Nov 23, 2016

இரவுகள்

ஊருக்குக் கிளம்புவதற்கு முன்பாக ‘பெங்களூருக்கு 330 ரூபாதான் டிக்கெட்...புக் பண்ணிடட்டுமா?’ என்று கேட்டார்கள். வார இறுதி, தீபாவளி, பொங்கல் சமயங்களில் ஆம்னி பேருந்துகளில் செமத்தியாக இலாபம் வைத்து அடிக்கிறார்கள். ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரைக்கும் கூடக் கறக்கிறார்கள். வாரத்தின் நடுவில் என்றால் கிடைத்தவரைக்கும் கிடைக்கட்டும் என்ற மனநிலையில் முந்நூற்று முப்பது வரைக்கும் கூட இறங்குகிறார்கள். something is better than nothing.

தனியாகப் பயணிக்கும் போதெல்லாம் இலவசமாகவே அழைத்துச் செல்வதாகச் சொன்னாலும் கூட ஆம்னி பேருந்தில் ஏறுவதில்லை. தூங்குவதைத் தவிர அதில் வேறு எந்த அனுபவமும் இல்லை. பயணங்களின் போது முடிந்தவரை ஊராக இறங்கி ஏற வேண்டும். இரவுகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கண் உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சப்தம் உண்டு.  தனித்த வாசனையும் உண்டு.

கோபியிலிருந்து ஈரோடு வரைக்கும் ஒரு பேருந்து. இரவு பத்து மணிக்கு மேலாக ஈரோடு பொதுக்கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதே பெரிய சாதனைதான். இலவசக் கழிப்பறையின் துர்நாற்றம், கசகசப்பு என்பதெல்லாம் ஒரு பக்கம். அது பெரிய விஷயமுமில்லை. உள்ளே நுழைந்து நமக்கான இடத்தைப் பிடித்து நிற்கும் போதே இரண்டு மூன்று பேர்களாவது நமக்கு இருபக்கமும் வந்து நின்று கொள்வார்கள். அவர்களது கண்கள் கீழே குத்திட்டு நிற்கும்.‘கொத்திட்டு போய்டுவாங்க போலிருக்கு’என்று மறைத்து மறைத்து ஒரு வழியாகக் காரியத்தை முடிக்கும் போது பரிதாபமாக ஒரு பார்வை பார்ப்பார்கள் பாருங்கள். காதல், காமம், பரிதாபம், தாபம் என எல்லாவற்றையும் கலந்து கட்டிய பார்வை அது. எந்தக் காரணத்திற்காகவும் கண்களை மட்டும் பார்த்துவிடக் கூடாது. தலையைக் குனிந்தபடியே வேகவேகமாக கழிப்பறையை விட்டு வெளியே வருவதே மிகப்பெரிய வெற்றி பெற்றதான ஒரு மனநிலையை உருவாக்கிவிடும். வெளியே வந்தாலும் விடமாட்டார்கள். பின்னாலேயே ஒன்றிரண்டு பேராவது வருவார்கள். ஆனால் பயப்பட வேண்டியதில்லை. வேறொரு ஆள் உள்ளே நுழையும் வரைக்கும்தான் நம்மை பின் தொடர்வார்கள். இன்னொருவன் உள்ளே நுழைந்தால் அவனுடையதை எட்டிப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். 

பனிரெண்டு மணிக்கு பெண் தனியாகப் போவது மட்டுமே சுதந்திரமில்லை. கழிப்பறைக்கு ஒரு ஆண் தனியாகச் செல்வதுமே கூடத்தான் உண்மையான சுதந்திரம்.

ஈரோட்டைவிடவும் சேலம் சுவாரஸியம். வழக்கமாக சேலத்தை அடையும் போது நள்ளிரவு தாண்டியிருக்கும். பனிரெண்டு மணிக்கு சேலத்தில் பேருந்து ஏறினால் நான்கு மணிக்கெல்லாம் பெங்களூரில் இறக்கிவிட்டுவிடுவார்கள். பெங்களூரின் தெருநாய்கள் பெரும்பாலானவை குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் கத்தரித்து விடப்பட்டவை. அதிகாலைக் குளிரில் அவற்றின் தூக்கத்தைக் கெடுத்தால் இருக்கிற கடுப்பையெல்லாம் நம்மிடம் இறக்கி வைத்து அழிச்சாட்டியம் செய்யக் கூடியவை. அவைகளுக்கு பயந்தே ஒரு மணி வரைக்கும் சேலத்தில் பேருந்து ஏறுவதில்லை. அதுவொரு சங்கல்பம். இருக்கிற முக்கால் மணி நேரத்தைக் கழிக்க வேண்டுமல்லவா?

சேலம் பேருந்து நிலையத்தில் சுக்குக் காபியை மிதிவண்டியில் வைத்து விற்பார்கள். உளுத்தம் கஞ்சியும் கிடைக்கும். ஒரு லோட்டாவை அடித்தால் கொஞ்ச நேரம் தெம்பாகச் சுற்றலாம். வெளியே இருந்து பார்த்தால்தான் பெரிய பேருந்து நிலையம். நடந்தால் பத்து நிமிடத்தில் சுற்றி வந்துவிடலாம். ஆனால் ஆங்காங்கே நின்று பார்க்க நிறையக் காட்சிகள் உண்டு. பெங்களூரு பேருந்துகள் நிற்கும் பக்கமாக அரவாணிகள் நிற்பார்கள். அட்டகாசமான அரிதாரத்தோடு நிற்கும் அவர்களிடம் வந்து பேசுகிறவர்களின் உடல் மொழியை கவனிப்பதற்காகவே எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்கலாம். வெட்கப்பட்டுக் கொண்டே வருகிறவர்கள், தயங்கித் தயங்கி நிற்பவர்கள், தாம் கெத்தாக இருப்பதாக நம்பிக் கொண்டு அவர்களை அணுகுகிறவர்கள்- விதவிதமான மனிதர்கள்.

இரவுகளில் மட்டும் மனிதர்களுக்கு ஏதோவொரு சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. பகல் முழுவதுமாக அணிந்து திரிந்த முகமூடிகளைக் கழற்றி வைத்துவிட்டு காமத்தை மட்டுமே அணிந்து திரிகிறார்கள். தடுமாறவும் திசை மாறவும் எல்லாவிதமான வாய்ப்புகளையும் இரவு திறந்துவிட்டுவிடுகிறது. மனம் திக்கற்றுத் திரியும் இரவில் மனிதர்களின் ஒவ்வொரு அசைவுமே அசாத்தியமான தனித்தன்மை கொண்டவை.

ஒற்றைப் பையைத் தூக்கிக் கொண்டு தலையில் நிறைய பூ வைத்தபடி சற்றே குண்டடித்த பெண்கள் ஏற்காடு செல்லும் பேருந்துகள் நிற்குமிடத்தில் அலைந்து கொண்டிருப்பார்கள். அவர்களிடம் பேச இன்னொரு கூட்டம் முயற்சித்துக் கொண்டிருக்கும். நடைபாதை முழுக்கவும் பழங்களை அடுக்கி வைத்துவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும் வியாபாரிகள், ‘வாங்க சார் டீ, காபி, கூல்டிரிங்க்ஸ்’ என்று அழைக்கும் கடைக்காரர்கள், அந்தக் கடைகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் இளையராஜா, பழக்கடை ஊதுபத்திகள் என்று சேலம் நம்மை கிறுகிறுப்பூட்டக் கூடிய ஊர். 

கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற அடுத்த நிலை ஊர்களின் பேருந்து நிலையங்களில் பத்து மணிக்கு மேலாக சவக்களை வந்துவிடும். மயான அமைதி நிலவும். பேய் கூட படுத்துறங்க பயப்படும். அதுவே சென்னை கோயம்பேட்டில் காவல்துறையினர் அலும்பு செய்வார்கள். வியாபாரிகளையும் ப்ளாட்பாரவாசிகளையும் துரத்திக் கொண்டேயிருப்பார்கள் - பழத்தில் ஒட்டும் ஈக்களை விரட்டுவது போல. சில வினாடிகளில் ஈக்கள் வந்து ஒட்டுவது போலவே மனிதர்களும் திரும்ப வருவார்கள். அதில் சுவாரஸியம் எதுவுமில்லை. பார்க்க பார்க்க பரிதாபம்தான் வரும். ஆனால் சேலம், கோவை, மதுரை மாதிரியான தூங்கா பேருந்து நிலையங்கள் அப்படியானவை இல்லை. ஒவ்வோர் இரவும் ஓராயிரம் கதைகளைக் கொண்டவை.

மனிதர்களை நெருங்கிச் செல்லும் போதுதான் வாழ்க்கையின் விதவிதமான நிறங்களை  உணர முடிகிறது. இணையமும் செல்போனும் வந்த பிறகு மனிதர்களுடனான உறவுகள் நமக்கு முற்றாகத் துண்டித்துப் போய்விட்டன. சக மனிதர்களைத் திரும்பிப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூட அருகிவிட்டன. யாராவது என்னிடம் ‘ஏன் ஆம்னி பேருந்தில் செல்வதில்லை?’என்று கேட்டால் இதுதான் முக்கியமான காரணம். செகளரியமாக இருப்பது சுகமானதுதான். ஆனால் சுவாரஸியமற்றது.

இந்த முறை சேலத்தில் இறங்கிச் சுற்றிக் கொண்டிருந்த போது வேலி முட்கள் நிறைந்திருந்த அதன் எல்லையில் ஏதோவொரு கட்டிட வேலை நடைபெறுவது தெரிந்தது. மண்ணைக் குவியல் குவியலாகக் கொட்டி வைத்திருந்தார்கள். அதன் மீது திட்டுத் திட்டாக நம்மவர்கள் ஈரமாக்கி வைத்திருந்தார்கள். மண் மேட்டுக்கு அருகே சென்றாலே ‘சார்...தள்ளிப் போங்க’ என்று சொல்வதற்காக பாதுகாவலர்களை நியமித்திருக்கிறார்கள். 

‘ஏண்ணா துரத்தறீங்க?’என்றேன். 

‘நாளைக்கு காலையில ஆளுங்க வேலைக்கு வருவாங்க’ என்றார். 

கால்களை மெட்டிக் கொண்டு வேலி முள் பக்கமாக நகர்ந்தால் மூன்று ஆட்கள் தலை தெரிந்தது. மூவருமே ஆண்கள்தான். எழுந்து நின்றார்கள். ‘வர்றீயா?’என்றான் எவனோ ஒருவன். ‘அடங்கொக்கமக்கா’என்றபடி வடிவேலு நடப்பது போல வெக்குடு வெக்குடு என்று வேகமாக நடந்த போது ‘டேய்..டேய்’என்றார்கள். நடந்த வேகத்தில் தலை தெறித்துவிடும் போலிருந்தது. இழுத்துச் சென்று துணியை உருவிவிட்டால் எப்படிக் கதற வேண்டும் என்று மனம் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தது. திரும்பிப் பார்க்காமல் ஓட்டமும் நடையுமாக ஓடிய போது சற்றே தள்ளி வேலி முள் பக்கத்திலிருந்து இன்னொருவன் வெளிப்பட்டான். தலையில் நிறைய முடி இருந்தது. கிட்டத்தட்ட முதுகு வரைக்குமான கூந்தல். மீசையில்லை. மழித்திருந்தான். பெண்ணின் நளினம் அவனது நடையில் இருந்தது. உதட்டைக் குவித்து நாயை அழைப்பது போல ஒலியெழுப்பினான். தொண்டையைக் கணைத்தான். இப்பொழுது ‘அடங்கொண்ணிமலையா’என்று சொல்லிக் கொண்டேன்.

முட்புதருக்குள் இன்னமும் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பதற்றத்தில் பேருந்துக்குப் பக்கமாக வந்த போதுதான் சிறுநீர்ப்பை நிரம்பியிருந்தது ஞாபகம் வந்தது. பரவாயில்லை என்று பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தேன். நடத்துநர் ‘இடையில எங்கேயும் நிக்காது...அடுத்து ஒசூர்தான்’என்றார். இரண்டரை மணி நேரத்துக்குக் குறைவில்லாமல் ஆகும். ‘டேங்க் வெடித்துவிட வாய்ப்பிருப்பதால்’ இறங்கிக் கொண்டேன். கட்டணக் கழிப்பறையை நோக்கி நடந்த போது ஒரு ஆண் பூனை பெண் பூனையை வேகமாகத் துரத்திக் கொண்டு ஓடியது. குழந்தையைப் போலக் கதறிய அந்தப் பெண் பூனை ஒரு பக்கமாக ஒதுங்கியது. ஆண் பூனையின் வால் மட்டும் வெளியில் தெரிந்தது.

7 எதிர் சப்தங்கள்:

சேக்காளி said...

//‘ஏன் ஆம்னி பேருந்தில் செல்வதில்லை?’என்று கேட்டால் இதுதான் முக்கியமான காரணம்//
ம்ம்ம். நடக்கட்டும் நடக்கட்டும்.

சேக்காளி said...

//ஓட்டமும் நடையுமாக ஓடிய போது சற்றே தள்ளி வேலி முள் பக்கத்திலிருந்து இன்னொருவன் வெளிப்பட்டான். தலையில் நிறைய முடி இருந்தது. கிட்டத்தட்ட முதுகு வரைக்குமான கூந்தல்//
ஓடுறது இருட்டுக்குள்ள. இதுல என்ன _ _ _ த்துக்கு முடியையும் ,கூந்தலையும் ரசிக்கேரு????????????

சேக்காளி said...

//இழுத்துச் சென்று துணியை உருவிவிட்டால்//
துணி போனாப் பரவாயில்ல *மணி முக்கியம் ஆமா.
*மணி - மணிகண்டன்.

சேக்காளி said...

இந்த பதிவிற்கான கலாய்கள் இத்துடன் நிறைவடைகிறது.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்.

நன்றி வணக்கம்.

வெட்டி ஆபீசர் said...

அடடே கலாய்ச்சிட்டாராமா..

ஏன் பாஸ் உங்களுக்கு ஏன் இந்த பொழப்பு..?

வெங்கி said...

##இரவுகளில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கண் உண்டு. ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சப்தம் உண்டு. தனித்த வாசனையும் உண்டு##

ஆம். இரவு நேர பேருந்து நிலையங்கள், கதைகள் கொண்டவை மணி. கோவை வேளாண் பல்கலையில், இளங்கலை தோட்டக்கலை படித்தபோது (1989-93), பல சமயங்கள் காந்திபுரம் பேருந்து நிலையத்தின் இன்னொரு முகத்தைப் பார்ப்பதற்காகவே பின்னிரவில் சைக்கிள் எடுத்துக்கொண்டு, பல்கலையில் இருந்து பேருந்து நிலையம் வந்து சுற்றிவிட்டு (பல சமயம் தனியாக, சிலசமயம் நண்பர்களுடன்), பேக்கரியில் தேநீர் குடித்துவிட்டு விடிகாலையில் திரும்பியிருக்கிறோம். மரக்கடை மேம்பாலத்தில் உட்கார்ந்து நள்ளிரவில் புத்தக விவாதங்கள் செய்ததுண்டு.

என் ஊர் மதுரை. ஆரப்பாளையம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையங்களில், நள்ளிரவு அனுபவங்கள் ஏகம்.

(http://solvanam.com/?p=47197)

-வெங்கி

director venkat enge bramanan? said...

மனித மிருகத்தைப் படம் பிடித்துக் காட்டினீர்.