Jan 11, 2017

சுடர்

சமீபத்தில் ஊரில் இருந்த போது உருப்படியான வேலை ஒன்றைச் செய்ய முடிந்தது. இதுவரையிலும் நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து கல்வி உதவித் தொகைகளைப் பெற்ற மாணவர்களில் சிலரிடம் நேரடியாக அல்லது அலைபேசி வழியாக பேசினேன். இதுவரையிலும் பெரிய அளவில் அவர்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைச் சேகரித்ததில்லை. இதுதான் முதன்முறை. நிறைய மாணவர்கள் பெரிய அளவில் முன்னேறாமல்தான் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்ட போது வருத்தமாக இருந்தது.

படிக்கிறார்கள். அவ்வளவுதான்.  ஆளுமை உருவாக்கம், தனித்திறன் வளர்ச்சி என்றெல்லாம் எதுவுமில்லை.

காரணமிருக்கிறது-

அத்தனை பேருமே சமூகத்தின் விளிம்பு நிலை மாணவர்கள். பெற்றோர் இல்லாதவர்கள், கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள், தலித் மாணவர்கள் என்று ஏதாவதொரு வகையில் சமூகத்தின் பரவலான வசதி வாய்ப்புகளை அடைய முடியாதவர்கள். அடிப்படை அறிவு, ஆங்கிலம், சொல்லாட்சி, துணிச்சல் என பல விதங்களிலும் பின் தங்கியிருக்கிறார்கள். 

ஒன்றை கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்த மாணவர்களில் யாருமே படிப்பில் சோடை போகாதவர்கள். பனிரெண்டாம் வகுப்பு வரையிலும் தூள் கிளப்பியவர்கள். நல்ல மதிப்பெண்கள். (ஓரிருவர் விதிவிலக்கு உண்டு) ஆனாலும் பின் தங்கியிருக்கிறார்கள் என்றால் சரியான வழிகாட்டலின்மைதான் என்று எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு மாணவி பொறியியலில் மூன்றாம் வருடம் முடிக்கவிருக்கிறாள். இதுவரை ஒரு paper presentation செய்ததில்லை. கருத்தரங்கில் கலந்து கொண்டதில்லை. வகுப்பில் கூட சக மாணவர்களுக்கு செமினார் எடுத்ததில்லை. ‘என்ன பிரச்சினை?’ என்று கேட்டால் ‘தமிழ் மீடியம் சார்...யார் கூடவும் பேசறதேயில்லை’ என்கிறாள். பனிரெண்டாம் வகுப்பில் அவளது கட் ஆஃப் 199.25 (இருநூறுக்கு). கலக்கியிருக்கிறாள். ஆனால் இப்பொழுது அமைதியாகியிருக்கிறாள்.

பிரச்சினை எங்கேயிருக்கிறது? மாணவர்களே தயங்குகிறார்கள். ஏதோ பயமும் இருக்கிறது. இதையெல்லாம்தான் நாம் உடைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகளும், தமிழ் வழிக்கல்வியும் மோசமில்லை என்பதை உணர்த்த வேண்டியிருக்கிறது. ஏழைகளுக்கு பிள்ளைகள் என்பதாலேயே தயங்க வேண்டியதில்லை என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. எளியவர்களின் பிள்ளைகளில் சிலர் விதிவிலக்காக இருக்கக் கூடும்தான். ஆனால் பெரும்பாலான மாணவர்கள் தங்களின் சிறகுகளைத் தாங்களே சுருக்கிக் கொள்கிறார்கள் என்பதுதான் துரதிர்ஷ்டம்.

சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் படிக்கும் ஒரு மாணவிக்கு ஒரு பெண்மணியை வழிகாட்டியாக ஒருவரை இணைத்திருந்தேன். அதுவொரு பரிசோதனை முயற்சிதான். ஆனால் சரியாக நடக்கவில்லை. மாணவி, வழிகாட்டியாகச் செயல்பட்ட பெண் என இருவரிடமிருந்தும் திருப்தியான பதில்கள் இல்லை. ‘அந்த அக்கா கூப்பிடவே இல்லை’ என்று மாணவி சொல்ல ‘அந்தப் பெண் இண்டரஸ்ட் காட்டவே இல்லை’ என்று வழிகாட்டி சொல்கிறார். தவறு என்னிடமும் இருக்கிறது. பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இருவரையும் அழைத்துப் பேசியிருக்க வேண்டும். பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் விட்டிருந்தேன். ஆறு மாதம் வீணாகப் போய்விட்டது. இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது- வழிகாட்டியாகச் செயல்பட்ட பெண்ணுக்கு நிசப்தம் பற்றிய முழுமையான புரிதல் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அவருடைய நண்பர் ஒருவர் மூலமாக தகவல் கேள்விப்பட்டு தொடர்பு கொண்டிருந்தார். முழுமையாகத் தெரியாத காரணத்தினாலோ என்னவோ மனப்பூர்வமாகச் செயல்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு.

கடந்த சில நாட்களில் இத்தகைய நிறை குறைகளை எடை போட முடிந்தது.

ஒன்றை மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும். மாணவர்களுக்கு வெறுமனே பண உதவி மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. அவர்களை பலவிதங்களிலும் மேலே தூக்கிவிட வேண்டியிருக்கிறது. அதுதான் சமூகத்திற்கும் பயன்மிக்கதாக இருக்கும். மாணவர்களுக்கும் உதவிகரமாக இருக்கும். அறக்கட்டளைக்கு வந்து சேர்கிற பணத்துக்கும் அர்த்தமுடையதாக இருக்கும். அறக்கட்டளையின் 2017 ஆம் ஆண்டுக்கான சங்கல்பம் என்றால் இதைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் உதவி பெறும் மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, வழிகாட்டி அவர்கள் நல்லவிதமாக வாழ்க்கையில் ஒரு நிலையை அடைகிற வரைக்கும் பின் தொடர வேண்டும்.

நண்பர்கள் சிலரிடமும் இது குறித்து விவாதிக்க வேண்டியிருந்தது. எப்படிச் செயல்படுத்துவது உள்ளிட்ட விவரங்களையும் முடிவு செய்ய வேண்டியிருந்தது. அகலக்கால் வைத்துச் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதனால்தான் அறக்கட்டளையின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையுமே தீர்க்கமாக யோசித்து மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம். இதிலும் கூட அவசரப்பட வேண்டியதில்லை. நாம் செயல்படுவதற்கான களமும் பெரிது. அவகாசமும் நிறைய இருக்கிறது. விளம்பரம் கிடைக்கும் என்பதற்காகவோ, ஆர்வத்தின் காரணமாகவோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்றிருந்தால் யாருக்குமே பலனில்லாமல் போய்விடுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம். 

நிசப்தம் வழியாக உதவி பெற்ற மாணவர்கள் பல ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்களை ஒருங்கிணைத்து ஒரே ஊரில் பயிற்சியளிப்பது அவ்வளவு சுலபமான காரியமில்லை. அதனால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டியிருக்கிறது. வழிகாட்டிகளாகச் செயல்பட விரும்புகிறவர்களை வடிகட்டி உண்மையிலேயே தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவரிடம் ஒரு மாணவரை இணைத்துவிடலாம். ஆளுமை உருவாக்கம், ஆங்கிலம், பேச்சு, படிப்பு என சகலத்திற்கும் வழிகாட்டிதான் பொறுப்பு. மாணவர் சென்னையில் படிக்கக் கூடும் ஆனால் வழிகாட்டி அமெரிக்காவில் கூட இருக்கலாம். இணையம், ஸ்கைப், அலைபேசிகளின் வழியாக இதைச் சாத்தியமாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவர்களுக்கு எதைச் செய்ய வேண்டும், எவ்வாறு அவர்களை மெருகூட்டுவது உள்ளிட்டவற்றில் தேவையான ஆலோசனைகளை வழங்குவது போன்றவற்றை நிசப்தம் அறக்கட்டளை வழிகாட்டிகளுக்குச் செய்யும். தேவைப்பட்டால் தனியான வல்லுநர் குழுவை அமைத்துக் கொள்ளலாம்.

நாம் பிறந்து வளர்ந்த இந்த சமூகத்திற்கு எதையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வமும் அர்ப்பணிப்பு உணர்வு மட்டும் இருந்தால் போதுமானது. பிறவற்றைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. மாணவர்களையும் வழிகாட்டிகளையும் ஒருங்கிணைத்தல் அவ்வப்போது அவர்களிடம் பேசி விவரங்களைச் சேகரிப்பது போன்ற வேலைகளை நானும் சில நண்பர்களும் பார்த்துக் கொள்ளலாம் என்ற யோசனை இருக்கிறது. 

வழிகாட்டிகளாகச் செயல்பட விரும்புகிறவர்கள் தங்களின் கல்வித் தகுதி, வேலை, வழிகாட்ட விரும்புவதற்கான காரணம் உள்ளிட்டவற்றை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கவும். முதற்கட்டமாக ஐந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வழிகாட்டிகளை இணைக்கலாம். அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கையைத் தேவைக்கு ஏற்ப அதிகரித்துக் கொள்ளலாம். 

கரங்களைச் சேர்த்து சுடர்களை ஏற்றுவோம். அவை சுடர்விட்டு எரியட்டும். 

nisapthamtrust@gmail.com/vaamanikandan@gmail.com

1 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

http://www.nisaptham.com/2016/12/blog-post_19.html
இந்த பதிவை வாசித்த நாளில் அல்லது மறுநாளில் இதே போன்ற ஒரு கருத்தை வலியுறுத்தி ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.