Nov 29, 2016

பவானியின் கதை

லேடீஸ் க்ளப் கூட்டம் அது. உயர்தரக் குடும்பப் பெண்கள் கலந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமான உரையாடலுக்குப் பிறகு தலையாய பிரச்சினையைப் பற்றி பேசத் தொடங்குகிறார்கள். ‘உனக்குமா முடி கொட்டுது; எனக்கும்தான்’ என்று ஆரம்பிக்கிற பேச்சு ஏன் கொட்டுகிறது எதனால் கொட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நகராட்சிக்கு ஒரு மனு எழுதுகிறார்கள். ‘இந்தப் பொம்பளைங்களுக்கு பொழப்பே இல்ல’ என்றுதான் நகராட்சி அதிகாரிகள் நினைத்திருக்கக் கூடும். ஆனால் க்ளப்பின் உறுப்பினர்கள் உள்ளூர் பெருந்தலைகள் அல்லது பெருந்தலைகளின் வீட்டுக்காரம்மாக்கள். விட முடியாதல்லவா? மேன்மைமிகு உறுப்பினர்களுக்கு என்று ஆரம்பித்து ஆற்றிலிருந்து வரும் நீரை வடிகட்டி குளோரின் சேர்த்து அனுப்புவதாகவும் நகராட்சியில் பிரச்சினை எதுவுமில்லை என்று பதில் அனுப்புகிறார்கள். 

பெண்கள் விடுவார்களா? அதுவும் லேடீஸ் க்ளப் பெண்கள்.

அக்கம்பக்கத்து நகராட்சிகளில் செயல்படக் கூடிய க்ளப்புகளிலும் விசாரிக்கிறார்கள். பிற ஊர்ப் பெண்களுக்கும் அதுதான் தலையாய பிரச்சினை. குழாயில் வரும் தண்ணீரை மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புகிறார்கள். விவகாரம் தண்ணீரில்தான் இருக்கிறது. ஏதோ சில ரசாயனங்கள்தான் பிரச்சினை என்ற முடிவு வருகிறது. அந்த ரசாயனத்தினால் புற்று நோயிலிருந்து விரையில்லாத ஆண் குழந்தைகள் வரைக்கும் ஆயிரம் பிரச்சினைகள் வரக் கூடும் என்கிற முடிவுக்கு வருகிறார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார்கள். பிரச்சினையின் அடிநாதத்தைக் கண்டறிந்துவிட்டார்கள். இனி பெண்கள் மட்டுமே போராடுவது சாத்தியமில்லாதது என்று உள்ளூரில் முக்கியமான சமூக ஆர்வலர்களைச் சேர்த்து நதி நீர் பாதுகாப்புக் குழுவொன்றை அமைக்கிறார்கள். 

பவானி நதி நீர் பாதுகாப்புக் குழு என்று பெயர் பதிவு செய்யப்படுகிறது. அதன் பிறகான இந்தக் குழுவின் போராட்டம் அசாத்தியமானது.

பவானி ஆறு நீலகிரி மலைத் தொடரில் தொடங்கி சிறிது தூரம் கேரளாவுக்குள் பாய்ந்து பிறகு மீண்டும் தமிழ்நாட்டில் நுழைந்து மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், கோபி வழியாகச் சென்று பவானியில் காவிரியுடன் சங்கமிக்கிறது. வற்றாத ஜீவ நதி. இந்த நதியின் நீரில்தான் பிரச்சினை என்பதை லேடீஸ் க்ளப் கண்டறிகிறது. இதெல்லாம் நடப்பது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில். 1994 ஆம் ஆண்டில் நதிநீர் பாதுகாப்புக் குழு அமைக்கப்படுகிறது.

தாங்கள் போராடப்போவது சாதாரண ஆட்களை எதிர்த்து இல்லையென்பது அப்பொழுதே அவர்களுக்குத் தெரியும். சவுத் இந்தியா விஸ்கோஸ் என்கிற நிறுவனத்தை எதிர்த்து அவர்கள் போராட வேண்டும். அவர்கள்தான் டன் கணக்கான கழிவுகளை ஆறுகளில் அப்படியே கொட்டுகிறார்கள். நீரின் நிறம் மாறுகிறது. யாரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மீன்கள் செத்து மிதக்கின்றன. ஏனோ செத்துக் கிடக்கின்றன என்று நினைத்துக் கொள்கிறார்கள். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாத நீராக பவானி நீர் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அப்படியே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்களுக்கு முதலில் இது குறித்தான விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும் என்பதை உணர்ந்து விவசாய சங்கங்கள், தொழிலாளர் அமைப்புகள், வணிகர்கள் என்று சகலரையும் திரட்டுகிற வேலையைத் தொடங்குகிறார்கள். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பிரச்சினை குறித்துப் பேசுகிறார்கள். ஊர்வலங்களை நடத்துகிறார்கள்.

எஸ்.ஐ.வி நிறுவனமானது இன்றைக்கு டாடா ஸ்டீல் பிரச்சினையில் தவிடு தின்று கொண்டிருக்கும் சைரஸ் மிஸ்த்ரிக்குச் சொந்தமானது. லேசுப்பட்ட ஆட்கள் இல்லை. முதலாளிகள் எப்பொழுதும் முதலாளிகளாகவே இருப்பார்கள். அப்பொழுதும் அப்படித்தான். குழுவுக்கு எல்லாவிதமான அழுத்தங்களையும் கொடுக்கிறார்கள். மறைமுகமான மிரட்டல் விடப்படுகிறது. சோதனை மாதிரியை எடுத்துக் கொண்டு சென்றால் இவர்களுக்கு பின்னாலேயே ஆய்வகத்திற்கு மிஸ்திரியின் ஆட்கள் சென்று சரிக்கட்டுகிறார்கள். அரசியல்வாதிகள், அதிகாரிகள் என்று பலரும் விலை பேப்படுகிறார்கள். பலர் படிகிறார்கள். சிலர் துணிகிறார்கள்.


போராட்டம் வேகம் எடுக்கிறது. பவானி நதி நீர் பாதுகாப்புக்குழுவின் தலைவராகச் செயல்பட்ட மருத்துவர் சத்தியசுந்தரி எல்லாவற்றுக்கும் துணிகிறார். எந்தச் சூழலிலும் போராட்டம் கைவிட்டுவிடப்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். பயமில்லாமல் இல்லை. ஆனாலும் அவருக்கு ஆதரவாக நிறையப் பேர் நிற்கிறார்கள். அவர் எங்கே சென்றாலும் அவரைத் தனியாக விடாமல் ஒரு கூட்டம் அவருடனேயே செல்கிறது. மக்கள் அணி திரள்கிறார்கள். தொண்ணூறுகளின் மத்தியில் விஸ்கோஸ் ஆலைக்கு எதிராக வழக்கு தொடரப்படுகிறது. ஆலையைக் காப்பாற்றிவிடுவதற்காக விஸ்கோஸ் நிறுவனம் எல்லாவிதத்திலும் தயாராகிறது. பல கோடி ரூபாய் மதிப்புடைய ஆலை அது. சும்மா விடுவார்களா?

அப்பொழுது என்.கே.கே.பெரியசாமிதான் சுற்றுச்சூழல் அமைச்சர். சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் போராட்டக் குழுவினருக்கு மிஸ்த்ரி குழுவினரால் விருந்து வழங்கப்படுகிறது. எப்படியும் வளைத்துவிடலாம் என்பது திட்டமாக இருந்திருக்கக் கூடும். உணவைத் தட்டத்தில் எடுத்த பிறகு ‘அப்புறம்...சமாதானமா போய்டலாமா?’என்பதுதான் மிஸ்திரி குழுவினரிடமிருந்து வந்து விழுந்த முதல் வாக்கியம் என்றார் மருத்துவர் சத்திய சுந்தரி. இதை அவர்கள் நேரடியாக மருத்துவரிடம் கேட்காமல் அமைச்சரிடம் கேட்டிருக்கிறார்கள்.

‘டாக்டர்கிட்ட பேசிக்குங்க...’ என்றாராம் என்.கே.கே.

மிஸ்திரியின் பார்வை மருத்துவரை நோக்கித் திரும்பியிருக்கிறது. ‘உங்களுக்கும் எனக்கும் என்னங்க பிரச்சினை? கழிவை நிறுத்துறதுன்னா சொல்லுங்க..சமதானமா போய்டலாம்’ என்றிருக்கிறார். அவ்வளவுதான் பேச்சு. அதற்கு மேல் எதுவுமில்லை. முகம் சுருங்கிப் போன மிஸ்திரி இனி சமாதானத்திற்கு வாய்ப்பில்லை என்ற முடிவை அடைந்திருகிறார்.

போராட்டக் குழுவினர் ஊர் திரும்பிய பிறகு ‘நம்ம எதிரிங்க கூட சரிசமமா உட்கார்ந்து எப்படிங்க சாப்பிடலாம்?’ என்று சிலர் கேட்டிருக்கிறார்கள். சத்தியசுந்தரியின் பதில் மிக முக்கியமானது. பெரிய போராட்டம் அல்லது சிறிய போராட்டம் என்றில்லை- எந்தப் போராட்டமாக இருப்பினும் அது வெற்றியடைவதற்கு போராளிகளின் மனவலிமை மட்டுமே போதுமானதில்லை; அணுகுமுறைதான் மிக முக்கியமானது. மக்களின் ஆதரவைப் பெறுகிற அதே சமயத்தில் எதிரியின் வலுவைக் குறைக்க வேண்டுமானால் அவனுக்கு நம் மீது வன்மம் வரவே கூடாது என்றாராம். எனக்கு இந்த வரிகள் மிகப் பிடித்துப் போயின. எதிராளி நம் மீது வன்மமும் கோபமும் கொள்ளும் போது அவனது வெறியும் வேகமும்தான் அதிகமாகிறது. அதன் பிறகு நாம் இன்னமும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

இப்பொழுதெல்லாம் ஊருக்குப் போகும் போது அடிக்கடி மருத்துவரைச் சந்திக்கிறேன். அவருக்கு எண்பது வயதாகிறது. இன்றைக்கும் சூழலியல் சார்ந்து தொடர்ந்து இயங்குகிறார். காலை நேரத்தில் மருத்துவம் பார்க்கிறார். சீமைக் கருவேலம் மர ஒழிப்பிற்காக பாடுபடுகிறார். வறட்சி பாதிக்கும் பகுதிகளில் இருக்கும் விவசாயிகளுக்கான வாழ்வாதார பிரச்சினைகளைப் போக்குவதற்கான வேலைகளைச் செய்கிறார். சூழலியல் சார்ந்த கூட்டங்களில் கலந்து கொள்கிறார். அவரைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. பேசும் போது இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது.

மிகப்பெரிய காரியத்தை இந்தக் குழு செய்திருக்கிறது. 

அணி திரட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் உயர்நீதிமன்றத்தில் விஸ்கோஸ் ஆலைக்கு எதிராகத் தீர்ப்பு எழுதப்பட்டது. ‘சுத்தமே செய்தாலும் கூட ஆற்றில் நீரைக் கலக்க அனுமதிக்க முடியாது’ என்று தீர்ப்பு வந்த பிறகு விஸ்கோஸ் படிப்படியாக தனது செயல்பாட்டை நிறுத்தி மொத்தமாக மூடப்பட்டுவிட்டது. மேட்டுப்பாளையத்திற்கு அருகே இருக்கும் சிறுமுகை என்ற சிற்றூரில் பல ஆண்டுகளாகச் செயல்பட்ட விஸ்கோஸின் முடிவுரை ஒரு லேடீஸ் க்ளப்பின் கூட்டத்திலிருந்து வேகம் எடுக்கப்பட்டு எழுதப்பட்டது என்பது ஆச்சரியமாக இருந்தது.

ஒரு நதியைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வமாகப் போராடி வென்ற இந்தப் போராட்டம் சஞ்சீவிகுமாரின் பவானி நீர் குறித்தான தொடரில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இரா.முருகவேளின் ‘முகிலினி’நாவலை இன்னமும் வாசிக்கவில்லை. அந்நாவல் இது குறித்துப் பேசுவதாக சஞ்சீவி சொன்னார். கி.ச.திலீபன் குங்குமம் தோழில் இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

போராட்டத்தின் கதையையும் இன்னபிற விவரங்களையும் ஆவணப்படுத்துகிற ஆர்வமும் விருப்பமும் இருக்கிறது. விஸ்கோஸ் ஆலைத் தரப்பு, ஆலை மூடப்பட்டதால் வேலையிழந்த தொழிலாளர்கள், ஜீவானந்தம் உள்ளிட்டவர்களின் பிற போராட்டக் குழுக்கள் என எல்லோரையும் சந்தித்துப் பேச வேண்டும். இதுகுறித்த மேலதிகத் தகவல்கள் அல்லது தகவல்கள் தெரிந்தவர்கள் இருப்பின் தெரியப்படுத்தினால் தன்யனாவேன்.

நம் நாட்டில் அரசாங்கம் செய்ய வேண்டிய பல வேலைகளை தனிமனிதர்கள் சார்ந்த அமைப்புகள்தான் செய்கின்றன. இங்கே அரசாங்கம்தான் மரங்களை வெட்ட அனுமதிக்கிறது. நதிகள் மாசுபடுவதை வேடிக்கை பார்க்கிறது. கனிமங்கள் என்ற பெயரில் இயற்கை வேட்டையாடப்படுவதைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறது. மழை இல்லை. வறட்சி என்று அவ்வப்போது புலம்பவும் செய்கிறது. இதையெல்லாம் யாரோ சில தனி மனிதர்கள்தான் எதிர்த்துக் குரல் கொடுத்தும் போராடிக் கொண்டும் இருக்கிறார்கள். இன்றைக்கும் விஸ்கோஸ்தான் மூடப்பட்டிருக்கிறதே தவிர பவானி நதி முழுமையான பாதுகாப்பில் இல்லை. சாயப்பட்டறைகள் கழிவுகளைத் திருட்டுத்தனமாகக் கலக்கிவிடுகின்றன. காகித ஆலைகள் கழிவை கலக்குகிறார்கள். இப்படியான வன்புணர்வு அமைதியான அந்த நதியின் மீது தொடர்ந்து கட்டவிழ்க்கப்பட்டுத்தான் இருக்கின்றன. மீன்கள் சாவது குறைந்திருக்கிறதே தவிர இன்னமும் செத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நீர் கெடுவது தெரியாமலே மக்கள் குடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் பாய்ச்சிக் கொண்டுதான் இருக்கிறார்கள். எல்லாமும் தெரிந்தும் அரசாங்கம் கண்களை மூடி தியானத்தில் இருக்கிறது. 

2 எதிர் சப்தங்கள்:

Unknown said...

It should be documented.

Unknown said...

Great thing....