Nov 30, 2016

கொண்டாட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்பாக மகனுக்கு பிறந்த நாள் வந்தது. ஏழு வயது முடிந்து எட்டு பிறக்கிறது. நான் பள்ளிக் கூடத்தில் படித்த போது பிறந்த நாள் என்றால் ஆரஞ்சு மிட்டாய் ஒரு பொட்டலம் வாங்கிக் கொடுத்து அனுப்புவார்கள். பத்து ரூபாய் கூட ஆகாது. வீட்டில் அம்மா கேசரி செய்து கொடுப்பார். ரவை கால்கிலோ; சர்க்கரை நூறு கிராம். அதோடு வேலை முடிந்தது. இப்பொழுது எங்கே கேட்கிறார்கள்? ‘அம்மா இவங்களையெல்லாம் கூப்பிடுங்க’ என்று பட்டியல் கொடுத்திருக்கிறான். அவனை யாரெல்லாம் தங்களது பிறந்தநாளுக்கு அழைக்கிறார்களோ அவர்களையெல்லாம் பட்டியலில் சேர்த்திருந்தான்.

ஆறேழு வீடுகள். ஞாயிற்றுக்கிழமை தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி ‘இன்வைட் பண்ண போலாம்’ என்று இழுத்துச் சென்றார்கள். ‘எல்லோரும் வந்துடுங்க’ என்று சொல்லும் போதெல்லாம் ‘யாரோ ஒருத்தர் மட்டும் வாங்க’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு விருந்தினர்கள் வருவதும் போவதும் நல்லதுதான். ஆனால் கூட்டம் கூட்டமாக வந்தால் அலர்ஜி. ஒவ்வொருவராக வந்தால் ஆற அமர பேசலாம். படை திரண்டு வந்தால் என்ன பேசுகிற மாதிரி இருக்கிறது? திருமண விருந்துகளுக்குப் போகும் போதும் அப்படித்தான். வரவேற்பில் நின்று ஒரு வணக்கம். அடுத்து நேரடியாகப் பந்திதான். எங்கள் ஊர்ப்பக்கமெல்லாம் ‘பஃபே இல்லாம என்னங்க விருந்து’ என்று கேட்கிறார்கள். காணாத நாய் கருவாட்டைக் கண்ட மாதிரி எல்லாவற்றையும் தட்டில் வாங்கி வைத்துக் கொண்டு கொறித்துப் பார்த்துவிட்டு அப்படியே தட்டத்தோடு குப்பைக் கூடையில் போட்டுவிட்டு இன்னொரு புதுத் தட்டத்தை எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஒவ்வொரு ஆளுக்கும் இரண்டு மூன்று தண்ணீர் பாட்டில்கள். ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு தனியாக ஒரு ப்ளாஸ்டிக் குடுவை. எல்லாவற்றையும் செய்துவிட்டு ‘என்னப்பா ஊர்ல மழையே இல்லையே’ என்பார்கள். நம்முடைய நாகரிக கொண்டாட்டங்கள் எதுவுமே சூழலியலுக்கு எதிரானவைதான்.

அது போகட்டும். 

வெட்டுவதற்கு ப்ளாக் ஃபாரஸ்ட் கேக், வீட்டில் ஒட்டுவதற்கு பலூன்கள், வண்ணக் காகிதங்கள், வருகிறவர்களுக்கு சுட்டுத் தர பஜ்ஜி மிக்ஸ், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வரும் குழந்தைகளுக்குத் தருவதற்கென அன்பளிப்புகள் என்று சட்டைப் பையில் பெரிய ஓட்டை. ‘அவங்கதானே நம்ம பையனுக்குத் தரணும்?’என்று கேட்டால் ‘நாமும்தான் தரணும்’ என்கிறார்கள். புதிது புதிதாகக் கண்டுபிடிக்கிறார்கள். 

‘சரி வருஷத்துல ஒரு நாள்தான?’ என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளலாம்தான். மீறி ஏதாவது பேசினால் பாராளுமன்றமே முடக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. ‘அவனவன் எப்படி கொண்டாடுகிறான்’ என்று எதிர்கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது. பதாகைகள் வைத்து, மண்டபத்தில் ஊரையே கூட்டி விருந்து போடுகிறார்கள். எத்தனையாவது பிறந்தநாள் என்று கேட்டால் ஒன்றாவது பிறந்தநாளாக இருக்கும் அல்லது இரண்டாவது பிறந்தநாளாக இருக்கும். 

எனக்கு ஏப்ரல் மாதம் பிறந்த நாள். வருடம் தவறாமல் தேர்வு சமயத்திலேயே வந்து தொலைக்கும்.  போதாக்குறைக்கு ‘பொறந்தநாள்ல என்ன வேலையைச் செய்யறோமோ அதையேதான் அந்த வருடம் பூராவும் செய்வோம்’ என்று மூடநம்பிக்கையை உருவேற்றி வைத்திருந்தார்கள். அதனால் அன்றைய தினம் முழுவதும் கணக்கையும் அறிவியலும் வைத்து மண்டை காய்ந்தே ஒவ்வொரு வருடமும்  பிறந்த நாளைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். அன்றைய தினம் படித்தால்தான் வருடம் முழுவதும் படித்து அறிவு வளருமாம். இப்படி சொம்பையாக இருந்தவனை முட்டைக் கண்ணன் கதிர்வேல்தான் ஒரு பிறந்தநாளின் போது வெகு பிரயத்தனங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்துவிட முயற்சித்தான். கண்களை மட்டுமில்லை.

‘மாப்ள...சாந்தி தியேட்டர்ல படம் பார்க்கலாம்’ என்றான். தமிழகத்தின் முக்கால்வாசி ஊர்களில் சாந்தி திரையரங்கு என்றால் கசமுசாதான். எங்கள் ஊரிலும் அப்படித்தான். பெயர் ராசி போலிருக்கிறது.

படத்தின் பெயர் இன்னமும் நினைவில் இருக்கிறது. Seven nights in beverly Hills. படத்தின் பெயரை மனனம் செய்யவே வெகு நேரம் பிடித்தது. ஆங்கிலப்படம். ‘வசனமா முக்கியம் படத்தை பாருடா’ வகையறா. வீட்டிலிருந்து வரும் போதே பைக்குள் வண்ணச் சட்டை ஒன்றை எடுத்து ஒளித்து வைத்து வரச் சொல்லியிருந்தான். அப்படியே சென்றிருந்தேன். மதியம் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து திரையரங்குக்கு அருகில் இருக்கும் தண்ணீர் தொட்டி வளாகத்துக்குள் நுழைந்து துணியை மாற்றிக் கொண்டோம். முட்டைக்கண்ணன் வெகு தைரியமாக இருந்தான். எனக்குத்தான் நடுக்கம். திரையரங்கிலிருந்து வெகு தூரம் தாண்டித்தான் அவனுடைய வீடு இருந்தது. பிரச்சினையில்லை. எனக்கு அப்படியில்லை. ஒன்றரை கிலோமீட்டர்தான். எவனாவது பார்த்து போட்டுக் கொடுத்துவிட்டால் விவகாரம் ஆகிவிடும். தொலைத்து தோசை வைத்து மாற்றிவிடுவார்கள்.

திரையரங்குக்கு வெளியில் நின்று எவ்வளவு பம்ம முடியுமோ அவ்வளவு பம்மினேன். முட்டைக்கண்ணனே நுழைவுச்சீட்டை வாங்கிவிட்டு சைகை செய்தான். அவன் அழைத்தவுடன் எங்கேயோ வேடிக்கை பார்ப்பது போல பார்த்துக் கொண்டே நடந்து விசுக்கென்று திரையரங்குக்குள் உள்ளே நுழைந்துவிட்டேன். அப்பொழுது அந்தப் பகுதியில் கடைகள் எதுவுமில்லை. சாலையில் போகிற வருகிற ஆட்கள் பார்த்தால்தான் உண்டு. யாரும் பார்க்கவில்லை. உள்ளே போய் அமர்ந்தவுடன் மொட்டைக்கண்ணன் அதகளத்தை ஆரம்பித்தான். பெரிய மனுஷத் தோரணை வந்திருந்தது. ரவுடியைப் போல அவனது உடல்மொழி மாறத் தொடங்கியிருந்தது. கால்களைத் தூக்கி முன்னிருக்கை மீது போட்டான். ட்ரவுசரிலிருந்த பீடியை பற்ற வைத்து இழுத்தான். விசிலடித்தான். 

‘டேய்...படத்தை போட்றா’

‘டேய்...ஃபேனைப் போட்றா’ என்று கத்திக் கொண்டிருந்தவன் திடீரென்று கெட்ட வார்த்தைகளை வரிசையாக விட்டான். திரையரங்கில் நாற்பது ஐம்பது பேர்தான் இருந்திருப்போம். ஆளாளுக்குக் கத்திக் கொண்டிருந்தார்கள்.

சில நிமிடங்கள்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன.

நல்லவேளையாக தேசிய கீதமெல்லாம் ஒலிக்கவில்லை. நேரடியாக படத்தின் பெயர் ஓடத் தொடங்கியது. எனக்கு ரத்தம் உடலுக்குள் தறிகெட்டு ஓடிக் கொண்டிருந்தது. என்ன ஆகுமோ என்று அவ்வளவு ஆவல். முதல் காட்சி. வெள்ளைக்காரி வந்து நின்றாள். ஒருவன் பேசியபடியே அருகில் எழுந்து வந்து ஆடைகள் மீது கை வைத்தான். எனக்கு மயக்கம் வருவது போல இருந்தது. கண்களைச் சுழற்றியது. ஆனால் ஆடைகளைக் களையக் கூடவில்லை. துண்டித்துவிட்டு அடுத்த காட்சியை ஓட்டினார்கள். ‘டேய்.....கட் பண்ணாதடா’ என்று யாரோ கத்தவும் கதிரானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான். நானும் அவர்களோடு சேர்ந்து கத்தினேன். இதெல்லாம் நடந்த போது நாங்கள் வயதுக்குக் கூட வந்திருக்கவில்லை. பதின்மூன்று அல்லது பதினான்கு வயது. ஏழாவதோ எட்டாவதோ. இடைவேளை வரைக்கும் இப்படித்தான் இருக்குமென்றும் இடைவேளை முடிந்த பிறகு தனியாக பிட் ஓட்டுவார்கள் என்றும் முட்டைக்கண்ணன் முன்பே சொல்லி வைத்திருந்தான். அந்த பதினைந்து நிமிடங்கள்தான் உச்சகட்டம். பிறகு அவரவருக்கு விருப்பமான நேரத்தில் எழுந்து வந்துவிட வேண்டும்.

இன்னும் இடைவேளையே வரவில்லை பிறகு எதற்கு இப்பொழுதே கத்துகிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கிடைத்த வரைக்கும் இலாபம் என்பதற்காகக் கத்திக் கொண்டிருந்தாரக்ள். பென்ச் மீது ஏறி முட்டைக்கண்ணன் ஆடிக் கொண்டிருந்தான். வெகு தூரத்திலிருந்து ஒரு முரட்டு உருவம் எங்களை நோக்கி வந்தது. தியேட்டர்க்காரன் என்றுதான் நினைத்தேன். ஆனால் பக்கத்தில் வரவும்தான் தெரிந்தது. கதிரானின் அண்ணன். செத்தான் என்று நினைப்பதற்குள் நான்கைந்து பென்ச் இன்னுமிரண்டு ஆட்களின் தோள் மீதெல்லாம் ஏறி வெளியே ஓடிவிட்டான். சிக்கினால் அவனுடைய அண்ணன் என்னையும் மொக்கிவிடுவான். நானும் ஒரே ஓட்டம்தான். தலை தெறிக்க ஓடி தியேட்டருக்கு வெளியே வரும் போது முன்பு போலவே சம்பந்தமேயில்லாதது போல வீட்டுப் பக்கமாக ஓடிவிட்டேன். 

‘இனி இந்த வருடம் பூராவும் எவனாவது துரத்துவான்’ என்று நினைத்த போது வருத்தமாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கு முட்டைக்கண்ணன் பள்ளிக் கூடத்துக்கே வரவில்லை. மீண்டு வந்தவன் பிரித்து மேய்ந்துவிட்டதாகச் சொன்னான். ‘உங்க வீட்லயும் வந்து போட்டுக் கொடுக்கிறதா சொல்லியிருக்காண்டா’ என்று பற்ற வைத்தான். வெகு நாட்களுக்கு வயிறு கபகபவென்று எரிந்து கொண்டேயிருந்தது. நல்லவேளையாக விபரீதம் எதுவும் நடக்கவில்லை. இல்லையென்றால் பார்க்காத படத்துக்கு பழியை ஏற்ற கதையாகியிருக்கும். அப்பொழுது முடிவு செய்ததுதான் - உள்ளூரில் கசமுசா படங்களையே பார்க்கக் கூடாது என்று. அதன் பிறகு ஈரோடு அபிராமியில்தான் அடுத்த படம்.

விரிவாகச் சொல்லலாம்தான். பொல்லாப்பு ஆகிவிடும்.

மகனின் பிறந்தநாள் கதையை ஆரம்பித்து சூழல் சமூகம் என்றெல்லாம் பொங்கல் வைத்து அபிராமி தியேட்டரில் முடித்திருக்கிறேன். அயோக்கியப்பயல்.

என்ன செய்வது? ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலைகளைச் செய்திருக்கிறேன். செய்யாத திருட்டுத்தனமில்லை. எதை பேச நினைத்தாலும் முன்பு எப்போதோ செய்த ஏதாவதொன்று நினைவில் வந்து சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்கிறது. யாராவது பெரிய தடியாக எடுத்து வந்து பின்னந்தலையில் அடித்தால் ஒருவேளை எல்லாம் மறந்து போகக் கூடும். அதுவரைக்கும் இப்படித்தான்.

7 எதிர் சப்தங்கள்:

Unknown said...

நாங்கல்லாம் வெளியே சொல்லலே,நீங்க சொல்லிட்டீங்க அவ்வளவுதான் தம்பி போங்க.

Unknown said...

துள்ளுவதோ இளமை பார்ட் 2 எடுக்கற அளவுக்கு நிறைய மேட்டர் வச்சிருக்கீங்க போல...

viswa said...

இந்த ஏக்கங்களும் தாபங்களும் மறைந்து போவது தான் மிகுந்த வருத்தத்தை தருகின்றன

விஸ்வநாதன்

Aravind said...

தல ஒரு டவுட்டு, உங்க பிரண்டு அந்நனுக்கு அண்த டியட்டருக்குள் என்ன வேலை?

பெரோஸ் said...

நல்லவேளையாக தேசிய கீதமெல்லாம் ஒலிக்கவில்லை... Ultimate timely punch. :)

சேக்காளி said...

//மகனின் பிறந்தநாள் கதையை ஆரம்பித்து சூழல் சமூகம் என்றெல்லாம் பொங்கல் வைத்து அபிராமி தியேட்டரில் முடித்திருக்கிறேன். அயோக்கியப்பயல்//
அடுத்த வருசம் மகளின் பிறந்தநாள் கதையை ஆரம்பித்து சூழல் சமூகம் என்றெல்லாம் பொங்கல் வைத்து அபிராமி தியேட்டரில் முடிக்கும் கட்டுரையை எதிர்பார்க்கலாமா?.

iK Way said...

எங்கூர்ல (நடிகர் திலகம்) சிவாஜியோட தியேட்டர் பேரு சாந்தி கமலா - அப்பவே மல்ட்டிப்ளெக்ஸ்!

http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/1-3-2-1.html