்லவா?.

இத்தகைய செய்திகளைப் படிக்கும் போது வெகு சுவாரசியமாக இருக்கின்றன. சில தரவுகளைத் தேடிச் செல்லும் போது அதிசயமான சில புத்தகங்கள் கிடைக்கின்றன. இத்தகைய அதிசயமான புத்தகங்களில்தான் இப்படியான செய்திகள் கிடைக்கின்றன. 

வெகு தீவிரமாகத் தேடிப் பார்த்தால் சில நூறாண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த மனிதர்களின் பல சுவாரஸியமான செய்திகளைத் தேடிப் பிடித்துவிடலாம். எங்கேயாவது யாராவதொருவரால் குறிப்பிடப்பட்டிருக்கக் கூடும் ஆனால் அவை கைகளுக்குச் சிக்குவதில்லை. வரலாறு என்பதே பெரும் காட்டாற்று வெள்ள ஓட்டம்தானே? பெருதலைகள் மட்டுமே தப்பிப் பிழைக்கிறார்கள். பிற சுவாரஸியமான செய்திகள் யாவும் அடித்துச் செல்லப்பட்டுவிடுகின்றன.

‘இவையெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளா?’ என்று யாராவது கேட்கக் கூடும். வரலாற்று முக்கியத்துவமில்லாத செய்திகளாகவே கூட இருக்கலாம். ஆனால் நம் வாழ்க்கையின் சுவாரஸியங்களை இவை கூட்டுகின்றன என்றுதான் தோன்றுகிறது.

யாரோ ஒரு பட்டக்காரரை சங்ககிரியில் மதுரை நாய்க்கனின் தளபதி அடைத்து வைக்கிறான். வரி கட்டவில்லை என்று கணவன் மனைவி இருவருக்குமே சிறைத் தண்டனை. இதைத் தெரிந்து கொள்ளாமல் பாடல் பாடி பணம் வாங்கிவிட்டுப் போகலாம் என்று வருகிறார் ஒரு கவிஞர். ‘அவங்க ரெண்டு பேரையும் சங்ககிரியில வெச்சிருக்காங்க’ என்று யாரோ சொல்லவும் கவிஞர் சிறைக்கே சென்றுவிடுகிறார். அப்பொழுதெல்லாம் கடுங்காவல் சிறை இல்லை போலிருக்கிறது. சிறைக்குள்ளும் சென்றுவிடுகிறார் கவிஞர். பட்டக்காரருக்கு அருகாமையில் இருப்பவர்கள் ‘உனக்கு நேரங்காலம் இல்லையா?’ என்கிறார்கள். பட்டக்காரர் மற்றவர்களை அடக்கிவிட்டு தனது மனைவியின் கழுத்தைப் பார்க்கிறார். அந்தப் பெண்மணி தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தைக் கழற்றிக் கொடுத்துவிடுகிறார். கவிஞர் பாடல் எழுதிவிட்டு போகிறார்.

இதை எப்படி எடுத்துக் கொள்வது? சாதாரணச் செய்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். மிக முக்கியமான வரலாற்றுச் செய்தியாகவும் எடுத்துக் கொள்ளலாம். நாய்க்கன், அவனது தளபதி, பட்டக்காரர், கவிஞர் என்று நூல் பிடித்துப் போனால் இன்னமும் ஏகப்பட்ட செய்திகள் கிடைக்கக் கூடும். இத்தகையை செய்திகளை அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தமிழ் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருந்த போது ‘அந்தக் காலத்தில் உங்க ஊரில் சமணம்தான். இந்து மதமே கிடையாது’ என்றார். ஈரோடு மாவட்டத்தில் விஜயமங்கலம் என்பது சமணர்களின் முக்கியமான ஊர். திங்களூர் என்பது சமணர்களுடன் தொடர்புடையது. பவனந்தி முனிவரின் சமாதி சீனாபுரத்தில் இருக்கிறது. சமணர்புரம் என்பதுதான் சீனாபுரம் என்று மருவியது. பள்ளி என்று முடியக் கூடிய ஊர்கள் உண்டு. ஆனால் இவற்றையெல்லாம் மட்டும் வைத்துக் கொண்டு ‘எங்கள் ஊரில் பூராப்பயல்களும் சமணர்கள்தான்’ என்று எழுதினால் அடிக்க வந்துவிடுவார்கள். தேடியெடுத்துத் தரவுகளோடு எழுத வேண்டும். தரவுகள் கிடைக்கும் வரைக்கும் ‘அப்படித்தான் அந்த வாத்தியார் சொன்னாரு’ என்று சொல்லிக் கொண்டே திரிய வேண்டியதுதான்.

3 எதிர் சப்தங்கள்:

Pari said...

விஜயமங்கலத்தில் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முக்கிய சமணத் தளமான சந்திரபிரபாகரர் தீர்த்தங்கர் கோயில் இன்றளவும் உள்ளது. தற்போது ASI பராமரிப்பில்..
http://citypatriots.com/asia/india/tamil-nadu/vijayamangalam/chandraprabha-theerthangarar-temple

சேக்காளி said...

//வரலாறு தெரிஞ்சுக்கோணும்//
ஆமாங்க வேர்ப்பேரன்.

செல்வன் said...

நேமிநாதர் சமணத்தின் 22வது தீர்த்தங்கரர்.
கரூர், அரவக்குறிச்சி பகுதிகளில் நிறைய பேருக்கு "நேமிநாதன்" என்ற பெயர் உண்டு.