Dec 1, 2016

இதன் பிறகு?

டிசம்பர் 4 ஆம் தேதியன்று கிராமப்புற அரசுப்பள்ளிகளில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்களுக்காக ஒரு நாள் வாழ்வியல் பயிற்சி வகுப்பு நிசப்தம் அறக்கட்டளையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏழு பள்ளிகளிலிருந்து எழுபது மாணவர்களும் ஒரு தலித் காலனியிலிருந்து ஐந்து மாணவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒரு வருடமாகத் திட்டமிட்டு வந்தாலும் இப்பொழுதுதான் சாத்தியப்பட்டிருக்கிறது. இனி விரிவாக பல ஊர்களிலும் ஏற்பாடு செய்கிற யோசனை இருக்கிறது. முதல் நிகழ்வில் திரு.இராதாகிருஷ்ணனும், திரு.ஷான் கருப்புசாமியும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள். ‘அடுத்து என்ன படிக்கலாம்’ என்பதும் நிகழ்வின் ஒரு பகுதி. ஷான் கருப்புசாமி விரிவாக வகுப்பெடுக்கிறார். கட்டுரையாக அச்செடுத்துக் கொடுத்தால் மாணவர்களுக்கு பலனளிக்கும் என்று நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கும் தலைமையாசிரியர் அரசு.தாமஸ் சொன்னார். ஒரு கட்டுரையைத் தயார் செய்திருக்கிறேன். ஏதேனும் மாறுதல் அல்லது வேறு சில உள்ளீடுகள் தேவைப்படும் என்று தோன்றினால் தெரியப்படுத்தலாம். கட்டுரையில் தேவையான மாறுதல்களைச் செய்து நிகழ்வில் கலந்து கொள்ளும் எழுபத்தைந்து மாணவர்களுக்கும் அச்சு வடிவில் கொடுக்கும் திட்டமிருக்கிறது. 

                                                             ***

தேர்வுகள் நெருங்குகின்றன. லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதுவார்கள். எழுதட்டும். பதற்றமடையத் தேவையில்லை. பதறுகிறவனைவிடவும் மிகத் தெளிவாக யோசனை செய்து செயல்படுத்துகிறவர்கள்தான் வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருக்கிறார்கள். தேர்வுகள், போட்டி, மதிப்பெண்களையெல்லாம் தாண்டி முக்கியமானது ‘அடுத்து என்ன படிக்கலாம்?’ என்பது. முக்கால்வாசிப்பேரின் எதிர்காலத்தை ப்ளஸ் டூ முடித்த பிறகு தேர்ந்தெடுக்கப் போகிற படிப்புதான் நிர்ணயம் செய்கிறது. தேர்வு நெருங்க நெருங்க ஒவ்வொருவரும் குழப்புவார்கள். ஆசிரியர்கள், நண்பர்கள், பக்கத்துவீட்டுக்காரர்கள், உறவினர்கள் என்று ஆளாளுக்கு அறிவுரைகளைச் சொல்வார்கள். கேட்டுக் கொள்வதில் தவறேதுமில்லை. நூறு விதமான கருத்துக்களைக் கேட்டு உள்ளே போட்டுக் குதப்பி நமக்கு எது சரிப்பட்டு வரும் என்று இறுதியில் முடிவெடுக்கலாம். ஆகவே, காதுகளைத் திறந்து வையுங்கள். ஆனால் யாருடைய கருத்துமே உங்களை வீழ்த்திவிடாத தெளிவோடு இருங்கள். அடுத்தவர்களிடம் நீங்கள் கேட்பது ஆலோசனைகள்தான். உங்களுக்கு உதவக் கூடிய ஆலோசனைகள். மற்றபடி, நீங்கள் என்ன படிக்க வேண்டும் என்று தீர்ப்பு எழுத யாரையும் அனுமதிக்காதீர்கள். அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

ப்ளஸ் டூ முடித்த பிறகு என்ன படிக்க வேண்டும் என்பதை எப்படி முடிவு செய்வது?

1) சிறு வயதிலிருந்து விருப்பமான துறை எது? (ஒன்று அல்லது இரண்டு துறைகளை முடிவு செய்வது நல்லது - கணிதம், அறிவியல், கணக்கியல், விலங்கியல், மருத்துவம், பொறியியல் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.)

2) நமக்கு விருப்பமான துறைக்குள் நுழைய உதவும் படிப்புகள் என்ன இருக்கின்றன? அவற்றை எந்தெந்தக் கல்லூரிகள் சொல்லித் தருகின்றன?

3) படிப்புக்கான வேலை வாய்ப்புகள் எப்படி? (அரசு வேலை வாய்ப்பு, தனியார் வேலை வாய்ப்பு, மேற்படிப்பு பிறகு ஆராய்ச்சி, சுயதொழில் என்று சகலத்தையும் யோசிக்க வேண்டும்)

4) நாம் படிக்கிற படிப்பை வைத்துக் கொண்டு எந்தவிதமான போட்டித் தேர்வுகளை எழுத முடியும்?

இவை மேம்போக்கான கேள்விகள். ஆனால் இந்தக் கேள்விகளிலிருந்துதான் தொடங்க வேண்டும். பதில்கள் கிடைக்கக் கிடைக்க நமக்கு வேறு சில கேள்விகள் தோன்றும். பதில்களை ஆழமாகக் கண்டறியத் தொடங்கும் போதுதான் எதிர்காலம் குறித்தான விதவிதமான எண்ணங்களும் வழிகளும் கதவுகளும் தெரியும். 

உதாரணமாக, கால்நடைகள் சம்பந்தமாக ஆர்வமிருக்கிறது என்றால் பி.வி.எஸ்.சி (B.V.Sc) மட்டும்தான் படிப்பு என்று இல்லை. சற்றே மெனக்கெட்டு விரிவாகத் தேடினால் மீன்வளத்துறைக்கான படிப்பு இருக்கிறது, வனவியல் படிப்பு இருக்கிறது, பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பு இருக்கிறது - இப்படி நிறையப் படிப்புகள் நம் கண்களில்படும். வனவியல் படிப்பை மேட்டுப்பாளையத்தில் படிக்கலாம். மீன்வளத்திற்கான படிப்பை சென்னையிலும் தூத்துக்குடியிலும் படிக்கலாம். பட்டுப்பூச்சி வளர்ப்புக்கான படிப்பை கோவையிலோ அல்லது மைசூரிலோ படிக்கலாம். 

இப்படி பெரும்பாலானவர்களின் கவனத்திற்கு ஆளாகாமல் ஆனால் மிகச் சிறந்த அரசு வேலை வாய்ப்புகளையும், சுய தொழிலுக்கான திறப்புகளையும் கொண்ட படிப்புகள் நிறைய இருக்கின்றன. 

எல்லோரும் படிக்கிறார்கள் என்று பொறியியல், மருத்துவம் என்பதை மட்டுமே நாமும் குறி பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. அதற்காக அவற்றைக் குறை சொல்வதாக அர்த்தமில்லை. நல்ல கல்லூரியில் நாம் விரும்பும் பாடம் கிடைத்தால் படிக்கலாம். இல்லையென்றால் அதே குட்டையிலேயே குதிக்க வேண்டும் என்பதில்லை. விட்டுவிட்டு யாருமே கண்டுகொள்ளாத ஆனால் வேறு வாய்ப்புளைக் கொண்டிருக்கும் பாடங்களில் சேர்ந்து கொடி கட்டலாம்.

உணவு பதப்படுத்துதல், கடல்வளம் உள்ளிட்ட சில பாடங்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்பதாலும் எந்தவிதத்திலும் குறைந்து போய்விடப் போவதில்லை. இயற்பியல், வேதியியல், புள்ளியியல் உள்ளிட்ட சில பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதன் வழியாக மேற்படிப்பு, ஆராய்ச்சி என்று கொடி கட்ட முடியும். வரலாறு பாடத்தைப் படிக்க நம்மூர்களில் ஆட்களே இல்லை. ஆனால் இன்றும் தொல்லியல் துறையில் ஆட்களின் தேவை இருந்து கொண்டேயிருக்கிறது. நாம்தான் தேட வேண்டும்.

நுணுக்கமாக திட்டமிட்டால் மிகச் சரியான பாடத்தைக் கண்டறிந்துவிட முடியும். இங்கே கொண்டாடப்படும் ஒவ்வொரு படிப்புக்கும் மிகச் சிறந்த மாற்றுப் படிப்புகள் இருக்கின்றன. ஆனால் நமக்குத் தெளிவு வேண்டும். அதே சமயத்தில் வித்தியாசமாகச் செய்கிறேன் என்று மாட்டிக் கொள்ளவும் கூடாது. படித்துவிட்டு எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்கிற புரிதல் இருந்தால் போதும். சொல்லி  அடிக்கலாம். அதற்கான தேடல்களைத்தான் இனி நாம் விரிவாகச் செய்ய வேண்டியிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் அல்லது காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆக வேண்டும் என்றோ அல்லது இத்தகையை உயர்பதவிகளை அடைய வேண்டும் என்றோ விருப்பமுடையவர்கள் கடினமான படிப்புகளில் சேர்ந்து மெனக்கெட வேண்டியதில்லை. அது அவசியமுமில்லை. எளிய பாடம் ஒன்றைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கலாம். மூன்று வருடங்கள் முடிந்தவுடன் உடனடியாக தேர்வுகளில் கவனம் செலுத்த முடியும். 

அதே போலத்தான் பட்டயக் கணக்கர் (Chartered account) ஆக விரும்புகிறவர்களுக்கும். பட்டமே படிக்காமல் நேரடியாகத் தேர்வு எழுத முடியும்.

ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து நேரடியாக அறிவியலில் முனைவர் பட்டம் வாங்க முடியும். இப்படி நிறைய இருக்கின்றன. நமக்குத்தான் தெரிவதில்லை. தொட்டனைத் தூறும் மணற்கேணி- தோண்டத் தோண்டத்தான் நீர் சுரக்கும். அப்படித்தான் - தேடத் தேடத்தான் விவரம் கிடைக்கும்.

விவசாயம், பொறியியல், மருத்துவம், கலை அல்லது அறிவியல் என எதுவாக இருப்பினும் அலசி ஆராய்ந்து நமது எதிர்காலப் படிப்பினை முடிவு செய்யும் போது நம்மிடம் இரண்டு பாதைகள் கைவசம் இருக்க வேண்டும். உதாரணமாக புள்ளியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து அரசுப்பணிக்குச் செல்வது நம்முடைய இலக்காக இருக்கலாம். ஒருவேளை படிப்பை முடித்த பிறகு ஏதோ சில காரணங்களால் அரசாங்க வேலை கிடைக்கவில்லையென்றால் அடுத்த வாய்ப்பு என்ன என்பது குறித்தான தெளிவினை வைத்திருக்க வேண்டும். முட்டுச்சந்தில் மாட்டிக் கொண்டது போல ஆகிவிடக் கூடாது. ‘இது இல்லையென்றால் எது?’.அது தெரிந்தால் துணிந்து நுழைந்துவிடலாம். 

படிப்பை முடிவு செய்துவிட்டால் அடுத்த முக்கியமான கேள்வி- கல்லூரி.

நாம் விரும்புகிற பாடம் கிடைத்துவிட்டது என்பதற்காக போனாம்போக்கிக் கல்லூரியில் சேர்ந்து எதிர்காலத்தைத் தொலைப்பதைவிடவும் நல்ல கல்லூரியில் கிடைக்கும் பாடத்தில் சேர்ந்து அந்தப் பாடத்தை விரும்புவது எவ்வளவோ தேவலாம் என்றுதான் சொல்வேன். 

உள்கட்டமைப்பு, ஆய்வக வசதி, நூலகம், ஆசிரியர்களின் திறன், எதிர்காலத் திட்டமிடுதலுக்கான வசதி வாய்ப்புகள் (exposure) என எல்லாவற்றையும் பற்றித் தெரிந்து கொண்டுதான் கல்லூரியை முடிவு செய்ய வேண்டும். மோசமான கல்லூரியில் நிறைய மதிப்பெண் பெற்றும் வேலையின்றித் தவிப்பது நிகழ்ந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் நல்ல கல்லூரியில் சுமாரான மதிப்பெண்ணுடன் தேறும் மாணவனுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். யாரோ சொல்கிறார்கள் என்று கண்ட கண்ட கல்லூரியில் கண்ட கண்ட பாடத்தைத் தேர்ந்தெடுத்து மாட்டாமல் இருந்தாலே வாழ்க்கையில் பாதிக் கிணறைத் தாண்டிய மாதிரிதான் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நல்ல கல்லூரியை எப்படிக் கண்டுபிடிப்பது? 

மிக எளிது. நண்பர்கள், ஆசிரியர்கள், சீனியர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று சுமார் பதினைந்து அல்லது இருபது கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு ‘விசிட்’ போய்வருவது நல்லது. வெறுமனே போய் வராமல் அங்கேயிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தும் விசாரிக்கலாம். இப்படி இருபது கல்லூரிகளை ஒரு சேரப் பார்க்கும் போது நமக்கே ஒரு எண்ணம் கிடைத்துவிடும். ‘அய்யோ இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா?’ என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. துணிந்து இறங்கிவிட வேண்டும். நம்முடைய எதிர்காலத்திற்காகத்தானே செய்கிறோம்?

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. ஒரே ஆளிடம் ஆலோசனை கேட்பது குழியில் தள்ளிவிடும். நம் ஊரில் தெரிகிறதோ தெரியவில்லையோ அட்வைஸ் கொடுக்க மட்டும் தயங்கவே மாட்டார்கள். அதனால் குறைந்தது பத்து ‘தகுதியுள்ள’ நபர்களிடம் ஆலோசனை கேட்பதுதான் நல்லது. தகுதியுள்ள என்று எழுதியதற்கு அர்த்தம் புரிகிறதுதானே? விரிவாகவே சொல்லிவிடுகிறேன். தன் மகனோ அல்லது மகளோ பொறியியல் படிக்கிறார்கள் என்பதற்காக இஸ்ரோ சயிண்டிஸ்ட் என்கிற நினைப்பில் பீலா விடும் அறிவுசீவிகள் நம் ஊரில் அதிகம். தன் மகன் படிப்பதனாலேயே அந்தப் படிப்புதான் ஒஸ்தி என்று அடித்துவிடுவார்கள்.  இத்தகைய ஆட்களை நாசூக்காக கத்தரித்துவிட்டு விடும் வழியைப் பாருங்கள்.

தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவிருந்தே தனியார் கல்லூரிகளும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அவசரப்படுத்துவார்கள். ‘உடனடியாகச் சேராவிட்டால் அத்தனை இடங்களும் தீர்ந்துவிடும்’ எனச் சிக்க வைக்க முயற்சிப்பார்கள். பல கல்லூரிகள் ஊர் ஊராக கூடாரம் போட்டு ஆள் பிடிக்கத் தொடங்குவார்கள். பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கு இயல்பாக இருக்கும் பதற்றத்தை அறுவடை செய்வதற்காகவே காத்திருப்பவர்கள் அவர்கள். பணத்தைக் கட்டச் சொல்வார்கள். அவசரத்தில் நிறையப் பேர் கட்டிவிட்டு ‘சரி ஆண்டவன் கொடுத்த வழி’ என்று இருப்பதை கவனித்திருக்கிறேன். 

நிறையக் கல்லூரிகள் இருக்கின்றன. நிறையப் பாடங்கள் இருக்கின்றன. எனவே இந்த விஷயத்தில் பதற்றப்படாமல் நிதானமாக முடிவு செய்ய வேண்டும்.தேர்வு முடிவுகள் வரும் தினம் வரைக்கும் கல்லூரி குறித்தும், பாடத்திட்டம் குறித்தெல்லாம் தொடர்ந்து விசாரித்துக் கொண்டேயிருந்தால் ஓரளவுக்கு தெளிவு கிடைத்துவிடும். ‘ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம்’ என்று மட்டும் தயவு செய்து சோம்பேறித்தனமாக இருக்காதீர்கள். பன்னிரெண்டு வருடம் உழைத்தாகிவிட்டது. இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்தானே? சோம்பேறித்தனம்படாமல் உழையுங்கள். தயக்கமேயில்லாமல் கேள்விகளைக் கேளுங்கள். உங்கள் எதிர்கால வாழ்க்கையின் ஒட்டுமொத்த நகர்வும் நீங்கள் எடுக்கவிருக்கும் இந்த ஒரு முடிவில்தான் இருக்கிறது. 

என்ன படிக்கப் போகிறோம், எங்கே படிக்கப் போகிறோம் என்பது குறித்தான முடிவுக்கு வருவதற்காக நிறையப் பேரிடம் நிறையப் பேச வேண்டியிருக்கும். ‘யாரிடம் பேசுவது?’ என்று தெரியாதவர்கள் இணையத்தில் தேடுங்கள். ‘எங்கள் ஊரில் இணையமே இல்லை’ என்றால் தயங்கவே வேண்டாம். எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள். எங்களால் எவ்வளவு இயலுமோ அவ்வளவு உதவுகிறோம்.

8 எதிர் சப்தங்கள்:

Kumky said...

அன்பின் மணிகண்டன்,
கிருஷ்ணகிரியில் இது போன்றதொரு கூட்டத்தினை ஏற்பாடு செய்ய ஆவலாக இருக்கிறோம். நகர அரிமா சங்கத்தின் சார்பாக மேலதிக ஏற்பாடுகளையும் செய்து தரவியலும். உதவ வாய்ப்பிருக்கிறதா?

ர. சோமேஸ்வரன் said...

I am not sure you have seen it or not. I got this chart in Internet, it may be useful.
http://snravi.blogspot.in/2016/07/uyar-kalvi-vaaippugal.html?m=0

kamalakkannan said...

சென்னை அமிர்தா , அப்போலோ கோஷ்டிகளிடம் கவனமாக இருக்க சொல்லவும்.

கேட்டரிங் படிப்பு படிக்க வேண்டும் என்று முடிவு செய்தல் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பை தெரிவு செய்து படிக்க சொல்லவும் .

ஏரோனாட்டிகள் ,பயோ டெக்னாலஜி படிப்புகளின் வேலை வாய்ப்பை தெரிந்து கொண்டு சேர சொல்லவும்

இரா.கதிர்வேல் said...

நல்ல முயற்சி. அச்சு வடிவில் மாணவர்களுக்கு கொடுக்கும் அந்த கட்டுரையை நிசப்தம் தளத்தில் PDF கோப்பாக கொடுத்தால் எங்கள் கிராமத்தில் இருக்கும் மாணவர்களும் பயனடைவார்கள். மறக்காமல் பதிவேற்றம் செய்யவும். தொடர்ந்து கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மணிக்கு வாழ்த்துகள்.

Unknown said...

Good attempt, if possible video the classes and put it in youtube. Could be useful for lot of other students.

சேக்காளி said...

//நல்ல கல்லூரியை எப்படிக் கண்டுபிடிப்பது?

//மிக எளிது. நண்பர்கள், ஆசிரியர்கள், சீனியர்கள் போன்றோரின் ஆலோசனைகளைப் பெற்று சுமார் பதினைந்து அல்லது இருபது கல்லூரிகளின் பட்டியலை தயார் செய்து வைத்துக் கொண்டு அந்தக் கல்லூரிகளுக்கு ஒரு ‘விசிட்’ போய்வருவது நல்லது. வெறுமனே போய் வராமல் அங்கேயிருக்கும் மாணவர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தும் விசாரிக்கலாம். இப்படி இருபது கல்லூரிகளை ஒரு சேரப் பார்க்கும் போது நமக்கே ஒரு எண்ணம் கிடைத்துவிடும். ‘அய்யோ இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா?’ என்றெல்லாம் பயப்பட வேண்டியதில்லை. துணிந்து இறங்கிவிட வேண்டும். நம்முடைய எதிர்காலத்திற்காகத்தானே செய்கிறோம்?//
நல்ல யோசனை தான். ஆனால் 12ம் வகுப்பு படிப்பவர்களுக்கு அதுவும் அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு இது சாத்தியமா மணி?

சேக்காளி said...

// நிகழ்வில் திரு.இராதாகிருஷ்ணனும், திரு.ஷான் கருப்புசாமியும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.
அதனை கண்டிப்பாக Youtube-ல் பதிவேற்றுங்கள்.

Paramasivam said...

மிகவும் நல்ல தொண்டு. மாணவர்கள் உண்மையில் குழம்பி தான் இருப்பார்கள். இந்த முயற்சி ஓரளவு தெளிவு கொடுக்கும் எனலாம். தொடரட்டும் உங்கள் பணி.