Mar 20, 2017

அன்புள்ள ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு

அன்புள்ள ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு,

வணக்கம்.

தினசரி தினத்தந்தி செய்திகளைப் படித்து உருவேறிக் கிடக்கும் மரத்துப் போன மண்டைக்குச் சொந்தக்காரன் நான். இன்று காலையில் வட்டில் நிறைய இட்லியும் முருங்கைக்காய் சாம்பாரும் ஊற்றி எடுத்து வந்து பக்கங்களைப் புரட்டுகையில் ‘அவதூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லி’ தங்களைச் சார்ந்தவர்கள் காவல்துறையில் புகார் மனுவை அளித்திருக்கிறார்களாம். என்னடா இது வம்பாகப் போய்விட்டது என்று கையையும் வாயையும் அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். காவல்துறையினர் இழுத்துச் சென்று கும்மினால் தாங்குகிற உடல்நிலையும் என்னிடமில்லை. செருப்பு, செல்போன், பர்ஸ் என்று எல்லாவற்றோடும் சேர்ந்து எடை எந்திரத்தில் ஏறி நின்றாலும் ஐம்பத்தெட்டு கிலோவைத் தாண்ட மாட்டேன் என்று தகிடுதத்தம் செய்கிறது. 

இந்த லட்சணத்தில் அமைதியாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் எனக்கு எப்பொழுதுமே வாயில் சனி. ஏதாவது கேள்வி கேட்டுத் தொலைக்காமல் இருப்பதில்லை. 

செப்டம்பர் 2015 அன்று விகடனிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. தமிழகம் முழுவதும் நூறு இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு லட்சம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஒரு கோடி ரூபாய் என்பது பெரிய தொகை. நதிகளை இணைப்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தருவதாகச் சொன்ன தொகை அது. அவர் வெறும் சூப்பர் ஸ்டார். நீங்களோ மக்கள் சூப்பர் ஸ்டார். அவர் தராமல் டகால்ட்டி விட்டுவிட்டார் என்றாலும் நீங்கள் தந்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அப்பவும் கூட அக்கம்பக்கத்து சில்வண்டுகள் ‘டேய்..இதில் ஏதாச்சும் கசமுசா இருக்கும்..தேவையில்லாமல் தலையைக் கொடுக்காதே’ என்று சொல்லத்தான் செய்தார்கள். ஆனால் விகடன், லாரன்ஸ் என்ற பெரிய பெயர்கள் ஈர்த்தன. போதாக்குறைக்கு வாராவாரம் விகடனில் நான்கு பக்கங்களுக்கு விளம்பரங்கள் வந்தன. பின்மண்டையில் கிடக்கும் நான்கு முடியை இழுத்து முன் நெற்றியில் தவழவிட்டு கையைக் கட்டி போஸ் கொடுத்து எடுத்த படத்தை விகடனில் கொடுத்தால் நம்மைத் தமிழ்நாடே தெரிந்து கொள்ளும் என்று நம்பினேன். லாரன்ஸ் முதலமைச்சர் ஆகுவதாக இருந்தால் எப்படியும் நாம்தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்றும் கூட கணக்குப் போட்டுக் கொண்டேன்.

ஒரு லட்ச ரூபாய் என்பது பெரிய காரியமில்லைதான். ஆனால் அதை வாங்கித் தருவதாக ஒரு கிராமத்துக்கு உறுதிமொழி கொடுத்திருந்தேன். நம்மவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? கொடுக்கிற வார்த்தையைக் காப்பாற்றவில்லையென்றால் ‘இவனுக்கு அமெரிக்காவிலிருந்தும் சினிமாக்காரங்ககிட்ட இருந்தும் நிறையப் பணம் வருது...கொடுக்கிறேன் கொடுக்கிறேன்னு சொல்லி வாங்கி வாயில போட்டுக்கிறான்’ என்று நாக்கில் நரம்பில்லாமல் சொல்லிவிடுவார்கள். சொல்லிவிட்டார்கள். சுள்ளென்று உரைக்கத்தானே செய்யும்? சிவனே என்று கிடந்தவனை அழைத்து பணத்தைத் தருவதாகச் சொல்லி பிறகு சத்தமேயில்லாமல் நடுச் சாலையில் விட்டுவிட்டால் கேள்வி கேட்கத்தானே தோன்றும்? நீங்கள் நல்லவர் என்று பெயர் வாங்குவதற்காக காசியம்மாயா பேரனின் பெயரைக் கெடுத்தால் கோபம் வரத்தானே செய்யும்? 

நீங்கள் உறுதியளித்த ஒரு கோடி ரூபாயைக் கொடுத்தீர்களா? இல்லையென்றால் ஏன் கொடுக்கவில்லை? ஒருவேளை நீங்கள் கொடுத்திருந்தால் எங்கே போனது அந்தத் தொகை? கடலூர் வெள்ளத்தில் பயன்படுத்தியதாக செவி வழிச் செய்தியும் உண்டு- அப்படியென்றால் அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறீர்களா? - இவ்வளவுதான் கேள்விகள். 

ஒரு கோடி ரூபாய் விளம்பரத்தில் என் பெயரும் படமும் இருந்ததனால் இந்த அடிப்படையான கேள்விகளையாவது கேட்கிற உரிமை எனக்கு இருப்பதாக நம்புகிறேன். இதை அவதூறு என்று நினைத்தால் நீங்கள் புகார் அளித்திருக்கும் அதே காவல்துறை ஆணையரிடமே நானும் முறையிடுகிறேன். பணம் தருவதாகச் சொல்லி விளம்பரம் செய்து பிறகு ஏமாற்றப்பட்டதால் எனக்கு உண்டான மன உளைச்சலுக்கு மரியாதைக்குரிய காவல்துறை ஆணையரே பதில் சொல்லட்டும். ஒருவேளை சரியான பதில் உங்களிடம் இருக்குமேயேனால் வெளிப்படையாகச் சொல்லிவிடுங்கள். வாலைச் சுருட்டிக் கொண்டு லாரன்ஸ் வாழ்க என்று கூட்டத்தில் நின்று கூப்பாடு போகிறேன்.

உங்களை அவதூறு செய்து எனக்கு என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது? உங்கள் மீது எனக்குத் தனிப்பட்ட வன்மம் எதுவுமில்லை. வாய்க்கால் தகராறுமில்லை; வரப்புத் தகராறுமில்லைதான். இன்றைய தினத்தில் நல்லது செய்வதற்கு ஆட்களே இல்லை. நீங்கள் நல்லது செய்தால் எல்லாவிதத்திலும் உறுதுணையாக நிற்கவே விரும்புகிறேன். ஆனால் நீங்கள் புகழின் வெளிச்சத்தை அடைய என்னைப் போன்ற சாமானியனின் மீது கறையை விழச் செய்தால் அதை எப்படி ஏற்றுக் கொள்வது? 

தனிப்பட்ட முறையில் இந்தக் கேள்விகளை தங்களுக்கு பலவிதத்திலும் கொண்டு வந்து சேர்க்கவே முயற்சித்தேன். தங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறவர் கூட தங்களிடமிருந்து பதில் பெற்றுத் தருவதாகச் சொன்னார். ம்ஹூம். நல்லது செய்வது இரண்டாம்பட்சம். தெளிவான விளக்கங்களைக் கொடுத்துவிட்டாலே பாதிக் குழப்பங்கள் தீர்ந்துவிடும்.

இதோடு சரி. இனி இதைப் பிடித்துத் தொங்கப் போவதில்லை.

இப்பொழுதும் கூட இதை எழுதியிருக்க வேண்டியதில்லைதான். உங்களை யாரோ அவதூறு செய்கிறார்கள் என்னும் போது தங்களுக்கு இருக்கிற அதே சுரணைதான் அடுத்தவர்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை நட்டாற்றில் விடும் போது அவர்களுக்கும் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். டொமாட்டோ சட்னி Vs ரத்தம் கதையாகிவிடக் கூடாதல்லவா? சினிமாக்காரர்கள் நல்லவர்கள் என்று பெயர் எடுக்க ஊடகங்கள் இடம் கொடுக்கும். எவ்வளவு பக்கங்களை வேண்டுமானாலும் ஒதுக்கித் தருவார்கள். நம் மக்களும் நம்பத் தயாராக இருப்பார்கள். ஆனால் எங்களைப் போன்ற சாமானியர்கள் நல்ல பெயர் எடுக்க வாழ்க்கை முழுவதும் பாடு பட வேண்டும். நான்கு வரிச் செய்தி கூட ஊடகத்தில் வராது. ஆனால் கெட்ட பெயரைச் சம்பாதிக்க அரை நாள் போதும். 

உங்களின் எதிர்கால கனவுகள், லட்சியம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. தெரிந்து கொள்கிற அவசியமும் இல்லை. 

ஒன்றேயொன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - நல்ல காரியங்களைச் செய்யும் போது அதன் மீது வெளிச்சம் விழச் செய்ய வைக்க வேண்டியதில்லை. வெளிச்சம் தானாகவே விழும். இந்த மக்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகள் எல்லாம் இல்லை. மிக எளிதாக நம்பிவிடுவார்கள். மாற்றுத் திறனாளிகள், ஏழைகள், குழந்தைகள் என்றெல்லாம் காட்டிக் காட்டி மக்களின் மனதில் தமக்கான சிம்மாசனத்தைப் போடுகிற பழைய காலத்து டெக்னிக் எதுவும் அவசியமில்லை. திட்டமிடல் எதுவுமில்லாமல் போகிற போக்கில் நல்ல காரியங்களைச் செய்து கொண்டேயிருங்கள். உங்களுக்குரிய இடத்தை அவர்கள் தந்துவிடுவார்கள்.

உங்களின் நோக்கங்கள் யாவும் வெற்றி பெறட்டும்.

வாழ்க! வளமுடனும், நீங்கள் விரும்பும் புகழுடனும்!

தங்கள் சகோதரன்,
மணிகண்டன்.

(சேர்க்கை: 21.03.2017 அன்று காலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அழைத்துப் பேசினார். நேரில் ஒரு முறை சந்தித்துப் பேச விரும்புவதாகவும் எதிர்காலத்தில் இத்தகையை குழப்பம் வராமல் பார்த்துக் கொள்ள விரும்புவதாகவும் சொன்னார். ‘ஏதாவதொரு வகையில் அடுத்தவர்களுக்கு நல்லது நடந்தால் சரி; உங்களைச் சுற்றி குழப்பமில்லாமல் இருந்தால் போதும்’ என்றேன். ஒருவேளை அவரை நேரில் சந்தித்துப் பேசினால் சந்திப்பு குறித்து விரிவாக எழுதுகிறேன்)

9 எதிர் சப்தங்கள்:

Thirumalai Kandasami said...

ஜெயிலுக்கு போனா சொல்லிட்டு போங்க :)

Indy said...

இது என்னவோ எஸ் பி பி வகையறா மாதிரி தெரியுது.

விடுங்க மணி! சினிமாக்காரன் சொன்னதை கேட்டு இப்போ பொலம்பினா? அடுத்து மனோ பாலா பத்தி இன்னும் சில நாள் / வருஷம்?
நாலு புத்தகம் போடுங்க. வாங்க நாங்க இருக்கோம்.அத வச்சு நல்லது பண்ணுங்க சார்.

Unknown said...

Good one.Hope,he will reply to your mail.

Saravanan Sekar said...


/நீங்கள் நல்லவர் என்று பெயர் வாங்குவதற்காக காசியம்மாயா பேரனின் பெயரைக் கெடுத்தால் கோபம் வரத்தானே செய்யும்?/

சிரிக்க வைத்துக்கொண்டே சுருக்கு -னு கேட்ருக்கீங்க .. வேண்டியவங்க காதில் விழுந்தால் நலம்..

அன்பே சிவம் said...

என்னடா இன்னைக்கு பெருசா ஒன்னும் நடக்கலையே.!,
புதுசா breakig news ஏதும் காணலையேன்னு பாத்தேன்.
த்தோ, நடந்துடிச்சி.
நடக்கட்டும்,, நடக்கட்டும்,.
நடத்துங்க! நடத்துங்க!.

RAJ said...

Dear Mani I am sharing your pains

Jegadeesh said...

உங்கள் கேள்விகளில் நியாயம் உள்ளது. கண்டிப்பக பயப்பட மாட்டீர்கள், ஆனால் கவலை வேண்டாம்..

அன்பே சிவம் said...

மன்னிக்கனும் ., மணி மன்னிக்க தெரிஞ்சவன் மணுசன். மன்னிப்பு கேக்க தெரிஞ்சவன் பெரிய மணுசன் னு படிச்சிருக்கேன்.இப்ப தான் பாக்குறேன்.

🦇Arun🦇 said...

Edhavudu jaameen keemeen vangi vachutu vandhu pesuraro ;-)
paapom epo Lawrance reply panrarunu...RK Nagar la nikaama irundha seri