Jan 12, 2017

ஆஹா உலகம் எவ்வளவு அழகானது!

எல்லோரும் ஊரில் இருக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்பாகவே பெங்களூருக்கு கிளம்பி வந்துவிட்டேன். அங்கேயே அமர்ந்திருந்தால் அப்பாவின் நினைப்புதான். யாராவது கிளறிவிடுகிறார்கள். பெங்களூரில் அப்படியில்லை. தனியாகத்தான் இருக்கிறேன் என்றாலும் இயல்பாக இருக்கிறேன். மதுரை மீனாட்சி விலாஸ் காப்பாற்றிவிடுகிறது. சேந்தமங்கலத்துக்காரர்கள் யாராவது இருக்கிறீர்களா? அங்கேயிருக்கும் முத்து மெஸ்காரர்களுடையதுதான் மீனாட்சி விலாஸ். ஹெச்.எஸ்.ஆர் லே-அவுட்டில் புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள். கொஞ்சம் வாய் கொடுத்துப் பேசினால் ‘சொல்லு மாப்பிள்ளை’ என்கிறார். இட்லி, பொங்கல், தோசை, வடை சேர்த்து அறுபது ரூபாய்தான். அட்டகாசம்.

கடந்த ஆறு மாதங்களாகவே மதிய உணவுப் பிறகு அப்பா தமிழ்நாடு என்று சேகரித்து வைத்திருக்கும் எண்ணுக்கு அழைத்துப் பேசுவது வழக்கம். இப்பொழுதும் அதே நினைப்புதான் இருக்கிறது. அவர் ஊரில் இருப்பதைப் போலவும் இப்பொழுது அழைத்தாலும் எடுத்துவிடுவார் என்கிற நினைப்பு. இன்னமும் சில மாதங்கள் ஆகக் கூடும். இப்படியே நினைப்பு இருந்தாலும் தவறேதுமில்லைதான். ஆயினும் இயல்புக்கு வந்தாக வேண்டுமல்லவா? நேற்று ஒரு படம் பார்க்க முடிந்தது.

ஜங்கோ அன்செய்ண்ட் (Django Unchained).

2012 ஆம் வருடம் வெளியான படம். வெளிநாட்டுப்படங்களை- அதுவும் டாரண்டினோ, கிம் கி டக் மாதிரியான மண்டைகளின் படங்களைப் பார்த்தால் நிச்சயமாக படம் குறித்தான சில விமர்சனங்களையாவது தேடி வாசித்துவிடுவது வழக்கம்.நாம் எதைப் புரிந்து கொள்கிறோம், அடுத்தவர்கள் என்ன புரிந்திருக்கிறார்கள், எதையெல்லாம் கோட்டைவிட்டுவிட்டோம், தவறவிட்ட நுணுக்கங்கள் என்ன என்பதையெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். சில திரைப்படக் குழுக்கள் வெளிநாட்டு படங்களை திரையிட்டு குழுவாக அமர்ந்து பார்த்துவிட்டு பிறகு திரைப்படத்தைப் பற்றி விரிவாக விவாதிப்பது கூட அப்படித்தானே? 

தமிழில் கருந்தேள் ராஜேஷூம், யுவகிருஷ்ணாவும் இந்தப் படத்தைப் பற்றி இணையத்தில் எழுதியிருக்கிறார்கள். 

விமர்சனம் எழுதுவதைக் காட்டிலும் படம் குறித்தான அறிமுகத்தை எழுதுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவேளை ஜங்கோ படம் குறித்துக இதுவரையிலும் கேள்விப்படாதவர்கள் பார்த்துவிடவும். இணையத்திலேயே கிடைக்கிறது. இரண்டேமுக்கால் மணி நேரப் படம். FM movies தளத்தில் கிடைக்கும்.

படத்தின் கதை 1858 ஆண்டு தொடங்குகிறது. கறுப்பின அடிமைகளைச் சங்கிலி பூட்டி அழைத்துச் செல்லும் டெக்ஸாஸ் வெள்ளையர்களிடமிருந்து ஜங்கோவை மட்டும் அழைத்துச் செல்லும் பவுண்ட்டி ஹண்ட்டரிடமிருந்து படம் ஆரம்பமாகிறது. பணத்துக்காக குற்றவாளிகளைத் தேடி அவர்களைச் சுட்டு கொன்று பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு பவுண்ட்டி ஹண்ட்டர்ஸ் என்று பெயராம். அப்படியான வெள்ளையரிடம் வேலைக்குச் சேர்ந்து துப்பாக்கி பிடித்து, சுட்டுப் பழகி, எழுதப்படிக்கப் பழகி அவரது வேலைகளை முடித்துவிட்டு அவருடனேயே சேர்ந்து தனது மனைவியைத் தேடி மிஸிஸிப்பிக்குச் செல்கிறான் ஜங்கோ.


அந்தக் காலத்தில் அமெரிக்காவில் கறுப்பின மக்கள் பட்ட வேதனைகளும், அவர்களை விலங்குகளைக் காட்டிலும் கேவலமாக நடத்திய வெள்ளைக்காரர்களும், வன்முறையும்தான் படம் நெடுகவும். துப்பாக்கியும் ரத்தமும் கொலையுமெல்லாம் சேர்ந்து எனக்கு போக்கிரி படத்தைத்தான் நினைவூட்டின. டாரண்டினோ படத்தை போக்கிரியுடன் ஒப்பிடுவதா என்று யாராவது சண்டைக்கு வரக் கூடும். ஆனால் வன்முறை மட்டும்தான் ஒப்பிடலுக்கான காரணம். அதைத்தாண்டி படம் நமக்குள் உண்டாக்கக் கூடிய சலனம் முக்கியமானதாகத் தோன்றியது.

இலக்கியம் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ‘கலை மக்களுக்கானதா’ ‘கலை கலைக்கானதா’ என்று முரட்டு விவாதம் ஓடிக் கொண்டிருப்பதை கவனிக்க நேரும். பெரும்பாலும் கம்யூனிசவாதிகள் கலை என்பது மக்களுக்கானது என்பார்கள். தீவிர இலக்கியவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் கலை என்பது கலைக்கானது மட்டும்தான் என்பார்கள். ‘இவிய ரெண்டு பேரும் என்ன பேசிக்கிறாங்க’ என்று புரியாமல் குழப்பமாக இருக்கும். பிறகு பெருந்தலைகளிடன் பேசிய போது மெல்ல மெல்ல புரியத் தொடங்கியது. எளிய விவகாரம்தான். கலை என்பது மக்களின் பிரச்சினைகளைப் பேச வேண்டும் என்பது ‘கலை மக்களுக்கானது’ என்கிறவர்களின் வாதம். அப்படியெல்லாம் அவசியமில்லை; வாசிக்கிறவன் தன்னைப் புரிந்து கொள்கிறவிதமாக அவனுக்கான உள்ளொளி தரிசனம் கிடைத்தால் போதும் என்பது தீவிர இலக்கியவாதிகளின் வாதம். அப்பொழுதெல்லாம் கவிதை எழுதித் திரிந்தேன் அல்லவா? அந்தக் காலத்தில் தீவிர இலக்கியவாதிகள் சொன்னதை நம்பிக் கொண்டு எழுத்து மக்களின் பிரச்சினைகளைப் பேச வேண்டியதில்லை என நம்பிக் கொண்டிருந்தேன்.

ஆனால் அப்படியில்லை. மக்களின் பிரச்சினைகளைப் பேசாத எழுத்துகளுக்கும் கலைக்கும் நாம் வாழும் சூழலில் அவசியமே இல்லை என்றுதான் இப்பொழுது தோன்றுகிறது.

இங்கே நம்முடைய சூழல் கசப்பேறிக் கிடக்கிறது. ஆட்சியாளர்களிலிருந்து அதிகாரிகள் வரை அயோக்கியத்தனங்களைச் செய்கிறார்கள். ஏழைகள் நிறைந்திருக்கிறார்கள். பசி தாண்டவமாடுகிறது. அரசியல் சாக்கடையாகக் கிடக்கிறது. பாலியல் அத்துமீறல்கள் அரங்கேறுகின்றன. பண்பாடு, கலாச்சாரம் என்று சொல்லியபடியே மனிதர்களின் மனவெளிக்குள் பாசி படிந்து கிடக்கிறது. வன்முறை, ஆபாசம் என சகலமும் நம்மைக் குத்திக் கிழிக்கின்றன. எல்லாவற்றையும் அடியில் போட்டு அமுக்கி மேலே ஒரு போர்வையை விரித்து அமர்ந்து கொண்டு மேட்டுக்குடி பாவனையில் ‘ரசனை சார்ந்து என்ன சொல்கிறேன் என்றால்....’ என்று இழுப்பது நம் மனசாட்சிக்கு விரோதமானதில்லையா? இந்தச் சமூகமும் மக்களும் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்றும் எனக்குத் தேவையெல்லாம் வாசிப்பின் இன்பம் மட்டும்தான் என்று பேசினால் அதைவிடவும் அபத்தம் வேறு உண்டா என்ன?

கலை மக்களைப் பற்றிப் பேச வேண்டும். மக்களின் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்ப வேண்டும். 

மக்களோடு மக்களாக இணையும் வரைக்கும் வரைக்கும் ‘இலக்கியமும் கலையும் ரசனை சார்ந்து இருந்தால் போதும்’ என்றும் ‘கலை கலையை மட்டும் பேசினால் போதும்’ என்றும் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் நன்றாக இருக்கும். ஆனால் எளிய மக்களுடன் பழகிப் பார்த்த பிறகு அப்படிச் சொல்வதைப் போன்ற அநியாயம் வேறில்லை என்று மெல்ல மெல்லப் புரிந்து கொள்ள முடியும். நாம் ஒன்றும் மேட்டுக்குடி மோஸ்தர்கள் இல்லை. இங்கே அத்தனை பேரும் சகலவசதிகளுடனும் சுகவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. கந்தல் துணியைப் போல நைந்து கொண்டிருக்கும் நம் சமூகத்திற்கும் நம்மைச் சார்ந்த மக்களுக்கும் ஏதாவதொரு வகையில் பயன்படக் கூடிய, அவர்களது பிரச்சினைகள் குறித்து பேசக் கூடிய எழுத்துக்கும் கலைக்குமான தேவைதான் இங்கே பெருகிக் கிடக்கிறது.

எளிய மக்களின் இண்டு இடுக்குகளையெல்லாம் பொதுச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருவதன் அவசியம் இங்கே மிகுந்து கிடக்கிறது. 

அமெரிக்காவில் ஜங்கோவின் தலைமுறையினர் அனுபவித்ததற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத சித்ரவதைகளையும் வேதனைகளையும் இங்கேயும் மனிதர்கள் அனுபவித்திருக்கிறார்கள். இங்கேயும் வன்முறையும் ஆதிக்கமும் தலைவிரித்து ஆடியிருக்கின்றன. இப்பொழுதும் கூட நிலைமை முற்றாக மாறிவிடவில்லை. சற்றே முன்னேறியிருந்தாலும் பாவப்பட்ட மனிதர்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மறைத்துவிட்டு எதுவுமே நடக்காதது போல ‘ஆஹா இந்த உலகம் எவ்வளவு அழகானது’ என்று மட்டுமே பேசுவதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

0 எதிர் சப்தங்கள்: