Dec 11, 2016

நவம்பர்’ 2016

நிசப்தம் அறக்கட்டளையின் நவம்பர் மாத வரவு செலவை பத்து நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்திருக்க வேண்டும். கடந்த மாதம் ஜிமெயில், ஃபேஸ்புக் என எல்லாவற்றின் கடவுச்சொல்லையும் மாற்றினேன். ஒவ்வொன்றுக்கும் ஒன்று. கடைசியில் பரோடா வங்கியின் கடவுச் சொல்லை மறந்துவிட்டேன். ஒரு ரகசியக் கேள்வி இருக்குமல்லவா? அதற்கான பதிலும் மறந்து போனது. இரண்டு மூன்று முறை முயற்சித்துவிட்டு கணக்கு பூட்டப்பட்டுவிடக் கூடும் என்று விட்டுவிட்டேன். 

எங்கேயாவது எழுதி பத்திரமாக வைக்க வேண்டும். 

சிங்கப்பூரிலிருந்து யாரோ ஒரு நண்பர் நினைவூட்டி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். யாராவது இப்படி நினைவில் வைத்திருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அறக்கட்டளை குறித்து, வரவு செலவு குறித்து யாருமே எதுவுமே கேட்பதில்லை என்பது ஒரு வகையில் சுதந்திரம் என்றாலும் கூட அவ்வப்போது சற்று சங்கடமாகவும் இருக்கும். குறுஞ்செய்தியைப் பார்த்தவுடன் உடனடியாக வங்கியின் கால் செண்ட்டரை அழைத்து கடவுச் சொல்லை மீட்டெடுத்திருக்கிறேன்.


வரவு விவரங்கள் தெளிவாக இருக்கின்றன. யார் எவ்வளவு கொடுத்திருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளலாம். 

வரிசை எண் 9 இல் இருப்பது வைபவ் கிருஷ்ணா என்ற சரியான வளர்ச்சியடையாத குழந்தையின் குடும்பத்துக்கு அவனைப் பராமரிப்பதற்காக வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்புத் தொகை.

வரிசை எண் 18: எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட தொகை. இது குறித்து தனியாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. அப்பல்லோ என்பதால் அழுத்தம் திருத்தமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. 

வரிசை எண் 19: எம்.ஜி.ஆர் காலனி குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். கழைக் கூத்தாடிகளின் குடும்பங்கள் வாழும் காலனி. கடந்த முறை இவர்கள் விளையாட்டுச் சங்கம் நடத்திய போட்டிகளுக்குச் சென்ற போது நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து போக்குவரத்துச் செலவை வழங்கியிருந்தோம். இந்த முறை அரசு நடத்தும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு ஆறு மாணவர்கள் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் விளையாட்டுக்காகச் செல்கிறார்கள். போக்குவரத்துக்கு அரசாங்கமே உதவிவிடும். ஆனால் தொகை வர தாமதாகும் என்பதால் யாரிடமாவது கடனாக வாங்கிச் செல்கிறார்கள். பணம் வந்தவுடன் திருப்பித் தந்துவிடுவதாகச் சொன்னார்கள். நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து முப்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இன்னொரு குழுவுக்கு இருபதாயிரம் வழங்க வேண்டும். அதை டிசம்பர் மாதத்தில் வழங்குவதாகச் சொல்லியிருக்கிறேன். தொகையானது தலைமையாசிரியரின் கணக்கில் கொடுக்கப்பட்டிருக்கிறது. திருப்பித் தருவது அவருடைய பொறுப்பு. மொத்தம் ஐம்பதாயிரம் ரூபாய் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறக்கட்டளையின் கணக்குக்குத் திரும்ப வந்துவிடும். ஆக, இது உதவித் தொகையாக இல்லை.

இது தவிர நிரந்தர வைப்பு நிதியில் பதினேழு லட்ச ரூபாய் இருக்கிறது.

டிசம்பர் மாதம் நிறையப் பேருக்கு உதவ வேண்டியிருக்கிறது. காசோலைகளை ஒவ்வொன்றாகக் கொடுத்துவிடலாம். நம்மைச் சுற்றி என்னவோ நடந்துவிட்டுப் போகட்டும். அரசியல், விளையாட்டு, சினிமா என்று எங்கு வேண்டுமானாலும் என்னவோ நடந்துவிட்டு போகட்டும். அதையெல்லாம் கவனித்துக் கொண்டே நமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையைச் செய்து கொண்டேயிருப்பதில் ஒரு திருப்தி இருக்கிறது. காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்.

பிழைக்கவும் மேலேறவும் பலரும் முயற்சித்துக் கொண்டேயிருக்கும் இந்த நாட்டில்தான் பற்றுக் கோல் இல்லாத பல லட்சம் பேர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். கேட்க நாதியற்ற மனிதர்கள் தேசமெங்கும் சிதறிக் கிடக்கிறார்கள். மேலே இருக்கிறவன் காட்டுகிற வித்தையில்தான் சுவாரசியமிருக்கிறது. கிளுகிளுப்பு நிறைந்திருக்கிறது. அதனால்தான் அத்தனை பேரும் மேலே பார்த்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் நம்முடைய கவனம் கீழே இருக்கிறவர்கள் மீதுதான் இருக்க வேண்டும். அவர்களுடைய கண்ணீரும் வறுமையும் சுவாரஸியமற்றவைதான். ஆனால் அவர்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள். நம்முடைய கவனத்தைக் கோருகிறவர்கள்.

ஏதேனும் சந்தேகங்கள் கேள்விகள் இருப்பின் கேட்கவும்.

nisapthamtrust@gmail.com

0 எதிர் சப்தங்கள்: