Feb 25, 2017

புதிய பூமி

1900 வருடம் உலக மக்கட்தொகை வெறும் 160 கோடிதான். அடுத்த நூற்று பதினாறு வருடங்களில் 750 கோடிகள் ஆகியிருக்கிறது. பெருகுகிற வேகத்தை மட்டும் கவனித்தாலே நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு வெறுமை வந்துவிடும். கூட்டம் பெருகப் பெருக வளங்கள் அத்தனையும் குறைந்து கொண்டேயிருக்கின்றன. மரங்களின் எண்ணிக்கை குறைகிறது. நீர்வளம் சுண்டுகிறது. காற்று மாசடைகிறது. இப்படியே இன்னுமொரு ஐம்பது அல்லது அறுபதாண்டுகளில் ஆயிரம் கோடிகளைத் தொட்டுவிடும் போது அடுத்து என்ன செய்வார்கள் என்று யூகிக்கவே முடிவதில்லை. 

மருத்துவத்துறையில் நோய்களுக்குத் தடுப்பூசிகளைக் கண்டுகொண்டேயிருந்தால் இன்னொரு பக்கம் புதுப்புது வைரஸ்கள் பரவிக் கொண்டேயிருக்கின்றன. வெப்பநிலை அதிகமாகி துருவங்களில் பனி உருகி கடல்மட்டம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. பட்டியலே போடலாம். கூடிய சீக்கிரமே வாழவே தகுதியில்லாத நிலைமைக்கு பூமி தள்ளப்பட்டுவிடக் கூடும். அநேகமாக நம் தலைமுறை தப்பித்துவிடும். நமது பிள்ளைகளின் இறுதிக் காலமே நரகமாகிவிடக் கூடும். பேரன் பேத்திகளின் காலமெல்லாம் கஷ்டம்தான். ‘இவன் கதை விடுறாண்டா’ என்றெல்லாம் நினைக்க வேண்டியதில்லை. மீண்டுமொருமுறை நூறாண்டுகளுக்கு முன்பும் இன்றைக்குமான மக்கட்தொகை வித்தியாசத்தை மட்டும் கணக்கிட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.

செவ்வாயில் நீர் இருக்கிறதா? அண்டத்தில் வேறு எங்காவது வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் தேடிக் கொண்டேயிருக்கக் காரணம் இதுவாகத்தான் இருக்கும். ஒருவேளை அப்படியொரு கிரகத்தைக் கண்டறிந்துவிட்டால் உலகத்தில் இருக்கும் ஆயிரம் கோடி பேரையுமா அழைத்துச் செல்லப் போகிறார்கள்? வல்லவர்கள், அதிகாரமிக்கவர்கள் பணம் படைத்தவர்கள் சென்றுவிடக் கூடும். மிச்சம் மீதி இருப்பவர்கள் இங்கேயே நைந்து சாக வேண்டியதுதான்.

Exoplanets - நம்முடைய சூரிய குடும்பத்திற்கு அப்பால் இருக்கக் கூடிய கோள்களை எக்ஸோப்ளானட் என்கிறார்கள்- அப்படியான கோள்கள் ஏழு இருப்பதைக் கண்டறிந்திருப்பதாக நாஸா அறிவித்த போது மேலே சொன்னதுதான் தோன்றியது. கிட்டத்தட்ட பூமியை ஒத்த உருவத்தில், பாறைகளால் ஆன இந்தக் கோள்களில் நீர் இருக்கிறதா? பாக்டீரியா இருக்கின்றனவா என்றெல்லாம் இனி மேல்தான் தோண்டித் துருவப் போகிறார்கள். ஆனால் இங்கேயிருந்து செல்ல வேண்டுமானால் நமக்கு நாற்பதாண்டு காலம் தேவைப்படும். எந்த வேகத்தில் சென்றால் நாற்பதாண்டு காலம் என்பதில்தான் பிரச்சினையே- ஒளியின் வேகத்தில் செல்ல வேண்டுமாம். அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டர் வேகத்தில். அந்த வேகத்தில் சென்றாலே நாற்பதாண்டுகள் வேண்டும். இப்போதைக்கு நம்மவர்களிடம் இருக்கும் அதிகபட்ச வேகம் மணிக்கு நாற்பதாயிரம் கிலோமீட்டர்தான். இந்த வேகத்தில் சென்றால் கிரகங்களை சென்றடையவே பல நூறாண்டுகள் ஆகக் கூடும்.

கிழிஞ்சது ஜம்பாடி லுங்கி!

ஒருவேளை அப்படியொரு கிரகத்தைக் கண்டறிந்து சோதனைகளை எல்லாம் செய்து பார்த்து மனித வாழ்வு அங்கே சாத்தியம் என்ற முடிவுக்கு வந்தால் ஒரு பெரிய வண்டியை தயார் செய்து உலகம் முழுக்கவுமிருந்து சில ஆயிரம் மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்பார்கள். ஆனால் போய்ச் சேரும் போதே கிழவனாகி செத்து போய்விட மாட்டார்களா?


சமீபத்தில் ஒரு படம் வந்திருக்கிறது. Passengers. முதல் பாதி நன்றாக இருக்கும். இரண்டாம் பாதி ஹாலிவுட் படங்களுக்கேயுரிய உட்டாலக்கடி கப்ஸாக்கள். ஐந்தாயிரம் பேர்களைச் சுமந்து கொண்டு விண்வெளிக்கப்பல் பறந்து கொண்டிருக்கிறது. நூற்றியிருபது ஆண்டுப்பயணம் அது. அதனால் அத்தனை பேர்களையும் செயலற்ற (Hypernate) நிலைக்குக் கொண்டு போய் படுக்க வைத்திருப்பார்கள். அந்த கிரகத்தை அடைவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகத்தான் விழிப்பே வரும். அப்படித்தான் திட்டமிட்டிருப்பார்கள். ஆனால் இடையில் ஒருவனுக்கு விழிப்பு வந்துவிடும். பயணத்தின் இடையில் முப்பதாண்டு காலம் கழித்து எழுந்துவிடுவான். விண்வெளிக் கப்பல் முழுவதுமே ஆட்டோமேடிக் என்பதால் இவன் கேட்கிற எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். ஆனால் ஒரு மனிதன் கூட அருகாமையில் இல்லை. இன்னமும் தொண்ணூறு ஆண்டுகாலம் இப்படியே பயணிக்க வேண்டும் என்பது அவனை அலறச் செய்துவிடும். அதனால் ஒரு பெண்ணை எழுப்பிவிட்டுவிடுவான். அவளுடன் காதல் வரும். கசமுசா நடக்கும். அவளுக்கு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து சண்டை பிடிக்கும் தருணத்தில் இன்னொரு மனிதன் எழுந்து வருவான்.

விண்வெளிக்கப்பலில் நிறையக் கோளாறுகள் இருப்பதை இடையில் எழுந்த ஆள் கண்டுபிடித்துத் தந்துவிட்டு அவன் இறந்து போய்விட அதன் பிறகு அனைத்துமே ஹாலிவுட் மசாலா. லாஜிக் ஓட்டைகள், நம்ப முடியாத புருடாக்கள் என்று கடுப்புதான். ஆனால் நமக்கான புதிய விஷயத்தைக் காட்டுகிற எந்த படைப்பையுமே ஏதாவதொருவிதத்தில் நாம் பொருட்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் படம் அப்படியான புதிய விஷயங்களைக் காட்டுவதனாலேயே சிபாரிசும் செய்யலாம்.

நாஸா புதிய கிரகங்களைக் கண்டுபிடித்தாக அறிவித்தவுடன் கூகிள் தனது டூடிளாக இந்தச் செய்தியைத்தான் வைத்திருந்தது. இது அவ்வளவு முக்கியமான செய்தியா என்று துழாவிக் கொண்டிருந்தேன். இன்னமும் நிறைய ஆராய்ச்சிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் பல வருடங்கள் ஆகக் கூடும். சிறுவனாக இருந்த போது செவ்வாயில் மனிதர்கள் வாழ முடியும் என்றார்கள். இருபது வருடங்களுக்குப் பிறகும் அதற்கான சாத்தியங்கள் உறுதியாகச் சொல்லப்படவில்லை. இனி இருபது வருடங்கள் கழித்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் TRAPPIST-1 பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள். இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்து மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்களைத் தோண்டித் துருவி அங்கே மனிதர்கள் சென்று வாழலாம் என்பதெல்லாம் வானமேறி வைகுந்தம் போவது மாதிரிதான்.

இருக்கிற பூமியை பாதுகாக்கிற வழியைப் பார்ப்பதுதான் கூரை ஏறி கோழியைப் பிடிக்கிற கதை. கோள்களைக் கண்டறிந்தோம், நட்சத்திரங்களை எண்ணிப்பார்த்தோம் என்றெல்லாம் செய்தி வரும் போது முதலில் நம்மூரில் இருக்கிற மரங்களைக் காப்பாற்ற வழியைப் பாருங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. விண்வெளி ஆராய்ச்சியை சிறுமைப்படுத்துவதான அர்த்தத்தில் இதைச் சொல்லவில்லை. அத்தகையை செய்திகளைவிடவும் முக்கியமானது நாம் இழந்து கொண்டிருக்கிற பூமியைப் பற்றிய செய்திகள் என்பது. அதைத்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

1 எதிர் சப்தங்கள்:

அருள்நிதி .கிருஷ்ணமூர்த்தி said...

இன்னொரு மாநிலத்தின் நதியே நம் மாநிலத்தில் புகுந்தால் சூழலியலை மாற்றி விடும் என்றும் நம்மாழ்வார் போன்ற இயற்கை விதியறிந்தவர்கள் சொல்லும்போது நாம் அடுத்த கிரக்கத்தில் வாழும் உட்டாலக்கடி வேலையெல்லாம் செல்லாது .
பேசாமல் நல்ல படம் , கனவு என்று காலம் கடத்திக்கொள்ளலாம் .