டிசம்பர் 24, 1987 இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் இறந்தவுடன் அதிமுகவில் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார். கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஜானகி பொறுப்பேற்றுக் கொண்டு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் அவரால் வெற்றி பெறவும் முடிந்தது. இனி ஜானகிதான் தமிழகத்தின் முதல்வர் என்று மக்கள் நம்பத் தொடங்கிய போது அப்பொழுது பிரதமராக இருந்த ராஜீவ்காந்தியிடம் இரு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.
‘ஜானகி மக்கள் செல்வாக்குமிக்க தலைவராகவெல்லாம் வர முடியாது..இன்னும் ரெண்டு மூணு வருஷம் இப்படியே ஓடட்டும். அவரை பொம்மையாக வைத்து காங்கிரஸைக் தமிழகத்தில் மீண்டும் துளிர்க்கச் செய்துவிடலாம்’ என்பது ஒரு கருத்து. அடுத்த தேர்தலில் ஜானகியை கூட்டணியில் வைத்துக் கொண்டே தேர்தலைச் சந்திக்கச் சொல்லி அவரை அறிவுறுத்தியிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் ஜானகியின் எதிரிகளை வீழ்த்த உதவுவதன் வழியாக ‘எம்.ஜி.ஆர் ஆட்சி தொடர்வதற்கு காங்கிரஸ் உதவியது’ என்ற நல்ல பெயரையும் தமிழக மக்களிடம் சம்பாதிக்கலாம் என்று ஊதுகிறார்கள். காங்கிரஸ் மேலெழும்ப இதுதான் நல்ல வழி என்று சொல்லப்பட்ட இந்தக் கருத்தானது ராஜீவை சற்றே அசைத்துப் பார்க்க தமிழக காங்கிரஸ் கட்சிக்காரர்களை அழைத்து விசாரிக்கிறார்.
அதில் ஒருவர் ‘அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டியதில்லை. ஆட்சியைக் கலைத்துவிடலாம். தேர்தல் வரும்போது தீவிரமான பிரச்சாரத்தைச் செய்தால் நம்மால் ஆட்சியைப் பிடித்துவிட முடியும்; அப்படியே இல்லையென்றாலும் கணிசமான இடத்தை அமுக்கிவிடலாம்’ என்று மூளைச் சலவை செய்கிறார்கள். சற்றே பிசகிய ராஜீவ் 356 ஆவது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி வெறும் இருபத்து நான்கு நாட்களில் ஜானகியின் ஆட்சியைக் கவிழ்க்கிறார். ஜெ மற்றும் ஜா என்று இரண்டாகப் பிளவுபடும் போது கட்சி இன்னமும் வலுவிழந்து போகுமென்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். உடைப்புக்கு ராஜீவின் கையும் உதவியிருக்கக் கூடும் என்பார்கள். மூத்தவர்களை விசாரித்தால் தெரியும்.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் 26 இடங்களை வென்றாலும் கூட அதைவிடக் கூடுதலாக வென்று ஜெயலலிதா தம் கட்டுகிறார். ஜானகி படுதோல்வி அடைந்து அரசியலிலிருந்தே ஒதுங்குவதும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு திமுக ஆட்சி நடப்பதும், எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த போது டெல்லியில் தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் வழியாக திமுகவின் ஆட்சியைக் கலைத்து, காங்கிரஸூடன் கூட்டணி வைத்து, ராஜீவ் மரணத்திற்குப் பிறகு அறுதிப் பெரும்பான்மையுடன் ஜெ ஆட்சியமைத்ததும் வரலாறு. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்குமே தெரிந்ததுதான்.
ஒருவேளை ராஜீவ் மட்டும் ஜானகியின் ஆட்சியைக் கலைக்காமல் இருந்திருந்தால் தமிழகத்தின் மொத்த வரலாறும் மாற்றி எழுதப்பட்டிருக்கக் கூடும். வரலாறு எந்தப் பாதையை எடுக்கும் என்று யாருமே கணிக்க முடிவதில்லை.
ராஜீவ் முன்பாக இருந்த அதே இரண்டு கருத்துக்கள்தான் இன்று மோடியின் முன்பாகவும் அமித்ஷாவின் முன்பாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பாக- 1988 ஆம் ஆண்டில் நிகழ்ந்த அரசியல் சூழல்தான் இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது. எம்.ஜி.ஆரைப் போலவே முதல்வராக இருக்கும் போதே ஜெயலலிதா மரணமடைந்திருக்கிறார். நெடுஞ்செழியனைப் போலவே ஓபிஎஸ் முதல்வராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருவேளை ஜானகியைப் போல இன்னொருவர் வருவாரா என்று மனம் யோசிக்காமல் இல்லை.
இனி நடக்கப்போவதுதான் அரசியல் விளையாட்டு.
ஒவ்வொரு வேட்டைக்காரர்களும் தமது அம்புகளைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கே வாய்ப்புக் கிடைக்கும் என்று குறி பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்பொழுது தமிழக அரசியலில் உருவாகியிருப்பது மிகப் பெரிய வெற்றிடம். எம்.ஜி.ஆர் இறந்த போது ஜெயாவா ஜானகியா என்ற கேள்வியாவது எழுந்தது. இப்பொழுது ‘யார் இருக்காங்க?’என்கிற கேள்விதான் பிரதானமாக இருக்கிறது. மக்களை ஈர்க்கக் கூடிய முகம் எதுவும் அதிமுக வசமில்லை. கூட்டத்தை ஈர்க்கும் தலைவர் என்று யாருமே இல்லை. இன்னமும் நான்கரை ஆண்டு ஆட்சி மிச்சமிருக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பாக்கியிருக்கிறது.
மிகப்பெரிய புதிர்கள் நம் முன்பாக சுழலத் தொடங்கியிருக்கின்றன.
இன்றைய அரசியலில் இதுதான் சரி, தவறு என்று எதையும் சொல்ல முடிவதில்லை. நல்லது என்று நினைக்கிற விஷயங்கள் கூடத் தோற்றுத்தான் போகின்றன. ஆக, சரி தவறு என்றும் எதுவுமில்லை; நல்லது கெட்டது என்றும் ஒன்றுமில்லை. வல்லவன் x பலவீனமானவன் என்கிற சூத்திரம்தான். வல்லவன் வெல்கிறான். இன்னொருவன் காணாமல் போகிறான். இந்த வேட்டைக்காட்டில் பாவ புண்ணியமெல்லாம் இல்லை. முதலில் குறி பார்த்து எதிரியை வீழ்த்துவார்கள். தமக்கான இடத்தை அடைந்தவுடன் வாளை எடுத்துக் கொண்டு கண்களை மூடியபடி சுழற்றுவார்கள். தமக்கு நிகராக எந்தத் தலையையும் உயரவிடாத இந்த வாள்வீச்சை நடத்துவதற்கான ஆடுகளம் தமிழக அரசியலில் உருவாகியிருக்கிறது. யாரெல்லாம் களத்துக்கு வருவார்கள் என்று மேம்போக்காகவாவது கணிக்க முடிகிறது.
காலையிலிருந்து ஜெயலலிதாவின் உடலைச் சுற்றி நிகழ்கிறவற்றை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகச் சாதாரணமாக பல விஷயங்கள் புரியக் கூடும். போயஸ் தோட்டத்திற்குள்ளேயே அனுமதியில்லாதவராக நம்பப்பட்ட நடராசன் பிரதமர் மோடி வந்த போது முதல் வணக்கம் சொல்கிறார். பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசன் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை இணைத்து வைக்கிறார். மேடையில் அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் என்று யாருமே மேடையில் இல்லை. பன்னீர்செல்வமும் கீழே படியில் அமர்ந்திருக்கிறார். மோடி அவரைத் தட்டிக் கொடுக்கிறார். ஓபிஎஸ் தலையைக் குனிந்து அழுகிறார். மோடி சசிகலாவிடம் செல்லும் போது மீண்டும் அங்கே ஓடிச் சென்று அதே போலத் தட்டு வாங்குகிறார். மோடி கிளம்பும் போது நடராசனிடம் மீண்டும் கைகொடுத்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார்.
‘துக்கம் விசாரிக்க வருமிடத்தில் இதெல்லாம் இயல்பாக நடக்க வாய்ப்பில்லையா?’ என்று யாராவது கேட்கக் கூடும். அப்படியே நம்புவோம். இவ்வளவு நாட்களும் அப்படித்தானே எல்லாவற்றையும் நம்பிக் கொண்டிருந்தோம்?
ஜெயலலிதா நலம் பெற்று கட்சியையும் ஆட்சியையும் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு தனது வாழ்க்கை வரலாறை எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஒருவேளை அதைச் செய்திருந்தால் இந்தியாவின் மிகச் சுவாரசியமான சுயசரிதையாக அது இருந்திருக்கும். குடும்பத்தை கவனிக்காத அப்பா, நடிகையாகிவிட்ட அம்மா, குடும்பப் பிரச்சினைகள், சினிமா, அரசியல், ஆட்சி, வழக்கு, கைது, சிறை என்று ஓடிக் கொண்டேயிருந்த மனுஷி அவர். கடந்த முப்பது வருடங்களாக அவரது சந்தோஷம் என்ன? துக்கம் என்ன? அழுத்தங்களும் பிரச்சினைகளும் என்னவென்று எப்பொழுதுமே பேசியதில்லை. பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்றாலும் அவர் பேசியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அவருடைய இயல்பான நேர்காணல்களும் சந்தோஷமான செய்தியாளர்கள் சந்திப்பும் முப்பது வருடங்களுக்கு முந்தயவை. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் யார் யாருக்காகவோ ஓடிக் கொண்டேயிருந்தவர் அவர். சற்றேனும் ஓய்வெடுத்திருக்கலாம். தன்னை மனதார நேசிக்கும் எளிய மனிதர்களிடம் பேசியிருக்கலாம்.
எப்பொழுதுமே நமக்கு வேறு எதிர்பார்ப்பு. அரசியல்வாதிகளுக்கு வேறு கணக்கு. எல்லோரையும் விட காலத்துக்கு இன்னொரு கணக்கு.
10 எதிர் சப்தங்கள்:
//இவ்வளவு நாட்களும் அப்படித்தானே எல்லாவற்றையும் நம்பிக் கொண்டிருந்தோம்?//
அடுத்த வேளைச் சோறு உறுதி என்னும் நிலை இருக்கும் வரை நம்புவோம்.
//போயஸ் தோட்டத்திற்குள்ளேயே அனுமதியில்லாதவராக நம்பப்பட்ட நடராசன் பிரதமர் மோடி வந்த போது முதல் வணக்கம் சொல்கிறார். பாரதிய ஜனதாக்கட்சியின் இல.கணேசன் மிகப் பிரயத்தனப்பட்டு அவர்களை இணைத்து வைக்கிறார். மேடையில் அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்கள் என்று யாருமே மேடையில் இல்லை. பன்னீர்செல்வமும் கீழே படியில் அமர்ந்திருக்கிறார். மோடி அவரைத் தட்டிக் கொடுக்கிறார். ஓபிஎஸ் தலையைக் குனிந்து அழுகிறார். மோடி சசிகலாவிடம் செல்லும் போது மீண்டும் அங்கே ஓடிச் சென்று அதே போலத் தட்டு வாங்குகிறார். மோடி கிளம்பும் போது நடராசனிடம் மீண்டும் கைகொடுத்துக் குலுக்கிவிட்டுச் செல்கிறார்.//
ரஜினியின் கலைப் பயணம் விரைவில் தொடங்க எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தியிடம் பிரார்த்திக்கிறார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
ஆனால் இவ்வாறெல்லாம் நடக்கும் டா நடக்க உட்ராதீங்க ன்னு அந்த புள்ள பிரான்ஸ் லேருந்து அப்பவே கத்திச்சு. யாரும் நம்பல.
"ஆக, சரி தவறு என்றும் எதுவுமில்லை; நல்லது கெட்டது என்றும் ஒன்றுமில்லை. வல்லவன் x பலவீனமானவன் என்கிற சூத்திரம்தான். வல்லவன் வெல்கிறான். இன்னொருவன் காணாமல் போகிறான். இந்த வேட்டைக்காட்டில் பாவ புண்ணியமெல்லாம் இல்லை"....... இயற்கையின் கணக்கு மிகவும் எளிமையானது, நாம்தான் அதை புரிந்துகொள்வதே இல்லை....... முதல்வரின் ஆத்மா இளைப்பாற எல்லாம் வல்ல இயற்கையை வேண்டுகிறேன்!
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தில் ஜானகி தோற்று போனார். ஜானகி வசம் 97/98 MLAs மட்டும் இருந்தனர்.
காங்கிரஸ் கடைசி நேரத்தில் ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. RMV அந்த நேரத்தில் DMK ஆதரவை கோரினார், ஆனால் கிடைக்கவில்லை. இது தான் வரலாறு.
காங்கிரஸ் ஆதரவு அளிக்க மறுத்தான் காரணம், மூப்பனார், ப சி போன்றவர்கள் "இது தான் காங்கிரஸுக்கு தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க நல்வாய்ய்பு" என்றதை, ராஜீவ் நம்பினார்.
// எம்ஜிஆர் காலத்தில் எம்.பியாக இருந்த போது டெல்லியில் தான் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புகளின் வழியாக.....உடைப்புக்கு ராஜீவின் கையும் உதவியிருக்கக் கூடும் என்பார்கள். //
இது சரியான வாக்கிய அமைப்பாக இருக்கும். பதில் தனியாக தேவையில்லை.
"சற்றேனும் ஓய்வெடுத்திருக்கலாம். தன்னை மனதார நேசிக்கும் எளிய மனிதர்களிடம் பேசியிருக்கலாம்". - மிக உண்மையான வரிகள். அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கும் அவருக்கும் என்ன உறவு? கண்ணீர் பொத்து கொண்டு வருகிறது!!! எவ்வளவு கட்டுப்படுத்தியும், மனம் ஏங்குகிறது. உயிருடன் ஒரு முறை கூட கண்ணில் காட்டாமல் செய்து விட்டார்களே!!!
"வாழ்க்கையில் கடைசிவரைக்கும் யார் யாருக்காகவோ ஓடிக் கொண்டேயிருந்தவர் அவர். சற்றேனும் ஓய்வெடுத்திருக்கலாம். தன்னை மனதார நேசிக்கும் எளிய மனிதர்களிடம் பேசியிருக்கலாம்."
Touching words...We expect it.
சட்டசபை அடிதடி, ஜெ. அவமானப் படுத்தப்பட்டது போன்றவை குறித்து விரிவாக எழுதியிருக்கலாம், இன்றைய புதிய தலைமுறைக்கு சரியான செய்தியைக் கொண்டு சேர்பதும் நம் கடமை
nice article sir.
the only mistake she did was not creating second line leaders due to the fear of them overtaking her. may be due to struggles, she decided not to allow anybody to rise in her period.
still her ruling authority is great.
nice article!!!
Post a Comment