Oct 3, 2016

மூன்றாம் நதி- சில விமர்சனங்கள்

வணக்கம் அண்ணா,

சில தேர்வுகளுக்கு படிக்கவேண்டியது இருந்ததால மூன்றாம் நதி புத்தகத்தை படிக்க இப்போது தான் முடிந்தது. முதலில் புத்தகத்திற்கான வாழ்த்துகள். எனக்கு பிடித்த ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை கையில் வைத்திருக்கிறோம்  என்பதே அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.அதனால்தான் நிசப்தத்தில் வந்த எந்தவொரு விமர்சனத்தையும் படிக்காமல் இதற்காக இருந்தேன்..

புத்தகத்தை பற்றி சொல்லும்போது நிஜமாகவே உங்களிடம் இதை போன்றதொரு நாவலை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏற்கனவே நிறைய பேர் எழுதி பழக்கப்பட்ட நடையாகத் தெரிந்தது.

கதை நடக்கும் காலமும் கதையோடு பெரிதாக ஒட்டவில்லை. detailing அவ்வளவு ஆழமாக இல்லாதது போல் இருந்தது.உண்மையில் கதை தொடங்கியபோது இது தண்ணீர் அரசியலைப் பற்றித் தான் பேசும் என நினைத்தேன்...அதேபோல் ஒரு  அடித்தட்டு வர்க்க கதாப்பாத்திரத்தை மையமாக வைத்து கதை சுழலும்போது அந்த கதாப்பாத்திரத்திற்கு வரும் பிரச்சனைகள் மட்டுமே பிரதானமாக சொல்லப்படும் இதிலும் அதே தான்.அவர்களின் மகிழ்ச்சியைப் பற்றி ஏன் யாரும் பேசவே மாட்டேன் என்கிறீர்கள். அதுவும் எஸ்.ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியில் ஒரு பக்கத்தில் கூட மகிழ்ச்சியாக இருந்ததாக வராது அதில் வரும் அத்தனை பாத்திரங்களுமே சபிக்கப்பட்டது போல் இருக்கும். 

நிசப்தம் தளத்தில் வரும் உங்கள் எழுத்தின் முக்கிய அம்சமே அதை என்னோடு தொடர்பு படுத்திக்கொள்ள முடிந்தது. அதேபோன்று சுய எள்ளலுடன் சமூகத்தை பற்றிய கேலிச்சிந்தனையுடன் தான் உங்களிடம் கதையை எதிர்பார்த்தேன். அதுதான் உங்களுடைய இயல்பான நடை என நான் நினைக்கிறன்.அது என்னுடைய தவறாக கூட இருக்கலாம் அண்ணா.

இந்த கதை எனக்கு ஏமாற்றம். மனதில் பட்டதை சொல்லிட்டேன். இன்னும் நிறைய கதைகள் வித்தியாசமான தளத்தில் இருந்து உங்களிடம் எதிர்பார்க்கிறேன் அண்ணா.

ராம்குமார்
           
                                        ***
அன்புள்ள மணிகண்டன் அவர்களுக்கு,

படிக்கவேண்டும் என வெகுநாட்களாக நினைத்து இன்று காலையில் கைகூடிய நிகழ்வு மூன்றாம் நதி வாசித்தல். பெங்களூர் போன்ற மாநகரில் வாழும் எளிய மனிதர்களின் வாழ்க்கைச் சிக்கல்களையும், அதன் நுணுக்கமான சிறிய சந்தோஷங்களையும் போகிற போக்கில் வஞ்சமில்லாமல் அள்ளித் தெளித்துவிட்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது மூன்றாம் நதி. பஞ்சம் பிழைக்க வந்த அருக்காணி, கதை முடிவிலும் கூட நிழலாய்ப் பயணிப்பதாகவே தோன்றுகிறது. வாழ்வின் பெரிய பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிய மனிதர்கள் கையாளும் விதம் எப்போதும் அதிசயத்தக்க வகையில் தான் இருக்கிறது. உதாரணத்திற்கு, அருக்காணி தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற சிறிது நாட்களில் எல்லாம் உமாவை வீட்டில் கொண்டு வைப்பது, அதுவரை ஆனந்தயாழை மீட்டிக் கொண்டிருந்த பவானியின் முக்கியத்துவம், அமாசைக்கு இரண்டாம் இடத்துக்குப் போனது, கதையின் இறுதியில் பவித்ராவின் எதிர்காலம் கூட நம்மால் ஓரளவு ஊகிக்கமுடிகிறது, கதை தரும் எளிய மனிதர்களின் ரெஸிலியன்ஸ் எனச்சொல்லப்படும் மீளும்தன்மை குறித்தான புரிதலின் அடிப்படையில். சில விவரணைகள் வாக்காக வந்து விழுந்திருக்கின்றன. குறிப்பாக, 69ம் பக்கம். பெரு நகர வாழ்க்கையை இதுபோல  இதுவரை யாரும் எழுதி நான் படித்த நினைவில்லை. முக்கியமாக, வீண் சொல்லாடல்கள், பாழி ரீதியிலான செந்தமிழ் உபாதைகள், சிக்மன்ட் ப்ராய்டு புத்தகம் படித்துத் தெரிந்துகொள்ளுமளவிற்கான complex மனச்சிக்கல்கள் இல்லாத பாத்திர அமைப்பு போன்றவை கதையின் பலமாக உணர்கிறேன். 

பல லட்சம் பவானிகளும், பவித்ராக்களும் நம் கண்முன்னே உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். பிரசவ வைராக்கியம் போல, அட்லீஸ்ட் மூன்றாம் நதி படித்துமுடித்த ஒரு இரண்டு மணி நேரத்துக்காவது பவானியின் பாதிப்பும், பெரு நகர வாழ்க்கையின் உள்ளீடற்ற  வெற்றுத்தன்மையும் முகத்தில் அறைந்துகொண்டே இருக்கிறது. கல்லூரியில் ஆன்சிலரி புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. மூன்றாம் நதி இரண்டு விதமான புரிதலை மாணவர்களுக்கு அவர்களின் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் கொண்டு சேர்க்கும். 1940களில் சொல்லப்பட்ட கதைக்களத்தைப் புரிந்துகொள்வதில் மாணவர்களுக்குச் சில சிக்கல்கள் இருக்கும். மூன்றாம் நதி அடுத்த மாநிலத்தில்   வசிக்கும் கிட்டத்தட்ட சமகால எழுத்தாளரின் படைப்பு என்பதால் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாசிக்க முடியும் அவர்களால். எல்லாவற்றிற்கும் மேலாக, 80% மாணவர்கள் வேலை நிமித்தமாக பெரு நகரங்களுக்குச் செல்லும் போது, எளிய மனிதர்களின் மீதான அவர்கள் பார்வை வேறுவிதமாக மாறக்கூடும். மூன்றாம் நதி a real page turner.

குறைகள் சொல்லியே ஆகவேண்டும் என்பதாலும், நீங்கள் போலீஸைக் கூப்பிடப் போவதில்லை என்பதாலும், சில குறைகள் என எனக்குப் பட்டவை.

1) வலிய திணிக்கப்பட்ட சில வாக்கியங்கள்  - உம். பூமி கால்களுக்குக் கீழே நழுவுவது, பவானி அவ்வளவு சிறிய வயதில் இந்த உலகின் வர்ணங்களை, புத்தகங்கள் வழியாகப் பார்க்க முடியாது என ஆணித்தரமாக நம்புவது என்பன போன்றவை.

2) குறுகிய‌ சொற்றொடர்கள் நிரவிக் கிடக்கின்றன. அது வாசிப்பின் பன்முகத்தன்மையைச் சற்று மட்டுப்படுத்துவதாக உணர்கிறேன். அதற்காக சாண்டில்யன் மாதிரி ஒரு பத்தி, ஒரு வாக்கியம் அளவில் எழுதாமல் சற்று நீளமாக இருந்தால் வாசகனுக்கு உள்ளே ஒளிந்து கொள்ள ஒரு மறைவாக இருக்கும். 

3) ஊர் விட்டு வரும் குடும்பம், வெளியேறக் காரணமாயிருந்த பஞ்சம் குறித்தான விவரம் பஞ்சம். எஸ்தர் சித்தி ஊரைவிட்டுப் போக நினைக்கும் போது ஊர் நிலவரம் குறித்து, வண்ண நிலவன் அண்ணாச்சி களமாடியிருப்பார். அதுபோன்ற ஒரு வாய்ப்பு இருந்தது. சில வறண்ட கிராமங்களின் இருண்ட முகத்தை வெளியே காமிக்கும் ஒரு சந்தர்ப்பமாக இருந்திருக்கும்.

மற்றபடி வாழ்த்துக்களுடன் 
பாலு.                                        
                                                           ***
கதையின் நாயகி பவானி முழுமையாய் ஆக்ரமித்திருக்கிறார். கதை வாசிக்கையில் நீர் சாரல் கண்ணாடி ஜன்னலில் பட்டு வழிந்தோடி வருவது போல் மிகப்பெரிய சலனமேதுமின்றி மனதிற்குள் நுழைகிறாள் பவானி. சந்தோஷ் நாராயணின் அட்டைப்பட ஓவியம் கதைக்கு மிகச்சரியானப் பெருத்தம். ஒரு பனி நாளில் பெங்களுர் நகர்க்கு சரியான அடைக்கலமின்றி தன் தந்தை தாயுடன் சிறு குழந்தையாய் வந்து சேரும் பவானியின் வாழ்க்கை அதிக தெரிவுகளின்றி அதன் போக்கில் பயணிக்கிறது.

இழப்புகளைப் பற்றி அவள் புலம்பவில்லை. கதை அவள் கணவனின் மரணத்தில் ஆரம்பிகையில் மிகப்பெரிய நம்பிக்கைகள் தன் கண்முன் சரியாக்கண்ட ஒருத்தியின் வாழ்க்கை பயணமது என்ற குறிப்புடன் ஆரம்பித்து ஆதரவுமின்றி நிர்கதியாய் அவளும் அவள் 4 மாதக் குழந்தையும் நிற்பதோடு நிறைவுறுகிறது. நிறைவுற்றது கதை மட்டுமே பவானி; இன்னும் அவள் போன்றவர்களின் ஒற்றை வழிப்பாதையும் பயணமும் தெளிவற்று நீண்டு கொண்டே போகிறது. அவர்களுக்காக நியாயம் கேட்பவர்கள், வழிகாட்டிகள், ஆதரவு காட்டுவோர் மற்றும் அவர்களுக்கான சந்தோசங்கள் எங்கே? ஒருவகையில் நாமும் அவர்களின் சந்தோசங்களை வாழ்வாதாரங்களை தட்டிப் பரிக்கிறோமோ என்ற குற்றவுணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை.

பள்ளிப்படிப்பை அவள் கைவிட நேர்கையில் வீட்டில் அதிகம் படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டல் எத்தனை முக்கியதுவம் வாய்ந்தது என உணர்த்துகிறது. கதையின் அடிநாதம் நீர் வணிகம் அல்லது நீர் மாபியா. நூறு பக்கம் கொண்ட கதையில் பத்துப்பக்கங்களில் மிகப்படுத்துதல் இல்லாமல் அதே சமயம் அதன் ஆழத்தோடு நீர் அரசியலை விவரித்திருக்கும் விதம் நேர்த்தி.

நிசப்தம் தொடர்ந்து வாசிப்பதால், வா.மணிகண்டனின் எழுத்து நடை சற்று பரிச்சயம் ஆனால் புதினத்தின் நடை வேறுவிதம். கதாப்பாத்திரங்களை சிருஷ்டிப்பதில் மணி வெற்றி பெற்றிருக்கிறார். வில்வித்தை தீபிகா குமாரி வில்லை நாணிலேற்றி இலக்கை குறி பாக்கும்வரை நிதானித்து பின் விடுவிக்கையில் வில் சரக்கென்று இலக்கைத்தாக்கும். அதன் அதிர்வுகள் அடங்க சில நொடிகள் பிடிக்கும். மூன்றாம் நதியின் வாசிப்பனுபவமும் அது போலவே.

அகிலா அலெக்ஸாண்டர்                                                  

1 எதிர் சப்தங்கள்: