Dec 8, 2016

சல்லி

குழந்தைகளின் முக்கால்வாசி கேள்விகளுக்கு நமக்கு பதில் தெரியும். கால் வாசி கேள்விகளுக்கு பதில் தெரியாது. ஆனால் அவை சுவாரஸியமான கேள்விகளாக இருக்கும். நாம்தான் வேறு வேலைகளில் இருக்கும் போது எதையாவது சொல்லித் தட்டிக் கழித்துவிடுவோம். மகி கடந்த வாரத்தில் ஒரு நாள் ‘அணுவுக்கும் மூலக்கூறுக்கும் என்ன வித்தியாசம்?’ என்றான். இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு அது மிகப்பெரிய கேள்வி. பள்ளியில் சொல்லித் தந்திருக்கிறார்கள். அணு என்றால் தனி. மூலக்கூறு என்றால் இரண்டு மூன்று அணுக்கள் சேர்ந்தது என்று எந்தக் காலத்திலேயோ படித்தது ஞாபகம் இருந்தது. அவன் கேட்ட ஒற்றைக் கேள்வியிலிருந்து நூறு விவரங்களை அவனுக்குச் சொல்லித் தர முடியும். அணு எண் என்றால் என்ன? அணு நிறை என்றால் என்ன என்றெல்லாம் படித்திருக்கிறேன்தான். ஆனால் மறந்துவிட்டது. அவன் கேள்வி கேட்டதற்காகவாவது எல்லாவற்றையும் ஒரு முறை புரட்டிப் பார்த்துவிட வேண்டும் எனத் தோன்றியது. 

குழந்தைகள் கேட்கும் போது தவிர்த்துவிடாதீர்கள் என ஒரு கட்டுரையில் வாசித்த பிறகு அவன் எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாமல் தட்டிக் கழிப்பதில்லை. முன்பெல்லாம் தவிர்த்திருக்கிறேன். ஏதாவதொரு முசுவில் ‘அப்புறம் சொல்லுறேன்’ என்று சொல்லியிருக்கிறேன். கவனித்துப் பார்த்தால் எந்தச் சலிப்புமில்லாமல் நகர்ந்துவிடுவான். இப்படி பதில் சொல்லாமல் தவிர்த்துக் கொண்டேயிருந்தால் குழந்தைகள் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து விலகிவிடுவார்கள். ‘அப்பா பிஸி’ ‘அம்மா பிஸி’ என்ற எண்ணம் மட்டும் அவர்களுக்கு மனதில் வரவே கூடாது. அதன் பிறகு தமக்கு வேறு எங்கே பதில் கிடைக்கும் என்று யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள். பதினான்கு பதினைந்து வயதுகளில் குழந்தைகள் நம்மைவிட்டு வெகுதூரம் சென்றுவிடுவதற்கு இதுதான் அடிப்படையான காரணம்.  வளர்ந்த பிறகு நம்மிடம் அவர்களது காதல் குறித்துச் சொல்லவில்லை என்றெல்லாம் புலம்பிப் பலனே இல்லை. காதலை மட்டுமில்லை- எதையுமே சொல்ல மாட்டார்கள். குழந்தைகளுக்கும் நமக்குமான இடைவெளி நம்மால்தான் உருவாக்கப்படுகிறது.

குழந்தைகளின் கேள்விகள் அவர்களுக்கான பதில்களை மட்டும் உருவாக்குவதில்லை. நமக்கான தேடல்களையும் உருவாக்குகிறது. 

சில நாட்களுக்கு முன்பு இயல்பாகப் பேசிக் கொண்டிருந்த போது ‘உலகத்திலேயே செம உயரமா பறக்குற பறவை என்ன?’ என்றான். பதில் தெரியவில்லை. இணையத்தில் துழாவிய போது ஒரு பருந்தைக் குறிப்பிட்டிருந்தார்கள். 37000 அடி உயரத்தில் பறக்கக் கூடிய பறவை அது. ‘அவ்வளவு உயரத்துல பறக்கும் போது ஏரோப்ளேன்ல மோதாதா?’ என்றான். மோதும்தான். இதைச் சொன்னால் இன்னொரு கேள்வியைக் கேட்கக் கூடும். பறவைகள் மோதிய விமான விபத்துக்களைத் தேட மனம் பரபரத்தது. தேடத் தொடங்கிய போது ‘சல்லி’யில் போய் நின்றது. Sully.


சமீபத்தில் வெளியான படம். இணையத்தில் கிடைக்கிறது.

மேலாளர் ஒருவர் இருக்கிறார். ‘ஏம்ப்பா இப்படி புதுப்படத்தைப் பத்தி எழுதி அது நெட்லேயும் இருக்குதுன்னு சொன்னீன்னா வேவாரம் கெட்டுப் போவாதா?’ என்றார். கலாய்க்கிறாரோ என்று சந்தேகமாக இருந்தது. முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டுதான் கேட்டார். மீறிப் போனால் இரண்டாயிரம் பேர் பார்க்கக் கூடும். இரண்டாயிரம் எனபதே கூடப் பேராசைதான். பல கோடி ரூபாய் புரளுகிற ஹாலிவுட் வர்த்தகத்தில் நாம் எழுதுவதால் இணையத்தில் தேடிப் பார்க்கிற ஆயிரம் ஐநூறு பேர்தான் வேவாரத்தைக் கெடுக்கிறார்களா? ஆளாளுக்கு ஒரு நம்பிக்கை. ஒருவேளை, இவன் எழுதினால் லட்சக்கணக்கான பேர் படம் பார்த்துவிடுவார்கள் என்று அவர் நம்பிக் கொண்டிருக்கக் கூடும். இருப்பதிலேயே பெரிய பாவம் இன்னொருவரின் நம்பிக்கையை அடித்து நொறுக்குவதுதான் என்பதால் அந்த நம்பிக்கை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்.  

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு விமானம் ஒன்று 155 பேருடன் பறக்கத் தொடங்குகிறது. விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் - சுமார் மூன்றாயிரம் அடி உயரத்தில்- பறவைகள் கூட்டம் பறக்கிறது. விமானி ‘பேர்ட்ஸ்’ என்று கத்துகிறார். அதற்குள் விமானத்தின் இரண்டு எந்திரங்களும் பழுதடைந்துவிடுகிறது. திரும்பித் தரையிறங்குவது சாத்தியமில்லை. விமானியும் துணை விமானியும் விமானத்தைக் கொண்டு போய் ஹட்சன் நதியில் இறக்குகிறார்கள். வெளியில் கடுங்குளிர். நீர் சில்லிட்டுக் கிடக்கிறது. ஒவ்வொருவராக வெளியே வருகிறார்கள். ஆனால் அத்தனை பேரையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுவிடுகிறார்கள். விமானி தப்பித்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து வரச் சொல்கிறார். ‘155’ என்கிறார்கள். பிறகுதான் விமானி ஆசுவாசமாகிறார். ஒரு ஆள் கூட உயிரிழக்கவில்லை.

உலக விமான விபத்துகளில் இதுவொரு வரலாறு ஆகிறது. விமானவியல் பாதுகாப்பு நிறுவனங்கள் அலசி ஆய்கின்றன. விமானி ‘ஓவர் நைட்’ நாயகன் ஆகிறார்.

செஸ்லி சல்லன்பர்கர்தான் விமானி. அன்றிலிருந்தே அமெரிக்காவின் நட்சத்திரமாக உயர்கிறார். ஊடகங்கள் கொண்டாடித் தள்ளுகின்றன. டைம்ஸ் இதழில் 2009 ஆம் ஆண்டின் முக்கியமான மனிதர்கள் பட்டியலில் ஒபாமாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தார். ஆனால் துறை ரீதியாக விசாரணைகள் தொடங்குகின்றன. தரையிறக்காமல் ஆற்றில் இறக்கியதற்கான காரணங்களை அலசுகிறார்கள். சல்லியும் அவரது துணை விமானியும் மன அழுத்தத்துடனேயே இருக்கிறார். 

வெளியுலகம் கொண்டாடுகிறது. சல்லி அழுத்தத்தோடு நாட்களைக் கடத்துகிறார். குடும்பம் பதறுகிறது. இந்த முக்கோணத்தில் படம் நகர்கிறது.

‘நான் வேலையை ஒழுங்கா செஞ்சப்பவெல்லாம் உலகம் கண்டுக்கவே இல்ல...’ என்று சல்லி ஒரு இடத்தில் புலம்புவார். தனது முப்பதாண்டு கால விமானி வாழ்க்கையில் லட்சக்கணக்கான மனிதர்களை அவர் பத்திரமாக இடம் சேர்த்திருக்கிறார். யாரும் கொண்டாடியதே இல்லை. உலகம் அப்படித்தான்.இல்லையா? அவரவர் கடமையைச் செய்து கொண்டிருப்பதை ஒரு கணம் கூடத் திரும்பிப் பார்ப்பதேயில்லை. வீதி கூட்டுகிறவனின் கடமை அது; பேருந்து ஓட்டுநரின் கடமை அது; அரசு அலுவலரின் கடமை அது. ‘காசு வாங்கிட்டுத்தானே செய்யறான்’ என்று எளிதாக விட்டுவிடுகிறோம். அதுவே அவர்கள் ஒரு தவறைச் செய்யும் போது பாய்ந்து பிறாண்டிவிடுகிறோம். சல்லி விவகாரத்தில் தேசியப் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கடைந்தெடுத்து விடுகிறது. படத்தின் முக்கியமான சர்ச்சையே இதுதான். தாங்கள் அப்படியெல்லாம் அவரை வருத்தவில்லை என்று வாரியம் சொல்கிறது. ஆனால் படத்தில் வறுத்தெடுப்பது போலத்தான் காட்டுகிறார்கள்.

படத்தைப் பார்த்துவிட்டு விமானம் 1549 பற்றியும் விமானி பற்றியும் வாசிக்கலாம். 

முதன் முறையாக பிரான்ஸ் சென்ற போது பாரிஸீலிருந்து மாண்ட்பெல்லியேவுக்கு ஒரு குட்டி விமானத்தில் ஏற்றினார்கள். மேகத்திற்குள் சென்ற போது கடாமுடா என்று ஒரு மிரட்டு மிரட்டியது பாருங்கள். சிறுநீர் கசிந்துவிட்டது. அப்பொழுதுதான் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. ‘அடக்கடவுளே கல்யாணம் கூட ஆகலையே..’என்றுதான் பதறினேன். விமானி ஏதோ ஃப்ரெஞ்ச்சில் உளறினார். ஒரு எழவும் புரியவில்லை. விமானத்திலிருந்து கீழே இறங்கும் வரைக்கும் உயிரை சிறுநீரில் நனைத்து இறுகப்பிடித்திருந்தேன். 

‘எப்படி வேணும்னா சாவலாம்...பறக்கும் போது மட்டும் செத்துடக் கூடாது’ என்று வேண்டாத சாமியில்லை. அந்தத் தருணத்தை படம் நினைவூட்டியது. 

படத்தின் கதையை மகிக்குச் சொன்னேன். ‘அவ்ளோ ஹைட்லேயா? அது என்ன பறவை?’ என்றான். மீண்டும் தேடினேன். கனடா வாத்து என்றிருந்தது. வாத்து அவ்வளவு உயரத்தில் பறக்குமா என்று எனக்கு கேள்வி உண்டாகியிருக்கிறது. இனி வாத்துக்களைப் பற்றித் தேட வேண்டும்.

6 எதிர் சப்தங்கள்:

Anonymous said...

https://en.wikipedia.org/wiki/List_of_birds_by_flight_heights

ஜீவன் சுப்பு said...

https://youtu.be/GZIYo8uyT3s

Unknown said...

தெய்வமே... எங்கயோ போய்ட்டிங்கன்னு அடிக்கடி டைப் பண்ண கஷ்டமா இருக்கு... அதுக்கு ஏதாவது emoji போடுங்களேன்.. ஈஸியா கிளிக் பண்ணிட்டு போயிறலாம்...

Anonymous said...

நான்கு நாட்களுக்கு முன் தான் இந்த சித்திரத்தை பார்த்து சிறிது கொண்டிருந்தேன் :)

http://www.lunarbaboon.com/storage/comichomework.png?__SQUARESPACE_CACHEVERSION=1480912964700

Murugan Subramanian said...

Useful information thanks

Paramasivam said...

குழந்தைகள் சந்தேகம் கேட்கும் போது அவர்களை தவிர்க்க கூடாது. உண்மை தான். உண்மை தான்.