Nov 21, 2016

தகிடுத்தத்தங்கள்

‘முப்பத்தைந்துக்கு குறைவா ஆகறதில்லைன்னு சொல்லுறாருங்க....முப்பது மேனேஜருக்கு போய்டும்..அஞ்சுதான் எங்களுக்கு’- இந்த உரையாடலை இன்று நேரடியாகக் கேட்க முடிந்தது. பரிமாற்றங்கள் நடைபெறாத(in-operative)கணக்குகளைப் பயன்படுத்தி வங்கி மேலாளர்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. லட்சம் ரூபாயை மாற்றிக் கொடுத்தால் முப்பத்தைந்தாயிரம் போய்விடும். ஆனால் அறுபத்தைந்தாயிரம் மிச்சமாகிவிடும். ‘முப்பத்தஞ்சு அதிகங்க...திருப்பூர்ல பதினஞ்சுல இருந்து இருப்பத்தேழுக்கு முடிச்சுத் தர்ற ஆளு இருக்கு’என்று கூசாமல் பேசுகிறார்கள். இவை எதுவுமே வெட்டி வதந்தி இல்லை. நடந்து கொண்டிருக்கின்றன. 

வாய்ப்புக் கிடைக்கிற இடங்களையெல்லாம் கண்டறிந்து விளையாடுகிற ஆட்கள் காளான்களைப் போல முளைத்திருக்கிறார்கள். திருப்பூர் போன்ற தில்லாலங்கடி ஊர்களில் குதியாட்டம்தான். வங்கி மேலாளர்களிடமிருந்து தரகர்கள் வரைக்கும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுவொரு பொற்காலம். மூன்று கோடி ரூபாயை மாற்றிக் கொடுத்திருந்தால் போதும் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் சம்பாதித்திருப்பார்கள். வருமான வரித்துறையும் ரிசர்வ் வங்கியும் கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றினால் எப்படியும் கொத்துக் கொத்தாக மாட்டுவார்கள். விளக்கெண்ணெய் ஊற்றுவார்களா என்றுதான் தெரியவில்லை.

நிசப்தம் அறக்கட்டளைக்கு இரண்டு மின்னஞ்சல்கள் வந்திருந்ததாக எழுதியிருந்தேன். நேற்றைய தினம் வரைக்கும் கூடுதலாக மூன்று மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. ‘மாற்ற முடியும் என்று தெரியவில்லை- எரிப்பதற்கும் குப்பையில் கொட்டுவதற்கும் பதிலாக யாருக்காவது பயன்படட்டும்’என்கிற மனநிலையில் இதை எழுதுகிறார்கள். குப்பையில் கொட்டவும் தீயிலிடவும் வேண்டாம்- சேவை நோக்கத்துடன் தொடங்கப்பட்டு நடத்த முடியாமல் செயல்படுகிற பள்ளிகள் தமிழகம் முழுக்கவும் இருக்கின்றன. பத்து லட்சத்திலிருந்து பதினைந்து லட்ச ரூபாய் வரைக்கும் கொடுத்தால் அதில் உறுப்பினர் ஆகிக் கொள்ளலாம். பல பள்ளிகளில் பல லட்ச ரூபாய்கள் கடன்களில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. பள்ளி மதிப்புடையதாகத்தான் இருக்கும். சொத்து இருக்கும். ஆனால் விற்கவும் முடியாது. அத்தகைய பள்ளிகளுக்கு தாராளமாக உதவலாம். பணமும் கைவிட்டுப் போகாது, ஒரு நல்ல காரியத்துக்கு உதவியது போலவும் இருக்கும். வருடமானால் ஒரு வருமானம் வந்து கொண்டும் இருக்கும். சட்ட ரீதியாக இது சரியா என்று தெரியவில்லை. ஆனால் எரிப்பதையும் குப்பையில் வீசுவதைக் காட்டிலும் நல்லதுதான். இப்படியான பள்ளிகள் பற்றிய விவரங்களை வேண்டுமானால் கேளுங்கள். தெரியப்படுத்துகிறேன். பணத்தை நேரடியாக வாங்கிக் கொண்டு பாரத்தைச் சுமக்க நிசப்தம் அறக்கட்டளை தயார் இல்லை.

இன்றைக்கும் ஊர்ப்பக்கத்தில்தான் இருக்கிறேன். கடந்த வாரத்தைப் போல நிலைமை இல்லை. சற்று மேம்பட்டிருக்கிறது. ஏடிஎம்களில் பணம் இருக்கிறது. ஆனால் வரிசை இல்லாமல் இல்லை. வங்கிகளிலும் கூட்டம் இருக்கிறது. பார்க்கிறவர்களிடம் இது குறித்துத்தான் பேசுகிறேன். மக்கள் முழுமையாக ஆதரிக்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. எதிர்க்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. mixed response. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்- சூடோ அறிவாளிகள் சமூக ஊடகங்களில் எழுதுகிற அளவுக்கு எதிர்ப்புணர்வும் இல்லை. காவிக்கூட்டம் கிளப்பிவிடுகிற அளவுக்கு உணர்வெழுச்சியான ஆதரவுமில்லை. சத்தியமே செய்யலாம்- ஃபேஸ்புக்கையும், ட்விட்டரையும் மட்டும் நம்பினால் வெளியுலகுக்கு சம்பந்தமேயில்லாத இருண்ட வனத்தைத்தான் நமக்குக் காட்டுவார்கள்.

வெளியில் வந்து பார்த்தால்தான் நிலைமை புரிகிறது. பணம் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே திணறுகிறார்கள். குறைவாக வைத்திருப்பவர்கள்தான் வரிசையில் நிற்கிறார்கள். கோடிகளில் வைத்திருப்பவர்களுக்கு வரிசையில் நின்றால் வேலைக்கு ஆகாது என்று தெரியும் அதனால் வரிசையில் நிற்பதில்லை. இதுதான் நிதர்சனம். பணக்காரன் ஏடிஎம்மில் நின்றானா? நடிகன் வந்து நின்றானா என்று பொங்கல் வைக்கிறவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை. எதிர்க்க வேண்டும். எதிர்க்கிறார்கள். கோபி, சத்தியமங்கலத்தில் நான்காயிரம் ரூபாயை மாற்றிக் கொடுத்தால் நானூறு ரூபாய் கமிஷன் தந்திருக்கிறார்கள். ஆதார் கார்டுக்கு ஒரு முறை, ஓட்டுநர் உரிமத்துக்கு ஒரு முறை என்றாலும் கூட ஒரு நாளைக்கு எந்நூறு ரூபாய் கிடைக்கும். பணத்தை வாங்கியவனே திரும்பத் திரும்பத் வரிசையில் நிற்கிறான் என்று விரலில் மை வைத்ததற்கு அர்த்தமில்லாமல் இல்லை. அரசாங்கமும் என்னதான் செய்யும்? ஏதாவதொரு விதத்தில் கட்டுப்படுத்தித்தானே ஆக வேண்டும்?

கடந்த வாரத்தில் மாற்றித் தருவதற்காக இருபத்து இரண்டு சதவீதம் கமிஷன் என்று பேசி அழைத்திருக்கிறார்கள். ‘எல்லாமே நூறு ரூபா நோட்டுதான்...காசு எண்ணுற மிஷின் எங்ககிட்ட இல்ல..நீங்கதான் எடுத்துட்டு வந்துடணும்’என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதெல்லாம் நம்புகிற விதத்திலேயே இருந்திருக்கிறது. ஏதோ ஒரு வனாந்திரத்தில் இருக்கும் குடோனுக்கு வழி சொல்லி இரவு நேரத்தில் அங்கே வரச் சொல்லியிருக்கிறார்கள். சில கோடிகளுடன் சென்றவர்களை ஏழெட்டு பேர் சேர்ந்து அடித்து நொறுக்கி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். பணம் போனால் தொலைகிறது; உயிர் பிழைத்தால் போதும் என்று வந்திருக்கிறார்கள்.

நடந்திருக்கிறது. சகலமும் நடைபெறுகின்றன. 

இதுதான் சாத்தியம். இப்படித்தான் நடக்கும் என்று கணிக்கவே முடிவதில்லை. எங்கேயெல்லாம் ஓட்டை என்பதைத் தெரிந்து அங்கேயெல்லாம் தகிடுதத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஓராளுக்கு இரண்டாயிரம் ரூபாய்தான் அதிகபட்சமாக மாற்ற முடியும். பணம் எடுத்தால் கையில் மை வைக்கப்படும் என்பதையெல்லாம் நாம் கிண்டலடித்தாலும் யோசித்துப் பார்த்தால் வேறு வழியில்லை என்றுதான் தோன்றுகிறது. அரசு இன்னமும் ஏகப்பட்ட முறைகளைக் கொண்டு வர வேண்டும். வங்கி மேலாளர்களைக் கவனிக்க வேண்டும். இதுவரை இயங்காத வங்கிக் கணக்கில் ஏன் திடீரென்று பணம் வருகிறது என்பதை பரிசீலிக்க வேண்டும். செய்வார்கள் என்று நம்பிக்கையிருக்கிறது. நேற்று ஒரு வருமான வரித்துறை அலுவலரிடம் பேசிய போது ‘எல்லாமே கண்காணிப்பில் இருக்கு...இப்போ தப்பிக்கிற மாதிரி தெரியலாம்..ஆனால் மாட்டுவாங்க’என்றார். இரண்டரை லட்ச ரூபாயைத் தாண்டியவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்ப ஆரம்பித்துவிட்டதாகவும் சொன்னார்.

பல லட்சம் கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வந்திருக்கிறது. இன்னமும் வந்து சேரும். கார்போரேட் நிறுவனங்களுக்கு கடனாகக் கொடுக்காமல் இந்திய அளவிலான மிகப்பெரிய திட்டங்களைச் செயல்படுத்தினால் உருப்படியாக இருக்கும். தங்க நாற்கரச் சாலை உள்ளிட்ட திட்டங்கள் தொடங்கப்பட்ட போது நிறைய எதிர்க்குரல்கள் எழுப்பப்பட்டன. இன்றைக்கு அதுவொரு மிகச் சிறந்த திட்டமாக இருக்கிறது. அப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும். தேசம் முழுமைக்குமான நீர் வழிச்சாலை, நதி நீர் இணைப்பு என்று என்று பெரிய திட்டங்களாகச் செயல்படுத்தத் தொடங்கினால் இவர்கள் புலம்புகிற பணப்புழக்கத் தட்டுப்பாடு, வாங்கும் திறன் அடிபடுவது போன்ற சிக்கல்களையெல்லாம் தாண்டிவிடக் கூடும். பார்க்கலாம்.

அரசியல், காழ்ப்புணர்வு, சமூக ஊடக அராஜகங்களின் அடிப்படையில் விமர்சனங்கள் செய்தாலும் கோடிகளைத் தாண்டி வைத்திருப்பவர்கள் நிச்சயமாக மாட்டிக் கொண்டார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். இன்னமும் டிசம்பர் 31 ஐ நெருங்குகையில் வெவ்வேறு விதமான பித்தலாட்டங்களும் அயோக்கியத்தனங்களும் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கும். சென்னை, பெங்களூர் மாதிரியான நகரங்களில் அமர்ந்து கொண்டு ‘எனக்கு எகனாமிக்ஸ் தெரியும்’ என்று பீலாவிட்டபடி எதை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் இதை முற்றாக மோசமான திட்டம் என்று சொல்ல முடியாது என்றுதான் திரும்பத் திரும்ப முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.

16 எதிர் சப்தங்கள்:

Packirisamy N said...

//எரிப்பதையும் குப்பையில் வீசுவதைக் காட்டிலும் நல்லதுதான்.//

எரிந்த பணம் அரசாங்கத்தை சேர்ந்த பணமாகிவிடும் என்று நினைக்கிறேன். பணத்துக்குதேவை அதிகமானால் பணத்தின் மதிப்பும் அதிகமாகிவிடும். விலைவாசி ஏறாது.பொதுமக்கள் பலனடைவார்கள்.

Prakash said...

அதாவது... இதை ஆதரிச்சா மட்டும் தான் .அறிவாளி.. இல்லேன்னா சூடோ அறிவாளி... பீலா பார்ட்டி... அப்டியா...???

Prakash said...

ஆதாரத்தோடு பேசுகிற பொருளாதார நிபுனரல்கள் எல்லாம் பீலா பார்ட்டி???

SYED said...

இது மோசமான திட்டம் என்று கூறவில்லை . டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது . ஒரு டாலர் 66.30 லிருந்து 68.20ஐ தொட்டுள்ளது . பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்த்துள்ளது . சிறு , நடுத்தர தொழில்கள் முடங்கியுள்ளது . இது மொத்த உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கலாம் . வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுகின்றன . நிலைமை விரைவில் சரியாக விட்டால் இந்திய பொருளாதரமே பாதிக்கக்கூடும் . ஆனால் அருமை ,கள்ளப்பணம் ஒழிந்து விட்டது . தேசத்திற்க்காக பொறுத்து கொள்ளவேண்டும் என மோடி ஜால்ராக்கள் முகநூலிலும்,சமூக வலை தளங்களிலும் என செய்திகள் எந்த சமாதானத்தை ஏற்படுத்தப்போவது இல்லை

கொலைவெறியுடன் மக்கள் இருக்கிறார்கள் . ஆனால் மௌனமாய் இருக்கிறார்கள் . உச்ச நீதி மன்றமே கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறியதை புறந்தள்ள முடியாது . உச்ச நீதி மன்றம் மிக கவனமாக இந்த கருத்தை வெளிட்டிருக்கிறது . நிலைமை சரியாக விட்டால் மக்கள் வீதியில் இறங்கி போராட தயங்க மாட்டார்கள் . முன்னேற்பாடுகள் இன்றி இந்த திட்டம் சொதப்பி பாதிப்பை உண்டாக்கியுள்ளது என்பது உண்மை

சேக்காளி said...

//இதுவரை இயங்காத வங்கிக் கணக்கில் ஏன் திடீரென்று பணம் வருகிறது என்பதை பரிசீலிக்க வேண்டும்.//
உண்மையிலேயே நல்ல பணமாக இருந்தால் அதை வங்கியில் போட்டு தானே மாற்ற வேண்டும்.சிறு வியாபாரிகளிடம் கூட இரண்டரை லச்ச ரூபாய் பணமாக இருந்திருக்கும் தானே.போவதற்கும் வருவதற்கும் ஆன கால விரயத்தை எண்ணிக் கூட பணமாக வைத்திருந்திருக்கலாம். இப்போது அதனை வங்கியில் தானே மாற்றியாக வேண்டும்.

Pari said...

பொதுவாக நம்மவர்கள் சினிமா அல்லாத சமகால செய்திகளையும் ஊடகங்களையும் கவனிக்காமல் இருப்பது குறித்த வருத்தம் எனக்கு உண்டு. ஆனால் இதுபோன்ற சமயங்களில் ஊடகங்களை கவனிக்காமல் இருப்பதே நல்லது எனப் படுகிறது. மொத்த அரசு நிர்வாகமும் நம் பாக்கெட்டில் இருக்கும் கடைசி நூறு ரூபாயையும் பிடுங்கதான் சதி செய்வதாக நம்பவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிவிட்டர், பேஸ்புக் தாண்டி இம்முறை செய்தி ஊடகங்களும் புரட்சியாளர்களால் நிறைந்திருப்பதுதான் வருத்தம்.

Unknown said...

"பல லட்சம் கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வந்திருக்கிறது."
இது எனக்கு புரியவில்லை. இது எப்படி அரசு பணமாக மாரும். இது மக்கள் செல்லாத ரூபாய் நோட்டுகளை தந்து நல்ல நோட்டுக்களை பெற்றுள்ளார்கள். இன்னும் சிறிது நாட்களில் அதை எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். நான் என்னிடம் இருந்த 18000 ரூபாய் வங்கியில் செலுத்தி விட்டு 8000 ருபாய் பிறகு எடுத்து விட்டேன். இந்த வரம் 4000 ரூபாய் எடுத்து விடுவேன். அதை போன்ருதான் அனைவரும் சில்ர் சில மாதம் கழித்து எடுத்து விடுவார்கள் . இது எப்படி அரசுக்கு உதவும்.

Pari said...

இது பயனளிக்குமா எனத் தெரியவில்லை,

நாம் அனைவரும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நமது வங்கிக் கணக்குகளை அவ்வபபோது சரிபார்த்துக் கொள்ளலாம். Net Banking எனில் எளிது, இல்லையேல் ஏடிஎம்மில் Mini Statement. குறைந்தபட்சம் நம் கணக்குகள் வழியாக எந்த தகிடுதித்தங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம்.

வருமான வரித்துறை இதையும் கண்காணித்து வருவதாக சொல்வது சற்றே நம்பிக்கையளிக்கிறது.

இரா.கதிர்வேல் said...

நீங்கள் கூறுவது போல பிரச்சனை ஒன்றும் அவ்வளவு எளிதாக இல்லை எங்க ஊரில். மக்கள் வங்கியில் தின்று அல்லோலப்படுகிறார்கள். வங்கிக்குச் சென்று பணம் கிடைக்காமல் அடுத்த நாள் சென்றவர்களும் இருக்கிறார்கள். இதுவரை 45-க்கம் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பணம் முழுமையாக அச்சடிக்க 7-மாதங்கள் ஆகும் என்கிறார். நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரலெழுப்புகின்றன. உச்சநீதிமன்றம் கண்டிக்கிறது. வங்கிகள் ஊழியர்கள் சங்கம் கண்டிக்கிறது. அப்படியே கறுப்பு பணம் வைத்திருப்பவர்கள் கள்ளச்சந்தையில் மாற்ற முடியாவிட்டால் அதை வங்கியில் செலுத்தி மாட்டிக்கொள்ள அவர்கள் ஒன்னும் முட்டாள்கள் அல்ல. அப்படியே கறுப்பு பணத்தை பணமாக வைத்திருப்பவர்களுக்கு இப்போது கையில் இருக்கும் தொகையை இழப்பதால் அவர்களுக்கு ஒன்றும் நட்டமும் இல்லை. அதனால் அவர்கள் நடுத்தெருவுக்கு வரப்போவதும் இல்லை. ATM வசதி வங்கிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று இங்கையே இந்த நிலைமை என்றால் மற்ற மாநிலங்களில்?

உங்களுக்கு இன்றைய நாளிதழில் வந்த செய்தியையே தருகிறேன்.

ஒரு குளத்தில் மாசு ஏற்படுத்தும் சாக்கடை இணைப்பை துண்டிக்காமல் குளத்து நீரை அவ்வப்போது எடுத்து சுத்தம் செய்வது குளத்து மாசை குறைக்காது. அது போல கறுப்பு பணத்தின் தோற்றுவாயை மூடாமல் பணமறுதலிப்பை செய்வது பயன் தராது, மாறாக மிகப்பெரிய பொருளாதார சுமையைத்தான் ஏற்படுத்தும்.
--இராம.சீனுவாசன், தி இந்து(தமிழ்)--

காத்தவராயன் said...

மாநில தேர்தல் ஆணையத்தின் உதவி இருந்தால் வோட்டர் ஐடி நம்பரை மொத்தமாக வாங்கலாம்.

மாநில ஆர்.டி.ஓ துறையின் உதவி இருந்தால் டிரைவிங் லைசென்ஸ் நம்பரை மொத்தமாக வாங்கலாம்

மாநில ரேஷன் துறையின் உதவி இருந்தால் ரேஷன் கார்டு நம்பரை மொத்தமாக வாங்கலாம்.

வங்கி ஊழியரின் துணை இருந்தால் வாங்கிய நம்பரை எல்லாம் கொடுத்து மொத்தமாக பணத்தை மாற்றலாம்.

விரலில் மை வைப்பதெல்லாம் ஜெய்சங்கர் காலத்து டெக்னாலஜி manikandan.

radhakrishnan said...

நல்ல புரிதல். அருமையான விளக்கம். அசத்துகிறீர்கள் மணி.
ஜெயமோகன் விளக்கம் எப்படி?

BalajiMurugan said...

முதல் முறை நிறைய தவறான தகவல் கட்டுரை படிக்கிறேன் நிசப்தத்தில்.... :(

1) பல லட்சம் கோடி ரூபாய் அரசு கஜானாவிற்கு வந்திருக்கிறது.
//என்னனே நீங்க...///

2) ஒரு நல்ல காரியத்துக்கு உதவியது போலவும் இருக்கும். வருடமானால் ஒரு வருமானம் வந்து கொண்டும் இருக்கும். சட்ட ரீதியாக இது சரியா என்று தெரியவில்லை. ஆனால் எரிப்பதையும் குப்பையில் வீசுவதைக் காட்டிலும் நல்லதுதான். இப்படியான பள்ளிகள் பற்றிய விவரங்களை வேண்டுமானால் கேளுங்கள்.

(கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு உதவ வேண்டும் என்று எப்படி தோன்றியது)

மற்றபடி - கட்டுரையில் உள்ள அனைத்தும் நிதர்சனம்... 500 நோட்டுகள் முன்னாடியே வந்திருந்தால், பிரச்சினையே இருந்திருக்காது... எல்லாம் நன்மைக்கே... பொறுத்திருந்து பார்ப்போம்....

silviamary.blogspot.in said...

கண்டிப்பாக நல்ல திட்டம் தான். 2000 ரூபாயை புதிதாக விட்டதற்குப் பதிலாக புதிய 500 ரூ. கரன்சிகளை முதல் நாளிலிருந்தே புழக்கத்தில் விட்டிருந்தால் மக்கள் இப்போது படும் அவஸ்தைகள் இருந்திருக்காது. அறிவிக்கும் போதே தங்கம் வாங்கினால் பான் கார்டு அவசியம் என்று சொல்லியிருக்க வேண்டும். பின்னால் தான் அந்த அறிவிப்பு வந்தது. கரன்சிகள் அதிகம் புழங்குகிற பொதுத்துறை - போக்குவரத்துத் துறை மாதிரியான - நிறுவனங்களிடமிருந்த கையிருப்பு மொத்தத்தையும் கைப்பற்றி அவற்றை வங்கிகளில் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

சோம. சிவ சங்கரன் said...

//Burning a currency note will not cause a loss to the economy.

//If you burn a ₹1000 currency note, It will decrease your wealth by the said //amount, but all others will become richer in a sense.

https://www.quora.com/Does-burning-currency-notes-cause-loss-to-a-nation/answer/Deepak-Mehta-2?srid=hWN1

Siva Sankaran

S. Ramanathan said...

Right now it causes inconvenience but if large black money generators and hoarders are put behind bar with no bail , it will be worth it. Else it will not be worth it. By this I mean ministers, MLA ,MP,(current and ex, bjp and other major parties included) high+supreme court judges, Income+customs tax officials in IRS rank , police officers (IPS level)etc.Instead if they catch only low level persons and declare victory , it wont be correct.
When i told this to my bjp supporter friend he said i am too greedy. Am I?

பெம்மு குட்டி said...

இப்ப கிட்டதட்ட பத்து மாசம் ஆகின பிறகு, உங்க மனநிலை எப்படி இருக்கு, இப்பவுப் இதை நல்ல தினடம்ன்னு சொல்லுறீங்களா?? இதனால நன்மை நடந்தது ன்னு நினைக்கிறீங்களா??