Dec 6, 2016

ஜெயலலிதா

தொண்ணூறுகளில் கல்கி வார இதழின் அட்டைப்படத்தில் வைரத் தோடு அணிந்திருந்த ஜெயலலிதாவின் படம் வெளியாகியிருந்தது. எனக்கு அதுதான் ஜெ குறித்த நெருக்கமான அறிமுகம். ‘பொம்பள பாரு...எப்படி தக தகன்னு இருக்கா’ என்று அம்மா சொன்னது இன்னமும் நினைவில் இருக்கிறது. வைரத் தோடும், அவரது கோட்டும் மிகப்பிரபலம். அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்தார். இன்று அவரது உடல் கிடத்தப்பட்டிருக்கும் ராஜாஜி அரங்கில்தான் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலத்தின் போது வண்டியிலிருந்து இறக்கிவிடப்பட்டார்; அவரை எதிர்த்த அதே எம்.ஜி.ஆரின் விசுவாசிகளைப் பிறகு தனது காலடியில் குழையும் நாய்க்குட்டிகளாக எப்படி மாற்றினார் என்பதையெல்லாம் யாரோ சொல்லவும் எழுதவும் படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டதுதான். எனக்கு நினைவு தெரியத் தொடங்கிய போது தனது போராட்டங்களையெல்லாம் வென்று பெரிய தலைவராக உருவெடுத்திருந்தார்.


அவரது முதல் ஆட்சியின் பிரமாண்டங்கள், நகைகள், புடவைகள் என்பவையெல்லாம் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதை காது கொடுத்துக் கேட்டபடியே ஒரு தலைமுறை வளர்ந்தது. எங்கள் ஊரில் வைரவிழா முதல்நிலைப்பள்ளிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான கட்-அவுட் உடைந்து விழுந்த போது அதனடியில் சிக்கி இறந்து போனவரின் மகன் எனக்கு வகுப்புத் தோழனாக இருந்தான். ஜெ.வை எதிர்த்தவர்கள் தாக்கப்படுவதாக பத்திரிக்கைகள் எழுதின. எல்லாவற்றையும் அப்படியே நம்புகிற வயது அது. அப்படி அவர் மீது கசப்பு கொள்வதற்கான தருணங்கள் நிறைய உருவாகியிருந்தன. 

ஜெயலலிதா ஸ்திரமான பிறகு தமிழக அரசியலின் முகம் முழுமையாக மாறத் தொடங்கியது.

வளர்ப்பு மகன் திருமணம், எங்கள் ஊரில் அதைக் காப்பியடித்து நடத்தப்பட்ட கதிர் ஈஸ்வர செங்கோட்டையனின் பிரம்மாண்டத் திருமணம் என்பவையெல்லாம் அதிமுகவின் மீது விமர்சனம் கொள்ளவே தூண்டின. மன்னார்குடி மாஃபியா என்று ஊடகங்கள் எழுதின. தமிழகம் சூறையாடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எல்லாமும் சேர்ந்து 1996ல் ஜெயலலிதாவையும் அவரது கட்சியையும் படு தோல்வி அடையச் செய்தன. அவரே கூடத் தோற்றுப் போனார். யானையின் காதில் கட்டெறும்பை பர்கூர் மக்கள் நுழைத்தார்கள். சொத்துக் குவிப்பு வழக்குத் தொடரப்பட்டது. கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து பறிக்கப்பட்ட நகைகளையும் செருப்புகளையும் கைக்கடிகாரங்களையும் தொலைக்காட்சியில் காட்டினார்கள். இனி ஜெ. அவ்வளவுதான் என்றார்கள். 

ஆனால் மீண்டும் 2001 ஆம் ஆண்டு பிரமாண்ட வெற்றியைப் பெற்ற போது ‘இவரை தமிழக அரசியலிலிருந்து அசைப்பது சாத்தியமேயில்லை’ என்பதை புரிந்து கொண்டார்கள். தொண்ணூறுகளில் இருந்ததைவிடவும் அவரது பிம்பம் பெரிதானது. கட்சி வலுவானதாக மாறியது. ஜெயலலிதா ஒற்றை மையாக இருந்தார். தமிழகம் அம்மாவின் கோட்டையானது.

அரசுப் பணியில் இருக்கும் எந்தவொரு பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்க்கலாம். ‘முகத்தைச் சிடுசிடுன்னு வெச்சுக்கலன்னா ஏய்ச்சுட்டு போய்டுவாங்க’ என்பார்கள். தாலுக்கா அலுவலகத்திலும் சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் பெண்களுக்கே இந்த நிலைமை என்னும் போது சுற்றிலும் எதிரிகள் நிற்க விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் இறுக்கமான இமேஜை புரிந்து கொள்ளலாம். அந்த சர்வாதிகாரத்தன்மையும் கண்டிப்பும் இல்லையென்றால் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் அரிதாகியிருக்கும். 

அதே இறுக்கம்தான் அவரது மீதான விமர்சனமாகவும் இருந்தது.

அவரது கவனத்தை ஈர்க்க அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் கட்சிக்காரர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்கினார்கள். நடித்தார்கள். போலியான பாவனைகளைச் செய்தார்கள். எதற்காக இப்படியானதொரு அடிமைக் கூட்டத்தை உருவாக்குகிறார் என்றும், ஒருவேளை ஜெயலலிதா கண்டும் காணாமல் இருக்கிறாரா அல்லது அவரது பார்வைக்கே செல்லவில்லையா என்றும் குழப்பமாக இருந்தது.

அதே சமயம் அவர் குறித்தான புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. விமர்சகர்கள் கைது செய்யப்பட்டார்கள். தன்னுடைய பிம்பம் எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்று கறாராக இருந்தார். இன்னமும் சற்றே நெகிழ்வாக இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றும் போதெல்லாம் ‘இதுதான் ஜெ.வா?’ அல்லது வேறு யாரோ சிலரின் கையசைவில் செயல்படுகிறாரா என்ற சந்தேகங்கள் உருவாகாமல் இல்லை. ஆயினும் இறுக்கம்தான் அவரது பெரும்பலமுமாகவும் இருந்தது. கர்நாடக அரசாக இருந்தாலும், கேரள அரசாக இருந்தாலும், மத்திய அரசாக இருந்தாலும் தனது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டத் தயங்கியதேயில்லை. அந்த எதிர்ப்புணர்வும் காட்டமும்தான் காவிரித்தாய் என்றும், சமூகநீதி காத்த வீராங்கனை என்றும் அவரை உயர்த்தின. 

எதிரிகளிடம் எதிர்ப்புணர்வைக் காட்டிய அதே சமயம் மக்களை எப்படி தன் பக்கமாக ஈர்க்க வேண்டும் என்பதையும் தன்னுடைய ஆசானிடமிருந்து கற்று வைத்திருந்தார். இலவசங்கள் கொடுக்கப்பட்டன. வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது. அம்மா என்று சாமானிய மக்கள் இயல்பாக அழைத்தார்கள். வலுவான தலைவராகத் தன்னை உயர்த்திக் கொண்டவர் மரணத்தைத் தழுவும் வரையில் பெரும் ஆதரவைச் சேகரித்து வைத்திருக்கிறார். தன்னைச் சுற்றிலும் எளிய மனிதர்கள் அனுமதிக்கப்படாத போதும் அவருக்காக உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கும் ஏகப்பட்ட சாமானியத் தொண்டர்களை ஈர்த்து வைத்திருந்தார். 

தனக்கு அடுத்து ஒரு தலைவரை ஜெ., உருவாக்கவில்லை என்று யாராவது சொல்லும் போது நகைப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெயலலிதாவை யாராவது கையைப் பிடித்து இழுத்து வந்து அரியணையில் அமர்த்தினார்களா? அண்ணா இறந்த போது கருணாநிதியை தலைவராக்கினார்களா? அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று யாருமே தலைவராக உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. யாருக்குத் திறமையும் மக்களை ஈர்க்கும் கலையும் இருக்கிறதோ அவர்கள்தான் தலைவர்களாகிறார்கள். இனியும் அதுதான் நடக்கும். இவர் முதலமைச்சர், அவர் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் தற்காலிக ஏற்பாடுகள். இவர்களாக நியமனம் செய்து கொண்டால் போதுமா? மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவன் எங்கிருந்தோ வரக் கூடும். 

ஒருவேளை ஜெவின் உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் அவர் இந்திய அளவிலான தலைவராக உயர்ந்திருக்கக் கூடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அவரது உடல்நிலை மோசமாகிக் கொண்டிருந்தது. பரப்பன அக்ரஹாரா சிறைவாசத்திற்குப் பிறகு மனதளவிலும் உடலளவிலும் மிகவும் தளர்ந்து போயிருந்தார். கடந்தத் தேர்தலிலும் கூட அவரால் முழுமையாகப் பரப்புரையைச் செய்ய முடியவில்லை. ஆன போதிலும் வென்றார். பல லட்சக்கணக்கான மக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். இன்றைக்கு உண்மையிலேயே அவருக்காக கதறக் கூடிய பெண்களும் தொண்டர்களும்தான் சாட்சி. 

‘தலைமேட்டுல உட்கார்ந்து மனப்பூர்வமா ஒரு சொட்டுக் கண்ணீர் விடக் கூட யாரையும் சேர்த்து வைக்காம போய்டுச்சு’ என்று அம்மா சொன்ன போது தலைமேட்டில் அமர்ந்து அழாவிட்டால் என்ன என்றுதான் தோன்றியது. அருகில் நிற்கும் பாவனையாளர்கள் அழாமல் போகலாம். அவரால் பதவியை அனுபவித்தவர்கள் தமது சட்டைப்பையிலிருந்து அவரது படத்தை நீக்கியிருக்கலாம். ஆனால் அவருக்காக மனப்பூர்வமாக அழ லட்சக்கணக்கான மக்களைச் சம்பாதித்திருக்கிறார். அவர்களை அவரது உடலின் அருகில் கூட அனுமதிக்கமாட்டார்கள்தான். அனுமதிக்கப்படாதவர்கள்தான் அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயலலிதா மிகப்பெரிய மக்கள் தலைவர். விமர்சனங்களுக்கு அப்பாற்றப்பட்ட அரசியல் தலைவர் நம் காலத்தில் சாத்தியமேயில்லை. அவர் செய்த பெரிய தவறு என்ன என்பது தமிழகத்துக்கே தெரியும். அவரை எதிர்க்கவும், அவரைப் புனிதப்படுத்த வேண்டியதில்லை என்றும் சொல்ல வேண்டுமானால் அதற்கு இதுவே மிக முக்கியமான காரணமாக இருக்கும்.

விமர்சனங்களையெல்லாம் மீறித்தான் அவர் மக்கள் தலைவராக இருந்தார். கடுமையான எதிர்ப்புகளையும் தாண்டித்தான் மக்களின் அன்பைச் சம்பாதித்திருகிறார். அவரைத் தலைவராக, இரும்புப் பெண்மணியாக, மக்களின் அன்பைச் சம்பாதித்தவராக, தமிழகத்தின் குரலை தொடர்ந்து உரக்க எழுப்பியவராக மிகப் பிடிக்கும்.

இனி தமிழக அரசியலின் வரலாற்றை எழுதும் போது அவரைத் தவிர்த்துவிட்டு எழுதவே முடியாது என்கிற நிலையிலிருந்துதான் இறந்து போயிருக்கிறார். அது சாதாரணச் சாதனையில்லை.

அவரது ஆன்மா அமைதி கொள்ளட்டும். 

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

#தலைமேட்டில் அமர்ந்து அழாவிட்டால் என்ன?

சேக்காளி said...

வருத்தமாகத்தான் இருக்கிறது.

Unknown said...

//அரசுப் பணியில் இருக்கும் எந்தவொரு பெண்ணிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பார்க்கலாம். ‘முகத்தைச் சிடுசிடுன்னு வெச்சுக்கலன்னா ஏய்ச்சுட்டு போய்டுவாங்க’ என்பார்கள். தாலுக்கா அலுவலகத்திலும் சத்துணவுக் கூடத்திலும் பணியாற்றும் பெண்களுக்கே இந்த நிலைமை என்னும் போது சுற்றிலும் எதிரிகள் நிற்க விளையாடும் அரசியல் சதுரங்கத்தில் ஜெயலலிதாவின் இறுக்கமான இமேஜை புரிந்து கொள்ளலாம். அந்த சர்வாதிகாரத்தன்மையும் கண்டிப்பும் இல்லையென்றால் இரும்புப் பெண்மணியாக உருவெடுத்திருப்பதற்கான வாய்ப்புகள் அரிதாகியிருக்கும்.//

100% உண்மை ,
காத்தவராயன் said...

// மத்திய அரசாக இருந்தாலும் தனது எதிர்ப்புணர்வை வெளிக்காட்டத் தயங்கியதேயில்லை. //

மோடி அரசின் மீது எதிர்ப்புணர்வை காட்ட முடியாத சூழலில் இருந்தார் என்பதே உன்மை.

Unknown said...

அனுமதிக்கப்படாதவர்கள்தான் அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
Very True..

Unknown said...

"எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெயலலிதாவை யாராவது கையைப் பிடித்து இழுத்து வந்து அரியணையில் அமர்த்தினார்களா? அண்ணா இறந்த போது கருணாநிதியை தலைவராக்கினார்களா? அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று யாருமே தலைவராக உருவாக்கப்பட்டவர்கள் இல்லை. யாருக்குத் திறமையும் மக்களை ஈர்க்கும் கலையும் இருக்கிறதோ அவர்கள்தான் தலைவர்களாகிறார்கள். இனியும் அதுதான் நடக்கும். இவர் முதலமைச்சர், அவர் பொதுச்செயலாளர் என்பதெல்லாம் தற்காலிக ஏற்பாடுகள். இவர்களாக நியமனம் செய்து கொண்டால் போதுமா? மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தலைவன் எங்கிருந்தோ வரக் கூடும். "
Well said..

Aravind said...

you are correct sir. new leader should come on his or her own talent only. lets hope tamilnadu will get some good young leader soon.