Nov 24, 2016

சிறுகச் சிறுக

ஒரு மாணவி. அவளுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறாள். சற்றே பொறுத்திருந்தால் சித்தா, ஆயுர்வேதம் படிப்புகள் கிடைத்திருக்கும். ஆனால் அவசரம். தனியார் கல்லூரிகள் அவசரப்படுத்தத்தான் செய்வார்கள். ‘இன்றே கடைசி. பணத்தைக் கட்டவில்லையென்றால் இடம் வேறொருவருக்கு போய்விடும்’ என்பார்கள். புரட்டிக் கொண்டு போய் பார்மஸி படிப்பில் பணத்தைக் கட்டிவிட்டார்கள். சித்தா மற்றும் ஆயுர்வேதப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் போது தனியார் கல்லூரிக்காரன் விடுவானா? ‘பணத்தை தர முடியாது. போறதுன்னா போய்க்குங்க’ என்று சொல்லிவிட்டார்கள். அந்தப் பெண்ணுக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் மகளும்தான். என்ன செய்ய முடியும்? இன்னமும் அழுது கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். 

நகர்ப்புற மாணவர்களும் இத்தகைய குட்டைகளில் விழுகிறார்கள் என்றாலும் கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம். 

வலை விரிக்க ஆட்கள் சுற்றிச் சுற்றித் திரிகிறார்கள். ‘ருவாண்டாவில் மருத்துவம்’ ‘சீனாவில் அக்குபஞ்சர்’ ‘பல்கேரியாவில் பல் மருத்துவம்’ என்று எதையாவது ஆசைகாட்டி உள்ளே இழுத்துவிட தரகர்கள் பெருகிவிட்டார்கள். நம்மூர் கல்லூரிகளிலேயே கூட மாணவர்களைச் சேர்த்துவிட்டால் தரகுத் தொகை தருவதற்கு ஏகப்பட்ட கல்லூரிகள் தயாராக இருக்கின்றன. ரஷ்யாவில் மருத்துவப்படிப்புக்குச் சேர்த்துவிட்டு தலைமறைவான தரகர்களைத் தெரியும். ‘அடுத்த வருஷத்துல இருந்து பேங்க்ல லோன் வாங்கிக்கலாம்..இந்த வருஷம் மட்டும் கட்டுங்க’ என்பார்கள். வீட்டையோ காட்டையோ அடமானம் வைத்துக் கட்டுவார்கள். அதோடு சரி. தரகுத் தொகையைக் கல்லூரியிடமிருந்து பெற்றுக் கொண்டு எங்கேயாவது போய்விடுவார்கள். வங்கியில் கடனும் கிடைக்காது. விற்கச் சொத்தும் இருக்காது. பூக்கட்டி விற்கும் ஒரு பெண்மணி முதலாமாண்டு வீட்டை அடமானம் வைத்தார். அடுத்த ஆண்டு அதை விற்றார். மூன்றாமாண்டு ஒன்றரை ஏக்கர் காட்டை விற்றார். அடுத்த ஆண்டுக்கு என்ன வழி என்று தெரியாமல் தேம்பித் தேம்பி அழுததை நேரில் பார்த்தேன். 

பரிதாபமாகத்தான் இருக்கும். ஆனால் பல லட்ச ரூபாய்கள் தேவை. எதுவுமே செய்ய முடியாது. 

இன்றைய காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டுமானால் பனிரெண்டாம் வகுப்பை முடித்துவிட்டு என்ன செய்யலாம் என்பதைத் தெளிவாகச் சொல்லித் தர வேண்டும். தரகர்களிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது குறித்தும், கல்வியின் வாய்ப்புகள் குறித்தும் பேச வேண்டும். இதையே இரண்டு வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். பெரிய அளவில் உருப்படியாக எதையும் செய்யவில்லை. இப்பொழுது வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இராதாகிருஷ்ணன் கொச்சியில் வசிக்கிறார். மென்பொருள் துறையில்தான் இருக்கிறார். அதே சமயம் ஐ.ஐ.எம்மில் முனைவர் பட்ட ஆராய்ச்சியைச் செய்து கொண்டிருக்கிறார். சில சமயங்களில் பேசும் போது ‘ஒரு வொர்க்‌ஷாப் மாதிரி ஏற்பாடு செய்யலாம்’ என்பார். ஆசை இருக்கும்தான். ஆனால் நிறைய சிக்கல்கள் உண்டு. பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தலைமையாசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பல பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் ‘வ்வ்வ்வ்யாக்’ வகையறா. எவனோ எப்படி போனால் எனக்கு என்ன என்று இருப்பார்கள். அவர்களிடம் பேசி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து நிகழ்வுக்கு அழைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். எந்த மாவட்டத்தில் நடத்துகிறோமோ அங்கு ஒரு பொறுப்பாளர் வேண்டும். 

அரசு தாமஸ் அவர்களிடம் பேசும் போது ‘நான் பார்த்துக்கிறேன்’ என்றார். அவரும் நானும் அமர்ந்து எந்தெந்த பள்ளிகள் என்பதை மட்டும் முடிவு செய்தோம். ஒரு பள்ளியின் தலைமையாசிரியரை மட்டும் நேரில் சந்தித்துப் பேசினோம். பிற ஆறு பள்ளிகளின் தலைமையாசிரியர்களையும் தானே சந்தித்துப் பேசிவிடுவதாகச் சொல்லிவிட்டு களமிறங்கியிருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் சென்று வொர்க்‌ஷாப் என்ன மாதிரியானது, என்ன சொல்லித் தரப் போகிறோம் என்பதையெல்லாம் விளக்கிவிட்டு அவர்கள் பள்ளியிலிருந்து தலா பத்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்குமாறு தலைமையாசிரியர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 04 ஆம் தேதியன்று நிகழ்வு நடைபெறுகிறது. ஒரு நாள் நிகழ்வு. ஈரோடு மாவட்டத்தில் ஆரம்பிக்கிறோம்.

வாழ்வியல் மதிப்பீடுகள் (Values of Life), தலைமைத்துவம் (Leadership Qualities) மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்குப் பிறகான படிப்புகள் குறித்தான ஆலோசனை ஆகியவைதான் நிகழ்வின் மையப் பொருள். நிகழ்வு குறித்தான விளம்பரம் எதுவும் இருக்காது. பதாகை கூட இருக்காது. வெளியாட்கள் யாரும் அனுமதிப்படமாட்டார்கள். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மாணவர்கள்- அறிவியல், வணிகவியல் என எந்தப் பிரிவில் இருந்து வேண்டுமானாலும் இருப்பார்கள். ஒரு சிற்றரங்கில் இந்த நிகழ்வை நிகழ்த்தவிருக்கிறோம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு பள்ளியுமே கிராமப்புறத்தில் இயங்கும் பள்ளிதான். ஒவ்வொரு வருடமும் நல்ல தேர்ச்சி சதவிகிதம் காட்டுகிறார்கள். இந்நிகழ்வு ஒரு சாம்பிள். இதில் கிடைக்கக் கூடிய அனுபவம், மாணவர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்டவற்றை உள்ளீடுகளாகக் கொண்டு தொடர்ந்து அடுத்தடுத்த நிகழ்வுகளை நடத்துகிற திட்டமிருக்கிறது. இந்த வருடமே செய்ய இயலுமா என்று தெரியவில்லை. ஆனால் அடுத்த கல்வியாண்டிலிருந்து ஆண்டுத்துவக்கத்திலேயே தொடங்கிவிடலாம் என்றிருக்கிறோம். ஆனால் ஒன்று - அந்தந்தப் பகுதிகளில் அரசு தாமஸ் மாதிரியான பொறுப்பாளர்கள் கிடைக்க வேண்டும். பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து தலைமையாசிரியர்களைச் சந்தித்துப் பேசி அனுமதி வாங்கி மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிற வேலையைச் செய்து கொடுத்தால் நிகழ்வை நடத்தலாம். யாரும் பணம் எதிர்பார்ப்பதில்லை. இராதாகிருஷ்ணனும் கூட தனது வேலையைக் கெடுத்துக் கொண்டு கைக்காசைச் செலவழித்துதான் நிகழ்வுக்கு வருகிறார். 

இதுவொரு டீம் வொர்க்.

நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களிடம் இது குறித்துப் பேச முடியும் என நினைப்பவர்கள்- கிராமப்புற மாணவர்கள் என்பதை நினைவில் கொள்க- இணைந்து கொள்ளலாம். விவரங்கள், முன் அனுபவம் உள்ளிட்டவற்றை மின்னஞ்சலில் அனுப்புங்கள். 

கிராமங்களுக்கும், மாணவர்களுக்கும் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. சிறுகச் சிறுகச் செய்வோம். ஒவ்வொரு எட்டும் ஒரு மைல்கல்தான்.

5 எதிர் சப்தங்கள்:

இரா.கதிர்வேல் said...

மிக்க மகிழ்ச்சி. நம்முடைய நிசப்தம் தளத்தில் வெளியாகியிருக்கும் கல்வி தொடர்பான, பொறியியல் தொடர்பான பல கட்டுரைகளை அச்சிட்டு என்னுடைய கிராமத்தில் 12-ம் வகுப்பு முடித்த பல மாணவர்களிடம் கொடுத்திருக்கிறேன்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசுவதை பதிவு செய்து இணையத்தில் ஏற்றினால் எங்கள் கிராமத்தில் இருக்கும் மாணவர்களிடம் அதை பகிர்ந்து கொள்வேன். பேசும் உரை முக்கியம் என்பதால் ஒலி பதிவு தெளிவாக இருப்பதற்கான ஏற்பாடுகளோடு பதிவு செய்து இணையத்தில் ஏற்றினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். எங்கள் கிராமத்தில் 98% மாணவர்கள் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். அவர்களுக்கு நல்ல வழிகாட்டியது போல் அமையும் நீங்கள் செய்யும் இந்த தொண்டு.

Paramasivam said...

மிக சீரிய முயற்சி. அவசியமானதும் கூட. வாழ்த்துக்கள்.

அன்பே சிவம் said...

இந்த பதிவுக்கு நானிட்ட பின்னூட்டம் காணவில்லை, காரணம் என்னவோ!

Muthukumar said...

Pl Share it on Social medias like YouTube., So that students / Parents who can't attend also get some ideas.

சேக்காளி said...

//Blogger Muthukumar said...
Pl Share it on Social medias like YouTube., So that students / Parents who can't attend also get some ideas//
ரிப்பீட்.
இதற்காக தொழில் ரீதியாக குறும்படம் எடுப்போர்களை தொடர்பு கொண்டு உள்ளிளுத்தால் தரம் சிறப்பாக இருக்கும்.