Nov 24, 2016

நீட்

தங்களின் NEET தொடர்பான இரண்டு கட்டுரைகளையும் வாசித்தேன். முழுவதும் ஒப்புக் கொள்ளக்கூடிய கருத்துகள். இதுவரை நமது அரசு NEET தேர்விற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றே இப்பொழுதும் புதிய தலைமுறையின் ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் அமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்.

எப்படி இருந்தாலும் தேசிய நீரோட்டத்தில் நமது பிள்ளைகள் கலந்து கொள்ள எண்ணி செயல்பட்டாலும் அதற்கான சூழ்நிலையில் இப்பொழுது நாம் இல்லை. பயிற்சி நிறுவனங்கள்  என்று ஆரம்பித்தாலும் அதுவும் எட்டாக்கனியே. 

CBSE பாடத் திட்டத்தில் படித்தால் மட்டும் அத்தகைய தேர்வுகளை எழுதிவிடமுடியும் என்பதும் கனவாகவே இருக்கின்றது. ஒரு சிலர் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதாக வைத்துக் கொண்டாலும் JEE, NEET போன்ற தேர்வுகளுக்காக தயாராகும் வடமாநில மக்கள் மட்டுமல்ல.ஆந்திரா, கர்நாடகா ஏன் நமது மாநிலத்தில் கூட சில பள்ளிகள் ஏற்கனவே மாநில பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு பல ஆயிரங்களை பெற்றுக் கொண்டு அத்தகைய பயிற்சியைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் தேர்ச்சி விகிதத்தில் அவர்களுக்கு இணையாக வருவதற்கான சூழலும் இல்லை.

மதிப்பெண்களை மட்டுமே லட்சியமாக கொண்டு நமது பள்ளிகள் போலவே JEE, NEET தேர்வுகளுக்காகவே செயல்படும் பயிற்சி நிறுவனங்கள் வீதிக்கு ஒன்றாக இருக்கின்றன. அவற்றில் சேர்வதற்காகவே பல அடுக்குகளில் நுழைவுத் தேர்வுகள் நடத்தப் படுகின்றன. அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகின்றது அதுவும் லட்சங்களில் என்பது தனிக்கதை.

இத்தகைய பயிற்சி வகுப்புகள் Foundation Course என்று ஆறாம் வகுப்புகளில் இருந்தும், இல்லையென்றால் எட்டாம் வகுப்புகளில் இருந்தும் ஆரம்பிக்கப் படுகின்றது. அத்தேர்வுகளுக்கான பாடத் திட்டமும், CBSE காண பாடத் திட்டமும் ஒன்று என்றாலும் பாடங்கள் எடுக்கப்படும் முறைகளும், கேள்வித் தாள்களும் வகுப்பறை பாடத்திற்கும் அப்பாற்பட்டது.

அத்தகைய தேர்வுகளில் ஒரு வருடத்தில் கேட்கப்படும் கேள்விகள் மீண்டும் கேட்கப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் புதிய புதிய கேள்விகளும், தயாரிப்புகளும் தொடர்கின்றன.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பிறகு எழுதப்படும் ஒரு தேர்விற்காக குறைந்த பட்சம் ஐந்து வருடங்கள் மாணவர்கள் உழைக்கிறார்கள்.

இதில் ரெகுலராக நடக்கும் பள்ளியின் தேர்வுகளும் இணைந்து கொள்ளும். இத்தகைய தயாரிப்புகளில் இறங்கும் மாணவர்களும் வெற்றி பெறுவதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், பயிற்சி நிறுவனங்கள் ஆரம்பித்து, பிறகு பயிற்சி கொடுத்தாலும் நமது பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுதி வெற்றி பெற்று மருத்துவப் படிப்பில் நுழையும் வாய்ப்புகள் மிகவும் குறைவு.

அப்பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் கவுன்சிலிங்க்கு சென்றிருக்கிறேன். ஒரு நாளைக்கு மாணவர்கள் பதினெட்டு மணிநேரம் படிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். சுவாசிப்பதும், சிந்திப்பதும்கூட அத்தேர்வைப் பற்றியதாகத்தான் இருக்கவேண்டும் என்பதுவும் அவர்களின் எதிர்பார்ப்புகளில் ஒன்று.

இப்படியாக தயார்படுத்தப்பட்டு அனுப்பப்படும் மாணவர்களுக்கு மத்தியில் எத்தகைய அறிவுடையப் பிள்ளைகளாக இருந்தாலும் தடுமாறித்தான் போவார்கள்.

அதற்கான தயார் நிலைக்கு நமது பிள்ளைகள் வரும் வரை நீங்கள் சொல்லியது போல சில வருடங்களுக்காவது இத்தேர்வை தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். அரசு ஒரு புறம் முயற்சித்தாலும் பெற்றோர்களும், மக்களும் யோசிக்கவேண்டிய தருணம்.

கிரி.
                                                                ****
                                                                 (2)

அன்புள்ள வா.ம. அண்ணனுக்கு,

அரசு கல்வி குறித்து தாங்கள் தொடர்ந்து கவனப்படுத்தி வருவது மகிழ்ச்சி. நிசப்தம் பதிவு மாஃபா வரை சென்று அவர் விரிவான பதிலளிப்பதாக சொல்லியிருப்பது நம்பிக்கையளிக்கிறது.

நீட் தேர்வு குறித்து எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

அதற்கு முன் கிராமப்புற மாணவர்களுக்காக நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என்று சொல்வதே எனக்கு சரியாகப் படவில்லை. அரசுகல்வியின் அவலத்தை மறைக்க தமிழக அரசு வேண்டுமானால் அப்படி சொல்லிக் கொள்ளட்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுப்பதில் தோல்வியடைந்து விட்டோம் என்பதை நேரடியாக ஒப்புக் கொள்ளாமல் கிராமப்புற மாணவர்களின் பின்னால் ஒளிந்து கொள்வதாகத்தான் எனக்கு படுகிறது. மாணவர்களால் தேர்ச்சி அடைய முடியாது என்பதைவிட நாம் மாணவர்களை அந்நிலைமையில் வைத்துள்ளோம் என்பதுதானே பிரதான உண்மை.

நியாயமாக பார்த்தால் கல்வியில் நாட்டின் முதல் ஐந்து இடங்களுக்குள் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் நமக்கு இம்மாதிரி பொது நுழைவுத்தேர்வுகள் சாதகமாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே நிலமையோ நேரெதிராக உள்ளது. நீட் வந்தால் நமது மாணவர்கள் பாதிக்கப்படுவது இருக்கட்டும். அதற்குமுன் இப்போதிருக்கும் சூழலையும் சரிபார்ப்பது அவசியம் எனப் படுகிறது.

1. சென்றாண்டு மருத்துவ கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் தமிழ்வழியில் படித்த எத்தனை மாணவர்களுக்கு இடம் கிடைத்தது?

2. நீட் தேர்வின் முக்கிய சாதகமாக கூறப்படுவது அது தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக இடங்கள் நிரப்புவதில் உள்ள முறைகேடுகளை தடுக்கும் என்பது. அது தடுக்குமா என்பது இன்னொரு கேள்வி. ஆனால் இப்போதிருக்கும் முறைகேடுகளை தவிர்க்க என்ன வழி?

3. பிற மாநில அரசுகள் இதில் கொள்ளும் நிலைப்பாடு என்ன? அங்கும் கிராமப்புற மாணவர்களின் நிலை இதே தானா அல்லது அவர்கள் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்களா?

இவை குறித்து நம்பகமான தரவுகள் கிடைக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கேட்டுக் கொள்வது அவசியம் எனப் பட்டது.

சிபிஎஸ்இ பாடத்திட்டம், ஆங்கில-ஹிந்தி வினாத்தாள் இவை இரண்டும் நீட் தேர்வின் அம்சமாக இருப்பின் அவை நிச்சயம் எதிர்க்கப்படவேண்டியதே. ஆனால் அடிப்படை பிரச்சனை நமது அளிக்கத் தவறும் கல்வித் தரத்தில் இருப்பதாகவே பார்க்கிறேன்.

நமது அரசுகல்வியை விமர்சித்தும் ஆராய்ந்தும் நீங்கள் விரிவாகவே எழுதி வருகிறீர்கள். ஆனால் இவ் விவகாரத்தை பேசும் பலரும் மத்திய அரசின் மீது மொத்த பழியையும் போட்டு இங்கு வருடாவருடம் நூற்றுக்கணக்கில் மருத்துவத்தில் சேர்ந்து கொண்டிருந்த அரசுபள்ளி மாணவர்களுக்கு இனி வாய்ப்பில்லாமல் போய்விடும் என உருவாக்கும் சித்திரத்தைதான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.

பாரி.

                                                                ***

பாரியும் கிரியும் எழுதியிருக்கும் இரு கடிதங்களுமே முக்கியமானவை.

தேசிய அளவிலான தேர்வுகளை எழுதுவதற்கு நமது பள்ளி மாணவர்களிடம் திறன் இல்லை என்பதை மறுக்கவே முடியாது. தேசிய அளவிலான எந்தத் தேர்வாக இருப்பினும் சரி- தமிழகத்தின் நிலைமை அதலபாதாளத்தில் கிடக்கிறது என்பதுதான் உண்மை. உதாரணமாக ஐஐடி-ஜே.ஈ.ஈ தேர்வை எடுத்துக் கொள்ளலாம். ஐஐடி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வில் கிட்டத்தட்ட முக்கால்பகுதியை ஆந்திரப்பிரதேசம், உபி, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா மற்றும் பீஹார் மாநிலங்கள்தான் எடுத்துக் கொள்கின்றன. தமிழகத்திலிருந்து சொற்பமாக- அநேகமாக சென்னை போன்ற மாநகரத்திலிருந்துதான் உள்ளே நுழைகிறார்கள்.

ஐஐடியில் படித்தால்தான் அறிவாளியா என்று யாராவது கேட்கக் கூடும். அந்தக் கேள்விக்குத் தனியாக பதில் சொல்ல வேண்டும். ஆனால் நமது மாணவர்களால் ஏன் அந்தத் தேர்வுகளில் வெல்ல முடிவதில்லை என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

ஆறாம் வகுப்பிலிருந்தே நம்முடைய பாடங்களும் தேர்வு முறைகளும் மனனம் செய்வதைத்தான் பிரதானமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. பத்தாம் வகுப்பிலும் பனிரெண்டாம் வகுப்பிலும் மதிப்பெண்கள் வாங்குவதுதான் வலியுறுத்தப்படுகிறது. வேறு எதுவுமே அவசியமில்லை. அதற்காக ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களைக் கூட பின்னால் தள்ளிவிடுகிற மனநிலையைத்தான் மாணவர்களுக்கு ஊட்டுகிறார்கள். அதுதான் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 

மருத்துவம் மற்றும் பொறியியல் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் இருக்கும் வரைக்குமாவது நிலைமை கொஞ்சம் பரவாயில்லையாக இருந்தது. கிராமப்புற மாணவர்களுக்காக நீக்குகிறோம் என்று சொல்லி அதை ஒழித்தார்கள். இப்பொழுது படு மோசம். முன்னட்டையிலிருந்து பின்னட்டை வரைக்கும் உருவேற்றினால் போதும். அதைத் தவிர வேறு எதையும் நமது கல்வி முறை எதிர்பார்ப்பதில்லை. நமது கல்விமுறையில் இருக்கும் மிகப்பெரிய அவலம் இது.

தமிழகம் முழுவதுமே புரிந்து படித்தல் என்கிற எண்ணம் சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில் அரசுப் பள்ளியில் படிக்கிற மாணவர்களின் நிலைமை இன்னமும் மோசமாகத்தான் இருக்கிறது. அவர்களின் பிரச்சினையே பக்கத்து ஊரில் இருக்கும் தனியார் பள்ளிகளுடன் போட்டி போடுவதாகத்தான் இருக்கிறதே தவிர அதைத் தாண்டி பெரிய உலகம் இருக்கிறது என்பதெல்லாம் எண்ணத்திலேயே இருப்பதில்லை. நாற்பது மாணவர்கள் இருக்கும் ஒரு வகுப்பறையில் ஒரு மாணவன் சிறப்பாக இருப்பதோடு பள்ளி ஆசிரியர்கள் திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.

‘என்ன சார் பண்ணுறது? பத்தாவதுல நல்ல மார்க் வாங்கின பசங்க எல்லாம் ப்ரைவேட் ஸ்கூலுக்கு போய்ட்டாங்க’என்கிறார்கள். மிச்சமிருக்கிற வெகு சிலரை இரண்டாண்டுகளில் பட்டை தீட்டி மெருகேற்றி மாநில அளவிலான போட்டிக்கு ஒப்பேற்றுவதற்குள்ளாகவே அவர்களின் கண்ணாமுழி திருகிறது. இந்த நிலைமையில் தேசிய அளவிலான போட்டிக்கு என்ன செய்வார்கள்?

தமிழக அளவில் நம் கல்வி முறையில் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன-

வெறுமனே மனனம் செய்வது என்பதை முதலில் அடித்து நொறுக்க வேண்டும். சிந்தித்தல், புரிந்து படித்தல் என்பதுதான் படிப்பின் அடிப்படையே என்பதை அடிநாதமாக மாற்ற வேண்டும். 499 அல்லது 498 என்று வெறும் எண்களாக மட்டுமே பாடங்களை வாந்தியெடுக்க வேண்டியதில்லை என்கிற சூழல் உருவாக்கப்படல் வேண்டும். அதன் பிறகுதான் நாம் தேசிய அளவிலான தேர்வு முறைகளைப் பற்றியெல்லாம் சிந்திக்கவே முடியுமே தவிர அதுவரைக்கும் ‘நம் மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கூவி ஒளிந்து கொள்ளத்தான் வேண்டும்.

வெறுமனே பயிற்சிகள், பயிற்சி நிலையங்கள் என்பதெல்லாம் காசு சம்பாதிக்கும் இன்னொரு வழிமுறையாகத்தான் இருக்கும்.

தட்டையான பாடத்திட்டங்கள், மொந்தையான மனனம் என்பதையெல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாக கல்வித் திட்டத்தை மாற்றியமைக்காத வரைக்கும் தேசிய அளவிலான தேர்வுகளில் மட்டுமில்லை- நாம் எதிலுமே வெல்ல முடியாது. இப்பொழுது கல்வித்துறையில் நாம் வெற்றி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் வெற்றியே இல்லை. அறிவியலும் சமூகவியலும் மொழியியலும் உலகில் எவ்வளவோ உயரத்தை அடைந்து கொண்டிருக்கின்றன. நாம் வெறுமனே பன்னாட்டு நிறுவனங்களுக்காக இணையத்தில் மேய்ந்து வாந்தியெடுக்கும் மந்தைகளைத்தான் லட்சியமாக வைத்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

3 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//தட்டையான பாடத்திட்டங்கள், மொந்தையான மனனம் என்பதையெல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாக கல்வித் திட்டத்தை மாற்றியமைக்காத வரைக்கும் தேசிய அளவிலான தேர்வுகளில் மட்டுமில்லை- நாம் எதிலுமே வெல்ல முடியாது.//
இவை எல்லோருக்கும் ஓரளவு தெரிந்த விசயங்கள் தானே.மேலும் இவை திடீரென முளைத்தவை அல்ல. ஆனால் இவற்றை நீக்குவதற்கான முயற்சியாக என்ன செய்ய வேண்டும்?. அது தானே இப்போதைய தேவை.செய்ய வேண்டிய அரசியல் வியாதிகள் செய்யமாட்டார்கள். அவர்களை செய்ய வைப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பதை ஆராய வேண்டும்.

சேக்காளி said...

//தட்டையான பாடத்திட்டங்கள், மொந்தையான மனனம் என்பதையெல்லாம் நகர்த்தி வைத்துவிட்டு மாணவர்களின் சிந்தனைத் திறனை வளர்க்கும் விதமாக கல்வித் திட்டத்தை மாற்றியமைக்காத வரைக்கும் தேசிய அளவிலான தேர்வுகளில் மட்டுமில்லை- நாம் எதிலுமே வெல்ல முடியாது//
இதனை களைய "சிறுக சிறுக"
http://www.nisaptham.com/2016/11/blog-post_24.html
முன் முயற்சியாய் அமையும்.

Muthu said...

// ஆறாம் வகுப்பிலிருந்தே நம்முடைய பாடங்களும் தேர்வு முறைகளும் மனனம் செய்வதைத்தான் பிரதானமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.//

// தமிழகம் முழுவதுமே புரிந்து படித்தல் என்கிற எண்ணம் சிதைக்கப்பட்டுவிட்ட நிலையில் //

ஒரே ஒரு உதாரணம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டு மார்ச் மாதம் ஊருக்கு வந்திருந்தபோது, என் அண்ணன் மகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தாள். கணிதப்புத்தகத்தை வாங்கி புரட்டிப்பார்த்து, “Probability-ன்னா என்ன ? அதை define பண்ண முடியுமா ?” என்று கேட்டேன்.

எறும்பு கடித்ததுபோல “ஐயய்யோ, அதெல்லாம் கேக்காதீங்க சித்தப்பா, ஏதாவது ப்ராப்ளம் குடுங்க சால்வ் பண்ணுறேன்” என்றாள்.

சென்ற ஆண்டு இங்கே அமெரிக்காவில் 5-ம் மற்றும் 6-ம் வகுப்பு பிள்ளைகளுக்கு (இந்திய பிள்ளைகள்தான்) கணக்குப்பாடம் ஆன்லைனில் எடுக்க நேர்ந்தது. அவர்களுக்கு இதே Probability சொல்லிக்கொடுத்தேன். இரண்டு மணி நேரம். கிட்டத்தட்ட பாடம் முடியும் தருணம். ஒரு பிள்ளை கேட்டது :

"What's the probability that our lesson will be over in 5 minutes ?"