அவ்வப்போது கண்களில் உறுத்தல் வரும். கிட்டத்தட்ட பதினான்கு வயதிலிருந்தே அப்படித்தான். அந்தி சாய்கிற நேரங்களில் உறுத்தும். கண்களைக் கழுவிவிட்டு படுத்தால் சரியாகிவிடும். ஏன் எதற்கு என்றே தெரியாது. சமீபத்தில் கண்ணாடி மாற்றுவதற்காக ஒரு மருத்துவரைச் சந்தித்த போது பரிசோதித்துவிட்டு ‘பாதி அலர்ஜி; பாதி வைரஸ் மாதிரி தெரியுது’ என்றார். உடலைப் பொறுத்தவரையிலும் விளைவுகளைச் சமாளித்துவிடலாம். ஆனால் எதனால் பிரச்சினை வருகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். பெங்களூர்தான் அல்ட்ரா மாடர்ன் நகரமல்லவா? வேறொரு கண் மருத்துவரிடம் சென்ற போது ‘இது ஹெர்ப்பிஸ்’ என்றார். தூக்கிவாரிப் போட்டது. இப்படித்தான் நான்கைந்து வருடங்களுக்கு முன்பாக ஒரு தோல் மருத்துவர் ஹெர்ப்பிஸ் என்றார். கண்ட கண்ட பரிசோதனையெல்லாம் செய்துவிட்டு ‘சும்மா அலர்ஜிங்க’ என்றார்கள்.
பற்ற வைத்துவிட்டால் போதுமல்லவா? என்னவோ ஏதோ என்று மனம் ஆறவே ஆறாது. அதையே போட்டுக் குழப்பிக் கொள்ளும்.
தோல் மருத்துவரைச் சந்தித்துப் பேசச் சொன்னார். கோரமங்களாவில் ஒரு தோல் நோய் சிறப்பு மருத்துவமனை இருக்கிறது. உள்ளே சென்றாலே ஐநூறு ரூபாயைக் கப்பம் கட்ட வேண்டும். இந்த ஊரில் அப்படித்தான். எம்.பி.பி.எஸ் மருத்துவருக்கு முந்நூறு ரூபாய். எம்.டி அல்லது எம்.எஸ் என்றால் நானூறு. சிறப்பு மருத்துவர்கள் என்றால் படிப்படியாக உயரும். தமிழ் மருத்துவர் ஒருவர் இருக்கிறார். சிறுநீரக சிறப்பு மருத்துவர். அவரை நட்பு ரீதியாகச் சந்திக்கச் சென்றிருந்த போது எழுநூறு ரூபாய் என்று எழுதி வைத்திருந்தார்கள். அவருடன் அதே மருத்துவமனையில் ஆண்மை சிறப்பு மருத்துவர் இருக்கிறார். அவரிடம் ஆலோசனை பெற ஆயிரம் ரூபாயாம். தலை சுற்றிக் கிறுகிறுத்துப் போய்விடும். ‘அது ரொம்ப முக்கியமான ஏரியால்ல...அதனால ரேட் அதிகம்’ என்று சிரித்தார். அதுசரி.
தோலுக்கு வருகிறேன்.
உள்ளே நுழையும் போதே பணத்தை வாங்கிக் கொண்டார்கள். கண் மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மருத்துவச் சீட்டை வைத்திருந்தேன். முதலில் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மருத்துவர்தான் பார்த்தார். விசாரித்துவிட்டு ‘உடம்புல வேற எங்கயாச்சும் பிரச்சினை இருக்கா?’ என்றார். முகப்பரு மாதிரி முதுகில் ஒன்றிரண்டு இருக்கும். சொன்னேன். ‘சரி முழுமையா செக் செஞ்சுடலாம்...ரூமுக்குள்ள படுங்க’ என்றார். ஆண் மருத்துவர்தானே? வெட்கம் எதுவுமில்லை. அவர் சொன்ன அறைக்குள் சென்றேன். ஒரு செவிலியர் இருந்தார். பெண்.
‘ட்ரெஸ்ஸை கழட்டிட்டு படுத்துக்குங்க டாக்டர் வருவார்’ என்றார்.
‘சரி நீங்க வெளிய இருங்க’ என்றேன். அதைச் சொல்லி வாயை மூடுவதற்குள் அவள் ஒரு முறை முறைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாள்.
சட்டையையும், பனியனையும் கழற்றிவிட்டு சற்றே பெரிய சாய்வு நாற்காலி போலிருந்த படுக்கையில் படுத்திருந்தேன். அறை அமைதியாக இருந்தது. சில நிமிடங்களில் செவிலியப் பெண் கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே வந்தாள். யோசனையே இல்லாமல் ‘பேண்ட்டையும் கழட்டுங்க சார்’ என்றாள். கூச்சமேயில்லாமல் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். மருத்துவமனையில் அவர்கள் வைத்ததுதானே சட்டம்? அதையும் செய்தேன். ஆனால் ஒருவேளை இவளே திரும்ப வந்துவிடுவாளோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒருவன் வந்தான். அப்பாடா என்றிருந்தது. அவன் மருத்துவமனையின் ஆண் உதவியாளர்.
‘டாக்டர் வருவாங்க’ என்று சொல்லிவிட்டு அவன் ஏதோ வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அறையைச் சுற்றும்முற்றும் நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த சில நிமிடங்களில் ஒரு பெண்ணும் அதே செவிலிப் பெண்ணும் வந்தார்கள். அந்தப் பெண்தான் மருத்துவர். இருபத்தைந்து வயது இருக்கும். படுக்கைக்கு மேலிருந்த விளக்கை எரியவிட்டு முதுகை மூன்று பேரும் பார்த்தார்கள். பிறகு ‘இதையும் கழட்டுங்க’ என்றார்கள். அய்யோ என்று கத்தத் தோன்றியது. ‘டாக்டர்தாங்க...ஒண்ணும் பிரச்சினையில்லை’ என்றான் ஆண் உதவியாளன்.
‘உனக்கு பிரச்சினையில்லை..எனக்கு இருக்குதுல்லடா’ என்று நினைத்துக் கொண்டேன்.
‘அந்த டாக்டர் வர மாட்டாரா?’என்றதற்கு ‘இல்லை..நான் ஜூனியர் டாக்டர்...பிரிலிமினரி டெஸ்ட் எல்லாம் செஞ்சு ரிப்போர்ட் கொடுக்கணும்’ என்றார் அந்த பெண் டாக்டர்.
இவர்கள் என்னவோ ஐ.ஏ.எஸ் தேர்வு நடத்துவது போலவும் அதில் பிரிலிமினரி, மெயின் என்றெல்லாம் நடத்துகிறார்களாம். தாளிக்கிறார்கள். பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு அவர்கள் சொன்ன படியே செய்தேன். எதையெல்லாம் மூட வேண்டுமோ அதையெல்லாம் மூடாமல் கண்களை மூடிக் கொண்டு என்ன பிரயோஜனம்? கடவுளே கடவுளே! இந்த ரஸாபாஸத்தில் அந்த இளைஞன் கையிலிருந்து கேமிராவை அந்த மருத்துவர் வாங்கியதை கவனிக்கவில்லை. படம் எடுத்து யூடியூப்பில் போட்டால் நம்மவர்கள் அனிரூத் வீடியோ மாதிரி கண்டமேனிக்கு பகிர்ந்து பழியெடுப்பார்களே என்று பயமாக இருந்தது.
‘இது எதுக்குங்க டாக்டர்?’ என்று கேட்டால் ‘ரெபரன்ஸுக்கு’ என்றார். நோய் வரலாற்றை தொகுக்கும் போது இந்தப் படங்களையும் வைத்துக் கொள்வார்களாம்.
‘வாட்ஸப்புல போட்டுட மாட்டீங்களே?’ என்றேன்.
சிரித்துக் கொண்டே வளைத்து வளைத்து எடுத்தார்கள். வளைத்து வளைத்து என்றால் கண்ட கண்ட பொருள் கொள்ளக் கூடாது. சத்திய சோதனை.
ஐந்து நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. படமெடுத்துவிட்டார்கள். ஆடைகளை அணிந்து கொள்ள அனுமதித்தார்கள். ஆசுவாசமாக இருந்தது.
அந்த அறையிலேயே நிழற்படக்கருவியை கணினியில் இணைத்து படங்களை இடம் மாற்றினார்கள். ஐந்து நிமிடங்கள் காத்திருக்கச் சொன்னார்கள். காத்திருந்த பிறகு புண்ணியவான் அறைக்குள் அழைக்கப்பட்டேன். உள்ளே செல்வதற்கு முன்பாகவே அவரது கணினியில் என்னை அக்குவேறு ஆணிவேறாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘இதை நீ கம்யூட்டர்ல பார்க்கிறதுக்கு பதிலா நேர்லையே பார்த்திருக்கலாம்லய்யா’ என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கும் எனக்கும் நடுவில் மூன்று மீடியேட்டர்களை வைத்து அவர்களுக்கு என்னைக் கண்காட்சியாக்கி, அதை படமெடுத்து பந்தாவாக பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிகமாகக் காசு கொடுக்கிற மருத்துவமனைகளுக்குச் செல்லவே கூடாது. ‘ப்ரொபஷனலிஸம்’ என்ற பெயரில் படுத்தியெடுத்துவிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படமும் எடுத்துவிடுவார்கள் என்று இப்பொழுதுதான் தெரியும்,
தனது சீட்டை எடுத்து ‘இது ஹெர்ப்பிஸ் மாதிரி தெரியல்ல..ஆனா சந்தேகத்தை க்ளியர் செஞ்சுக்கலாம்...ரத்தப் பரிசோதனை செஞ்சுடுறீங்களா?’என்றார்.
‘சரிங்க டாக்டர்’ என்றேன்.
‘ஹெச்.ஐ.வி, விடிஆர்எல், ஹெச்எஸ்வி1, ஹெச்எஸ்வி 2 என்று நான்கு பரிசோதனைகளை எழுதினார்.
‘சார் இதெல்லாம் செக்ஸூவலி ட்ரான்ஸ்மிட்டட்தானே?’ என்றேன்.
‘ஆமாம்’.
என்னைப் பார்த்தால் அப்படியா தெரிகிறது? பிஞ்சுக் குழந்தை.
‘சத்தியமா நம்புங்க சார்..நான் ஒரு சேட்டையும் செஞ்சதில்ல’ என்றேன். அவர் சிரித்தார்.
‘அப்படியில்லை..எதுக்கும் பார்த்துடலாம்’ என்றார். இப்படிச் சொன்ன பிறகுதான் ரத்த அழுத்தமே எகிறியது.
அதிகபட்ச சேட்டையென்றால் பிரான்ஸில் நிர்வாணக் கடற்கரையில் சுற்றியதுதான். ‘நிர்வாணமாகச் சுற்றினால் எய்ட்ஸ் வருமா சார்?’ என்றேன்.
‘அதெல்லாம் வராது’ என்றார்.
‘அப்புறம் எதுக்குய்யா?’ என்றால் பதில் சொல்லவா போகிறார். கையில் குத்தி ரத்தத்தை உறிஞ்சினார்கள். நான்காயிரத்து நானூறு ரூபாய் பரிசோதனைக்கு மட்டும். என்ன முடிவுகள் வருமென தெளிவாகத்தான் இருந்தேன். ஆனாலும் உள்ளுக்குள் பயமில்லாமல் இல்லை.
இரண்டு நாட்கள் கழித்து முடிவுகள் வந்தன. எல்லாமே நெகடிவ்தான். மருத்துவ நண்பர் சிவசங்கரை அழைத்துப் புலம்பினேன். ‘உங்களை யார் தேவையில்லாம டெஸ்ட் செய்யச் சொன்னது’ என்றார்.
மறுபடியும் அந்த மருத்துவர்களைச் சந்தித்து ‘எல்லாமே நெகடிவ்தான்....அப்புறம் ஏன் பிரச்சினைன்னு கேளுங்க’ என்றார். அவர்களிடம் செல்வது பிரச்சினையில்லை. ஆனால் மறுபடியும் ஐநூறு ரூபாய் கப்பம் கட்ட வேண்டும். புதிதாக வேறு குண்டு எதையாவது போடுவார்கள்.
‘வேண்டாம் விடுங்க. கண்களைக் கழுவிக் கொண்டு படுத்துத் தூங்கிக்கிறேன்’ என்றேன். சிரித்தார். இதை முன்பே செய்திருக்கலாம்.
ஒருவேளை வாட்ஸப்பிலோயோ, ஃபேஸ்புக்கிலோ படம் வந்தால் ‘உண்மைத் தமிழனா இருந்தால் ஷேர் செய்யவும்’ என்று இருக்கிற காலை வணக்கக் குழுமங்களில் எல்லாம் பகிர்ந்து பழிவாங்காமல் படங்களை அழித்துக் மானத்தைக் காப்பாற்றவும் நல்லவர்களே!
11 எதிர் சப்தங்கள்:
செம கட்டுரை.. 100% சிரிப்புக்கும், சிந்தனைக்கும் உத்திரவாதம்
ஹா..ஹா... ஒரே சிரிப்புதான் போங்க.. பிறந்தமேனிக்கு படம் எடுத்து டெஸ்ட் பண்ணினதையெல்லாம் இப்படி ப்பளிக்கா எழுதியிருக்கீங்களே.. உங்களோட வெள்ளந்திதனத்துக்கு அளவே இல்லாம போச்சு...! அட.. தேவுடா...!
உண்மைத் தமிழனாக இருந்தால்...The cow is tied in the coconut...But...perfect title message for the perfect situation.
Last line is awesome waiting to share as Tamilian.
ha ha ha..
Mani, Some Arab and European countries - work visa involves "rigorous" medical check up for fitness.
One of the test involves "more" than this.. only solace is that they do not take photos.
Appo athu Anirudh illiyaa ??? ha...ha
சார் அந்த தோல் மருத்தவ மனையின் பெயர் தெரிவிக்க வில்லையே! அது தெரியும் வரை கோரமங்களா பக்கம் உள்ள எந்த மருத்தவ மனை பக்கமும் செல்லப்ப போவதில்லை. நாரயண ஹிருதாலயா உத்தம்ம்.
நானாக இருந்திருந்தால் கழட்ட சொன்னதும் மருத்துவமனையை விட்டு ஓடி இருப்பேன். ஆனால் தனியாகவா என்பதை அந்த 25 வயது பெண் மருத்துவரும் செவிலியருந்தான் முடிவு செய்திருக்கவேண்டும்.
Funny to the core and thought provoking
ha ha haa
நாங்க ஒண்ணும் அதிமுக தொண்டரும் இல்லை, நீங்க அந்த தலைவரும் இல்லை... சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ள?
தென்னமரத்துல தேள் கொட்டுச்சாம், பனைமரத்துல நெறி கட்டுச்சாம் என ஒரு சொல்வழக்கு உண்டு.. இன்னும் அடிச்சானாம் ....பல்லு போச்சாம் என்ற சொல் வழக்கும் எங்க ஊர்பக்கம் உண்டு.. உங்களமாதிரி அதையெல்லாம் ஓப்பனா எழுத முடியாது. கண்ணு அரிச்சுது, ஆஸ்பத்ரிக்கு போனேன், அவுத்துபோட்டு போட்டோ எடுத்தாங்க என்கிற கதையெல்லாம் வேண்டாம்.. எதுக்காக அவுத்துபோட்டு படம் எடுத்தாங்க , அல்லது அது உங்களுக்கு தெரியாமலேயே ரகசிய காமராவால் எடுக்கப்பட்டதா என்பதை இனி ஒரு பதிவில் விபரமாக எழுதவும். :)
Post a Comment