Mar 19, 2017

சுகுமாரன் 60

கவிஞர் சுகுமாரனுக்கு அறுபது வயது நிறைவடைவதை மிகச் சிறப்பாகக் கொண்டாடியிருக்கிறார்கள். சென்னையில் ஒரு நாள் கருத்தரங்கத்தை நடத்தி பெருசுகள் முதல் இளசுகள் வரைக்கும் விதவிதமான தலைப்புகளில் பேச வைத்திருக்கிறார்கள். நிச்சயமாகக் கலந்து கொள்ள வேண்டும் என நினைத்திருந்த நிகழ்வு அது. கடந்த வாரத்தில் காய்ச்சல் வராமல் இருந்திருந்தால் சென்னைக்கு மூட்டை கட்டியிருக்கலாம். மனம் சென்னையில்தான் கிடந்தது.

ஜெயமோகன் நடத்திய நித்யா கவிதை அரங்கில்தான் சுகுமாரனுடன் நெருங்கிப் பழகுகிற வாய்ப்புக் கிடைத்தது. ஜெமோவுக்கு என்னுடைய கவிதைகளைப் பரிந்துரை செய்ததே சுகுமாரன்தான். ஊட்டியில் இரண்டு நாட்கள் அவருடனேயே சுற்றிக் கொண்டிருந்தேன். நிறையப் பேச மாட்டார். கவிதைகள் எழுதிய காலத்தில் மின்னஞ்சலில் அனுப்பி வைத்துவிட்டு என்ன சொல்கிறார் என்று காத்திருப்பதுண்டு. ‘ம்ம்’ என்பதோ ‘நல்லாருக்கு’ என்பதோதான் அதிகபட்ச விமர்சனமாக இருக்கும். அதற்கு மேல் அவர் சொன்னதாக ஞாபகமில்லை. அவரது கவிதைகளைத் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருந்தேன். கடந்த நாற்பதாண்டு காலமாக தமது கவிதைகளை உயிர்ப்புடனேயே வைத்திருக்கிற மாபெரும் கவி அவர்.


சில ஆண்டுகளுக்கு முன்பாக எனது அறுபது கவிதைகளைத் திரட்டி இரண்டாவது தொகுப்புக்காக அனுப்பி வைத்திருந்தேன். காலச்சுவடில் அவர்தான் கவிதைகளுக்கு பொறுப்பாக இருந்தார். தொகுப்பு காலச்சுவடிலிருந்து வெளிவரப் போகிறது என்று தெரிந்தவுடன் சுகுமாரனிடம் ‘சார்..கவிதைகள் நல்லாருந்துச்சா?’ என்றேன்.

‘நல்லா இல்லைன்னா குப்பைத் தொட்டிக்குள்ளல போயிருக்கும்? எப்படி தொகுப்பா வரும்?’ என்றார்- இதைப் பாராட்டு என்று எடுத்துக் கொள்வதா? திட்டுகிறார் என்று புரிந்து கொள்வதா என்று தெரியாமல் பேச்சை மாற்றிவிட்டேன். சுகுமாரன் எப்பொழுதுமே அப்படித்தான். கறாரான மீசைக்கார வாத்தியார் மாதிரிதான் பேசுவார். அவருடன் எனக்கான உறவு என்பது மரியாதை கலந்த உறவு. அதிகமான சொற்கள் இல்லாத உரையாடல்.

யுவன் சந்திரசேகர் மாதிரியான சிலருடன் வெகுவாக சிரித்துப் பேசுவதைப் பார்த்திருக்கிறேன். சிகரெட் புகைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருப்பார். நான் எப்பொழுதாவது ‘சார் எப்படி இருக்கீங்க?’ என்றால் ‘நல்லாருக்கண்ணா’ என்பார். நக்கல் அடிக்கிறாரா என்று தெரியாது. ஆனால் எப்பொழுது பேசினாலும் அண்ணா என்றுதான் முடிப்பார். என்னைப் பார்த்தால் அறுபது+ மாதிரி தெரிகிறதோ என எதுவுமே சொல்லாமல் பேச்சை முடித்துக் கொள்வதுண்டு. ‘பப்ளிக் ப்ளேஸ்ல நம்மைக் கிழவனாக்கிடுவார் போலிருக்கிறது’ என்றும் கூடத் தோன்றும். 

‘நிறைய இலக்கியம் எழுது’ என்று சொல்லியிருக்கிறார். அவருக்கு நான் கவிதைகள் எழுத வேண்டும், கவிதைகள் பற்றியெல்லாம் எழுத வேண்டும் என்று ஆசை. 

‘சார் அதையெல்லாம் விட இப்ப எழுதறதுதான் சந்தோஷமா இருக்கு’ என்று மதுரையில் ஒரு நிகழ்வில் அவரிடம் சொன்னேன். 

‘உன் இஷ்டம்’ என்றார். ‘உன் இஷ்டம்’ என்பதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. உண்மையிலேயே, கவிதை இலக்கியம் என்றிருப்பதைவிடவும் எழுத்து வழியாக வேறு சில நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்பதைப் புரிந்து கொண்ட பிறகு இனி கவிதை எழுத வேண்டிய அவசியமில்லை என்று உணர்ந்து கொண்டேன். கவிதை எழுதி சில வருடங்கள் ஆகிவிட்டன. முதல் தொகுப்பு வெளியான போது எனது கவிதைகளுக்கான முன்னோடிகள் என்று ஆத்மாநாம், சுகுமாரன் மற்றும் மனுஷ்ய புத்திரனைக் குறிப்பிட்டிருந்தேன். அதுவரைக்கும் சுகுமாரனுடன் பேசியது கூட இல்லை. ஆனால் அதன் பிறகு ஒவ்வொரு முறையும் கவிதைகளை எழுதச் சொல்லி ஏதாவதொருவிதத்தில் உற்சாகமூட்டிக் கொண்டேயிருந்தார்.

சுகுமாரன் மாதிரியான முன்னோடிகள் மிகத் தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பது அடுத்த தலைமுறைக்கு மிகப் பெரிய உத்வேகம். கவிதைகள், கட்டுரைகள், நாவல், மொழிபெயர்ப்பு, இதழாசிரியர் என்று கலந்து கட்டி விளையாடிக் கொண்டேயிருக்கிறார். அறுபது என்பது ஒரு மைல்கல். அதுவொன்றும் வயதைச் சுட்டிக்காட்டுகிற நிகழ்வில்லை. இனி முன்பைவிடவும் உற்சாகமாக இயங்குவதற்கான உடல்நிலையையும் மனநிலையையும் இயற்கை அவருக்கு வழங்கட்டும். இன்னும் பல நூறு இளைஞர்களைக் கொட்டியும் மிரட்டியும் உருட்டியும் அவர் உருவாக்கிக் கொண்டேயிருக்கட்டும்.

ஜூன் 11தான் சுகுமாரனின் பிறந்தநாள். ஆத்மாநாம் அறக்கட்டளையினர் மார்ச் மாதமே கொண்டாடிவிட்டார்கள். சென்னையில் நடைபெற்ற சுகுமாரன்- 60 நிகழ்வின் நிழற்படங்களை ஃபேஸ்புக் வழியாக பார்த்துக் கொண்டிருந்த போது இதை எழுத வேண்டும் எனத் தோன்றியது. ஜூன் மாதத்தில் அவரது கவிதைகளைப் பற்றி மட்டும் விரிவாக எழுத வேண்டும் என எண்ணமிருக்கிறது. 

சமீபத்தில் ஒரு கல்லூரியில் அழைத்து தொகுப்பு ஒன்றைத் தயார் செய்து தரச் சொன்னார்கள். ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதிக்குள் இருபது கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்துத் தந்தால் அதை பாடப் புத்தகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்களாம். மாணவர்களுக்கு கவிதைகளைப் பற்றிய அறிமுகம் தரக் கூடிய தொகுப்பு அது. தற்பொழுது ஒரு தொகுப்பை வைத்திருக்கிறார்கள். சவசவ என்றிருக்கிறது. தமிழ்த்துறைத் தலைவர் சொன்னவுடன் பெரிதாகவெல்லாம் யோசிக்கவில்லை. ‘சுகுமாரனில் ஆரம்பித்து 2000க்குப் பிறகு வெளிவந்த இருபது கவிதைகளை தேர்ந்தெடுத்துத் தர்றேன்’ என்று சொன்னேன். சுகுமாரன் என்ற பெயரை வேண்டுமென்றெல்லாம் சொல்லவில்லை. இயல்பாகவே அப்படித்தான் வந்து விழுந்தது. சுகுமாரனிலிருந்துதான் எனக்கு விருப்பமாக கவிதையின் போக்குத் தொடங்குகிறது என்று உறுதியாக நம்புகிறேன். 

‘அங்கே வருகிறேன்’ என்று 
அவர் சொன்ன இடத்தில்
காத்திருந்தார் இவர்

வரவில்லை அவர்

‘இங்கே வருகிறேன்’ என்று 
இவர் சொன்ன இடத்தில்
காத்திருந்தார் அவர்

வரவில்லை இவர்

‘எதிர்பாராமல் சந்திக்கலாம்’ என்று
காத்துக் கொண்டேயிருக்கிறார்கள்
அவரும் இவரும்
அவரவர் இடத்தில்

1 எதிர் சப்தங்கள்:

Paramasivam said...

கவிதையை ரசித்தேன்