Mar 18, 2017

இசுலாமியத் தீவிரம்

அரசியல்வாதிகள், கொள்கை பேசுகிறவர்கள் கொலை செய்யப்படும் போது உடனடியாக உணர்ச்சிவசப்பட்டு கருத்துச் சொல்ல வேண்டியதில்லை. சமீபகாலங்களில் தனிப்பட்ட விரோதங்களுக்காக நடைபெறுகிற கொலைகள்தான் அதிகமாக இருக்கின்றன. இரண்டு நாட்கள் கழித்துப் பார்த்தால் கடனுக்காகவோ அல்லது கள்ளக்காதலுக்காகவோ கொன்று வீசிவிட்டுச் சென்றதாகச் சொல்வதுண்டு. கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த ஃபாரூக் கொலை செய்யப்பட்ட போது ஆரம்பத்தில் அப்படித்தான் தோன்றியது. ஆனால் அப்படியில்லை. ‘தமது மத நம்பிக்கைகளுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்ததால் வெட்டிக் கொன்றதாக’ சரணடைந்தவன் சொல்லியிருக்கிறான். சரண்டைந்தவனும் இசுலாமியன்.

எவ்வளவு குரூரம் இது?

ஃபாரூக் பற்றி கொளத்தூர் மணி அவர்களின் அணியைச் சார்ந்தவர்களிடம் பேசினால் ‘வம்பு தும்புக்கு போகாத மனிதர்’ என்கிறார்கள். தனிப்பட்ட விரோதங்கள் ஏதுமில்லையெனிலும் வெறுமனே மதத்துக்கு எதிரான கருத்துக்களை முன் வைப்பதால் மட்டுமே ஒருவன் வெட்டிக் கொல்லப்படுவான், அவனது இரு குழந்தைகள் நிராதரவாக்கப்படுவார்கள் என்பதெல்லாம் மதத்தின் பெயரால் நடைபெறுகிற அயோக்கியத்தனமில்லையா? சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட நம் காலத்தில் இத்தகைய வன்முறைகள் யார் மீது வேண்டுமானாலும் நிகழ்த்தப்படலாம் என்பதை நினைத்தாலே கைகள் சில்லிட்டுப் போகின்றன. விவாதிப்பதற்கான மனநிலை, சூழல் என எல்லாவற்றையும் ஒழித்துக் கட்டிவிட்டு எல்லாவற்றுக்கும் கத்திகளும் அரிவாள்களும்தான் பதில் சொல்லுமா என்ன? 

ஐஎஸ் தீவிரவாதிகளிடம் ஒரு இசுலாமியனும் மாற்று மதத்தவனும் ஒரே சமயத்தில் சிக்கினால் முதலில் இசுலாமியனைத்தான் கொல்வார்கள் என்று சொல்வார்கள். ‘நீதான் இசுலாமியமனாகப் பிறந்தும் இந்த மதத்தின் கொள்கைகளைப் பின்பற்றவில்லை’ என்று சொல்லி வெட்டுவார்களாம். ஃபாரூக் விவகாரத்திலும் அப்படித்தான் நடந்திருக்கிறது. ஃபாரூக் கொல்லப்பட்ட செய்தி வெளியானவுடன் கருத்துக்களைச் சொல்லிச் சொல்லித் திணறடித்த பெரும்பாலான முற்போக்காளர்கள் கொன்றவர்களும் இசுலாமியர்கள் என்று தெரிந்தவுடன் ‘சைலண்ட் மோட்’டுக்குச் சென்றிருக்கிறார்கள்.

இசுலாமியர்கள் தவறு செய்தால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை என்பதும் கண்டிக்க வேண்டியதில்லை என்பதும் முற்போக்குத்தனமாகாது. காவி பயங்கரவாதம், இந்துத் தீவிரவாதத்துக்கு எதிராக எவ்வளவு வலுவாக குரல்களை எழுப்புகிறோமோ அதே அளவிலான கண்டனத்தை ஃபாரூக்கின் கொலையிலும் எழுப்பப்பட வேண்டும். மிகக் குரூரமாக ‘அல்லாவின் பெயரால் உன்னைக் கொல்லுகிறோம்’ என்று சொல்லியபடியே வெட்டி வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இசுலாம் மதத்தில் நிலவுகிற மூடக்கருத்துக்களுக்குக் எதிராக பேசி வந்த ஃபாரூக்கின் குரல் நசுக்கப்பட்டுவிட்டது. இனியொரு இசுலாமியன் இசுலாம் மார்க்கத்தில் நிலவுகிற மூடநம்பிக்கைகளைப் பற்றி உரக்கக் குரல் எழுப்பக் கூடாது என்று எச்சரிக்கை மணியை அடித்திருக்கிறார்கள். அந்த பயம் இனி வெகு காலத்திற்கு இருக்கத்தான் செய்யும்.

கருத்துக்களைக் கருத்துக்கள் ரீதியாக எதிர்கொள்ள வலுவில்லாமல் கத்தியை எடுப்பதைத்தான் அமைதியின் மார்க்கம் என்று சொல்லப்படுகிற இசுலாம் சொல்லித் தந்திருக்கிறதா? ஒருவனை விமர்சனப்பூர்வமாக எதிர்கொள்ளத் திராணியில்லையென்றால் வெட்டிவிடச் சொல்லியா குரானில் எழுதப்பட்டிருக்கிறது? ஐஎஸ் தீவிரவாதத்தின் அடியொற்றி நடக்கும் அடிப்படைவாதிகள் நம் தேசத்திலும் பெருகிக் கிடக்கிறார்கள். கேரளாவிலிருந்தும் கர்நாடாகவிலிருந்து வெளிநாடுளில் துப்பாக்கி ஏந்துவதற்காக இளைஞர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்றச் செய்தியை வாசிக்கும் போதெல்லாம் பதறுகிற மனம் ஃபாரூக்கின் கொலையைப் பார்த்தும் கிட்டத்தட்ட அதே அளவுக்குத்தான் பதறுகிறது. வெளிநாடுகளில் துப்பாக்கி ஏந்துவதற்கு பதிலாக உள்நாட்டில் கத்தியை ஏந்தியிருக்கிறார்கள். இந்த நாட்டில் மதத்தின் பெயரால் யார் தீவிரவாதத்தைச் செய்தாலும் அது தீவிரவாதம்தான். இசுலாமியர்கள் செய்கிற தீவிரச் செயல்களுக்கு நாம் வருடிக் கொடுக்க வேண்டியதில்லை.

இளைஞர்கள் திரட்டப்பட்டு, மூளைச் சலவை செய்யப்பட்டு, பச்சை வெறி ஏற்றப்பட்டு கைகளில் ஆயுதத்தை எடுத்துக் கொடுக்கும் குழுவை கண்டிப்பது சமூகத்தின் கடமையென்றால் அத்தகைய ஆட்களைப் பிடித்து கூண்டில் ஏற்றி சட்டத்தின் பிடியில் சிக்க வைப்பது காவல்துறையின் கடமை. இருபது வருடங்களுக்கு முன்பாக இருந்த இந்துக்கள் போல இன்றைய இந்துக்கள் இல்லை என்பதைப் போலவேதான் இருபது வருடங்களுக்கு முந்தையை இசுலாமியர்கள் போல இன்றை இசுலாமியர்களும் இல்லை. வன்மம் கொப்புளிக்க, மதவெறியேறிய மனிதர்களாகத்தான் பற்களை வெருவிக் கொண்டு திரிகிறார்கள். 

மதத்தின் மீது விமர்சனங்கள் செய்யக் கூடாது என்பதும் அதைச் செய்கிற ஒருவனை ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொல்லலாம் என்றும் சூழல் நிலவினால் பிறகு என்ன ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் இன்னபிற வெங்காயமும்? 

இசுலாம் மதத்தில் நிரம்பிக் கிடக்கிற மூடநம்பிக்கைகளையும் கழிசடைத்தனங்களையும் அந்த மதத்திலிருந்தே ஒருவன் பேசுவதுதான் ஆரோக்கியமான போக்கு. அப்படியொருவனை அனுமதிக்காத சூழலை ஏதேனும் மத நம்பிக்கைவாதிகளும் அடிப்படைவாதிகளும் உருவாக்குவார்களேயெனில் அவர்களைப் பிடித்து சுளுக்கெடுத்துவிட வேண்டிய பொறுப்பை சட்டம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஃபாரூக் கொலையை மற்றுமொரு கொலையாக விட்டுவிடக் கூடாது என்று காவல்துறையினரை வேண்டிக் கொள்ளலாம்.

கருணையற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கும் ஃபாரூக்கின் மரணத்தை கருத்துரிமைகளுக்கு எதிராக விடப்பட்டிருக்கும் சவாலாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். யாரோ ஓரிருவர் மீது வழக்கைப் பதிவு செய்து ஒப்பேற்றாமல் அதன் பின்னால் இருக்கும் வலையமைவை, கொலைச் சதியை நிறைவேற்றுவதற்கு செய்யப்பட்ட விரிவான ஆலோசனைகளை, பினால் இருந்தவர்களை என தீர விசாரித்து சரியான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும். சமூக முற்போக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள்- இசுலாமியர்கள் செய்தாலும் கொலை கொலைதான். அதைக் கண்டித்து நம் கருத்துக்களை முன்வைப்பதால் மட்டுமே நம் மதச் சார்பின்மை எந்த பாதிப்பும் அடைந்துவிடாது.

வன்முறை எந்த மதத்திலும் இருப்பினும் அதை வன்மையாகக் கண்டிப்போம். யார் ஆயுதங்களை எடுத்தாலும் அதற்கு எதிராகக் குரல் எழுப்புவோம். மனிதத்துக்குச் சவாலாக எந்தச் சித்தாந்தம் பேசப்பட்டாலும் தயக்கமேயில்லாமல் முகத்தைச் சுளிக்கலாம். மனிதத்தைக் கொன்று, குடும்பங்களை நிர்கதியாக்கித்தான் ஒரு சித்தாந்தமும் கொள்கையும் மதமும் தமது வெற்றிக் கொடியைப் பறக்க விட வேண்டுமென்றால் அப்படியொரு வெற்றிக் கொடி அவசியமேயில்லை என்பதில் மட்டும் உறுதியாக நிற்கலாம்.

1 எதிர் சப்தங்கள்:

அன்பே சிவம் said...

நம்மை கருத்தாலும் கரத்தாலும் எதிர்ப்பவரையும் அரவணைத்து செல்வதே அண்ணலின் 'ம(ணிதம்' அறியாதோர் குறித்து ஆராய்ந் தென்ன பயன்.