Dec 9, 2016

அரசியல் சதுரங்கம்

தமிழக அரசியலில் சுவாரசியமான காட்சிகள் அரங்கேறத் தொடங்கியிருக்கின்றன. நிறையக் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. ஆனால் எதை நம்புவது எதை விடுவது என்றுதான் குழப்பமாக இருக்கிறது.

ஒவ்வொரு கட்சியும் வாள்வீச்சுக்குத் தயராகிக் கொண்டிருக்கின்றன.

ஜெயலலிதா உடல்நிலை மிகவும் பலவீனமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ஆம் தேதியன்று சென்னைக்கு வந்த வெங்கய்யா நாயுடு அடுத்த நாள் உடல் அடக்கம் செய்யும் வரைக்கும் இடத்தை விட்டு அசையாமல் தேவுடு காத்ததிலிருந்து பா.ஜ.கவின் அரசியல் வெளிப்படையாகத் தெரிகிறது. சசிகலா, அவரது குடும்பமெல்லாம் காத்திருக்கிறார்கள் என்றால் அர்த்தமிருக்கிறது. ஓபிஎஸ்ஸூம் அமைச்சர்களும் காத்திருந்தார்கள் என்றால் அதற்கு காரணமிருக்கிறது. வெங்கய்யா காருவுக்கு என்ன வியர்த்து வடிகிறது? ‘நட்பு சார்..நட்பு’ என்று யாராவது சொல்வார்கள். அப்படியே ஆகட்டும்.

எம்.ஜி.ஆர் மறைவின் போது நிலவிய சூழலையும் ஜெ. மறைந்த பிறகு உருவாகியிருக்கும் சூழலையும் இம்மிபிசகாமல் ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆர் மறைவின் போது கட்சியின் பிளவு மிகத் தெளிவாகத் தெரிந்தது. மூத்த அமைச்சர்கள் பலருக்கும் ஜெயலலிதா வேப்பங்காயாகத் தெரிந்தார். அவர் வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஜானகியுடன் கூட்டு சேர்ந்தார்கள். இன்னொரு பிரிவு ஜெயலலிதாவை தூக்கினார்கள். ‘ஜானகி-ஜெ., இருவரில் யார்?’ என்ற கேள்வி பிரதானமாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் பின்புலம் அரசியலின் போக்கை மாற்றின. வலுவானது தப்பிப்பிழைக்கும் என்ற தத்துவத்தின் படி ஜெயலலிதா மேலெழும்பினார். இன்றைக்கு நிலைமை அப்படியில்லை. சசிகலாவை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடிய அளவு தெம்பான அணி என்று இன்னமும் உருவாகவில்லை. அப்படி உருவாகுவதற்கான வாய்ப்பும் இருப்பது போலத் தெரியவில்லை. களம் தெளிவாக இருக்கிறது. ஒருவேளை யாரேனும் சிலர் சலசலப்பை உண்டாக்கினால் அவர்களை எளிதாக அடக்கிவிடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

தமக்கும் தமது குடும்பத்துக்கும் எதிராக நிற்கக் கூடியவர்கள் யார்? அவர்களை எங்கே அடித்து சுணக்கமடையச் செய்ய வேண்டும் என்ற கணக்குகள் தொடங்கியிருக்கின்றன.

ஜெயலலிதா கிடத்தப்பட்டிருந்த மேடையில் ‘சிந்து ரவிச்சந்திரன் எதுக்கு சுத்துறாரு?’ என்ற கேள்வியை கோபிச்செட்டிபாளையத்துக்காரர்கள் எழுப்பினார்கள். மற்ற ஊர்காரர்களுக்கு ரவிச்சந்திரனைத் அவரைத் தெரிய வாய்ப்பில்லை. அவர் தற்பொழுது எந்தப் பதவியிலும் இல்லாதவர். கட்சியிலும் ஓரமாக ஒதுங்கி நிற்கிறார். ஒரு காலத்தில் சிந்து ரவிச்சந்திரன் செங்கோட்டையனிடமிருந்துதான் அரசியலைத் தொடங்கினார். பிறகு செங்கோட்டையனுக்கு எதிராகவே தலையெடுத்தார். ஆனால் ஜெயலலிதாவினால் கே.ஏ.எஸ் தம் கட்டி தப்பிவிட்டார். சிந்து ரவிச்சந்திரன் மன்னார்குடி குழுவினரோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறவர் என்பது உள்ளூர்வாசிகளுக்குத் தெரியும். சசிகலாவின் உறவினர்களால் மட்டும் நிரம்பி வழிந்த மேடையில் இடம் பெற்றிருந்த சிந்து ரவிச்சந்திரன் சாதியில் தேவர் இல்லை; கட்சியில் எந்தப் பொறுப்புமில்லை. எம்.எல்.ஏவோ, எம்.பியோ அல்லது வாரியத்தலைவரோ கூட இல்லை. ஆனால் அவரை ஏன் மேடையில் அனுமதித்தார்கள் என்றால் செங்கோட்டையனுக்கான ‘செக்’ என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

ஜெயலலிதா மிகத் திறமையானவர்தான். அறிவாளிதான். ஆனால் இன்றைய ஜெயலலிதாவின் ஆளுமை ஜெயலலிதாவினால் மட்டுமே உருவானதில்லை. கடந்த முப்பதாண்டு காலமாக அவரது பின்புலமாகத் திகழ்ந்த சசிகலாவுக்கு ஜெயலலிதாவின் ஆளுமை செதுக்கப்பட்டதில் பெரிய பங்கு இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஜெயலலிதாவின் முழுக்கட்டுப்பாட்டில் மட்டும்தான் இத்தனை நாட்களும் கட்சி இருந்தது என்று நம்ப வேண்டுமா என்ன? ஜெயலலிதாவின் முகத்துக்குப் பின்னால் சசிகலாவின் வழியாக உருவாக்கப்பட்ட மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கிறது. அந்த நெட்வொர்க் கிட்டத்தட்ட மொத்தத் தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. பொருளாதாரச் செல்வாக்கும், ஆட்களின் தொடர்பும், அதிகாரத்தின் அடிமட்டம் வரைக்கும் நீளக் கூடிய வீச்சும் அவர்களிடம் இருக்கிறது. இப்படி சகலத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டிருப்பவர்கள் வேறொரு மனிதர் கட்சியை ஆக்கிரமிக்க எப்படி அனுமதிப்பார்கள்? இன்றைக்கு ஜெயலலிதா என்ற முகத்துக்குப் பதிலாக சசிகலா என்ற முகம் மாற்றப்படுவதற்கான எல்லாவிதமான வாய்ப்புகளும் தருணமும் உருவாகியிருக்கிறது.

சசிகலா கட்சியின் தலைமை ஏற்பதற்கு கட்சிக்குள்ளிருந்து பெரிய எதிர்ப்பு இருக்காது. ஆனால் பாஜக அவ்வளவு எளிதில் விட்டுவிடாது என்றுதான் தோன்றுகிறது. சசிகலாவின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியும் ஆட்சியும் வருகிறபட்சத்தில் மிச்சமிருக்கிற நான்கரை ஆண்டு காலத்தில் அவரால் தன்னை அதிமுகவில் ஸ்திரப்படுத்திக் கொள்ள முடியும். தமிழகத்தைப் பொறுத்தவரையிலும் அதிமுக அல்லது திமுக என்கிற நிலைமை அப்படியே தொடரும். அதை நிச்சயமாக பாஜக விரும்பாது. அதே சமயம் சசிகலாவின் தலைமையைத்தான் திமுகவும் காங்கிரஸூம் கூட விரும்பும். பாஜகவை உள்ளே வரவிடாமல் தடுக்க இப்போதைக்கு அதுதான் வழி. ஒருவேளை சசிகலாவின் காலடி வழுக்குமானால் இன்றைய சூழலில் அது பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்பதை திமுகவும் காங்கிரஸும் புரிந்து வைத்திருப்பார்கள். ‘சசிகலா குறித்தான வதந்திகள் தேவையற்றவை’ என்ற திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அறிக்கையின் பின்னணியை இதிலிருந்துதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பா.ஜ.க உள்ளே வந்துவிடக் கூடாது என்கிற பதற்றமில்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

இப்போதைக்கு பா.ஜ.க உள்ளே நுழையாமல் தடுத்துவிட்டால் போதும் பிறகு சசிகலா தலைமையிலான அதிமுகவை வென்றுவிடலாம் என்பதுதான் பிரதான எதிர்கட்சிகளின் கணக்கு என்றால் சசிகலா தரப்பைப் பொறுத்தவரையிலும் லகான் கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதுதான் நோக்கம். இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சிக்காலம் பாக்கியிருக்கிறது. காசை வாங்கிக் கொண்டு வாக்களிக்க மக்களைப் பழக்கி வைத்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது. எப்படியும் எதிர்நீச்சல் போட்டுவிடலாம் என்று நம்பக் கூடும்.  

கிட்டத்தட்ட தென்னகம் முழுவதும் கால் பதித்துவிட்ட பா.ஜ.க தமிழகத்தில் மட்டும்தான் திணறிக் கொண்டிருக்கிறது. துளி இடம் கிடைத்தாலும் காலை அழுந்தப் பதிக்கத்தான் அது முனையும். அதற்கான முஸ்தீபுகளாகத்தான் இரண்டு நாட்களாக வெங்கய்யா நாயுடு தேவுடு காத்ததிலிருந்து சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டு வரைக்கும் எல்லாவற்றையும் கோர்க்கலாம். பா.ஜக தரப்பு அவர்கள் யாரை அதிமுகவின் தலைமைப்பதவிக்கு விரும்புகிறார்கள் என்று நாமாகச் சொல்வது யூகமாகத்தான் இருக்கும். ஆனால் நிச்சயமாக சசிகலாவின் தலைமையை விரும்பமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். சற்றேறக்குறைய முப்பதாண்டுகளாக மெல்ல தமது பிடிக்குள் கட்சியைக் கொண்டுவந்துவிட்ட சசிகலாவின் கைப்பிடி நழுவ நழுவத்தான் அதிமுகவினால் உண்டாகக் கூடிய வெற்றிடத்தை தமக்கானதாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை பாஜக புரிந்து வைத்திருக்கமாட்டார்களா என்ன?

இனி திமுக என்ன செய்யப் போகிறது? பாஜக எப்படி காய் நகர்த்தப் போகிறது? எப்படி படிய வைக்கப் போகிறது? சசிகலா தரப்பு எப்படி திமிறப் போகிறது? கடைசியில் யார் ஓரங்கட்டப்படப் போகிறார்கள் என நிறைய இருக்கின்றன.

என்னவிதமான பேரங்கள் நடக்கின்றன, அழுத்தங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதெல்லாம் அப்பட்டமாக வெளியில் தெரிவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் நடக்கின்ற சம்பவங்கள், அரசியல் ஆட்டங்களின் வழியாக நாம் ஒவ்வொருவரும் சுவாரஸியமான யூகங்களை உருவாக்க முடியும். ‘இதுதான் நடக்கிறது’ என்று உறுதியாகச் சொல்ல முடியாத ஆனால் இதெல்லாம் நடக்கக் கூடும் என்கிற சுவாரஸிய அரசியல் யூகங்களை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக எழுதத் தொடங்கியிருக்கின்றன.

ரசிக்க வேண்டியதுதான்.

3 எதிர் சப்தங்கள்:

Aravind said...

lets geared up for சின்னம்மா second innings. already, slowly media is making her popular as சின்னம்மா and amma's வாரிசு.

சேக்காளி said...

சுவாதி
ராம்குமார்
ஜெயலலிதா
.
வியாபமாக தொடராமல் இருக்கவேண்டும்.

சேக்காளி said...

//மெல்ல தமது பிடிக்குள் கட்சியைக் கொண்டுவந்துவிட்ட சசிகலா//
மக்களை கொண்டு வர வேண்டுமே.
மருத்துவமனையில் நடந்தது என்ன என்பது தெரியாத வரையில் அது சாத்தியப்படுமா?.