பெரிய வசதி என்று சொல்ல முடியாது. கஷ்டப்பட்டுத்தான் படித்து முடித்தார். பட்டப்படிப்பில் ஆங்கிலம் படித்துக் கொண்டிருந்த போது கல்லூரி வேலைக்குச் செல்வதாகத்தான் உத்தேசம். ஆனால் படிப்பை முடித்தவுடன் வங்கித் தேர்வுகளை முயற்சி செய்யத் தொடங்கினார். முதல் ஒன்றிரண்டு வருடங்கள் தொடர்ச்சியான தோல்வி. அவ்வப்பொழுது பேசிக் கொள்வோம். பல சமயங்களில் அவர் சோர்வாக பேசுவதை உணர்ந்திருக்கிறேன். ஆனால் முயற்சியைக் கைவிடவில்லை. கடந்த முறை வங்கித் தேர்வில் வெற்றி பெற்று வேலைக்குச் சேர்ந்துவிட்டார்.
திருப்பதி மகேஷைச் சொல்கிறேன். அவருக்கு பிறவியிலேயே பார்வை இல்லை. ஆனால் அதைப் பற்றி எந்தக் கவலையையும் காட்டிக் கொள்ளாதவர். ‘அதனால என்ன சார்?’என்பார்.
ஜனவரி மாதத்திலிருந்து இந்தியன் வங்கிக்கு வேலைக்குச் செல்கிறார். முதல் மாதச் சம்பளம் வந்துவிட்டது. இருபதாயிரம் ரூபாய் வந்ததாம். பதின்மூன்றாயிரத்து பதின்மூன்று ரூபாயை அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துவிட்டு அழைத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது. நேர்மையாகச் சம்பாதிக்கிற தொகையில் ஐந்து அல்லது பத்து சதவீதத்தைக் கொடுத்தாலே பெரிய விஷயம். இனிமேல் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டாம் என்று சொன்னேன். சிரித்தார்.
நிசப்தம் வலைப்பதிவு தொடங்கப்பட்டு இன்றுடன் பனிரெண்டு வருடங்கள் முடிந்து பதின்மூன்றாவது வருடம் தொடங்குகிறது. தொகுப்பு என்ற பகுதியில் சென்று முதல் பதிவைப் பார்த்தால் தெரியும். 2005 பிப்ரவரி 7 ஆம் தேதியன்று முதன் முதலில் இணையத்தில் எழுதினேன். ‘நீங்க எனக்கு இன்ஸ்பிரேஷன் சார்....அம்மா அப்பாகிட்ட சொல்லிட்டுத்தான் ட்ரஸ்ட்டுக்கு அனுப்புறேன்...நீங்க இன்னும் நிறையப் பேருக்கு செய்யுங்க சார்’ என்றார். வண்டியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டேன்.
அலுவலகத்தில் நேற்று அழுத்தம் அதிகம். மனம் குழம்பிக் கிடந்தது. மாலையில் கிளம்பிச் செல்லும் போதுதான் மகேஷ் அழைத்தார். இதை அவர் சொன்ன போது பெரிய ஆசுவாசமாக இருந்தது. எழுதுவதற்கான அர்த்தம் என்பதனை இப்படியான தருணங்கள்தான் அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன. அலுவலக அழுத்தம், சக மனிதர்களின் வன்மம், பின்னப்படும் வலைகள், கண்ணுக்குத் தெரியாத பகைமை, காரணம் புரியாத பொறாமை என்பனவற்றையெல்லாம் தாண்டிச் செல்வதற்கான மனோபலத்தை இத்தகைய நிகழ்வுகளும் மனிதர்களும்தான் வழங்குகிறார்கள். புகழ வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. உண்மையிலேயே அப்படித்தான் தோன்றியது.
வலைப்பதிவை எழுத ஆரம்பித்து இன்றிலிருந்து பதிமூன்றாவது வருடம் தொடங்குகிறது என்பதை மறந்திருந்தேன். சென்னையில் ப்ரெல்யூட் சிஸ்டம்ஸ் என்ற நிறுவனத்தில் வேலையில் இருந்த போது விளையாட்டாகத் தொடங்கிய தளம் இது. கவிதைகள் என அப்பொழுது எழுதியவற்றையெல்லாம் பதிவேற்றி பலரின் கவனத்துக்குச் சென்றுவிட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. பிறகு கவிதையைத் தாண்டி பிறவற்றை எழுதி, அறக்கட்டளையாகத் தொடங்கி அதன் நிகழ்வுகளையும் எழுதி- அதன் போக்கில் ஓடும் நீரைப் போல ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்டகாலத் திட்டம் என்று எதுவுமேயில்லை. அவ்வப்போது தோன்றுவதைச் செய்து கொண்டிருக்க அதுவாக ஒரு வடிவம் பெற்று அதுவாக உருமாறிக் கொண்டிருக்கிறது.
‘இதுதான் லட்சியம்’ என்று வலுவான ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் மனம் முழுவதுமாக அதுதான் வியாபித்திருக்கும். லட்சியத்தை அடைவதற்காக நம்முடைய நோக்கங்கள் சிதைந்துவிடக் கூடும். அதனால்தான் எதையும் உறுதியாக வைத்துக் கொள்வதில்லை.
கடந்த சில ஆண்டுகளில் எழுதுவது என்பதை வெறுமனே உணர்வைக் கொட்டும் செயல்பாடாக மட்டும் நினைக்கவில்லை. என்னை என்னளவில் மாற்றிக் கொள்ள இந்த எழுத்துதான் அடிப்படையாக இருக்கிறது. எந்தக் காலத்திலும் அசைவத்தை விடுவேன் என்று நினைத்ததில்லை. இப்பொழுது முற்றாகவிட்டாகிவிட்டது. ‘அறம், சக உயிர் என்று பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் கோழியை அறுப்பதில் அர்த்தமில்லை’ எனத் தோன்றியது. ஒரு கணம்தான்.
சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளியைக் குறைப்பது சாத்தியமில்லை. ஆனால் அதை நோக்கித்தான் முழுமையாக நகர வேண்டியிருக்கிறது. எதை நினைக்கிறோமோ அதைப் பேச வேண்டும். அதையே எழுத வேண்டும். அதையே செய்ய வேண்டும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசியும் எழுதியும் அணிகிற முகமூடி வெகு ஆபத்தானது. தெரியாத்தனமாகக் கூட அணிந்து கொள்ளக் கூடாது. ‘நீங்களே இப்படி எழுதலாமா’ என்று யாராவது கேட்கும் போது ‘அப்படித்தான் நினைத்தேன். எழுதினேன். ஒருவேளை தவறாக இருந்தால் நினைப்பதையே திருத்திக் கொள்ள வேண்டுமே தவிர வெறும் எழுத்தை மட்டும் திருத்தக் கூடாது’ என்று சொல்கிறேன்.
இங்கே எல்லோருக்குமே சார்பு உண்டு. அரசியல், மதம், சாதி, மொழி, இனம், எதிர்பாலினம், காமம், இலக்கியம், மனிதர்கள், தொழில் என எல்லாவற்றைச் சார்ந்தும் அவரவருக்கு ஒரு சார்பும் மனநிலை இருக்கும். மனதில் நினைப்பதை வெளிப்படையாக விவாதிப்பதில் சரி தவறென்றெல்லாம் எதுவுமேயில்லை. உள்ளுக்குள் ஒன்றை வைத்துக் கொண்டு முலாம் பூசி விஷ ஊசியை ஏற்றுவதுதான் அநியாயம். இந்த இடைவெளியிலிருந்து விடுபடுவதற்கான அறம் சார்ந்த செயல்பாடாகத்தான் எழுத்தைப் பார்க்கிறேன். உணர்கிறேன்.
கடந்து வந்த பனிரெண்டு ஆண்டுகளில் எழுத்து எப்படியான வடிவத்துக்கு வந்திருக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்தப் பதிவையும் அழித்ததில்லை. பெரும்பாலும் எந்தப் பதிவையும் மாற்றி எழுதியதில்லை. எழுத்து என்பது வெறும் பயிற்சி என்பதை ஆழமாக நம்புகிறேன். ஆறேழு வருடங்களுக்கு முன்பு எழுதியதை வாசிக்கும் போது வித்தியாசத்தை உணர முடிகிறது. இன்னமும் ஆறேழு வருடங்களுக்குப் பிறகு இன்றைய எழுத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இணையம் வரப்பிரசாதம். எத்தனையோ நல்ல மனிதர்களின் நட்பை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. வாசிக்கிற ஒவ்வொரு மனிதரும் முக்கியம்தான். நாம் எழுதுவதை வாசிக்க அவர்கள் ஒதுக்குகிற ஒவ்வொரு நிமிடமும் நமக்கான அங்கீகாரம். வாசிப்பைத் தாண்டி மின்னஞ்சல் வழியாக, அலைபேசி வழியாக, அறக்கட்டளையின் செயல்பாடுகள் வழியாக என்று ஏதாவதொருவிதத்தில் பிணைந்திருக்கும் அத்தனை பேருக்கும் நன்றி.
அனுபவம் சேரச் சேர எழுதுவதும் மாறுகிறது. அனுபவத்தைச் சேர்ப்பதுதான் மனித வாழ்வின் ஆகப் பெரிய சந்தோஷமும் பாக்கியமும். பயணங்கள், மனிதர்கள் அவர்கள் சொல்கிற கதைகள் என அத்தனையும் அனுபவச் செறிவையூட்டுகின்றன. இவை போதாது. உலகம் மிகப்பெரியது. கடக்கவும் கற்கவும் கடலளவு இருக்கின்றன. தொடர்ந்து பயணிக்கலாம்.
சந்தோஷம், துக்கம், வலிகள், ரணம் என அனைத்துமே நமக்கான அனுபவங்கள்தான். எதைக் கண்டும் சுணங்காத, நடுங்காத மனநிலையைத்தான் ஒவ்வொரு நாளும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அவனது காலடியில் போட்டுவிட்டு காற்றில் பறக்கும் சிறகென மனதினை அருளச் சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் பிரார்த்திக்கிறேன். கடவுள் மீது எனக்கு நம்பிக்கையுண்டு. மனிதர்கள் மீது அதைவிடவும்.
5 எதிர் சப்தங்கள்:
அருமை. தொடர்ந்து உங்களுடன் பயணிக்கிறோம் நாங்களும். சொல்வதைவிட செயல்படுவதே நல்லது என கட்டுரையின் வாயிலாக புரிந்துகொள்ள முடிந்த்து. 'திருப்பதி மகேஷ்' பற்றி நானும் அறிவேன். அவரின் செயலும், ஈடுபாடும் பாராட்டத்தக்கது.
//எதைக் கண்டும் சுணங்காத, நடுங்காத மனநிலையைத்தான் ஒவ்வொரு நாளும் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் அவனது காலடியில் போட்டுவிட்டு காற்றில் பறக்கும் சிறகென மனதினை அருளச் சொல்லித்தான் ஒவ்வொரு முறையும் பிரார்த்திக்கிறேன்//
பிரார்த்தனைகளை நிறைவேற நானும் பிரார்த்திக்கிறேன்.
"திருப்பதி மகேஷ்" , மணியின் பிரார்த்தனைகளை நிறைவேற்ற சொல்லி நீங்க சொன்னா கண்டிப்பா கடவுள் கேட்பார்.அதனால கடவுள் கிட்ட நீங்களும் சொல்லிருங்க.
உங்களின் நற்பணி தொடர வாழ்த்துகள் மணி . உங்களின் வெளிப்படைத்தன்மை உங்களை பொதுசேவையில் நல்லதொரு இடத்திற்கு கொண்டு செல்லட்டும் ..
வாழ்த்துக்கள் மணி!
மகேஷ் எப்பவுமே வித்யாசமான சிந்தனைகள் உள்ளவன்...
அவன் முதல் மாச சம்பளத்த நன்கொடை குடுத்ததுல எந்த வியப்பும் இல்ல...
வாழ்த்துகள் சார்
Post a Comment