Jan 11, 2017

டிசம்பர் 2016

நிசப்தம் அறக்கட்டளை கடந்த ஆண்டிலும்(2016) சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறது. அப்படித்தான் நம்புகிறேன். நிறைய அனுபவங்கள். எதிர்காலத்தில் எதைச் செய்ய வேண்டும் எதைச் செய்யக் கூடாது என்ற புரிதல்கள்- இவையெல்லாம் காலகாலத்திற்கும் இருக்கும்தான். அனுபவங்கள்தான் நம்மைச் செதுக்குகின்றன. கற்றல்களே நம்மை மெருகூட்டுகின்றன. அனுபவமும் கற்றலும் என்றைக்கு  நின்று போகின்றனவோ அன்று நம்முடைய வளர்ச்சி நின்று போனது என்று அர்த்தம்.

அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து எதிர்மறையான எந்த விமர்சனமும் இதுவரை இல்லை என்பது ஆசுவாசமாக இருக்கிறது. ஆரம்பிக்கும் போது இப்படி இருக்கும் என்று நம்பவில்லை. வீட்டிலிருப்பவர்களே பயமூட்டினார்கள். யாராவது எங்கேயாவது திட்டுவார்கள் விதண்டாவாதம் பேசுவார்கள் என்றுதான் எதிர்பார்த்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உணர முடிகிறது. நம்முடைய பாதை சரியாக இருக்கிறது என்ற நம்பிக்கையையும் இதுதான் உண்டாக்குகிறது.

இறைவனுக்கும், உற்ற துணையாக இருக்கும் நன்கொடையாளர்களுக்கும், நண்பர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் நன்றி. அம்மா, அப்பா, வேணி உள்ளிட்ட குடும்பத்தினரையும் நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். 

2017 ஆம் ஆண்டில் அறக்கட்டளை இன்னமும் வீரியத்துடனும் தெளிவுடனும் பலத்துடனும் செயல்படுவதற்காக இறைவனை வேண்டிக் கொள்கிறேன். நிசப்தம் வாசகர்களுக்கு என் அன்பு.

வழக்கம் போலவே இனி வரும் காலத்திலும் தொடர்ந்து மாதாந்திர வரவு செலவு பிரசுரிக்கப்படும். யாருக்கு உதவிகள் வழங்கப்பட்டன என்ற விவரமும் எப்பொழுதும் போல ஒளிவு மறைவின்றி தெரியப்படுத்தப்படும்.

டிசம்பர் 2016க்கான கணக்கு வழக்கு இது. அறக்கட்டளையில் டிசம்பர் மாத இறுதியில் ரூ.9,82,152.63 (ரூபாய் ஒன்பது லட்சத்து எண்பத்தியிரண்டாயிரத்து நூற்று ஐம்பத்தியிரண்டு) இருக்கிறது. இன்னமும் பதினேழு லட்ச ரூபாய் நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட காசோலைகளின் விவரம் பின்வருமாறு-
வரிசை எண் 7: வைபவ் கிருஷ்ணாவுக்கான உதவித் தொகை. வளர்ச்சி குன்றிய அந்தக் குழந்தையின் பராமரிப்புக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாயிரம் ரூபாய் குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது.

வரிசை எண் 19: பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட மருத்துவ உதவித் தொகை இது. ஸ்ரீனி என்ற தனிக்கட்டுரையில் முழுமையாக விவரங்களை வாசிக்கலாம். 

வரிசை எண் 20: பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு நடத்தப்பட்டது. பயணம் என்ற கட்டுரையில் முழு விவரங்களும் இருக்கின்றன. கலந்து கொண்ட எழுபத்தைந்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு எழுதுவதற்காக ஒரு எழுதுகோல் வாங்கித் தரப்பட்டது. அது தவிர, நோட்டுப் புத்தகங்கள், கட்டுரைகள், படிப்புகள் குறித்தான நகல்கள் என எல்லாவற்றையும் சேர்த்து ரூ.5720/ ஆனது. மற்றபடி அரங்கு, தேனீர், மதிய உணவு ஆகியவற்றை காமராஜ் பள்ளி நிர்வாகம் இலவசமாகக் கொடுத்துவிட்டது. பயிற்சியாளர்கள் தங்கள் சொந்தப்பணத்தைச் செலவு செய்து வந்து சென்றார்கள். பயிற்சியாளருக்கான விடுதி அறைச் செலவை நான் கொடுத்துவிட்டேன். இவை தவிர வேறு செலவு எதுவுமில்லை.

வரிசை எண் 22: 


அங்குராஜ் பத்தாம் வகுப்பிலும் தொண்ணூறு சதவீதத்தைத் தாண்டிய மாணவன். பனிரெண்டாம் வகுப்பிலும் தொண்ணூறு சதவீதத்தைத் தாண்டிய மாணவன். அம்மாவும் இல்லை; அப்பாவும் இல்லை. சித்தி மட்டும்தான் பாதுகாவலர். கோயமுத்தூர் சிஐடி கல்லூரியில் முதல் வருடம் பொறியியல் படிக்கிறான். அங்குராஜின் ஆரம்பப்பள்ளி தலைமையாசிரியை ரமாராணிதான் அங்குவுக்காக சிபாரிசு செய்திருந்தார். கல்லூரியில் சேர்ந்துவிட்ட பிறகும் மாணவனுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியை சிபாரிசு செய்வதிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். ‘ரொம்ப நல்ல பையன் சார்’என்றார். வறுமையிலும் கொடி கட்டிக் கொண்டிருக்கிறான். அவனது விடுதிக் கட்டணம் பத்தாயிரம் ரூபாய். தலைமையாசிரியை ரமாராணியும், அங்குராஜின் சித்தியும் நிழற்படத்தில் இருக்கிறார்கள்.

வரிசை எண் 23: எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த கழைக்கூத்தாடி மாணவர்கள் தேசிய விளையாட்டுக்குச் செல்வதற்காக கடனாக கடந்த மாதம் முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நினைவில் இருக்கிறதல்லவா? அது மாணவர்களுக்கான உதவித் தொகை. அதே காலனியைச் சேர்ந்த நான்கு மாணவிகள் விளையாட்டு விடுதியில் தங்கியிருக்கிறார்கள். அவர்களது பெற்றோரும் கடனாகக் கேட்டிருக்கிறார்கள். மார்ச் மாதம் அரசாங்கம் பயணப்படியை வழங்கியவுடன் கடந்த மாதம் வழங்கப்பட்ட முப்பதாயிரம் ரூபாயையும் இந்த மாதம் மாணவிகளுக்காக வழங்கப்பட்ட இருபத்து நான்காயிரம் ரூபாயையும் திருப்பிச் செலுத்திவிடுவார்கள்.

வரிசை எண் 25: 


அரவிந்த் குடும்பமும் வறியது. வறக்காட்டில் வசிக்கிறார்கள். அரவிந்தாகவே தேடி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மீன்வளப்படிப்பில் சேர்ந்திருக்கிறான். ‘ஏதாச்சும் வித்தியாசமா படிக்கணும்ன்னு சேர்ந்தேன்’என்றான். ஒரு ஆடு வைத்திருந்தார்களாம். கடன் வாங்கியது போக கல்லூரிப் பணத்தைக் கட்டுவதற்காக குட்டிகளோடு சேர்த்து ஆட்டை விற்றுவிட்டதாகச் சொன்ன போது அரவிந்தின் அம்மா உடைந்து போய்விட்டார். அரவிந்த் எதையாவது சாதித்துவிட வேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறானே தவிர வெளியுலகம் தெரியாதவனாக இருக்கிறான். அரவிந்தின் துறை சார்ந்த வல்லுநர் ஒருவரை வழிகாட்டியாக நியமிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். யாரையேனும் தெரியுமெனில் தெரியப்படுத்தவும். அரவிந்த்க்கான விடுதிக் கட்டணம் முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. அரசு தாமஸ், காமராஜ் பள்ளியின் தாளாளர் ஜவஹர் ஆகியோர் நிழற்படத்தில் இருக்கிறார்கள்.

வரிசை எண் 37: ராஜேந்திரனின் அம்மா கூலி வேலை செய்கிறார். அப்பா சரியில்லை. அக்கம்பக்கத்தில் காசு வசூல் செய்து படித்துக் கொண்டிருக்கிறான். பிஎஸ்ஸியில் பல்கலைக்கழகத்தில் பத்தாவது இடம். முதுகலை வேதியியல் படிப்பில் திண்டுக்கல்லில் சேர்ந்திருக்கிறான். உதவி பெறுகிற மாணவர்களிலேயே வெகு சூட்டிப்பானவன். எப்படியாவது விவரங்களைத் திரட்டி விரல் நுனியில் வைத்திருக்கிறான். ஆர்வம் மிகுந்தவன். நெட் உள்ளிட்ட தேர்வுகளை எழுதி அரசுப் பணிகளுக்குச் சென்று அம்மாவைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றிருக்கிறான். அவனது கல்லூரிக் கட்டணம் ஆறாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது.

ஏதேனும் கேள்விகள், சந்தேகங்கள், கருத்துகள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்.

vaamanikandan@gmail.com

0 எதிர் சப்தங்கள்: