Jan 19, 2017

கண்ணாமூச்சி

தமிழக அளவிலான போராட்டங்களில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களும்மு ன்வைக்கப்படுவதாக சில நண்பர்கள் எழுதியிருந்தார்கள். போராட்டத்தைப் பொறுத்தவரையில் ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும். நாம் எதற்காக களமிறங்கியிருக்கிறோமோ அதை மட்டுமே முன் வைக்க வேண்டும். நமக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கும். ஒன்று தீர இன்னொன்று முளைத்துக் கொண்டேயிருக்கும். எல்லாவற்றையும் போராட்டக்களத்திற்கு எடுத்துக் கொண்டு வந்தால் நமது முக்கியமான நோக்கத்தை நீர்த்துப் போகச்  செய்யும். போராட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்காக இதை எழுதவில்லை.

நீட் தேர்வு ஒன்றும் தீண்டத்தகாதது இல்லை. சில மாதங்களுக்கு முன்பாக பேசிய போது ஒரு கல்வித்துறை அதிகாரி சொன்ன விஷயம் மிக முக்கியமானது. பத்தாம் வகுப்பின் கேள்வித்தாள்கள் எளிதாக இருப்பதும், நானூற்று தொண்ணூற்றொன்பது மதிப்பெண்கள் கூட வாங்கிவிட முடியும் என்பது ஒன்றும் இயல்பாக நடப்பதில்லை.  திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுகிறது.

நானூறு மதிப்பெண்களைத் தாண்டுகிறவர்கள் நிச்சயமாக பனிரெண்டாம் வகுப்பில் முதல் பிரிவில்தான் சேர்வார்கள். பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சியடைந்தால் போதும். பொறியியல் கல்லூரியினர் வலைவிரித்து அமுக்கிக் கொள்வார்கள். எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை- பல அரசுப் பள்ளிகளில் கணிதப் பிரிவைத் தவிர பிற பாடத்திட்டங்களை மூடிவிட்டார்கள்.

சில நாட்களுக்கு முன்பாக அன்னூர் பக்கமிருக்கும் வாகரையாம்பாளையம் என்ற ஊரின் மேனிலைப் பள்ளியிலிருந்து சிலர் வந்திருந்தார்கள். அவர்களது பள்ளியின் தேர்ச்சி விகிதம் அருமையாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஒரு பெண் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்திருக்கிறாள். அரசுப்பள்ளி மாணவி மருத்துவப்படிப்பில் சேர்வதிலிருந்து பள்ளியின் தரத்தைப் புரிந்து கொள்ளலாம். அந்தப்பள்ளியில் Third group என்று சொல்லப்படுகிற பிரிவுக்கு ஆசிரியர்கள் இல்லை. பெற்றோர் ஆசிரியர் சங்கத்திலிருந்து இவர்களாக சம்பளம் கொடுத்து ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறார்கள். மாதாமாதம் சம்பளம் கொடுப்பதில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்துக்கு கடனாகிக் கொண்டிருக்கிறது. உதவி கேட்டு வந்திருந்தார்கள். ‘கவர்ண்மெண்ட்ல கேட்கலையா?’ என்று கேட்டேன். அவர்களும் கேட்டிருக்கிறார்கள். கல்வி அதிகாரிகள் ‘உங்களை யார் தேர்ட் க்ரூப் நடத்தச் சொன்னது’ என்று கேட்கிறார்களாம். 

அடிநாதம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முதல் பிரிவில் படித்த மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேவை. அதனால் யாரையெல்லாம் வளைக்க வேண்டுமோ அவர்களையெல்லாம் வளைக்கிறார்கள். பத்தாம் வகுப்பில் நிறையப் பேர் நானூறைத் தாண்டுகிறார்கள். மூன்றாம் பாடப்பிரிவு பல பள்ளிகளில் மூடப்படுகிறது. நானூறைத் தாண்டியவர்களுக்கு முதல் பாடப்பிரிவைத் தவிர வேறு வழியில்லாமல் செய்யப்படுகிறது. முதல் பிரிவில் படிக்கிறவர்களில் முக்கால்வாசிப்பேர் பொறியியல் படிப்பில் சேர்கிறார்கள். பல நூற்றுக்கணக்கில் தொடங்கப்பட்டிருக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு ஆட்களைப் பிடித்துத் தரும் வேலையைக் கல்வித்துறை செய்து கொண்டிருக்கிறது.

ப்ரொபஷனல் படிப்புகள் என்று கித்தாப்பாகச் சொல்லப்படுகிற படிப்புகளில் படிக்கும் தமிழக மாணவர்களின் லட்சணம் இதுதான்.

பொறியியல் படிப்பு எப்படி இருக்கிறது என்றுதான் நம் எல்லோருக்கும் தெரியுமே? சென்னையிலும் பெங்களூரிலும் ஹைதராபாத்தில் இருக்கும் நிறுவனங்களில் மனித வள ஆட்களிடம் பேசி ‘எங்க ஊரில் ஒரு பொறியியல் கல்லூரி இருக்கு..வந்து ஆளுங்களை வேலைக்கு எடுங்க’ என்று கேட்டுப்பாருங்கள். அவர்கள் முகத்தைச் சுளிக்காமல் பதில் சொன்னால் காதை வட்டம் போட்டு அறுத்துக் கொள்ளலாம். மாணவர்களிடம் தகுதியே இல்லை என்று சொல்லாமல் பேச்சை ஆரம்பிக்க மாட்டார்கள். பிரச்சினை மாணவர்களிடம் இல்லை. கல்வியை ஒழுங்கு செய்யாத அரசிடம் இருக்கிறது. பணத்தை வாங்கிக் கொண்டு தாறுமாறாக கல்லூரிகளைத் திறக்க அனுமதி கொடுத்தார்கள். தகுதியே இல்லாத ஆசிரியர்களை நியமனம் செய்து கல்லூரிகளைத் தொடங்கினார்கள். முதலாளிகளும் மாணவர்களை இழுத்து வந்தால்தானே போட்ட முதலீட்டை எடுக்க முடியும்? எல்லா வழிகளிலும் கல்வியை வைத்து அரசியல் செய்கிறார்கள்.

பொறியியல் கல்வியை ஒழுங்குபடுத்த நீட் மாதிரியான தேர்வுகள் அவசியம்.

முதலில் மருத்துவப்படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வரப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு குறித்தான ஓர் அடிப்படையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கு தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் மருத்துவ படிப்பில் உள்ள இடங்களின் எண்ணிக்கையில் எந்த மாறுதலும் இருக்காது. சிலர் சொல்வது போல இது அகில இந்தியத் தேர்வு; பீஹாரிகளும், தெலுங்கர்களும் வந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பிவிடுவார்கள் என்பதில் உண்மை இல்லை. நமக்கான இடங்கள் நம்மிடமேதான் இருக்கும். ஆனால் மருத்துவப்படிப்பில் சேர்வதற்காக அடிப்படை அறிவு இருக்கிறதா என்று நிரூபிப்பதற்காக ஒரு நுழைவுத்தேர்வை வைத்திருக்கிறார்கள். பனிரெண்டாம் வகுப்பில் படிக்கிறானோ இல்லையோ- எழுபத்தைந்து லட்சம் வைத்திருக்கிற மனிதர் தனது மகனுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் வாங்கிக் கொடுத்துவிடுகிறார். அவன் படித்துவிட்டு வந்து ஆரம்பத்தில் போட்ட முதலீட்டை மீட்டெடுப்பதிலேயேதான் குறியாக இருக்கிறான். அதற்கு ஒரு தடை வேண்டியதில்லையா? 

முதலில் மருத்துவப்படிப்பு ஒழுங்காகட்டும். பிறகு இதே முறை பொறியியல் கல்விக்கும் வரட்டும். பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பை படிக்க வேண்டுமானால் பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பாடங்களில் குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும் என்ற நிலை உண்டாகும் போதுதான் கல்லூரி அளவிலான படிப்பு படிப்பாக இருக்கும். பார்மஸி, பொறியியல் போன்ற பல படிப்புகள் நாறிக்கிடக்கின்றன. எம்.ஈ முடித்துவிட்டு ஏழாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் சில ஆண்டுகள் இந்த நிலை தொடர்ந்தால் ஒரு தலைமுறையையே பாழடித்துவிடுவோம்.

நீட் தேர்வைத் தடை செய்வதைச் சொல்வதைவிட நாம் செய்ய வேண்டிய வேலை- நமது பாடத்திட்டங்களைச் செதுக்குவது, தேசிய அளவிலான தரம் கூட்டுதல், ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்துதல்த, மாணவர்களின் கற்றலை மேம்படுத்துதல் போன்றவைதான். இவற்றையெல்லாம் செய்யாமல் நீட் தேர்வை தடை செய்யச் சொல்லி போராடுவது என்பது நம் குறைகளை மறைத்துக் கொண்டு மாணவர்களை வலுவில்லாதவர்களாகவே வைத்திருப்பதாகத்தான் இருக்கும். அடிப்படையான புரிதல் இல்லாமல் அரசியல் கட்சிகள் இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றன.

கல்வியைப் பொறுத்தவரையில் அரசுப்பள்ளிகளை ஒழிப்பதிலும் வருங்கால சந்ததியினரை வலுவில்லாமல் ஆக்குவதிலும் மிகப்பெரிய சதிவலை பின்னப்பட்டிருக்கிறது. கணக்கிட முடியாத கோடிகள் புரளும் வணிகம் இது. அரசியல்வாதிகள், அதிகார வர்க்கங்கள், பினாமிகள் என்று ஏகப்பட்ட பேர்கள் இதில் சம்பாதித்துக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். வெறுமனே ஒரு தேர்வை ரத்துச் செய்யச் சொல்வதனால் எந்தப் பலனும் விளையப் போவதில்லை. தமிழகத்தின் கல்வி நிலையில் குறுகிய கால மற்றும் நீண்ட கால மாறுதல்களைப் பற்றி நாம பேச வேண்டிய தருணம் இது. அப்படிச் செய்யாவிட்டால் அரசியல்கட்சிகளும், அறிவாளிகளும் நம்மோடு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டேதான் இருப்பார்கள். நாமும் குருட்டுவாக்கில் அவர்களைப் பின்பற்றிக் கொண்டேதான் இருப்போம்.

விவாதிக்கலாம்....

2 எதிர் சப்தங்கள்:

Sundar Kannan said...

திரு மணி,

இரண்டாவது பத்தியை படிக்கும்போது, எனக்கு திகிலானது உண்மையிலும் உண்மைதான்.

பணத்திற்காக, அடுத்த தலைமுறையை நாசம் செய்ய துணிந்த இவர்கள் , பெற்ற மக்களை கூட விற்க தயங்க மாட்டார்கள்.

ஜல்லிக்கட்டுக்கு நடக்கும் இளைஞர் புரட்சி போல் , கல்வியை அரசுடைமை ஆக்கவும், மேம்படுத்தவும் இன்னொரு மாணவர் புரட்சி தேவை.

சேக்காளி said...

"அச்சமின்றி" திரைப்படம் பாருங்கள். முழுதாக முடியாவிட்டாலும் கடைசி நீதிமன்ற காட்சிகளையாவது பாருங்கள்.
இந்த கட்டுரையோடு சம்பந்தமிருக்கிறது.