தஞ்சை பகுதியில் மீத்தேன் திட்டம் என்று பெரிய கருவிகளைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். மக்கள் எதிர்த்து முடக்கிய பிறகு புதுக்கோட்டை பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டம் என்று கருவிகளைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள். பொறியியல் படிப்பின் போது படித்த வேதியியல் மறந்துவிட்டது. இணையத்தில் துழாவி, வேதியியல் படித்த நண்பர்களை விசாரித்தால் ஹைட்ரோகார்பன் மீத்தேன் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்றுதான். பெயரே சொல்வது போல ஹைட்ரஜனும் கார்பனும் சேர்வது ஹைட்ரோ கார்பன். அது ஒரு கார்பன் அணுவும் நான்கு ஹைட்ரஜன் அணுவும் சேர்ந்த மீத்தேனாகவும் (CH4) இருக்கலாம் அல்லது ஈத்தேனாகவோ புரேப்பேனாகவோ கூட இருக்கலாம். கார்பன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெயரும் பயன்பாடும் மாறுகிறது.
அப்படியென்றால் மீத்தேன் திட்டம் என்ற பெயரை மட்டும் ஹைட்ரோகார்பன் திட்டம் என்று சற்றே மாற்றிவிட்டு கடப்பாரையைத் தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அப்பொழுது தஞ்சாவூர் இப்பொழுது புதுக்கோட்டை நெடுவாசல்.
ஹைட்ரோகார்பனை எடுத்து எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள். ‘நாடு வளர்கிறது. தேவை பெருகுகிறது. இதைக் கூட எடுத்துக்க அனுமதிக்கவில்லையென்றால் எப்படி?’ என்று சில அரசியல்வாதிகள் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். ஹைட்ரோகார்பனை எடுப்பது என்பது புத்தம் புதிய திட்டமில்லை. உலகின் பல இடங்களில் நிலத்துக்கடியிலோ அல்லது கடலுக்கடியிலோ துளையிட்டு பல நிறுவனங்கள் தோண்டி எடுக்கின்றன. நடுக்கடலுக்குள் ஆழ்துளையிட்டு தோண்டியெடுக்கும் போது நமக்கு தெரியவா போகிறது? எங்கேயோ நடக்கிறது என்று அமைதியாக இருந்து கொள்வோம். ஆனால் மக்கள் வாழ்கிற பகுதிகளிலும் விவசாய நிலத்திலும் கருவிகளைக் கொண்டு வந்து உள்ளே இறக்கும் போது மக்கள அலறத்தான் செய்வார்கள்.
பா.ஜ.கவின் இல.கணேசன் ‘ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாநிலம் தியாகம் செய்ய வேண்டாமா? ஒரு மாநிலம் நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு மாவட்டம் தியாகம் செய்ய வேண்டாமா? ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு கிராமம் தியாக செய்ய வேண்டாமா? ஒரு கிராமம் நன்றாக இருக்க வேண்டுமானால் ஒரு தனிமனிதன் தியாகம் செய்ய வேண்டாமா?’ என்று பேசிய வீடியோ இணைப்பைப் பார்க்க நேர்ந்தது. தியாகம் என்பது தாமாக முன்வந்து செய்வது. அரசாங்கத்தின் அதிகாரக் கரங்கள் வலுக்கட்டாயமாகத் துரத்தியடித்து அதற்கு தியாகம் செய்கிறார்கள் என்று பெயரையும் சூட்டுவார்கள் போலிருக்கிறது.
அரசியல்வாதிகள் மனசாட்சியில்லாமல் ஒரு திட்டத்தை ஆதரித்துப் பேசும் போது திட்டத்தின் பின்னணியில் இருக்கும் அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோகார்பனை எடுக்கும் உரிமத்தை பெங்களூரைச் சார்ந்த ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறார்கள்.
இந்நிறுவனம் குறித்து கூகிளில் தேடிப் பார்க்கலாம்.
ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமானது கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜி.மல்லிகார்ஜூனப்பாவுடையது. மத்திய கர்நாடகாவில் மிகப்பெரிய தொழிலதிபர் இவர். ஆரம்பத்தில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக இருந்து பிறகு பாஜகவின் சார்பில் மக்களவை உறுப்பினர் ஆனார். மல்லிகார்ஜுனப்பாவின் மகன் ஜி.எம்.சித்தேஸ்வரா 2016 ஆம் ஆண்டு வரைக்கும் மோடியின் மத்திய அமைச்சரவையில் கனரக தொழில்துறை இணையமைச்சராக இருந்தார். இவரது சகோதரர்கள்தான் ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இல.கணேசன் நெடுவாசல்காரர்களைப் பார்த்து ‘தியாகம் செய்’ என்று சொல்வதை இதனோடு இணைத்துத்தான் புரிந்து கொள்ளச் சொல்கிறது மனம். தம் கட்சிக்காரரின் நிறுவனத்திற்காக தியாகம் செய்யச் சொல்கிறார் போலிருக்கிறது என்று யோசிக்கத்தானே தோன்றும்?
இல.கணேசன் நெடுவாசல்காரர்களைப் பார்த்து ‘தியாகம் செய்’ என்று சொல்வதை இதனோடு இணைத்துத்தான் புரிந்து கொள்ளச் சொல்கிறது மனம். தம் கட்சிக்காரரின் நிறுவனத்திற்காக தியாகம் செய்யச் சொல்கிறார் போலிருக்கிறது என்று யோசிக்கத்தானே தோன்றும்?
இந்த வருடம் பிப்ரவரி 15 அன்று பொருளாதார விவகாரத்திற்கான கேபினட் குழு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில்தான் 44 இடங்களில் ஹைட்ரோகார்பன்களைத் தோண்டியெடுக்கும் ஒப்பந்தங்களுக்கான அனுமதியை வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றில் 28 இடங்கள் நிலத்திலும் 16 இடங்கள் கடலுக்குள்ளும் இருக்கின்றன. இந்த ஒப்பந்தங்களை வென்றவர்களுள் நெடுவாசலைத் தோண்டுவதற்கான அனுமதியைப் பெற்ற மேற்சொன்ன ஜெம் லேபரட்டரீஸ் நிறுவனமும் ஒன்று.
பொதுவாகவே மக்களின் வாழ்வாதாரத்தைச் சிதைத்துக் கொண்டுவரப்படும் இத்தகைய திட்டங்களில் தனியார் நிறுவனங்கள்தான் கொழிக்கிறார்கள். ஒப்பந்தத்தை வென்றவர்களில் பத்து நிறுவனங்கள் அரசு சார் நிறுவனங்கள். பத்தொன்பது நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள். இது தவிர ஒரு வெளிநாட்டு நிறுவனமும் பட்டியலில் இருக்கிறது. இப்படி நாற்பத்து நான்கு இடங்களில் தோண்டுகிறார்கள் அல்லவா? இதில் மொத்த வருமானம் 46,400 கோடி ரூபாய் இருக்கும் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள். இதில் வெறும் 14,300 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம். மிச்சமெல்லாம் தோண்டியெடுக்கிற நிறுவனங்களின் பைக்குத்தான் செல்லும். அரசாங்கம் கணக்குப் போட்டதே 46,400 கோடி ரூபாய் என்றால் உண்மையான வருமானம் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சரி அரசாங்கம் கணக்கிடுற தொகையையே வைத்துக் கொண்டாலும் கூட அதில் பெரும்பங்கு தனியார் நிறுவனங்களுக்குத்தானே செல்கிறது?
அரசாங்கம் வருமானம் சம்பாதித்தால் கூட ‘சரி நாட்டு மக்களுக்கு பணம் போய்ச் சேரட்டும்’ என்று நெடுவாசல் மக்களிடம் தியாகம் செய்யச் சொல்லலாம். கர்நாடகக்காரரின் நிறுவனம் பிழைக்க, பாஜகக்காரன் சம்பாதிக்க ‘நெடுவாசல்காரன் தியாகம் பண்ணினா தப்பில்லை’ என்று இல.கணேசன் பேசுவதை எப்படிச் சரியென்று சொல்ல முடியும்?
வளர்ச்சித்திட்டங்களுக்கு நான் எப்பொழுதும் எதிரியில்லை. வளர்ச்சி என்பது inclusive ஆக இருக்க வேண்டும் என்கிற கட்சி நான். எல்லோரும் நன்றாக இருப்போம் என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டுமே தவிர மும்பைவாலாக்களும் உத்தரப்பிரதேசத்துக்காரனும் நன்றாக இருக்க தமிழகத்தின் ஒரு கிராமமோ அல்லது மாவட்டமோ தியாகம் செய்வதில் தவறில்லை என்று பேசுவதாக இருக்கக் கூடாது.
வளர்ச்சித்திட்டங்களுக்கு நான் எப்பொழுதும் எதிரியில்லை. வளர்ச்சி என்பது inclusive ஆக இருக்க வேண்டும் என்கிற கட்சி நான். எல்லோரும் நன்றாக இருப்போம் என்பதுதான் தாரக மந்திரமாக இருக்க வேண்டுமே தவிர மும்பைவாலாக்களும் உத்தரப்பிரதேசத்துக்காரனும் நன்றாக இருக்க தமிழகத்தின் ஒரு கிராமமோ அல்லது மாவட்டமோ தியாகம் செய்வதில் தவறில்லை என்று பேசுவதாக இருக்கக் கூடாது.
விவசாய நிலங்களை அழிப்பது, மரங்களை வெட்டுவது, மண்ணை மலடாக்குவது, குடிநீரை காலியாக்குவது போன்ற விளைவுகளை உண்டாக்குமானால் அது எத்தகைய திட்டமானாலும் நாம் நம்முடைய எதிர்ப்புணர்வை பதிவு செய்யத்தான் வேண்டும். தனியார் நிறுவனம் வருமானம் சம்பாதிப்பதற்காக ஒரு கிராமத்தை தொங்கவிட்டால் கிராம மக்களுக்காக குரல் எழுப்புவதில் என்ன தவறு?
வேலை வாய்ப்பை உருவாக்குகிறோம், தொழில்வளத்தைப் பெருக்குகிறோம் என்று காலங்காலமாகப் பேசிப் பேசியே வாழ்வதற்குத் தகுதியற்ற நிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். அது எவ்வளவு பெரிய வளர்ச்சியாக இருந்தாலும் பரவாயில்லை. சற்றே பொறுத்திருக்கட்டும்மய்யா! விவசாயிகளின் நிலத்தைப் பறித்துத்தான் வளர்ச்சியைக் காட்ட வேண்டுமென்றால் அப்படியொரு வளர்ச்சி தேவையில்லை என்று உரக்கச் சொல்லலாம். தனியார் நிறுவனங்கள் லாபம் கொழிக்க எளிய கிராம மக்களின் வயிற்றில்தான் அடிக்க வேண்டுமா என்பதை இல.கணேசன் மாதிரியானவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
‘இவனுக்கெல்லாம் பொருளாதார விவகாரம் பற்றி என்ன தெரியும்?’ என்று கேட்கிறவர்கள் இணைப்பில் இருக்கும் விவரங்களை முழுமையாக ஒரு முறை வாசிக்கலாம். அரசாங்கமே வெளியிட்ட விவரங்கள்தான் இவை.
இந்தியாவின் எரிபொருள் தேவைகளைச் சமாளிக்க வெளிநாடுகளை எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக எத்தனை கிராமங்களைக் காவு கொடுக்கப் போகிறோம்? எரிபொருளுக்காக பல கிராமங்கள், சாலை மேம்பாட்டுக்காக பல கிராமங்கள், தொழிற்சாலைகளுக்காக இன்னும் பல கிராமங்கள் என்று ஏதாவதொரு காரணத்தைச் சொல்லிச் சொல்லி கிராமங்களை அழித்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் ஒரு தொகையைக் கொடுத்து அவர்களை விரட்டியடித்துவிட்டு எதைச் சாதிக்கப் போகிறோம்?
இந்தியாவின் எரிபொருள் தேவைகளைச் சமாளிக்க வெளிநாடுகளை எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம் என்று பிரதமர் சொல்வது நல்ல விஷயம்தான். ஆனால் அதற்காக எத்தனை கிராமங்களைக் காவு கொடுக்கப் போகிறோம்? எரிபொருளுக்காக பல கிராமங்கள், சாலை மேம்பாட்டுக்காக பல கிராமங்கள், தொழிற்சாலைகளுக்காக இன்னும் பல கிராமங்கள் என்று ஏதாவதொரு காரணத்தைச் சொல்லிச் சொல்லி கிராமங்களை அழித்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு என்ற பெயரில் ஒரு தொகையைக் கொடுத்து அவர்களை விரட்டியடித்துவிட்டு எதைச் சாதிக்கப் போகிறோம்?
தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் கொழிப்பதற்கு அப்பாவி கிராமத்து மக்களை பலி கொடுப்பது பாவமில்லையா? இந்தியாவின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்பதையெல்லாம் வெறும் ஏடுகளில் மட்டும்தான் வாசித்துக் கொண்டேயிருக்கப் போகிறோமா? நாக்கில் நரம்பில்லாமல் பேசுவதற்கு முன்பாக இல.கணேசன் மாதிரியான பெரிய மனிதர்கள் எளிய மக்களை ஒரேயொரு வினாடி நினைத்துப் பார்க்கட்டும்.
8 எதிர் சப்தங்கள்:
சரியான சாட்டையடி !
Without affecting the other points of this blog, i want to point out that the revenue is expected to be 46000 crore, not the profit. Company has to invest some crores and bear operating costs and also pay royalty fee. Remaining is profit to company. I have no idea how much final profit will be
கொஞ்சம் அசந்தாலும் நாம் அனைவரையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவார்கள்.
https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_India.
No other state in India has more Nuclear power than Tamilnadu.
Kaetalum thanni illa. Kaetakamayae Nuclear.
அருமையான பதிவு. மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி.
" தியாகம் என்பது தாமாக முன்வந்து செய்வது. அரசாங்கத்தின் அதிகாரக் கரங்கள் வலுக்கட்டாயமாகத் துரத்தியடித்து அதற்கு தியாகம் செய்கிறார்கள் என்று பெயரையும் சூட்டுவார்கள் போலிருக்கிறது. "
அரசியல்வாதிகள் மக்களிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி இப்பொழுது மக்களை பற்றி எதுவுமே தெறியாமல் போய்விட்டதாக தான் இதை நினைக்க தோன்றுகிறது.
ஊரெல்லாம் உள்ள மக்கும் குப்பைகள் டன் கணக்கில் இருக்கும். அவற்றில் இருந்தும் மீதேன் (சாண எரிவாயு) எடுக்கலாம். இதை கூட யோசிக்கலாமே.
மீத்தேன் திட்டம் கை விடப் பட்டதால் வருமானம் இழப்பாக (அரசு ராயல்டி) ஈரோடு விவசாய குடும்ப நண்பன் கூறியது நினைவுக்கு வருகிறது.
Post a Comment