Nov 18, 2016

முதலாளி செளக்கியங்களா?

ஒரு விவகாரத்தைப் பற்றி பேசும் போதும் எழுதும் போதும் நமக்கு முழுமையாகத் தெரிந்திருக்கும் என்று சொல்ல முடியாது. பிறகு அது பற்றி நண்பர்கள் சொல்வார்கள். ‘அப்படியா’என்று தேடுவோம். வேறொரு பரிமாணம் கிடைக்கும். யாரிடமாவது பேச வேண்டும் என்பது இதற்காகத்தான். ஜனார்த்தன ரெட்டியின் மகளைப் பற்றி எழுதிய அரை மணி நேரத்திற்குள் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அழைத்திருந்தார். ‘அவங்க டிக்ளேர் செஞ்சிருக்கிற சொத்து மதிப்பே ரெண்டாயிரம் கோடியைத் தாண்டும்’என்றார். வெள்ளையாக மட்டுமே அவ்வளவு. ஐநூறு கோடி செலவு செய்தாலும் அத்தனையும் வெள்ளையில் செலவு செய்ததாகவே காட்ட முடியும். இல்லையென்றால் நாடே திமில்படும் போது பெங்களூரில் அரண்மனையை வாடகைக்குப் பிடித்து கெத்து காட்ட முடியுமா? மதியம் திருமணம் நடைபெற்ற அரண்மனை வளாகத்துக்குச் சென்றிருந்தேன். மூன்றரை மணிக்கெல்லாம் பந்தியை முடித்துவிட்டார்கள். இனிப்பு மட்டுமே பதினாறு வகை இருந்ததாகச் சொன்னார்கள். நடிகை தமன்னா கூட நடனமாடினாராம். பிரேஸிலிருந்தும் நாட்டிய தாரகைகள் வந்திருந்ததாகச் சொன்னார்கள். கண்ணில் சிக்க வேண்டும் என விதியிருந்தால் சிக்கும். எனக்கு விதியில்லை. திரும்பி வந்துவிட்டேன். 

விஷயம் அதுவன்று. 

நேற்று நீட் தேர்வு பற்றி எழுத, ‘நீட் தேர்வு பத்தி தனியார் பள்ளிகள் என்ன நினைக்கின்றன?’என்று ஒரு நண்பர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். நல்ல கேள்வி. மாணவர்கள் பற்றியும் அரசாங்கம் பற்றியும் மட்டுமே யோசித்தால் போதாது அல்லவா? இப்படி யாராவது கேள்வி கேட்டால் அல்லது கருத்துச் சொன்னால் இன்னொரு கோணமும் பிடிபடுகிறது. உள்ளூரில் விசாரித்தால் பள்ளிகள் வசூல் வேட்டையை ஆரம்பித்திருக்கின்றன என்றார்கள். சுமாரான பள்ளியே ‘நீட் கோச்சிங்குக்கு நாற்பதாயிரம் கட்டு’எனச் சொல்லியிருக்கிறார்கள். நாமக்கல் மாதிரியான ப்ராய்லர் பள்ளிகளைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. இந்த வருடம் தனியாக பணம் வாங்குகிறார்கள். அடுத்த வருடம் பள்ளிக் கட்டணத்திலேயே சேர்த்துவிடுவார்கள். ஒரு மாணவரிடம் ஐம்பதாயிரம் வாங்கினாலும் கூட ஐம்பது மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பினால் இருபத்தைந்து லட்சம் வசூல் ஆன மாதிரி. இருபத்தைந்து லட்சத்தையும் சொல்லித் தரும் ஆசிரியருக்கா கொடுக்கப் போகிறார்கள்?

தனியார் பள்ளிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளிலும் ஆசிரியராக இருப்பதைப் போன்ற கொடுமை வேறு எதுவுமில்லை. பிழிந்து எடுக்கிறார்கள். தனியார் பள்ளிகளில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஆட்களைத் தெரியும். எம்.எஸ்.ஸி., எம்.ஃபில் முடித்துவிட்டு சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே! சொம்பும் போச்சுடா கோவிந்தா கதைதான். இந்தச் சம்பளத்திலேயே எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்? கட்டிட வேலை செய்கிற மேஸ்திரி ஒருவருடைய வாரக் கூலிதான் பல தனியார் பள்ளி ஆசிரியர்களின் மாதச் சம்பளம். இரு தொழிலையும் ஒப்பிடுவதாக அர்த்தமில்லை. ஆனால் கல்வி வியாபாரிகளிடம் படிப்புக்கு இங்கே அவ்வளவுதான் மரியாதை.

சொற்ப சம்பளத்தைக் கொடுத்துவிட்டு சக்கையாக வேலை வாங்குகிறார்கள். சனி, ஞாயிறு கூட பள்ளிக்கும் கல்லூரிக்கும் வந்துவிட வேண்டும். அதிகாலையிலேயே பாடத்தை ஆரம்பித்தால் இருட்டுக் கட்டினாலும் வேலை முடியாது. கொத்தடிமைகள் வாசி. கல்வித்தந்தைகளுக்கு மட்டும்தான் காளை மாட்டிலும் பால் கறக்கும் வித்தை தெரியும். அப்படித்தான் நீட் பயிற்சிக்கென கறக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

அரசுப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் சற்று மேம்படுத்தினாலும் கூட போதும். இப்பொழுதெல்லாம் எந்த அரசு ஆசிரியரும் அடிப்பதில்லை. அடிக்க வேண்டாம்- கண்டிப்பது கூட இல்லை. ‘அடிச்சா பையன் அப்பனைக் கூட்டிட்டு வந்துடுறான்’என்பதைவிடவும் ‘அதிகாரிகள் மெமோ கொடுக்கிறார்கள்’என்று பயப்படுகிறார்கள். குறைந்தபட்சக் கண்டிப்பில்லாமல் மாணவர்களை ஒழுக்கத்துக்குக் கொண்டு வருவது சாத்தியமேயில்லை. ஆசிரியர்களிடம் ‘ரிசல்ட் வேண்டும்; பசங்க ஒழுங்கா இருக்கணும்’ என்று இரண்டு விஷயங்களை மட்டும் அதிகாரிகள் வற்புறுத்தினால் போதும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை கூட பள்ளிக் கல்வி அப்படித்தானே இருந்தது? முன்பெல்லாம் அரசு உதவி பெறும் பள்ளியொன்று ஒரு ஊரில் இருந்தால் அங்குதான் அதிகமான மாணவர்கள் படிப்பார்கள். மாவட்ட அளவிலான தகுதிப் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும். இப்பொழுது சிதைத்துச் சின்னாபின்னமாகிவிட்டார்கள். தமிழகம் முழுவதுமே கிட்டத்தட்ட இதுதான் நிலைமை. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அடிக்கக் கூடாது; திட்டக் கூடாது என்று வரிசையாக அடுக்கினார்கள். ஆரம்பத்தில் நல்ல விஷயமாகத்தான் தெரிந்தது. ஆனால் அந்தக் கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் தனியார் பள்ளிகளை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. விளைவாக, மெல்ல மெல்ல மாணவர்கள் மீதான கட்டுப்பாட்டை அரசு ஆசிரியர்கள் இழந்தார்கள். பள்ளி வளாகத்தில் ஒழுங்கீனங்கள் மலிந்தன. குடித்தார்கள். புகைத்தார்கள். கண்டும் காணாமல் ஆசிரியர்கள் ஒதுங்கத் தொடங்கினார்கள். 

அதே சமயத்தில் தனியார் பள்ளிகள் மெல்ல முளைவிட்டன. அங்கே மாணவர்களை மதிப்பெண் பெற வைத்தார்கள். அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களை ‘நாங்க இலவசமா படிக்க வைக்கிறோம்’என்று சொல்லிக் கொத்திச் சென்றார்கள். ‘நாங்க மோல்ட் செஞ்சு வெச்சா அவங்க கூட்டிட்டுப் போய்டுறாங்க’என்று அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் புலம்பினார்கள். பனிரெண்டாம் வகுப்பில் தனியார் பள்ளிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் மதிப்பெண்கள் பெறத் தொடங்கின. செலவானாலும் பரவாயில்லை என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர்களும் மாணவர்களும் இடம்பெயர்ந்தார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஒட்டடை படியத் தொடங்கின.

எல்லாமும் பதினைந்து இருபது வருடங்களுக்குள்ளான விளைவுகள்தான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நொடிக்கப்பட்டவுடன் இன்று தனியார் பள்ளிகள்தான் இன்று சாம்ராஜ்யங்கள். ஆயிரக்கணக்கான மாணவர்கள், நூற்றுக்கணக்கான வாகனங்கள் என்று கொடிகட்டுகின்றன. அங்கே படிப்பு மட்டும்தான் லட்சியம். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கான அறம், நேர்மை என்பது பற்றியெல்லாம் எந்த போதனைகளும் நடப்பதில்லை. ‘படி..மார்க் வாங்கு..செட்டில் ஆகிடலாம்’- இதுதான் போதிக்கப்படுகிறது. வெறியேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். வெறி சற்றே குறையும் போதும் கை நீட்டத் தயங்குவதில்லை. தொண்ணூற்றொன்பது மதிப்பெண்கள் வாங்கினால் ஏன் நூறு வாங்கவில்லை என்று அடித்துவிட்டு அடுத்த தடவை நூறு வாங்கினால் அதற்கடுத்த தடவையும் நூறு வாங்க வேண்டும் என்றும் அடிக்கிற தனியார் பள்ளி முதலாளியைப் பற்றித் தெரியும். ஆனால் அரசுப் பள்ளிகளில் திட்டக் கூட முடியாது. 

கல்வியும் மருத்துவமும் தனியார் மயமாகும் போது அங்கே அறத்துக்கும் நேர்மைக்கும் வேலை இருப்பதில்லை. பெரியவர்களுக்கு மரியாதை, அடிப்படையான ஒழுக்கம் என்று காலங்காலமாக நாம் சொல்லித் தந்ததையெல்லாம் காற்றில்விட்டுவிடுகிறார்கள். வெறும் பணம் மட்டும்தான். இப்பொழுது அதுதான் நடக்கிறது. இந்தப் பள்ளி வாங்கிய மதிப்பெண்ணை அந்தப் பள்ளி மிஞ்ச வேண்டும். அந்தப் பள்ளி வாங்கியைதை இந்தப் பள்ளி மிஞ்ச வேண்டும் என்கிற வெறுமையான மதிப்பெண் போட்டிதான் நடக்கிறாது. அப்பொழுதுதான் அடுத்த வருடம் மாணவர்கள் அதிகமாகச் சேர்வார்கள். வருமானம் கொட்டும். இதுதான் தனியார் மயக் கல்வியின் அடிநாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு மாணவர்களை பாதிக்கும் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே கல்லாப்பெட்டிகளை நிரப்பும் கல்வித்தந்தைகளை கணக்கில் சேர்க்காமல் விட்டிருக்கக் கூடாது. அவர்களுக்கு எல்லாவற்றிலும் வருமானம்தான். இதிலும் சக்கை வருமானம்.

இன்னுமொன்றைச் சொல்லியாக வேண்டும் - நீட் தேர்வு குறித்தான கட்டுரை தமிழகக் கல்வியமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது. ட்விட்டரில் பதிலும் சொல்லியிருக்கிறார். நல்லது நடக்கும் என நம்பலாம்.


11 எதிர் சப்தங்கள்:

Unknown said...

/ ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே! /

500, 1000ரூ பணம் தடை செய்தபின் இதெல்லாம் மாறிவிடும். இனிமே யாரும் பணம் வாங்கமாட்டாங்க, லஞ்சம் நாட்டைவிட்டு ஓடிப்போயிடுத்து அப்படினு சொல்றங்களே, உண்மைங்களா ?

Vaa.Manikandan said...

நக்கலுக்குத்தானே கேட்குறீங்க? :)

Unknown said...

இதெல்லாம் படிக்கும்போது உடம்பெல்லாம் எரிகிறது. அம்பி மாதிரி தலையில தண்ணிதான் ஊத்திகிணும் .

கரந்தை ஜெயக்குமார் said...

குறைந்தபட்சக் கண்டிப்பில்லாமல் மாணவர்களை ஒழுக்கத்துக்குக் கொண்டு வருவது சாத்தியமேயில்லை. ஆசிரியர்களிடம் ‘ரிசல்ட் வேண்டும்; பசங்க ஒழுங்கா இருக்கணும்’ என்று இரண்டு விஷயங்களை மட்டும் அதிகாரிகள் வற்புறுத்தினால் போதும். அவர்களுக்கான சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

உண்மைதான்

Srinivasan Muthusamy said...

தனியார் பள்ளிகள் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு புறம். 90களுக்கு முன் கிராமப்புற அரசுபள்ளிகளில் படித்து உண்மையாகவே சிரமப்பட்டு அரசு மருத்துவக்கல்லூரிகளில் படித்த முந்தைய தலைமுறை மருத்துவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பேசிப்பார்த்தால், இன்னுமொரு கோணம் கிடைக்கலாம்.

Muthu said...

எங்களது பள்ளிப்பருவ காலத்தில் பெற்றோர்களே ஆசிரியர்களிடம் வந்து “கண்ணு ரெண்டையும் உட்டுட்டு தோல உரிங்க சொல்றேன்” என்று உரிமம் தந்துவிட்டுச்செல்வார்கள். நாங்களும் பிரம்புக்குப்பயந்து கொஞ்சமாவது ஒழுங்காக படித்தோம்.

ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டை வலியுறுத்தாத கல்வி கானலுக்கிறைத்த நீரே.

Unknown said...

Mistake is also on Parents side. They wanted their kids to be the best. Here success is directly proportional to money. Higher you earn, higher you are respected. We forgot the way of living. Searching happiness in others compliment..

Aravind said...

in 90s, india was forced to borrow from IMF due to double crises. at that time, IMF put lot of conditions to bail us out which let to our government destroy our own public infrastructure and force people towards private institutions in all areas.

சேக்காளி said...

//தமிழகக் கல்வியமைச்சர் பாண்டியராஜன் அவர்களின் கவனத்துக்குச் சென்றிருக்கிறது//
புதியதலைமுறை தொலைக்காட்சியின் அக்கினிப்பரிட்சை நிகழ்ச்சியில் இது பற்றி பேசியிருக்கிறார்
http://tv.puthiyathalaimurai.com/vod/program/agni-paritchai

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

எம்.எஸ்.ஸி., எம்.ஃபில் முடித்துவிட்டு சொற்ப சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் ஒரே கனவாக அரசுப் பணி இருந்தது. அந்தப் பணிக்குத்தான் இப்பொழுது பல லட்சம் கப்பம் கட்ட வேண்டியிருக்கிறதே!// எதன் அடிப்படையில் இப்படி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ஆசிரியர் பணிக்கு லட்சங்கள் செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பட்டதாரி ஆசிரியர் என்றால் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். முதுகலை ஆசிரியர்தே பணி முன்னுரிமை அடிப்படையில் தேர்வான பின்வசதியான இடம் தேவைஅல்லது மாறுதல் தேவை என்பவர்கள் மட்டுமே கையில் பணம் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் நாடுகிறார்கள் இப்போது ஆசிரியர் தேர்வே இல்லை. என்னெனில் உபரி ஆசிரியர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

ர. சோமேஸ்வரன் said...

மணி ஸார் "புதிய தேசியக் கல்விக் கொள்கை" பற்றி ஒரு பதிவு (பார்வை) தாருங்களேன்.