வாசிப்பதற்கென சில கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். இணையத்திலிருந்து தேடியெடுத்த கவிதைகள்.
கவிதைகளை இரவு நேரங்களில் வாசிப்பது வழக்கம். ஊர் அடங்கிய பிறகு, அன்றைய தினத்துக்கான வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு தூரத்தில் நாய்கள் ஓசையெழுப்பிக் கொண்டிருக்கும் தருணத்தில் எடுத்து வைத்திருக்கும் கவிதைகளிலிருந்து ஒவ்வொன்றாக வாசிக்கும் போது மனதுக்குள் சலனமுண்டாக்கும் கவிதைகளை மட்டும் திரும்பத் திரும்ப அசைபோடுவதுண்டு. சலனமுண்டாக்காத கவிதைகள் மோசமான கவிதைகள் என்று அர்த்தமில்லை. நம்மை ஈர்க்காத அதே கவிதைகள் பிறிதொரு சமயத்தில் கவிதைகள் நம் கவனத்தைக் கோருபவையாக அமையக் கூடும். கவிதை வாசித்தலுக்கும் ஆழ்மனநிலைக்கும் பெரும் தொடர்பு உண்டு. அந்தந்த நேரத்துக்கான மனநிலைதான் நம்மோடு கவிதையின் ஒட்டுதலை நிர்ணயிக்கின்றன.
சந்தோஷமோ, துக்கமோ- இரவில் மனதுக்கு நெருக்கமான ஒன்றிரண்டு கவிதைகளை வாசித்துவிட்டு உறங்குவது ஒருவிதமான இன்பம்.
மொழியின் எந்த வடிவத்தைக் காட்டிலும் கவிதைதான் நம்முடனான அந்தரங்கமான தொடர்பை உண்டாக்கக் கூடியவை. அந்தரங்கமான தொடர்பு என்றால்- கவிதைக்கும் நமக்குமாக உண்டாகக் கூடிய அலைவரிசை. வாசிக்க வாசிக்க பயிற்சியில் உண்டாகக் கூடிய தொடர்பு இது. நாவல், சிறுகதை உள்ளிட்ட எழுத்தின் பிற வடிவங்களில் பெரும்பாலும் எழுத்தாளன் சொல்ல வருவதையேதான் கிட்டத்தட்ட வாசகனும் புரிந்து கொள்கிறான். ஆனால் கவிதையில் அப்படியில்லை. அதன் விதவிதமான கோணங்களையும் பரிமாணங்களையும் எழுதியவனே கூட யோசித்திருக்க மாட்டான். கவிதையுடன் தமக்கு உண்டாகக் கூடிய தொடர்பின் வழியாக வாசகர்களே வெவ்வேறாகப் புரிந்து கொள்கிறார்கள்.
வெ.மாதவன் அதிகனின் கவிதைகள் சில.
(கவிஞர். வெ.மாதவன் அதிகன்)
(1)
நீங்கள் யாரை அங்கு பார்த்தீர்களோ
அது அவர் தான்
சந்தேகம் வேண்டாம்
நீங்கள் எந்நேரத்தில் பார்த்தீர்களோ
அது அதற்குரிய பொழுதுதான்
தயக்கம் வேண்டாம்
நீங்கள் பார்த்தது
உங்களுடைய கண்களால் தான்
பயமேதும் வேண்டாம்
நீங்கள்
இப்பொழுது யாரை கொலை செய்ய
துணிந்தீர்களோ அதுவும் அவர் தான்
சிறிதளவும் கனிவு வேண்டாம் செய்மின்
(2)
உங்களில் யாருக்கு நன்றி சொல்வது?
எவ்வளவு அழகாக வெட்டியிருக்கிறீர்கள் தலையை
கழுத்தை அதன் நீள்குறுக்கு வெட்டில்
வாழை மீனின் வறுவல் துண்டினை போல்
துளி உதிரம் கூட சிந்தாமல்
சற்றும் பிசிறு நீளாமல் நேர்த்தியாக
அதையென் கையில் கொடுத்து
என்னையே அழகு பார்க்கச் செய்கிறீர்
முகம் கழுவி விட்டு கண்ணீர் நீக்கி
சுவைக்க ஒரு லாலிபப் வாங்கி கொடுக்கவும்
பின் தலைவாரி முகப்பூச்சிட்ட தலையை
தூக்கிக் கொண்டு செல்லவும் வைத்தீர்
ஆனாலும் குறையொன்றுமில்லை
தலையில்லாத கழுத்து
எவ்வளவு ஆனந்தம்
எவ்வளவு பேரின்பம்
எவ்வளவு பரமானந்தம் பரமம்
(3)
அவளுக்கு பிங் நிறம் வேண்டும்
பிங் நிறத்திலொரு டெடிபேர்
பிங் நிறத்திலொரு நாய்குட்டி
பிங் நிறத்திலொரு பூனை
பிங் நிறத்திலொரு வீடு
பிங் நிறத்தில் வாசலும் கோலமும்
அவளுக்கு காதல் வந்தபோது
அழுவதற்கு பிங் நிற கண்ணீர்
இப்படியாக கடைசியிலொரு
பிங் நிற தாலியும் கேட்டாள்
இப்பொழுது
அவள் பிங் நிற கழுத்தை
பிங் நிற கத்தியால்
பிங் நிற இரத்தம் கொப்பளிக்க
பிங் நிற கடவுள் அறுத்துக் கொண்டிருக்கிறார்.
மாதவனின் இந்த மூன்று கவிதைகளிலும் ஒரு மெல்லிய இணைப்பு இருக்கிறது- குரூரம்.
கவிதைகளில் வன்மும் குரூரமும் மிதமிஞ்சிக் கிடக்கிறது. ஆனால் காரியங்கள் நாசூக்காகச் செய்யப்படுகின்றன. ஆர்ப்பாட்டம் இல்லை. அழிச்சாட்டியம் இல்லை. தலையை வெட்டி அதை வெட்டுப்பட்டவனின் கையிலேயே கொடுத்து வாயில் லாலிபாப்பையும் வைக்கிறார்கள். இந்த உலகம் அப்படித்தானே இருக்கிறது? ஒவ்வொருவரும் மனம் நிறைய கொப்புளிக்கும் வன்முறையையும் பொறாமையையும் புதைத்து வைத்திருக்கிறோம். அவற்றை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்காதா என ஏங்குகிறோம். கிடைக்கும் போது தயக்கமேயில்லாமல், ஆனால் வெகு நாசூக்காக வெளிப்படுத்துகிறோம்.
அதைத்தான் இந்தக் கவிதைகள் பேசுகின்றன. கொல்லச் சென்றிருப்பவனிடம் ‘அவன்தான் செஞ்சுடுங்க’ என்று அமைதியாகச் சொல்கிறார்கள். தலையை வெட்டி அவனிடமே கொடுக்கிறார்கள்; பிங்க் நிறக்காரியை பிங்க் நிறக் கடவுளே கழுத்தை அறுக்கிறார். குரூரம்தான். ஆனால் எவ்வளவுதான் நாசூக்கும் நாகரிகமும்?
கவிதையில் இவ்வளவு வன்முறைக்கான இடம் எங்கேயிருந்து உருவாகிறது? வன்முறைகள் அவசியம்தானா?
நம்மைச் சுற்றி வியாபித்திருக்கும் கசப்பும் கசடும் வெளிப்படும் இடமாகத்தான் நவீன கவிதை இருக்கிறது. ‘அப்படியெல்லாம் இல்லை’ என்று மறுத்தாலும் குரூரமானவர்களும் நம் தோல்விகளை ரசித்து அனுபவிக்கிறவர்களும் திரும்பிய திசையெங்கும் இருக்கிறார்கள். வாழ்க்கையின் புதிரான இண்டு இடுக்குகளில் எதிராளியின் சதிராட்டத்தில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கும் கவிஞன் இதையெல்லாம் கவிதையாக்கும் போது வன்முறை வந்து அமர்கிறது. குரூரம் தனக்கான இடத்தைப் பிடிக்கிறது. இதைத் தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.
கவிதை, எப்பொழுதுமே காலத்தின் கண்ணாடியாகத்தான் இருக்கிறது. நம்மைச் சுற்றிலும் இயங்கும் உலகினை தனது சொற்களால் படம்பிடிக்கிறது. அப்படியிருக்கையில் வன்மத்தையும் பகைமையுணர்ச்சியையும் எப்படித் தவிர்க்க முடியும்?
வெ.மாதவன் அதிகனின் நிறையக் கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன. மாதவனின் சர்க்கரைக் கடல் என்ற தொகுப்பு வெளியாகியிருக்கிறது. அதன் பிறகு வேறு ஏதேனும் தொகுப்பு வெளியாகியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஃபேஸ்புக்கில் கவிதைகளைத் தொடர்ந்து பதிவிடுகிறார். அங்கிருந்துதான் கவிதைகளைத் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன்.
மாதவன், விருதாச்சலம் பக்கத்தில் அரசு ஆசிரியர்.
சமீபமாக மனதுக்கு நெருக்கமான கவிஞர்களில் ஒருவர். நிறையக் கவிதைகளை ஒரு சேர வாய்க்கும் போது ஒரே சொற்களைத் திரும்பப் பயன்படுத்துவது, தொடர்ந்து எழுதப்படும் குறுங்கவிதைகள், சில கவிதைகள் ஒரே வகையிலான சட்டகத்திற்குள்(Template) சிக்கியிருப்பது என்பதாக சில குறைகள் கண்ணில்பட்டன.
இருந்துவிட்டுப் போகட்டும்.
வெ.மாதவன் அதிகன் மாதிரியான கவிஞர்கள் கவனம் பெற வேண்டியவர்கள். தொடர்ந்து எழுத வேண்டியவர்கள். அவரது செழுமையான அடுத்த தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
மின்னஞ்சல்: madhavanadhigan@gmail.com
மின்னஞ்சல்: madhavanadhigan@gmail.com
1 எதிர் சப்தங்கள்:
√
Post a Comment