கடந்த வாரம் திமுக நடத்திய மனிதச் சங்கிலிப் போராட்டம் கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் பிசுபிசுத்துப் போனதாக உள்ளூர் நண்பர்கள் சொன்னார்கள். பிற மாவட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. வழக்கமாக திமுகவின் போராட்டங்கள் குறித்து ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வரக் கூடிய செய்திகளும் படங்களும் கூட இந்த முறை இல்லை. ஐநூறு, ஆயிரம் ரூபாய்த் தாள் குறித்தான விவகாரம்தான் பேசப் பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர அதே பிரச்சினைக்காக மனிதச் சங்கிலி நடத்திய திமுக பற்றிய செய்திகள் இல்லை.
என்ன ஆயிற்று?
என்ன ஆயிற்று?
‘ஒன்று எதிர்க்கலாம் அல்லது பாராட்டலாம் ஆனால் கலைஞரை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழக அரசியலைப் பேச முடியாது’ என்பார்கள். இன்றைய தலைமுறை திமுகவை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறதா என்பதை திமுகதான் பரிசீலிக்க வேண்டும். இளந்தலைமுறையின் நம்பகத் தன்மையை மீட்டெடுக்கவும், திமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான பாதை குறித்தும் தலைமைதான் யோசிக்க வேண்டும்.
இன்றைய தமிழகத்தில் ஆளுங்கட்சியில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன. மக்களும் அமைதியாக இல்லை. இந்தச் சூழலில் பழைய திமுகவாக இருந்திருந்தால் ஒட்டு மொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்திருக்க முடியும். அரசாங்கம் செயல்படுகிறதா இல்லையா? தமிழக அரசில் முக்கிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? பிரச்சினைகளில் தமிழக அரசின் வெளிப்படையான நிலைப்பாடு என்ன? என்று அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் கேள்விகளை மையமாக வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட தொண்ணூறு எம்.எல்.ஏக்களைக் கொண்ட எதிர்கட்சியான திமுக துணிந்து இறங்கியிருந்தால் இன்றைக்கு தமிழகமே கலகலத்திருக்கும். ஆனால் கட்சி ஏன் தடுமாறிக் கொண்டிருக்கிறது?
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக வென்றிருக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளுங்கட்சி வெல்வது இயல்பானதுதான். விட்டுவிடலாம். ஆனால் திரும்பத் திரும்ப ஒரே தவறைத்தான் திமுக செய்து கொண்டிருக்கிறது. அதிமுக பணம் கொடுக்கிற தொகுதிகளில் பணமே கொடுக்காமல் வேலை செய்திருக்க வேண்டும் அல்லது அதிமுக கொடுப்பதைவிடவும் கூடுதலாகக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அதிமுக ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திமுக ஐநூறு ரூபாய் கொடுக்கிறது. சட்டமன்றத் தேர்தலிலும் இதே தவறைத்தான் செய்தார்கள். ‘ரெண்டு பேருமே திருட்டுப்பசங்கதான்’ என்று சொல்லிவிட்டு அதிகமாகக் கொடுத்தவனுக்குக் குத்துகிற மனநிலைதான் மக்களிடம் இருக்கிறது. இப்படியே காசைக் கொடுத்துக் கொடுத்து தோற்றுக் கொண்டிருந்தால் ‘நின்று பார்க்கலாம்’ என்கிற மனநிலை கூட முடங்கிவிடாதா? எழுபதுகளிலும் எண்பதுகளிலுமிருந்த திமுகவாக இருந்தால் நிச்சயமாக பணமில்லாமல் தேர்தலைச் சந்தித்திருக்கும். ஆனால் இப்பொழுது திமுகவுக்கு அந்த தைரியம் கிடையாது. சத்தியமே செய்யலாம்.
எம்.ஜி.ஆர் காலத்தில் ஏதாவது போராட்டம் என்று கலைஞர் அறிவித்தால் சென்னையே நடுநடுங்கிப் போகும் என்பார்கள். காவலர் ஒருவர் துப்பாக்கியை ஏந்திக் கொண்டிருக்கும் போது தனது சட்டைப் பொத்தான்களை கழற்றிவிட்டுவிட்டு ‘சுடு பார்க்கலாம்’ என்று நெஞ்சைக் காட்டுகிற ஒரு தொண்டனின் படம் அன்றைக்கு ஏக பிரபலம். இன்றைக்கு அப்படியான வேகமும் துணிச்சலும் கொண்ட திமுக தொண்டர்கள் எங்கே போனார்கள்? கூட்டணிக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி; தன் கட்சி வேட்பாளராக இருந்தாலும் சரி- ‘காசைக் கொடுத்தால்தான் செலவு செய்வோம்’ என்று அடம் பிடிக்கிற நிர்வாகிகளை உள்ளே விட்டது யாருடைய தவறு?
ஒரு முறை நண்பர் குமணன் பொதுக்குழுவில் பேசும் போது ‘அண்ணா காலத்தில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் கழகத்துக்கு இருந்தார்கள். இன்றைக்கு எழுபது லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கு இருக்கிறது. ஆனால் அண்ணா காலத்தில் இருந்த அதே ஒரு லட்சம் பேர்தான் உண்மையான உறுப்பினர்கள். மீதமெல்லாம் போலி உறுப்பினர்கள்’ என்று பேசியதாகச் சொன்னார். துரதிர்ஷ்டவசமாக அந்த ஒரு லட்சம் பேரில் கூட முக்கால்வாசிப் பேர்கள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். போலிகள்தான் கட்சியின் பதவிகளில் இருக்கிறார்கள். ஒன்றியச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை; நகரச் செயலாளர் ஆவதற்கு ஒரு தொகை என்று பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மாவட்டச் செயலாளர்கள் பணம் வசூலிக்கிறார்கள். காசு கொடுத்து பதவிக்கு வந்தவன் ஒவ்வொருத்தனும் ‘எங்கே வாய்ப்பு கிடைக்கும்’ என்றுதான் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
அடிமட்டத்திலிருந்து போராடி களம் கண்டு பதவிகளுக்கு வருகிறவர்கள் போராட்டங்கள் நடக்கும் போது ‘இது நம் கட்சி; என் தலைவன் அறிவித்த போராட்டம்’ என்று களத்தில் நிற்பார்கள். பிற கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும், பணம் வைத்துக் கொண்டு டைம்பாஸூக்கு அரசியலில் இருப்பவர்களுக்கும் பதவியைக் கொடுத்தால் வெள்ளை வேஷ்டி கசங்கிப் போகும் என்றும் சட்டைக் காலரில் வியர்வை படியும் என்றும் மர நிழலில் ஒதுங்கத்தான் பார்ப்பார்கள். போராட்டம் பிசுபிசுக்காமல் என்ன ஆகும்?
இன்றைக்கு கீழ்மட்டத்தில் இருக்கும் பெரும்பாலான திமுக நிர்வாகிகள் காசு கொடுத்து, சிபாரிசு பிடித்து பதவிக்கு வந்தவர்கள்தான். இல்லையென்று மறுக்க முடியுமா?
இப்படி மோசமான உட்கட்டமைப்புகளாலும், கட்சி மீது பற்றுக் கொண்ட நிர்வாகிகளை ஓரங்கட்டிவிட்டதாலும் மெல்ல மெல்ல கரையானைப் போல கட்சி அரிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தலைமைக்குத் தெரியாதா என்ன? எல்லாம் தெரியும்தான்.
இப்பொழுது உண்மையான திமுக விசுவாசிகள் ஓரங்கட்டப்பட்டிருக்கிறார்கள். சகல செல்வாக்கும் படைத்த கனிமொழியே கூடத் திணறிக் கொண்டிருக்கிறார். மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன? கனிமொழி ஏன் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ளவில்லை? தஞ்சையில் கொடிகட்டிய எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இடைத்தேர்தலில் என்ன செய்தார்? நிறையக் கேட்கலாம். உட்கட்சி விவகாரம் என்பார்கள். கனிமொழி மாதிரியான முகங்கள் மேலே வருவதும் அவருக்குப் பின்னால் கூட்டம் சேர்வதும் நல்ல விஷயம்தான். ஆனால் விடமாட்டார்கள். ஓரங்கட்டுகிறார்கள்.
ஓரங்கட்டுவது எல்லாக் கட்சியிலும் உண்டுதான். தமக்கு எதிராக மேலே வந்துவிடக் கூடும் என்று பயப்படும் போதெல்லாம் தலைமை தட்டி வைப்பது வாடிக்கைதான். ஆனால் அதிமுகவில் ஓரங்கட்டப்பட்டவர்கள் தமக்கான ஆட்களைத் திரட்டிக் கொண்டு கட்சிக்கு எதிராகச் செயல்பட முடியாது. ஆனால் திமுகவில் செய்ய முடியும். ‘நானே போகல..நீ ஏண்டா போறீங்க?’ என்று எடுபிடிகளைக் கேட்க முடியும். அதுதான் பிரச்சினை. அதிமுகவில் இருப்பது சர்வாதிகாரம். திமுகவில் இருப்பது போலி ஜனநாயகம். கட்சியின் நலன் என்ற அடிப்படையில் பார்த்தால் போலி ஜனநாயகத்தைவிடவும் சர்வாதிகாரம் எவ்வளவோ தேவலாம்.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் இந்த இரண்டு கட்சிகளைத் தாண்டி மூன்றாவது சக்தி எதுவுமே தென்படவில்லை. இவர்களில் யாரோ ஒருவர்தான் வெல்ல முடியும். ஒருவரே வெல்லாமல் மாறி மாறியாவது வெல்லட்டும் என்றுதான் மனம் விரும்புகிறது. ஆனால் இனி அதிமுகவை வெல்ல வேண்டுமானால் திமுகவின் போர்க்குணத்தால்தான் முடியுமே தவிர, பணத்தால் ஒரு போதும் வெல்ல முடியாது.
அண்ணாவும், ஐம்பெரும் தலைவர்களும், கலைஞரும் உருவாக்கி வைத்திருந்த போர்க்குணத்தால்தான் இனி அது சாத்தியம். ஆனால் அதைத் திரும்ப மீட்டுவது சாதாரணக் காரியமில்லை. அடுத்த தலைமுறை இளைஞர்களிடம் கட்சி குறித்தான நல்லெண்ணத்தை விதைக்க வேண்டும். எவ்வளவோ இருக்கிறது. அட்டைக் கத்தி வைத்துக் கொண்டு சமூக ஊடகங்களில் சுழற்றுகிறவர்கள் கட்சியின் மீதான வெறுப்பைத்தான் வளர்க்கிறார்களே தவிர கட்சியின் மீதான அபிமானத்தை வளர்ப்பதாகத் தெரியவில்லை.
தேமுதிகவிலிருந்து திமுகவுக்கு கடந்த தேர்தலின் போது மாறிய நண்பர் ஒருவரிடம் பேசிய போது கடந்த ஐந்தாண்டுகளாக தேமுதிக அறிவிக்கும் போராட்டங்கள் இப்படித்தான் இருந்ததாகச் சொன்னார். தாலுக்கா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன்பாகக் கூடுவார்கள். அரை மணி நேரம் கோஷமிடுவார்கள். பிறகு தேநீர் அருந்திவிட்டுக் கலைந்து சென்றுவிடுவார்கள். மறுநாள் ‘வெற்றி வெற்றி’ என்று அறிக்கை வரும். கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிக் கிடக்கிறது. நோட்டாவில் விழும் வாக்குகளைக் காட்டிலும் குறைந்த அளவிலான வாக்குகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறது கடந்த சட்டமன்றத்தின் எதிர்கட்சி. ‘அப்படித்தான் மனிதச் சங்கிலி இருந்தது’ என்றார்.
திமுகவையும் தேமுதிகவையும் ஒப்பிடுவதாக அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. தேமுதிகவெல்லாம் கட்சியே இல்லை. ஆனால் கடந்த காலத்திலிருந்த திமுகவின் ஆற்றலும் வலிமையும் இப்பொழுது என்ன ஆகியிருக்கிறது என்பதைக் கட்சிதான் சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஓரங்கட்டுதலும், பணமும் மட்டுமே கட்சியை ஆட்சிக்கட்டிலுக்கு எடுத்துச் சென்றுவிடாது என்பதை கலைஞருக்கு அடுத்து இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
எழுதி வைத்துக் கொள்ளலாம். கட்சியின் அடிப்படையில் மாறுதல்களைக் கொண்டு வராமல் உள்ளாட்சித் தேர்தலைச் சந்தித்தால் திமுக நாறடிக்கப்பட்டுவிடும். அதிமுக எல்லாவிதத்திலும் தயாராக இருக்கிறது. இன்னொரு ஐந்தாண்டுகளுக்கு கீழ்மட்ட அதிகாரங்கள் கைவசமாகவில்லையென்றால் கட்சியின் நிலைமை விபரீதமாகிவிடும்.
12 எதிர் சப்தங்கள்:
நாங்களெல்லாம் சிறுவயதில் பார்த்த தி.மு.க.இல்லை இது. முற்றிலும்
அறவழி பிரண்டு பணபலத்தை நம்பி அலையும் கட்சியாகிவிட்டது. power
corrupts என்பதற்கு எடுத்துக்காட்டாக தமிழக அரசியலையே கெடுத்து
சாக்கடையாக்கிவிட்டது. அதிமுக பற்றிக் கூறவேண்டியதில்லை. குட்டியாகப்
பதினாறு அடி பாய்கிறது. இப்போதைக்கு நடுங்க வைக்கும் பேரணியெல்லாம் நடக்காது. செல்லாக்குப்பையாகிப்போன மூட்டைகட்டிப் பதுக்கிய தெல்லாம்
வெற்றுத்தாளாகிப் போனதால் நிலைகுலைந்து போயுள்ளன லஞ்சப்பேய்கள்,
எங்கே கிடுகிடுக்கும் பேரணி நடத்தட்டுமே பார்ப்போம்?
ஒன்றும் நடக்காது.தொடரட்டும் உங்கள் அலசல்.வாழ்த்துக்கள் மணி
dear sir, i wonder how brave you are in writing one political related article like this. ofcourse whatever you said is correct.
however, criticizing exactly the person who is suppose to come after kalaignar like this could be dangerous.
மிக சரியான அலசல்
மனிதசங்கிலி போராட்ட்ம் என்பது கைகேற்த்து நின்று கோசம் போட்டுவிட்டு செல்வது தான். நிர்வாகிகளுக்கு ஒதுக்கபட்ட இடத்தில் அவர்க்ள் ஆட்களை நிறுத்தி விடுவார்கள் அதற்க்குமேல் அங்கு எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. பரபரப்பு இல்லை என்பது உண்மை தான் இது திமுகா மட்டும் அல்ல எந்தகட்சி நடத்தினாலும் இப்படிதான் இருக்கும். ஏன் என்றாள் போராட்டகுனம் இன்றைய இளைய தலைமுறையிடம் இல்லை பழயவர்களிடம் வலு இல்லை. மேலும் ஜெயலலிதா அவர்களால் அரசியல் முறைகள் பல மாற்றங்களை பெற்றுள்ளது. இங்கு எதிர்கட்சியின் வேலை முதல் இரண்டு ஆண்டுகள் அமைதியான் போராட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆர்ப்பாட்ட போராட்டம் கடைசி வருடம் கடுமையான போராட்டம்.
@Umashankar, மனிதச் சங்கிலிப் போராட்டம் மட்டுமே பிரச்சினையில்லை. ஒதுக்கப்படுதல், பணம், தொண்டர்களின் உற்சாகம் என எல்லாமும்தான். மனிதச் சங்கிலிப் போராட்டத்தை சுட்டிக் காட்டியிருக்கிறேன். கடந்த ஐந்தாண்டுகளில் தேமுதிக படிப்படியாக வலுவிழந்த போதும் திமுக எந்தப் பெரிய உற்சாகமூட்டும் வேலையையும் செய்யவில்லை. அதைச் செய்திருந்தால் திமுக இன்று ஆளுங்கட்சியாக அமர்ந்திருக்கக் கூடும்.
ஒரு தீமூகா அபுதாபியின் குமுறல்.
dmdk katchi ya illa na....yen 40 seat 50 seat nu dmk pesunakaaaaa......dmdk val than dmk chief cm aka mudial krathu yelarukum theriummm....
very nice appraisal of today's politics.
rajagoplan
very correct appraisal of today's politics and politicians across party lines.
it is sad to see that DMK has indeed lost its dedicated foot soldiers
மணி.. நீங்க பாட்டுக்கு ஏதாவது ஐடியா குடுத்து கட்சி தெம்பாகியிற போகுது... எல்லாவிதமான முன்னேற்ற கழகங்களும் இன்னும் 5 வருசத்துக்குள்ள ஒழிஞ்சிறும்னு பலமான நம்பிக்கையில இருக்கேன்.. அப்ப தான் நம்மள மாதிரி ஆளுங்க அரசியல்ல வர்றதுக்கு கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கு.... பாத்து பண்ணுங்க ஜீ ...
திமுக மேல் எந்ந திடீர் அக்கறை ?
Good review.
Post a Comment