Feb 27, 2017

எப்படி பணம் கிடைக்கிறது?

இப்பொழுதெல்லாம் அடிக்கடி ஒரு கேள்வியை எதிர்கொள்ள நேரிடுகிறது. ‘ட்ரஸ்ட் எப்படி ஆரம்பிப்பது?’ என்னை ஆல் இன் ஆல் அழகுராஜாவாக உணரச் செய்யும் கேள்வி இது. பந்தாவாக பேச ஆரம்பித்துவிடுவேன். மாதம் ஒருவராவது இது குறித்து விசாரிக்கிறார்கள். 

‘ஆடிட்டரை பாருங்க..அவர்கிட்ட அறக்கட்டளையின் நோக்கங்களைக் கொடுத்துடுங்க..ஆவணம் தயாரானவுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தால் போதும்’ என்கிற ரீதியில் ஆரம்பித்து PAN எண்ணை வாங்குதல் வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கான முஸ்தீபுகள் பற்றியெல்லாம் அளந்துவிடுவது வாடிக்கை. இதென்ன பெரிய வானியல் ரகசியமா? யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்கு. அறக்கட்டளையின் பதிவு ஆவணம் உட்பட அத்தனையும் நிசப்தம் தளத்திலேயே இருக்கிறது. தேடியெடுக்க முடியாதவர்கள் அழைத்துப் பேசுகிறார்கள். சொல்லிவிட வேண்டியதுதானே?

கடந்த சில மாதங்களாகவே சென்னையிலிருந்து ஒரு அமைப்பினர் அழைத்துக் கொண்டேயிருந்தார்கள். ‘ஃபோனிலேயே கேளுங்க...சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னால் கேட்பதேயில்லை. நேரில் வர வேண்டும் என்றார்கள். பெங்களூரு என்றாலும் பரவாயில்லை; சென்னை என்றாலும் பரவாயில்லை; கோபி என்றாலும் பரவாயில்லை என்றார்கள். ஒரு மணி நேரம் என்றாலும் ஃபோனிலேயே பேசுவதற்குத் தயாராக இருந்தாலும் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று சொன்னால் உறுத்தத்தானே செய்யும்? சென்னை வரும் போது அலுவலகத்துக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதுவும் அறக்கட்டளையின் தலைவர் பேச மாட்டார். அவருக்கு ஒரு பி.ஏ. அவர்தான் அழைப்பார். 

‘உங்களை சார் பார்க்கணும்ன்னு சொல்லுறாரு’ என்பார். பி.ஏ வைத்துக் கொண்டு பேசுகிற ஆட்களைப் பார்த்தாலே அலர்ஜியாக இருக்கும். தேவையென்றால் நேரடியாகப் பேச வேண்டியதுதானே? அவர்கள் பெரிய ஆள் என்று காட்டிக் கொள்கிறார்களாம். ஒரு நாள் நானேதான் ஃபோனை எடுத்தேன். 

‘நான் ஐயாவோட பி.ஏ பேசறேன்’ என்றார். செமக் கடுப்பு. ‘நான் மணி அய்யாவோட பி.ஏ பேசறேன்..அய்யா ஒரு மீட்டிங்ல இருக்காரு’ என்று சொல்லித் துண்டித்துவிட்டேன்.

அதன் பிறகு வெகு நாட்களுக்கு அழைக்கவே இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு நேற்று பிடித்துவிட்டார்கள். பெங்களூரு வந்தவர்கள் வீட்டிற்கே வந்துவிட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக சனி,ஞாயிறுகளில் வெளியூர் செல்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டேன். அதற்கு வேறொரு கதை இருக்கிறது. தனியாகச் சொல்கிறேன். வழமையான சில விசாரிப்புகளுக்குப் பிறகு அறக்கட்டளை பற்றி விசாரித்தார்கள்.

எல்லாவற்றையும் சொன்ன பிறகு தாங்கள் ஏற்கனவே அறக்கட்டளையைப் பதிவு செய்துவிட்டதாகச் சொன்னார்கள். வங்கிக் கணக்கும் தொடங்கிவிட்டார்கள். கையில் ஒரு பெரிய கோப்பு ஒன்றை வைத்திருந்தார்கள். கண்ணசைத்ததும் பி.ஏ எடுத்து நீட்டினார். நோட்டுப் புத்தகங்கள் வழங்கியது, இலவச வேஷ்டி சேலை வழங்கியது என பெரிய கோப்பு இது. ‘போன வருஷம் மட்டும் நாற்பதாயிரம் ரூபாய்க்கு செஞ்சிருக்கோம்’ என்றார்கள். அந்த கோப்பு, நிழற்படங்கள் எல்லாம் கணக்குப் போட்டால் ஐந்தாறாயிரம் தேறிவிடும். 

அறக்கட்டளையும் பதிவு செய்துவிட்டார்கள், வேலையையும் ஆரம்பித்துவிட்டார்கள் வேறு என்ன விவரங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று சற்று குழப்பமாகவே இருந்தது. ஒருவேளை நம்முடன் இணைந்து பணி புரிய விரும்புகிறார்களாக இருக்குமோ என்று யோசிக்கும் போதே தொண்டையைக் கணைத்துக் கொண்டு ‘உங்க ட்ரஸ்ட்டுக்கு நிறையப் பணம் வர்றதா சொன்னாங்க..’ என்றார்.

‘யார் சொன்னாங்க?’ என்றேன். அவர்கள் நிசப்தம் படிப்பதில்லை என்பது அவர்கள் பேச்சிலேயே தெரிந்தது. 

‘ஒரு ஃப்ரெண்ட் சொன்னாருங்க’ என்றார். பெயரைச் சொல்லவில்லை. மற்ற எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. அவரிடமிருந்தே அலைபேசி எண்ணையும் வாங்கியிருக்கிறார்கள்.

‘அதான் உங்களை நேர்ல பார்த்து பணம் எப்படி வசூல் பண்ணுறதுன்னு கேட்கலாம்ன்னு வந்தோம்’ என்றார். 

‘எனக்கே தெரியாதுங்க’ என்று பதில் சொன்னால் நம்பவா போகிறார்கள்? நமக்கென்றே இப்படியெல்லாம் சத்திய சோதனை வந்து சேர்கிறது என நினைத்துக் கொண்டேன்.

‘தினமும் நெட்ல எழுதறேங்க...அதைப் படிக்கறவங்க கொடுக்கிறாங்க’என்றேன். 

தினமும் எழுதினால் பணம் கொடுப்பார்களா என்ற கேள்வி அவரது கண்களில் தெரிந்தது. தினமும் கோவில் வாசலில் அமர்ந்தால் பணம் கிடைக்கும் என்றுதான் அவர் இதுவரை கேள்விப்பட்டிருக்கக் கூடும்.

‘இண்டர்நெட் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..வேற எப்படி வசூல் பண்ணுறீங்க?’என்று இன்னொரு கேள்வி வந்து விழுந்தது. விடமாட்டார் போலத் தெரிந்தது. கத்தியை எடுத்துட்டு போய் கழுத்துல வைத்துவிடுங்கள் என்று சொல்லித்தான் தப்பிக்க வேண்டும் போலத் தெரிந்தது.

உண்மையிலேயே இந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியவில்லை. திடீரென்று யாரும் பணம் கொடுத்துவிட மாட்டார்கள். தொடர்ச்சியான செயல்பாட்டின் வழியாகவே நம்பிக்கையை உண்டாக்க முடியும். நம்பிக்கையை உண்டாக்குவதற்கு முடிந்தவரை முகமூடி அணியாமல் இருக்க வேண்டும். அரசியல், சமூகம், மதம் என எல்லாவற்றிலும் நாம் நினைப்பதை அப்படியே வெளிப்படையாகக் கொட்டிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படி ஓட்டைவாயாக இருப்பதனால் முத்திரைகள் விழாமல் தவிர்க்க வாய்ப்பில்லை. திமுக அனுதாபி, பாஜக ஆதரவாளன், ஜெயலலிதா விசுவாசி, காங்கிரஸூக்கு வேலை செய்வதவன் என்று எனக்கு எல்லா கட்சி சார்ந்தும் முத்திரை உண்டு. ஆளாளுக்கு ஒவ்வொரு விதமாக புரிந்து கொள்வார்கள். அதைப் பற்றி அலட்டிக் கொள்வதேயில்லை. நம்மை திடீரென்று பார்க்கிறவர்கள் அந்தச் சமயத்தில் நாம் சொன்ன கருத்துப்படி ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். ஆனால் தொடர்ந்து நம்மைப் பின் தொடர்கிறவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். ஆனால் நம்மைத் தொடர்ந்து பின் தொடரச் செய்ய நம்மிடம் ஏதாவதொரு சுவாரஸியம் இருக்க வேண்டும். 

வாசித்து, படம் பார்த்து, மனிதர்களை உற்று நோக்கி என ஹோம்வொர்க் செய்து கொண்டே இருக்க வேண்டியிருக்கும். தலையில் கொம்பு முளைக்கும் போதெல்லாம் தயவு தாட்சண்யமில்லாமல் முறித்துக் கொள்ள வேண்டும். பொதுவெளியில் முத்திரைகளைத் தாண்டி நம்மைப் பற்றி உருவாகிற நம்பகத் தன்மைதான் முக்கியமானது. அப்படியானதொரு நம்பகம் கொண்டவர்கள்தான் நிதியளிக்கிறார்கள்.

விலாவாரியாகச் சொன்னேன். ‘எப்படி ப்லாக் ஆரம்பிப்பது?’ என்றார். இப்போதைக்கு விடமாட்டார்கள் போலத் தெரிந்தது. அதற்கு ஒரு அரை மணி நேரம். ஏழரை மணி ஆகியிருந்தது. கிளம்புகிறோம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். 

ஏதோவொரு அரசியல் கட்சியில் இருக்கிறார். உள்ளூர் மக்களுக்கு அதையும் இதையும் செய்து கொண்டிருக்கிறார். பணம் வசூலிக்க விரும்புகிறார். பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டு அனுப்பி வைத்தேன்.

இத்தகைய மனிதர்களிடம் சொல்வதற்கு ஒன்றேயொன்றுதான் இருக்கிறது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் Passion ஒளிந்து கிடக்கும். இதுதான் என்னுடைய Passion என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. எழுதுவது, ஓவியம் வரைவது, நிழற்படங்கள் என்று எதையாவது நாம் வெளியில் சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அதுதான்  உண்மையானதா என்று நமக்கே தெரியாது. மனதுக்கு பிடித்த காரியத்துக்கு தினசரி அரை மணி நேரம் ஒதுக்கினால் போதும். அது என்ன செயலாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் அரை மணி நேரமாவது ஒதுக்கியே தீர வேண்டும். அப்படியான அர்ப்பணிப்புடன் செய்து கொண்டிருந்தால் அது நம்மை இழுத்துச் சென்றுவிடும். அதுதான் நம் பாதை என்று உறுதியாக நம்பலாம். 

வேறொரு இலக்கை லட்சியமாக வைத்துக் கொண்டு அதை அடைவதற்கு இதைச் செய்வோம் என்று கணக்குப் போட்டு காய் நகர்த்தினால் இலக்கும் தப்பிவிடும் நிகழ்காலமும் சொதப்பிவிடும். அடுத்தவர்கள் அவரவர் பாதையில் செல்லட்டும். அடுத்தவர்களைப் பின்பற்ற வேண்டியதில்லை. நமக்கு எது சரிப்பட்டு வருமோ அதைச் செய்தால் போதும். நம்முடைய செயலுக்கும் தகுதிக்கும் ஏற்ற இடத்திற்கு நம்முடைய Passion கொண்டு போய் நிறுத்திவிடும். அவ்வளவுதான்.

4 எதிர் சப்தங்கள்:

சோம. சிவ சங்கரன் said...

இந்த போலிகளிடம் ஏன் சார் உங்கள் நேரத்தை கொடுக்கிறீர்கள். இந்த போலிகள் பெருகி உண்மையாக உதவி செய்பவர்களை மறைக்காமல் இருப்பார்களாக !

ஜீவ கரிகாலன் said...

Dedication, Passion & Simplicity.. Lot to learn from u gurusami

Paramasivam said...

படிக்க ஜாலியாக இருந்தது. நீங்கள் பிளாக் எழுதுவது, நெட் என கூறும் பொது எல்லாம் அவர் மனநிலை/முகம் எவ்வாறு எல்லாம் மாறி இருக்கும் என எண்ணினேன். உங்களுக்கு நல்ல ஒரு விடுமுறை தினம்.

Ramakrishnan said...

ஐயா வணக்கம் நான் திருச்சி மாவட்டம் திருவராம்பூர் சேர்த்தவர் என் தந்தை ஒருசிரியகோவில் கட்டினர் இபொழுது அவர் இறந்து விட்டார் என் பெயர் ராமகிருஷ்ணா வயது 26 நான் தான் இப்பொழுது நிர்வாகம் பர்க்கீரன் நான் அறகட்டலை அரம்பிதென் யாராவது எனது கோவில் திருப்பணிக்கு உதவுவர்கல் என்று எந்தவுதவியம் கிடைக்கவில்லை உங்களை ஒரு சகதரணக கேட்கிறன் இதை எப்புடி வலி நடத்துவது என்று தெரியவில்லை ஐயா இந்த பதிவை பார்த்த பிறகு உங்களிடம் பேசவென்டும் என்ற எண்ணம் தோன்றியது முடிந்த அளவு என்ன அலையுங்கள் ஐயா 9698126860 நன்றி வணக்கம் ஐயா