லட்சத்தில் இருந்தாலும் சரி, ஆயிரத்தில் இருந்தாலும் சரி- தமது வருமானத்தில் குறிப்பிட்ட விகிதத்தை அடுத்தவர்களுக்கு ஒதுக்குகிறவர்கள் ஒரு பக்கம் என்றால் அம்மா அப்பாவிடமிருந்து சில்லரைக் காசுகளை வாங்கி உண்டியலில் நிரப்பி நிரம்பியவுடன் உடைத்து அப்பாவிடம் கொடுத்து நிசப்தம் அறக்கட்டளைக்கு மாற்றச் சொல்கிற நிதின் மாதிரியானவர்கள் இன்னொரு பக்கம். மனம் சற்றே சுணங்கும் போது இத்தகைய மின்னஞ்சல்கள்தான் எதைப் பற்றியும் யோசிக்கவே வேண்டியதில்லை என்று முட்டுக் கொடுக்கின்றன.
நிதின் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். துபாய்வாசி. ஏழெட்டு வயது இருக்கும். சேகரித்த காசை அப்பாவிடம் கொடுத்து அதை அறக்கட்டளைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறான். கணக்குக்கு வந்துவிட்டது. ஆறாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறான். தொகை பெரியதில்லை. ஆனால் மனம் பெரிது.
‘நிதின் பெயருக்கு ரசீதை அனுப்பிவிடுங்கள்’ என்று அவனது அப்பா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.
‘சேர்த்து வைக்கிற காசுல சைக்கிள் வாங்கிக்கட்டுமா?’ ‘காசு கொடுக்கிறேன் சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களா?’ என்றுதான் பெரும்பாலான குழந்தைகள் கேட்பார்கள். தாம் சேகரித்து வைத்த பணத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலையை உண்டாக்குவதே மிகப்பெரிய விஷயம். அடுத்தவர்களுக்குக் கொடுத்துவிட்டு அதில் சந்தோஷமடைகிற குழந்தைகள் அதே எண்ணத்தோடு வளரும் போது பணம் என்பது பிரதானமாகவே தெரியாது.
நம் பணத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்குக் கிடையாது. ‘என் பணம் என்னுடையது’ என்கிற கஞ்சத்தனம் ஊறிக் கிடக்கிறது. முட்டையில் படைத்ததுதானே கட்டைக்குப் போகும் வரைக்கும் இருக்கும்? வளர்ந்ததே அப்படித்தான். எட்டாம் வகுப்பில் மிதி வண்டி வாங்கிக் கொடுத்தார்கள். ஓடுகிற வண்டியில் ப்ரேக் அடித்தால் ப்ரேக் கட்டை தேய்ந்துவிடும் என்று காலை நிலத்தில் உரசி உரசியே வண்டியை மெதுவாக்குவேன். பென்சில் கூட அதிகமாகச் சீவ மனம் வராது. அழிப்பானை முடிந்த வரை தவிர்த்துவிட்டு விரலிலேயே தேய்த்துப் பார்ப்பேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறதுதான். ஆனால் அப்படித்தான் இருந்தேன்.
‘இருபது ரூபாய் கூட அப்பா கடன் வாங்குகிறார்’ என்ற ஒற்றை வரி ஆழமாகத் தைத்துக் கிடக்கிறது. அப்பா வாங்கியது தெரியும். இருபது ரூபாயை யாரிடமோ கேட்டு அவர்கள் சலித்துக் கொண்டதும் தெரியும். அது கூடக் காரணமாக இருக்கலாம்.
வாசிக்கிறேன், எழுதுகிறேன், நிறைய மனிதர்களைச் சந்திக்கிறேன். ஆனால் இன்றைக்கும் கூட அப்படித்தான் இருக்கிறேன். எழுதுவதால் கிடைக்கக் கூடிய பணத்தைத் தவிர சம்பளத்திலிருந்து ஒற்றைப் பணம் கூட அறக்கட்டளைக்கு தருவதில்லை. அறக்கட்டளை காரியங்களுக்காக வெளியூர்களுக்கு போய் வருகிற செலவு, சாப்பாட்டுச் செலவு எல்லாம் செய்கிறேன்தான். ஆனால் அவையெல்லாம் எனக்கான செலவுகள். சேகரிக்கிற அனுபவங்களுக்காக நான் கொடுக்கிற கூலி. அதனால் சமாதானம் ஆகிக் கொள்வதுண்டு.
சம்பளப் பணம் குடும்பத்தைத் தாண்டி அடுத்தவர்களுக்குச் செல்வதில்லை. மனம் பழகிவிட்டது.
கடந்த வாரம் ஊரில் இருந்தேன். கரட்டுப்பாளையத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. எம்.ஜி.ஆர் காலனியைச் சேர்ந்த அழகர் என்கிற மாணவன் பயிற்சியின் போது கீழே விழுந்துவிட்டான். கை விரல்கள் வீங்கிவிட்டன. அபி மருத்துவமனைக்கு தூக்கி வந்தார்கள். தகவல் வந்தது. சென்றிருந்தேன். மருத்துவர் கார்த்திகேயன் பார்த்துவிட்டு காசு வாங்கிக் கொள்ளவில்லை. எக்ஸ்ரேவுக்கும் காசு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். வீக்கத்திற்காக மட்டும் மருந்து எழுதிக் கொடுத்திருந்தார்கள். அழகரின் அம்மாவும் அப்பாவும் தினக்கூலிகள். வெறும் நூற்றியருபது ரூபாய்தான் மருந்துச் செலவு. அவர்களிடம் காசு இல்லை. சட்டைப்பையில் பணம் வைத்திருந்தேன். அதை எடுப்பதற்குள் எவ்வளவு போராட்டத்தை மனதுக்குள் நடத்தினேன் என்று எனக்குத்தான் தெரியும்.
பிறகு யோசிக்கும் போது வெட்கமாக இருந்தது. வெளியில் ஒரு பிரியாணி உண்டால் கூட இருநூறு ரூபாய் செலவு பிடிக்கும். சர்வசாதாரணமாகத் தோன்றும் போது தின்பேன். அப்பொழுது செலவு பற்றி யோசித்ததேயில்லை. ‘எங்களுக்கு நேரமே சரியில்ல’ என்று அழகரின் அம்மா அழுது கொண்டிருந்ததைப் பார்த்த பிறகும் ஏன் உடனடியாகப் பணத்தை எடுத்துக் கொடுக்கவில்லை என்று யோசிக்கும் போதுதான் மனம் புழுங்குகிறது. இதை வெளியே சொல்வதற்கு வெட்கம் எதுவுமில்லை. இதுதான் மனம். இப்படித்தான் இருக்கிறேன். கச்சடா. கஞ்சத்தனம்.
‘அடுத்தவங்களுக்கு பணத்தைக் கொடு’ என்று மகியிடம் சொன்னதாக நினைவே இல்லை. நம் பணம், நம் சொத்து என்று சொல்லிச் சொல்லி பொறுப்பை வளர்க்கிறேன் என்ற பெயரில் சுயநலத்தைத்தான் ஊட்டிக் கொண்டிருக்கிறேன்.
நிதின் மாதிரியானவர்கள் அனுப்புகிற பணத்திலும் மின்னஞ்சலிலும்தான் சுயகேள்விகள் உருவாகின்றன. மனிதர்கள் எவ்வளவு உயரத்தில் நிற்கிறார்கள் என்பதுதோடு சேர்த்து நம் மனதுக்குள் அடங்கிக் கிடக்கும் கச்சடாக்களும் அலையடிக்கின்றன. எவ்வளவு மாற வேண்டியிருக்கிறது? அடுத்தவனின் கண்ணீரைவிடவும் நம் பணம் முக்கியம் என்கிற எண்ணம் எவ்வளவு பெரிய கழிசடை? நம்முள் கழிசடைகளை வைத்துக் கொண்டிருக்கும் போதே நம்மை அடுத்தவர்கள் நல்லவன் என்று சொல்லும் போதும், அப்படி நம்மை நம்பும் போதும் கூனிக் குறுக வேண்டியதில்லையா?
நெகிழாமல் குலையாமல் கேள்விகளைக் கேட்டுப் பார்த்தால் இந்த சுய கேள்விகளும் பதில்களும் குற்றவுணர்ச்சியை உண்டாக்குவதில்லை என்றாலும் கூட கற்றுக் கொள்ள நிறைய இருக்கின்றன என்பது புரிகிறது. ஆறு வயதுப் பையனிடமிருந்தும் கூட நாம் கற்றுக் கொள்ள முடிகிறது. better late than never. வாழக் காலம் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் மாறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
நன்றி நிதின்.
4 எதிர் சப்தங்கள்:
Really Inspiring....
நல்லதொரு சுய பரிசோதனை!
//சேகரித்து வைத்த பணத்தை அடுத்தவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்கிற மனநிலையை உண்டாக்குவதே மிகப்பெரிய விஷயம்//
உண்டாக்கி பின்பு அதை தொடர ஆதரவும் அளிக்கும் அந்த பெற்றோர்களும் போற்றுதலுக்குரியவர்கள் தாம்.
நிதினுக்கு வாழ்த்துக்கள். நிதினை அவ்வாறு வளர்த்த அவன் பெற்றொருக்கு நன்றி.
Post a Comment