Jan 12, 2017

மரம்

ஒரு விவகாரத்தை எடுத்துக் கொண்டால் நாம் விரும்பும் தீர்வு கிடைக்கும் வரைக்கும் போராட வேண்டும். குறைந்தபட்சம் அதன் நெருப்பாவது அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அல்லது யாருடைய சர்க்கரை தடவிய சொற்களை நம்பி சுணங்கினால் அவ்வளவுதான். மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டியிருக்கும். சமீபகாலத்தில் மட்டுமே நிறைய உதாரணங்களைக் காட்ட முடியும். போராட்டங்கள் என்று மட்டுமில்லை- செயல்பாடுகளுமே அப்படித்தான். விட்டால் வாடிவிடும்.

ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் இருக்கும் மரங்களை வெட்டப் போகிறார்கள் என்று எழுதியிருந்தேன் அல்லவா? (விவரம்:இணைப்பில்) அது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்துக்கு வந்திருக்கிறது. இன்னமும் சில மாதங்களில் வெட்டப்படுவதற்கான வேலைகளைத் தொடங்கப் போகிறார்கள். இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கடந்த இரண்டு ஆண்டு காலமாகவே மருத்துவர் சத்தியசுந்தரியும் இன்னமும் சிலரும் போராடிக் கொண்டேயிருக்கிறார்கள். விவகாரம் வெளியில் தெரியாது. 2014 ஆம் ஆண்டிலேயே பிரதமர் அலுவலகத்துக்கு எழுதப்பட்ட கடிதங்கள் அங்கிருந்து பெறப்பட்ட பதில்கள், முதல்வரின் தனிப்பிரிவுக்கான விண்ணப்பங்கள் என்று அவர் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த முறை சந்தித்த போது வயதாகிவிட்டபடியால் தொடர்ந்து முன்னைப் போல இயங்க முடிவதில்லை என்றார். 1957 ஆம் ஆண்டிலேயே மருத்துவப்படிப்பை முடித்தவர் அவர். வயதைக் கணக்குப் போட்டுக் கொள்ளலாம். அவரைப் போன்ற கடந்த போராளிகளுக்கு இன்றைய தலைமுறையினர் பக்கபலமாக நின்றால் போதும். வழிநடத்திவிடுவார்கள்.


தன்னார்வலர்கள் எடுத்த கணக்கின்படி 8620 மரங்கள் இந்தச் சாலையில் இருக்கின்றன. சாலை விரிவாக்கப்பணியின் காரணமாக இவை அத்தனையும் வெட்டப்படவிருக்கின்றன என்பதுதான் அவலம். வெட்டிவிட்ட பிறகு நிச்சயமாக வெயில் கூடும். ஏற்கனவே பொய்த்துக் கொண்டிருக்கும் மழை சுத்தமாக இல்லாமல் போகும். பல நூறு பறவைகள் வீடிழக்கும். நிழற்சாலைகள் வெந்து கொதிக்கும். இயற்கை மற்றும் தட்பவெப்பம் சார்ந்த எவ்வளவோ பின்விளைவுகளை சாகப் போகிற இந்த எட்டாயிரம் மரங்களும் உண்டாக்கக் கூடும். இப்படி நேரடி மற்றும் மறைமுக விளைவுகள் நிறைய இருந்தாலும் இந்தத் திட்டத்தை தடுத்த நிறுத்த முடியும் என்று தோன்றவில்லை. உலக வங்கியின் நிதி, தனியார் நிறுவனத்தின் நிதி என்று சில நூறு கோடி ரூபாய்கள் புரளப் போகும் திட்டம் இது. அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் செயல்படுத்தியே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் நிற்பார்கள். எதிர்த்து நின்றால் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்ற முத்திரையைக் குத்துவார்கள். வெட்டியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டுவார்கள்.

யாருக்கும் யாரும் எதிரியில்லை. யாரையும் எதிர்த்துக் களமிறங்கவில்லை. அரசாங்கத்தின் போக்கிலேயே செல்வதுதான் நம்முடைய திட்டமாக இருக்கிறது. மரங்களை வெட்டிக் கொள்ளுங்கள் ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கேட்கலாம். எட்டாயிரம் மரங்களை இழக்கப் போகும் இந்தப் பகுதியில் பதிலீடாக பத்தாயிரம் மரங்களையாவது நட்டு வளர்ப்பதற்கான உதவிக்கரத்தை நீட்டுங்கள் என்று பேசலாம். மரம் வைக்கிற வேலையையும் கூட தன்னார்வலர்கள் குழு மற்றும் பொதுமக்கள் பார்த்துக் கொள்வார்கள். மரம் வைப்பதற்கான இடங்கள், தேவையான அனுமதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். இத்தகைய கோரிக்கைகளும் செயல்பாடுகளும்தான் எதிர்காலத் திட்டமாக இருக்கிறது. இப்போதைக்கு பவானி நதி பாதுகாப்பு கூட்டமைப்பே முன்னெடுப்புகளை மேற்கொள்கிறது. சுற்றுவட்டாரத்தில் இருக்கும் சங்கங்கள், இயக்கங்கள், அமைப்புகள் ஒருங்கிணையும் போது இதுவொரு வலுவான களமாக மாறும். மாற்றிவிடலாம். அதற்கான வேலைகளை ஆரம்பித்திருக்கிறோம்.

அரசாங்கம் என்னவோ செய்துவிட்டுப் போகட்டும் என்று வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நம்முடைய மண் அடுத்த தலைமுறை வாழவே முடியாத பாலையாகிவிடும். மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கக் கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டு ‘மனுதாரர் விரும்பும் வகையில் வெட்டப்படும் ஒரு மரத்திற்கு பத்து மரக்கன்றுகளை நட்டு வளர்க்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்று பதில் அனுப்பியிருக்கிறார்கள். சாத்தியமேயில்லாத பதில் இது. எட்டாயிரம் மரங்களுக்கு பதிலாக எண்பதாயிரம் மரங்களை நட்டு வளர்க்க இடம் எங்கே இருக்கிறது? 2014 ஆம் ஆண்டிலிருந்து முன்வைக்கப்படும் இந்தக் கோரிக்கையை அப்பொழுதே செயல்படுத்தியிருந்தால் ஐந்தாயிரம் மரங்களாவது மேலே வந்திருக்கும். துரும்பைக் கூட கிள்ளிப் போட்டதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தைக் குறை சொல்லாமல் இந்தக் கட்டுரையை முடிக்க முடியாது- அரசாங்கத்தின் பெரும்பாலான சமாதான பதில்கள் வெறும் காகிதத்தில் மட்டும்தான் இருக்கும். விதையாகி, மண்ணில் இறங்கி, நீரூற்றப்பட்டு, செடியாக, மரமாவது என்பதெல்லாம் நடக்கவே நடக்காது.


என்றைக்குமே காயாத மண் இன்று காய்ந்து கிடக்கிறது. கையை நீட்டி நீர் அள்ளிக் கொள்ளக் கூடிய அளவில் இருந்த கிணறுகளில் வெறும் பாறைகள்தான் தெரிகின்றன. நிலங்கள் பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன. கரும்பையும் மஞ்சளையும் விதைத்துவிட்டு அறுவடைக்கு வந்துவிடும் என்று நம்பிய விவசாயிகள் ஆளாளுக்கு நெஞ்சுவலியிலும் விஷத்தைக் குடித்தும் தூக்கில் தொங்கியும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். முப்போகம் விளைந்த மண்ணில் சித்திரை வைகாசியில் குடிப்பதற்கே நீர் இருக்காது என்கிறார்கள். ஆயிரம் அடிகள் தாண்டிய ஆழ்குழாய் கிணறுகள் கூட வற்றிக் கிடக்கின்றன. வறட்சியின் குரூர தாண்டவம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் எட்டாயிரம் மரங்களை வெட்டுவது என்பது அன்னையின் மடியில் பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையின் கழுத்தை ஒரே வெட்டில் உருளச் செய்வது போல. அதைத்தான் செய்யவிருக்கிறார்கள்.

அரசாங்கத்தை எதிர்த்து நிற்கவில்லை. கெஞ்சித்தான் கேட்கிறோம். மன்றாடுகிறோம். மரங்களைக் காக்க முடியாவிட்டால் இந்த மண்ணையாவது காப்பாற்றுங்கள். குடிநீராவது மிச்சமிருக்கட்டும். வெட்டுவதை வெட்டிவிட்டு புதிய மரங்களை வளர்த்துக் கொடுங்கள். இதுதான் ஒரே கோரிக்கை. வளர்ச்சி என்பது வெறும் சாலை விரிவாக்கம் மட்டுமில்லை. மலடாக்கப்பட்ட தரிசு நிலத்தில் பிஎம்டபிள்யூவும் பென்ஸும் செல்வது மேம்பாடு இல்லை. மண் பிழைக்க வேண்டும். பசுமை தழைக்க வேண்டும். அடுத்த தலைமுறை நிழலில் வாழ வேண்டும். அதுதான் வளர்ச்சியின் குறியீடு. தகிக்கும் தார் சாலைகளைப் போட்டு வைத்துவிட்டு குடிநீருக்கு அந்தச் சாலைகளில் வரும் லாரிகளை நம்புவது என்பது தற்கொலைக்குச் சமமமானது. 

பசுமை கொழித்த பூமி ஏற்கனவே மலடாகிக் கிடக்கிறது. சாயக் கழிவுகள் நதியை நாசமாக்கி வைத்திருக்கிறது. மிச்சமிருக்கும் கொஞ்சம் பச்சையையும் கொன்றுவிட்டுத்தான் இந்தச் சாலையில் வாகனங்கள் விரைய வேண்டுமா? அரசாங்கம் யோசிக்கட்டும். மக்களும் யோசிப்போம். இந்தச் செய்தி பரவலாகட்டும். நண்பர்கள், உறவினர்கள், குழுக்கள் என எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். வாட்ஸப், ஃபேஸ்புக் என எந்த வழியிலான தொடர்பையும் விட்டு வைக்க வேண்டாம்.

பசுமையைக் காக்க களமிறங்ம்குவதைத் தவிர வேறு வழியில்லை.

எங்கே மரங்களை வாங்குவது? எங்கே நடுவது, யார் பொறுப்பேற்றுக் கொள்வது என்பது செயலாக்கத் திட்டங்கள் குறித்து விவாதிக்க 22.01.2017 (ஞாயிறு) காலை 10.00 மணிக்கு கோபி ராமாயம்மாள் திருமண மண்டபத்தில் செயலாக்கக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. ஈரோடு, சித்தோடு, கவுந்தப்பாடி, கோபி, சத்தியமங்கலம் பகுதி தன்னார்வலர்கள், அமைப்புகள், மாணவர்கள் என அத்தனை கலந்து கொள்வோம். நம் மண்ணை நாம் மட்டும்தான் காக்க முடியும். தினத்தை நினைவில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் முடிந்தவுடன் இதுதான் நம்முடைய வேலை.  பெங்களூரு, சென்னை என வாழ்ந்தாலும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். விரிவாக விவாதிக்கலாம்.

பசுமை கொஞ்சிய பூமியை நாம் வாழும் காலத்திலேயே அழித்து பாலையாக்கிவிட்டு அடுத்த தலைமுறைக்கு எதை விட்டுச் செல்லப் போகிறோம்? நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

தொடர்புக்கு:
மருத்துவர். சத்தியசுந்தரி
ச.கார்த்திகேயன்   -   98429 44010
கோ.வெ.குமணன் -   98422 95915
அரசு தாமசு               -   98420 97878

7 எதிர் சப்தங்கள்:

senthilkumar said...

Yes, I will be there...Request all to join this movement and invite your friends, relatives...இந்தச் செய்தி பரவலாகட்டும். நண்பர்கள், உறவினர்கள், குழுக்கள் என எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். வாட்ஸப், ஃபேஸ்புக் என எந்த வழியிலான தொடர்பையும் விட்டு வைக்க வேண்டாம்.

சேக்காளி said...

//பிஎம்டபிள்யூவும் பென்ஸும் செல்வது மேம்பாடு இல்லை. மண் பிழைக்க வேண்டும்.//
கரியம் சாதிக்க கார் கம்பெனி அள்ளி கொடுப்பான் லஞ்சத்தை அதிகாரிகளுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்.விவசாயி ஒரு ரூபாய் கொடுப்பானா?

சேக்காளி said...

//அரசாங்கம் யோசிக்கட்டும்//
யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம்,கான்ட்ராக்டுகளை யாருக்கு கொடுத்தால் நிறைய சதவிகிதம் கிடைக்கும் போன்ற எல்லாவற்றையும் யோசித்து விட்டுத்தான் திட்டத்தை அறிவித்திருப்பார்கள்.

Unknown said...

//பாலம் பாலமாக வெடித்துக் கிடக்கின்றன

பாளம் பாளமாக

//களமிறங்ம்குவதைத்

களமிறங்குவதைத்

Mani said...

http://m.tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article9477571.ece

செந்தில்குமார் said...

ஒரு மரத்துக்குப் பதில் பத்து மரங்கள் நட வழி வகை செய்யப் பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆனால் சாலை அமைத்து முடித்து விட்டு டோல் அமைக்கக் காட்டும் ஆர்வம் மரம் வளர்ப்பதில் இருக்காது.ஒரு பத்தாண்டுகள் ஓடிவிடும்.நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்க நிறைய இடம் இருக்கு.அதிகாரிகள் மனசாட்சியோடு நடந்துகொண்டால் நல்லதே நடக்கும்.

senthilkumar said...

மரங்கள் வெட்டிவிட்டார்கள். புதிய மரங்களை எங்கே நட போகிறார்கள் ? வேறு இடங்களில் நட்டி வளர்த்தால் அது எப்படி வெட்டப்பட்ட இடங்களின் இயற்கை சூழலை சமன் செய்யும்? இது சம்பந்தமாக எடுக்கப்போகும் நடவடிக்கைகள் பற்றி கடைசியாக கிடைத்த தகவல்கள் இருக்கிறதா?