அலுவலகத்தில் ஆண்டு விழா நடக்கிறது. கடந்த வருடமும் நடந்தது. மூலையில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு ‘அடுத்த வருஷம் நான் ஆடுற ஆட்டத்துல மேடையே தெறிச்சு விழுந்துடணும்’ என்று முடிவு செய்து வைத்திருந்தேன். அப்பொழுது வேறொரு கட்டிடத்தில் இருந்தோம். நிறையப் பெண்கள் இருந்தார்கள். அதனால் அப்படித்தான் முடிவு செய்யத் தோன்றும். ஆசை இருக்குதாம் தாசில் பண்ண; அம்சம் இருக்குதாம் கழுதை மேய்க்க என்பார்கள். எனக்கு கழுதை மேய்க்கக் கூட அம்சமில்லை. கடந்த ஒரு வருடமாக இடுப்பையாவது வளைத்திருந்தால்தானே ஆகும்? விழாவுக்குப் பத்து நாட்கள் கூட இல்லை. இனி முயற்சி செய்தால் கண்டபக்கம் சுளுக்கிக் கொள்ளும். எதுவும் வேண்டாம் என்றிருந்தேன்.
கிரகம் அப்படித்தான் என்றால் நாம் சும்மா இருந்தாலும் விடாது.
இரண்டு நாட்கள் முன்பாக ஒருத்தி வந்து- சுமாரான ஒருத்தி- ‘நாங்க ஒரு மைம் பண்ணுறோம்..அதில் நீ நடிக்கிறியா?’என்றாள். நாயகன் வேடம் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். ஒத்துக் கொண்டு போன போது ஓர் அறையில் விவாதம் நடந்தது. முக்கால் வயசுக்காரன் ஒருத்தன் இருக்கிறான். தொங்கு மீசைக்காரன். அவனை அறிமுகப்படுத்தி இயக்குநர் என்றார்கள். தமிழ்நாடு-கர்நாடகப் பிரச்சினை வந்த போது நிறைய சாடை பேசுவான். ‘தமிழ்நாட்டுக்காரங்க கடல் தண்ணியை சுத்தம் பண்ணிக்கலாம்ல’ என்று கேட்டான். இவனிடமெல்லாம் என்ன பேசுவது? அப்பொழுதிருந்தே அவன் மீது கடுப்பு உண்டு. அவன் இயக்குநர் என்று தெரிந்தவுடனயே ஒரு விக்கல் வந்தது. சாதாரண விக்கல் என்று நினைத்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அடுத்த அரை மணி நேரத்துக்கு தொங்கு இல்லாத அலும்பெல்லாம் செய்தது.
‘ஒரு ஸீன் சொல்லுவேன்..நடிச்சுக் காட்டணும்’ என்று ஆரம்பித்தான். audition.
என்னை அழைத்த பெண் ‘மணி, ஸ்கிரிப்ட் எழுதுவான்...’ என்று முடிப்பதற்குள் ‘ஸ்கிரிப்ட் ரெடியா இருக்கு..அதுல ஒண்ணும் மாத்த வேண்டியதில்லை’ என்று வாயை அடைத்தான். ஓங்கி அறைவிட்டது போல இருந்தது.
இயக்குநர் சார் மும்முரமாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு முந்திரிக்கொட்டை ‘என்ன கதை?’ என்றவுடன் சாருக்கு கொஞ்சம் சுள்ளென்றாகிவிட்டது.
‘அதெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டியதில்லை..உங்ககிட்ட இருந்து எதை வாங்கணும்ன்னு எனக்குத் தெரியும்..நான் சொல்லுறதை மட்டும் செஞ்சா போதும்’ என்றான். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. பெரிய இயக்குநர்களைப் பற்றிய துணுக்குச் செய்திகளைப் படித்து கெட்டுப் போயிருக்கிறான். கிராதகன். அதுவும் கன்னட இயக்குநர்களைப் பற்றி படித்திருக்கக் கூடும்.
முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு இயக்குநர் சார் யாருக்கு என்ன பாத்திரம் என்பதைச் சொன்னார்.
‘நீ ஹீரோ’- இது என்னைப் பார்த்து இல்லை. அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று முடிவு செய்துவிட்டான். ஆஜானுபாகுவானவன் ஒருத்தன் இருக்கிறான். அவன்தான் நாயகன்.
அறையில் இரண்டு மூன்று பெண்கள் இருந்தார்கள். அவர்களில் சற்றே அழகான பெண்ணைப் பார்த்து ‘நீதான் ஹீரோயின்’ என்றான். கதையில் அழுகை இருக்கும்; ரொமான்ஸ் இருக்கும் என்றெல்லாம் சொன்ன போது ஹீரோவின் முகத்தைப் பார்த்தேன். அவன் சிவந்து கொண்டிருந்தான். ஒருவேளை, உதட்டோடு உதட்டைக் கவ்வுவதாக அவனது கற்பனைக் குதிரை ஓடிக் கொண்டிருக்கக் கூடும்.
கருமம்டா என்றிருந்தது.
அடுத்ததாக ஒருவன் அரசியல்வாதி, இன்னொருவன் ஆர்மி ஜெனரல் என்றெல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு கடைசியில் என்னைப் பார்த்து ‘நீ மரம்’ என்றான். குப்பென்றாகிவிட்டது. என்னை அழைத்தவளைப் பார்த்தேன். அவள் எதையோ விழுங்கியது போல என்னைப் பார்த்தாள்.
மைம் என்றால் பேசவே மாட்டார்கள் அல்லவா? கறுப்பு ஆடையை அணிந்து கொண்டு எல்லோருமே முகத்தில் வெள்ளைச் சாயம் பூசிக் கொள்வார்கள். உதடுகளிலும் சிவப்புச் சாயம். மற்றவர்களாவது முகத்தில் ஏதாவது உணர்ச்சி பாவனைகளைக் காட்டுவார்கள். நான் மரம். இந்தப் பக்கம் ஒரு மரம். வந்து நின்றுவிட்டுப் போனால் போதும்.
பற்களைக் கடித்துக் கொண்டு நின்றேன். எப்படி முடியாது என்று சொல்வது எனக் கண்டபடி குழப்பமாக இருந்தது. சரி ஆனது ஆகட்டும் என்று அமைதியாக நின்றிருந்தேன். வேறு வழியில்லை. அமைதியாகத்தான் நின்றிருக்க வேண்டும்.
இயக்குநர் சாருக்கு பெரிய மனது. போனால் போகிறதென்று கதையைச் சொல்லத் தொடங்கினார்.
ஒருத்தி சாலையில் நடந்து கொண்டிருக்கிறாள். அவனைப் பார்க்கும் ஒருவனுக்கு காதல் பிறக்கிறது. காதல் பிறந்தவுடன் என்ன வரும்? ரொமான்ஸ் வரும். என்ன செய்வார்கள்? மரத்தைச் சுற்றிப் பாடுவார்கள். அதாவது என்னைச் சுற்றி. கையில் விளக்குக் கொடுப்பானா என்று தெரியவில்லை. இப்படி காதல் செய்து கொண்டிருக்கும் போதுதான் அவன் இராணுவ வீரன் என்று அவளுக்குத் தெரிய வருகிறது. புளகாங்கிதம் அடைந்து உடனடியாகத் திருமணம் செய்து கொள்கிறாள். முதலிரவுக்கு முன்பாக இராணுவத்திற்கு வரச் சொல்லி தந்தி வருகிறது. கிளம்பிச் செல்கிறான். இப்பொழுது உங்களுக்கே முடிவு தெரிந்திருக்குமே- பாகிஸ்தானுடனான போரில் இறந்துவிடுகிறான். அதே மரத்தினடியில்- இப்பொழுதும் நான்தான் - வந்து அழுது கதறுகிறாள். அரற்றிவிட்டு கடைசியில் நாடுதான் முக்கியம்; வாழ்க்கை அப்புறம் என்று முடிவுக்கு வருகிறாள். ஜாரே ஜஹான்சே அச்சா பாடல் ஒலிக்கிறது. தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. எல்லோரும் வந்து மேடையில் நின்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருக்கும் பார்வையாளர்களின் கைதட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். மைம் முடிந்தது.
‘இதெல்லாம் சிவாஜி காலத்திலேயே பார்த்துட்டோம்டா தொங்கு மீசை’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு வங்காளி உள்ளே புகுந்து ‘அவளுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வெச்சுடலாம்ல..செகண்ட் ஹீரோ இல்லையா?’ என்றான். எல்லோரும் கொல்ல்ல்ல்ல் என்று சிரித்தார்கள். இயக்குநர் சாருக்கு பல்பு எரிந்து ‘யோசிக்கலாம்’ என்றார்.
எல்லோரும் கலைந்து வெளியே வந்தோம். ஒவ்வொருவருக்கும் அருகில் சென்று அவரவர் பாத்திரங்களின் முக்கியவத்துவம் பற்றி பேசினான் தொங்கு மீசை. என்னிடம் வந்து ‘மரம்தான் முக்கியமான பாத்திரம்’ என்றான். ‘மூடு’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன்.
‘சாரி பாஸ்..இப்போத்தான் எனக்குத் தேதி தெரிய வந்துச்சு...பதினஞ்சாம் தேதி ஊருக்குப் போகணும்’ என்றேன்.
‘சாரி பாஸ்..இப்போத்தான் எனக்குத் தேதி தெரிய வந்துச்சு...பதினஞ்சாம் தேதி ஊருக்குப் போகணும்’ என்றேன்.
‘நல்லா யோசிச்சுத்தான் சொல்லுறியா?’ என்றான்.
ஏமாந்தால் ஆஸ்கார் விருது தவறிப் போய்விடும். ‘நல்ல சான்ஸை மிஸ் பண்ணுறேன்னு வருத்தமாத்தான் இருக்கு..ஆனா வேற வழியில்லை...வேணும்ன்னா பழனியைக் கேட்டுப்பாருங்களேன்’ என்றேன். பழனி அலுவலக நண்பர். ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன்தான் குழி பறிப்பான். பறித்துவிட்டேன். அப்பாவி பழனிதான் மரமாக நடிக்கிறார். எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது.
அலுவலகத்தில் அந்தப்பக்கமாக வரும் போதும் போதும் பழனி முறைக்கிறார். ‘மரத்துக்கு எதுக்குய்யா ரிகர்சல்..டெய்லி கூப்ட்டு சாவடிக்கிறான்’ என்றார். அப்பாடா என்றிருந்தது. முகத்தைச் சலனமே இல்லாமல் வைத்துக் கொண்டு தாண்டிச் சென்றுவிடுகிறேன்.
இவர்களையெல்லாம் நம்பினால் வேலைக்கு ஆகாது.
இன்று காலையில்தான் அமீர்கான் உடலை மாற்றும் சலனப்படத்தைப் பார்த்தேன். குண்டாக இருந்தவர் ஐந்தே மாதங்களில் உடம்பை ஏற்றி எப்படி மாறியிருக்கிறார்? அவரளவுக்கு ஐந்து மாதங்களில் சாத்தியமில்லை. தின்பதும் உடம்பை ஏற்றுவதும் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எனக்கு அப்படியா? நிற்க நேரமில்லை. ஐந்து மாதங்களில் சாத்தியமில்லை. எப்படியும் பத்து நாட்களாவது கூடுதலாகத் தேவைப்படும். ஐந்து மாதங்கள் பத்து நாட்கள். தேதியை காலண்டரில் குறித்து வைத்துக் கொள்ளச் சொல்லி வேணியிடம் சொன்னேன். இன்னும் ஒரு மாசம்தான். இந்தக் காலண்டரைத் தூக்கி வீசிடுவோம்ன்னு தைரியத்துல சொல்லாதீங்க என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள். இந்த உலகம் வெற்றியாளரகளை எப்பொழுதும் ஆரம்பத்தில் கேவலமாகத்தான் பார்த்திருக்கிறது. காலையிலேயே அமீர்கானைப் போல பட்டாப்பட்டி ட்ரவுசரோடு நான்கைந்து படங்களை எடுத்து வைத்திருக்கிறேன். ஐந்து மாதங்கள் பத்து நாட்கள் கழித்து நெஞ்சு நிறைய எட்டு அல்லது பத்து பேக்குகளுடன் நான்கைந்து படங்கள் எடுத்து- அதுவும் அவரைப் போலவே ஜட்டியோடு- வெளியிட்டு இந்த உலகத்துக்கு நிரூபிக்கிறேன்.
அப்புறம் இருக்கிறது இந்த தொங்கு மீசைக்கு கச்சேரி.
8 எதிர் சப்தங்கள்:
Super sir!!!
உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா அண்ணா!
செம காமெடியான ஆளு சார் நீங்க...
காட்டுங்க.. காட்டுங்க.. தொங்கு மீசைக்கு மணின்னா ஆருன்னு தெரியட்டும்...!
காலந்டர் மாற்றப்படலாம் ஆனால் இங்க எழுதியது எழுதியதுதான் தல. 5 மாசத்தில மாத்திக்காட்டனும்.
//ஐந்து மாதங்கள் பத்து நாட்கள் கழித்து நெஞ்சு நிறைய எட்டு அல்லது பத்து பேக்குகளுடன் நான்கைந்து படங்கள் எடுத்து//
நல்ல கிராபிக் டிசைனர் ஐ பா(ர்)த்தா அடுத்த நாளே 8 அல்லது 10 பேக்குடன் படத்தை குடுத்துற போறாரு. இதுக்கு 5 மாசம் 10 நாளு கழியணுமாம்.
Mani.. Ultimate.. Excellent flow
/* என்னிடம் வந்து ‘மரம்தான் முக்கியமான பாத்திரம்’ என்றான். ‘மூடு’ என்று வாய் வரைக்கும் வந்துவிட்டது. அடக்கிக் கொண்டேன். */
Sema timing.. I enjoyed the building up of the emotions on previous lines and followed by this line.. i laughed out loud at office ...
A very natural flow ...
Post a Comment