Nov 23, 2016

ஊர்கூடி

ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக நான்கைந்து பேர்கள் பார்க்க வந்திருந்தார்கள். தினகரனும் அவனது அம்மாவும் வந்திருந்தார்கள். பதினோரு வயதுச் சிறுவன் அவன். ரத்தச் சிவப்பணுக்கள் உடலில் உற்பத்தியாவதில்லை. அவ்வப்பொழுது மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் ஏற்றி வருவதாகச் சொன்னார்கள். ஆனபோதிலும் கூட வெளுத்திருந்தான். தினகரன் வயிற்றில் இருக்கும் போதே அவனது அப்பா இறந்துவிட்டார். அம்மா பக்கத்தில் இருக்கும் மில் வேலைக்குத் தினக் கூலியாகச் சென்று வருகிறார். இந்த நிலைமையில்தான் பையனுக்கு நோயும் பீடித்துக் கொண்டது. காய்ச்சல், உடல் வலுவின்மை என்று காரணம் தெரியாமல் பல பக்கமும் சுற்றியதில் கடைசியாக சென்னை அப்பல்லோவில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை (Bone Marrow Transplantation) செய்துவிடச் சொல்லியிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட ஒன்பது லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஒரு மாதம் மருத்துவமனையிலேயே தங்கி இருக்க வேண்டும். அதன் பிறகு இரண்டு மாதங்களுக்கு சென்னையிலேயெ தங்கியிருந்து தினசரி பரிசோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும். கணவனும் இல்லை; பெற்றவர்களும் ஸ்திரமில்லை. ஆதரவற்ற அந்தப் பெண்ணுக்கு வேறு வழியில்லை. அறுவை சிகிச்சை, தங்கும் செலவு, வீட்டு வாடகை என எல்லாமும் கணக்குப் போட்டால் பெரிய காரியம் அது.

ஊர்க்காரர்கள்தான் தினகரனுக்காக உதவி கேட்க வந்திருந்தார்கள். விசாரித்த போது இம்மியளவு கூட உண்மையிலிருந்து பிசகாமல் விவரங்களைத் தந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. நிச்சயமாக உதவிவிடலாம். ஆனால் எப்படியும் அவர்கள் சார்பில் ஒரு பெருந்தொகை இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் உதவுவதில் அர்த்தமேயில்லை. ஊரில் வசூல் செய்தெல்லாம் புரட்டுவது நடக்கிற காரியமா? 

அப்பன் இல்லாத குழந்தைக்கு மருத்துவமனைச் செலவு என்று கேட்டால் ‘யார் வீட்டில்தான் மருத்துவச் செலவு இல்லை’ என்று நினைக்கிற மனிதர்கள்தானே இங்கே அதிகம்? ஊர்க்காரப் பெரியவரிடம் பேசிய போது ‘உங்க ட்ரஸ்ட்ல இருந்து எவ்வளவு செய்ய முடியும்ன்னு நினைக்கறீங்க தம்பீ?’ என்றார். 

இப்படியொரு கேள்வியை யாராவது கேட்டால் பதில் சொல்வதில்லை. உடனடியாக ஒரு தொகையத் தருவதாக ஒத்துக் கொள்வதும் சரியில்லை. ‘உங்களால முடிஞ்சளவுக்கு பணத்தைப் புரட்டுங்க..அப்புறம் எவ்வளவு தேவைப்படுதோ அதைக் கேளுங்க..பரிசீலிக்கிறோம்’ என்பதுதான் வழக்கமாகச் சொல்கிற பதிலாக இருக்கும். தேவைக்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டியதில்லை என்பதுதான் இதன் அடிப்படை. 

‘ஒரு லட்ச ரூபாய் நீங்க ஒதுக்கி வெச்சுடுங்க தம்பி..மிச்சப்பணத்தை தலையை அடமானம் வெச்சாவது புரட்டிட்டு வந்துடுறேன்’என்று சொல்லிச் சென்றார். தினகரனின் பெயரையும் அறக்கட்டளைகளின் கோரிக்கைப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தோம். இடையில் ஒரு முறை அவர்களே அழைத்து பணம் புரட்டுகிற வேலை நடந்து கொண்டிருப்பதாகவும் தமக்கு நம்பிக்கை இருப்பதாகவும் சொன்னார்கள். எவ்வளவு திரட்டியிருக்கிறார்கள் என்று அவர்களும் சொல்லவில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை. 

தமிழக முதல்வரை அப்பல்லோவில் சேர்த்திருந்ததால் அறுவை சிகிச்சை உடனடியாக நடக்காது என்பது போலவும் சொல்லியிருந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் தினகரனுக்கு அவ்வப்பொழுது இரத்தம் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

முதன்முறையாகச் சந்திக்க வந்திருந்த போது தினகரனின் அம்மா ‘என் வாழ்க்கைக்கே இவன் ஒருத்தன்தாங்க பிடிப்பு..எப்படியாச்சும் காப்பாத்திடணும்’ என்று அழத் தொடங்கினார்.  அம்மா அழுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பையனுக்கு நீ தைரியம் சொல்லணும்..நீயே அழுதா அவன் மனசு ஒடிஞ்சுடுவான்ல..கண்ணைத் தொடைச்சுக்க’ என்று பெரியவர்கள் அவரை ஆறுதல்படுத்தினார்கள். அப்பொழுது என்ன சொல்வதென்று எனக்குத்  தெரியவில்லை. ‘எல்லாம் நல்லபடியா நடக்கும்’என்று மட்டும் சொல்லியனுப்பியிருந்தேன்.

நோய்மையின் கொடுமையும் உச்சமும் குழந்தைகளுக்கு வரும் போதுதான் பார்க்க சகிப்பதில்லை. மனமும் அமைதியாவதேயில்லை. வாழ்க்கையில் போராட்டங்கள் சகஜம்தான். வாழத் தொடங்குவதற்கே போராட வேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

கடந்த வாரத்தில் அழைத்திருந்தார்கள். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் பேசிவிட்டதாகவும் பணத்தோடு வந்தால் அறுவை சிகிச்சையைச் செய்துவிடலாம் என்று சொன்னதாகவும் காசோலையை பெற்றுக் கொள்ள வரலாமா என்று கேட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

‘பணத்தை புரட்டிட்டீங்களா?’என்றேன்.

புரட்டிவிட்டார்கள். கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட மடியேந்தியிருக்கிறார்கள். யார் யாரோ ஐம்பது பேரிடம் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வாங்கியிருக்கிறார்கள். ஏழு பேர் தலா பத்தாயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். மூன்று பேர் ஆளுக்கு ஐம்பதாயிரம் கொடுத்திருக்கிறார்கள். இதையெல்லாம் முன்னால் நின்று நடத்திய பெரியவர் மணி தனது பங்காக ஐம்பதாயிரத்தைச் சேர்த்திருக்கிறார். இவை தவிர ஐம்பதும் நூறும் இருநூறும் ஐநூறுமாக ஒரு பெரும் தொகை. நிசப்தம் அறக்கட்டளையிலிருந்து ஒரு லட்சம். எல்லாமும் சேர்த்துப் பார்க்கும் போது தேவையான பணம் கிடைத்த மாதிரிதான்.

காசோலையை வாங்கிக் கொண்டு ‘வாழ்க்கையில் இதை மறக்கவே முடியாதுங்க’ என்றார் பெரியவர். 

‘உலகத்துல எங்கெங்கயோ இருந்து யார் யாரோ நல்லவங்க கொடுக்கிற பணம்ங்க’ என்றேன். அவருக்கு விவரம் தெரிந்திருந்தது. நிசப்தம் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ‘எல்லோரும் நல்லா இருக்கட்டும்’ என்றார். தினகரனின் அம்மாவை அழைத்துக் காசோலை வாங்கிவிட்டதாகச் சொல்லி அவரிடம் அலைபேசியைக் கொடுத்தார். அந்தப் பெண்மணி நேற்றும் அழுதார். 

‘நீங்க சென்னைக்கு போங்க...நான் அப்பப்போ வந்து பார்க்கிறேன்’என்று சொல்லியிருக்கிறேன். அவருக்கு அது ஆறுதலாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். அது மீண்டும் அழுகையைக் கிளறிவிட்டது. அலைபேசியை பெரியவர் மணியிடம் கொடுத்துவிட்டேன். 

‘இது சாதாரணக் காரியமில்லைங்க...ஊரே சேர்ந்து ஒரு பையனைக் காப்பாத்துது..இந்தக் காலத்துல நினைச்சுக் கூட பார்க்க முடியல’ என்றேன். அதுதான் உண்மை. எந்தவிதமான வசதி வாய்ப்புமில்லாத ஒரு சிறுவனை ஆயிரமும் ஐநூறுமாகக் கொடுத்து இத்தனை பேர் தத்தெடுத்திருக்கிறார்கள் என்பதே சிலிர்க்கச் செய்கிறது. சத்தியமங்கலம் பக்கத்தில் இருக்கும் காசிபாளையம் அரியப்பம்பாளையம் இன்னும் சில ஊர்களில் பணத்தைப் புரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதராகச் சந்தித்து அவர்களிடம் பணம் வாங்குவதைக் கூச்சமே இல்லாமல் செய்த அந்தக் குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காலில் விழுந்து வணங்கினாலும் கூடத் தவறில்லை. 

நேற்று அதிகாலை சென்னைக்கு தொடரூர்தி ஏறியிருக்கிறார்கள். தினகரன் நல்லபடியாக ஊர் திரும்பட்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்ளலாம். ஊரே வாழ்த்தி அனுப்பியிருக்கிறது. நல்லபடியாகத்தான் திரும்புவான்.

10 எதிர் சப்தங்கள்:

Aravind said...

super sir. hats off to all including nisattham. we are confident he will be back to good health

சக்திவேல் விரு said...

நானும் இன்று என் கொடிவேரி அக்காவிடம் பேசும்போது காசிபாளையம் சம்பந்தமா பேச்சு வந்தது ...அந்த சிறுவனக்கோ இல்லை தேவைப்படுவோருக்கு பயன்படுத்த நானும் ஒரு சிறு தொகை நிசப்த்தம் அறக்கட்டளைக்கு அனுப்பி விட்டேன் ...உங்கள் பணி பாராட்டுதலுக்கு உரியது மணி .நன்றி ..

Anand Viruthagiri said...

இது போன்ற நிகழ்வுகள் ஏதோ ஒரு அற்புதம் போல் தோன்றுகிறது. மானிடத்தின் மீதான நம்பிக்கையை தக்க வைக்கிறது. அருமை மணி !

அன்பே சிவம் said...

உம்மை போன்ற மணிதர்கள் வாயிலாகத்தான் கடவுளின் கடவுச்சொல் வெளிப்படுகிறது. மணி.

செ. அன்புச்செல்வன் said...

நான் வாசித்த நிகழ்வுகளிலேயே மிகவும் நெகிழ வைத்தது இதுதான்... தினகரன் மீண்டு வர இறையை இறைஞ்சுகிறேன். இதற்காகவே உங்களையும், ஊர் மக்கள் யாவரையும் ஏத்தித் தொழவேண்டுமெனத் தோன்றுகிறது. இந்தக் கட்டுரை உண்மையிலேயே நம் மக்கள் மீதான ஒரு நம்பிக்கையை என்னுள் விதைத்திருக்கிறது. பாராட்டுகள் ங்க சார் !!

வெங்கி said...

வாழ்த்துக்களும், மகிழ்ச்சியும், ப்ரார்த்தனைகளும். தினகரன் நல்வாழ்வு வாழ்வான்.

-வெங்கி

Unknown said...

பிரதிபலனை எதிர் பார்க்காம மத்தவுங்களுக்கு உதவுறவுங்க இன்னும் இருக்காங்கனு தெரியும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு... மகிழ்ச்சி!!!

Paramasivam said...

இத்தனை மக்கள் ஆசீர்வாதங்கள் தினகரன் குணமடைய செய்யும். மனிதம் உறங்கவில்லை.

சேக்காளி said...

//இது சாதாரணக் காரியமில்லைங்க...ஊரே சேர்ந்து ஒரு பையனைக் காப்பாத்துது..இந்தக் காலத்துல நினைச்சுக் கூட பார்க்க முடியல’ என்றேன். அதுதான் உண்மை.//

சேக்காளி said...

//இதையெல்லாம் முன்னால் நின்று நடத்திய பெரியவர் மணி//
மனிதர்களில் "மணி" என்பதைக் காட்ட இந்த பெயர் இயற்கையாக அமைந்து விடுகிறதோ!.