அன்புள்ள மணி,
நான்கு லட்ச ரூபாயை நிசப்தம் அறக்கட்டளைக்கு அனுப்பியிருக்கிறேன். இன்று உங்கள் வங்கிக் கணக்கில் சேரும் என்று நம்புகிறேன். குறுந்தகவல் கிடைத்தப்பின் உறுதிப்படுத்தவும். ஏதேனும் நல்ல காரியத்துக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளவும்.
தயவுசெய்து பெயர் வெளியிட வேண்டாம். உங்கள் மாத கணக்கு திரைச்சொட்டில் பெயரை மறைத்து விடவும். வரவு செலவு கணக்கில் எனது பெயர் தெரியாமல் இருப்பது நன்று. புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.
நிசப்தம் தளம் தொடர்ந்து நல்ல முறையில் செல்கிறது. எழுத்திலும், சமூகத்திலும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்,
***
***
கடிதம் வருவதற்கு முன்பாகவே நான்கு லட்ச ரூபாய் நிசப்தம் அறக்கட்டளையின் கணக்குக்கு வந்துவிட்டது. பணம் அனுப்பியவரை ஒரேயொரு முறை சந்தித்திருக்கிறேன். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாக நானும் வேணியும் பெங்களூரிலிருந்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தோம். அதற்கு சில தினங்களுக்கு முன்பாகத்தான் அழைத்திருந்தார். வெளிநாட்டிலிருந்து திரும்பியிருப்பதாகவும் பெங்களூரில் சந்திக்க விரும்புவதாகவும் இல்லையெனில் நாங்கள் ஊருக்குச் செல்லும் போது இடையில் ஏதாவதொரு இடத்தில் சந்திக்க விரும்புவதாகவும் சொல்லியிருந்தார். பெங்களூரில் சந்திக்க முடியவில்லை. அதனால் அன்றைய வார இறுதியில் பெங்களூரிலிருந்து கிளம்பும் போதே அவருக்குத் தகவல் சொல்லியிருந்தேன். சுங்கச் சாவடியொன்றில் இரு சக்கர வாகனத்தில் வந்து காத்திருந்தார். அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. ஐந்து நிமிடங்களுக்குள்ளாக பேசிவிட்டுக் கிளம்பிவிட்டோம். அதன் பிறகு அலைபேசியில் அழைத்தவர் ‘எழுதறதை பார்த்துட்டு நீங்க நிறையப் பேசுவீங்கன்னு நினைச்சேன்’ என்றார்.
இன்று இந்தக் கடிதம் வந்திருந்தது.
கடிதத்தை பிரசுரிக்க வேண்டியதில்லை என்றுதான் தோன்றியது. ஆனால் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு தனது பெயரை வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்கு எத்தகைய மனம் வேண்டும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. ‘பேர் வெளியே தெரிஞ்சா ஒண்ணும் பிரச்சினையில்லைங்க’ என்று சொன்னால் ‘கடவுளுக்குத் தெரிஞ்சா போதும்’ என்றார்.
கோவிலுக்குக் கூட ட்யூப்லைட் ஒன்றை வழங்கிவிட்டு கடவுளுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை- வந்து போகிற பக்தர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அதன் மீது தனது பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்பும் மனிதர்கள் வாழ்கிற பூமிதானே இது? அப்படிப்பட்ட மனிதர்களுக்குள்தான் இத்தகைய மனிதர்களும் வாழ்கிறார்கள்.
கோவிலுக்குக் கூட ட்யூப்லைட் ஒன்றை வழங்கிவிட்டு கடவுளுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை- வந்து போகிற பக்தர்களுக்குத் தெரிய வேண்டும் என்று அதன் மீது தனது பெயர் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்பும் மனிதர்கள் வாழ்கிற பூமிதானே இது? அப்படிப்பட்ட மனிதர்களுக்குள்தான் இத்தகைய மனிதர்களும் வாழ்கிறார்கள்.
தனது நன்கொடைகளைப் பற்றி அவர் சொல்லிக் கொண்டிருந்த போது ‘உங்களுக்கு வயசு இருக்குங்க...நிறைய இன்வெஸ்ட் செய்யுங்க...தானத்தை பிறகு செய்து கொள்ளலாம்’ என்று கூடச் சொல்லியிருக்கிறேன். வரவு செலவை மொத்தமாக அவரது மனைவி பார்த்துக் கொள்கிறார். ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகையை சமூகப்பணிக்குத் தர வேண்டும் என்று ஒதுக்குவது கூட அவர்தானாம்.
சில நாட்களுக்கு முன்பாக ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ‘அடுத்தவர்களுக்கு உதவி செய்வது சோம்பேறிகளை உருவாக்குவதுதானே?’ என்று. யாருக்கு உதவுகிறோம் என்பதைப் பொறுத்தது அது. சிறு கோவிலுக்கு முன்பாக பூக்கட்டி விற்று குடும்பத்தை நடத்தி வந்த அம்மாவை இழந்துவிட்டு அப்பாவை மரணப்படுக்கையில் வைத்துக் கொண்டு அவருக்கு பணிவிடையெல்லாம் செய்தபடியே முப்பதாயிரம் ரூபாய் கடன் வாங்கி கட்டிவிட்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிற மாணவனுக்கு உதவுவது சோம்பேறியை உருவாக்குதல் என்று அர்த்தமில்லை.
இரண்டு பிள்ளைகளைக் கொண்ட பெண்ணொருத்தி என்னவென்றே தெரியாத விஷக்கடியில் கோமா நிலைக்குச் சென்றிருக்கிறாள். கணவன் தினக்கூலி. அவளுக்கு உதவுவது அந்தப் பிள்ளைகளைச் சோம்பேறி ஆக்குவது என்று அர்த்தமில்லை.
இந்த உலகம் மிகக் குரூரமானது. யார் மீது கை வைக்குமென்றே தெரியாது. எந்தக் கணத்தில் அது நம்மை அடித்து துவம்சம் என்றும் தெரியாது. அத்தனை வன்மம்மிக்கது. சிரமப்படும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் நம்மால் உதவ முடியாது என்றாலும் சொற்பமான மனிதர்களுக்காவது கை நீட்டி மேலே தூக்கிவிடுவோம். அவ்வளவுதான் நம்மால் முடியும்.
இந்த உலகம் மிகக் குரூரமானது. யார் மீது கை வைக்குமென்றே தெரியாது. எந்தக் கணத்தில் அது நம்மை அடித்து துவம்சம் என்றும் தெரியாது. அத்தனை வன்மம்மிக்கது. சிரமப்படும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் நம்மால் உதவ முடியாது என்றாலும் சொற்பமான மனிதர்களுக்காவது கை நீட்டி மேலே தூக்கிவிடுவோம். அவ்வளவுதான் நம்மால் முடியும்.
வாழ்க்கையின் விளிம்பை நெருங்கிவிட்ட மனிதர்களை தினந்தோறும் எதிர்கொள்ள நேரிடுகிறது. இந்த மனிதர்களால் எப்படி இவ்வளவு பெரிய சுமைகளையும் துன்பங்களையும் சுமந்து கொண்டிருக்க முடிகிறது என்று மனம் கனத்துப் போகிறது. இவர்களையெல்லாம் பார்த்துப் பார்த்து மனம் மரத்துப் போய்விடக் கூடாது என்றுதான் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
வாழ்வின் பகடையாட்டங்களில் சிக்கிச் சின்னபின்னமாகிக் கிடக்கும் மனிதர்களுக்குத் தொடர்ந்து உதவுவதற்கு இந்தக் கடிதத்தை எழுதிய மனிதர் மாதிரியானவர்கள்தான் inspiration. ‘சுணக்கமேயில்லாமல் இயங்கிக் கொண்டிரு’ என்று இவர்கள்தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள். உற்சாகமூட்டுகிறார்கள்.
இத்தகைய மனிதர்கள் நீடுழி வாழட்டும். அவர்தம் அருள் நிறைந்த குடும்பங்கள் சீரும் சிறப்போடும் வளரட்டும். இறைவனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
10 எதிர் சப்தங்கள்:
அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
அன்னாரும் அவர்தம் குடும்பமும் நீடுழி வாழ வேண்டும்.
//இத்தகைய மனிதர்கள் நீடுழி வாழட்டும். அவர்தம் அருள் நிறைந்த குடும்பங்கள் சீரும் சிறப்போடும் வளரட்டும். இறைவனை மனதாரப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.//
ரெண்டு பேரும்(அவரும், நீங்களும்) குடும்பத்தோடு நன்றாக இருக்க வேண்டும் என மனதார வேண்டிக்கொள்கிறேன்.
எல்லாம் சரி ஜெட்லியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமே
விஸ்வா
பணம் இருப்பவர்களுக்கு தருவதில் கஷ்டமில்லை ஆனால் எல்லாஅர் மனதிலும் நம்பிக்கையை ஊன்றுவது எளிதல்ல ஆனால் அதை நீங்கள் மிக அழமாக ஊன்றி இருக்கிறீர்கள் மணிகண்டன்.. உங்களுக்கும் அந்த நல்ல மனிதருக்கும் வாழ்த்துக்கள்
///இந்த உலகம் மிகக் குரூரமானது. யார் மீது கை வைக்குமென்றே தெரியாது. எந்தக் கணத்தில் அது நம்மை அடித்து துவம்சம் என்றும் தெரியாது. அத்தனை வன்மம்மிக்கது. சிரமப்படும் மனிதர்கள் அத்தனை பேருக்கும் நம்மால் உதவ முடியாது என்றாலும் சொற்பமான மனிதர்களுக்காவது கை நீட்டி மேலே தூக்கிவிடுவோம். அவ்வளவுதான் நம்மால் முடியும்.///
அருமையான வரிகள் மணி.
சிலர் தனக்கு வந்த பின்னே உணர்வர். வலிகளை கையாள்வது எல்லோருக்கும் எளிதல்ல தொடர்க உ ம் நற்பணி.
கொடுத்தவருக்கு பெரிய மனது. அவர் தம் குடும்பத்துடன் நீடூழி வாழ வேண்டும். அறக்கட்டளை ஏற்படுத்தி வரும் தங்களுக்கும், உரிய மனிதர்களை தேர்ந்தெடுப்பதிலும், கொண்டு சேர்ப்பதற்கும் உங்களுடன் உள்ள துணைவர்களுக்கும், அனைத்திற்கும் மேலாக நீங்கள் இவ்வாறு பொதுப்பணிகளில் ஈடுபட உதவும் உங்கள் துணைவியாருக்கும், மிகப் பெரிய மனது. ஆண்டவன் பூரண அருள் உண்டு. ஆகவே நீங்கள் அனைவரும், குடும்பமும், சாரும் சிறப்புமாய் வாழ்வீர்கள்.
நல்லுள்ளங்களுக்கு நன்றி.
நீங்கள் இவ்வாறு பொதுப்பணிகளில் ஈடுபட உதவும் உங்கள் துணைவியாருக்கும், மிகப் பெரிய மனது. ஆண்டவன் பூரண அருள் உண்டு. ஆகவே நீங்கள் அனைவரும், குடும்பமும், சாரும் சிறப்புமாய் வாழ்வீர்கள்.
Post a Comment